Published:Updated:

பாஜக அரசை அச்சுறுத்தும் சொற்கள்(?) அன்பார்லிமென்ட் வார்த்தைகள்... ஒரு பார்வை!

நாடாளுமன்றம்

``எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது பாஜக அரசு, நாட்டிலுள்ள ஜனநாயகத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஓர் அதிகாரத்துவ ஆட்சியை நோக்கிப் போகிறார்கள் என்பது தெரிகிறது.” - ரவிக்குமார் எம்.பி

பாஜக அரசை அச்சுறுத்தும் சொற்கள்(?) அன்பார்லிமென்ட் வார்த்தைகள்... ஒரு பார்வை!

``எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது பாஜக அரசு, நாட்டிலுள்ள ஜனநாயகத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஓர் அதிகாரத்துவ ஆட்சியை நோக்கிப் போகிறார்கள் என்பது தெரிகிறது.” - ரவிக்குமார் எம்.பி

Published:Updated:
நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற திங்கட்கிழமை (18-ம் தேதி) தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்தத் தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதேசமயம் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன. இதோடு நுபுர் ஷர்மா விவகாரம், அக்னிபத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவைச் செயலகம் வெளியிட்டிருக்கிறது. அதில், ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

`வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுக்கேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி’ ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய பாராளுமன்றம்
இந்திய பாராளுமன்றம்

இதேபோல, `இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், ரத்தக்களரி, குரூரமானவர், ஏமாற்றினார், குழந்தைத்தனம், கோழை, கிரிமினல், முதலைக் கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரெளடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல’ ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், `முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், லாலிபாப், பாப்கட்’ ஆகிய வார்த்தைகளும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியலில் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தினால்... அவைத்தலைவர்கள், அவைக் குறிப்பிலிருந்து அவற்றை நீக்கிவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை வெளியிட்ட பிறகு எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பைப் பல்வேறு வடிவங்களில் சமூக வலைதளங்களிலும், நேரடியாகவும் வெளிப்படுத்திவருகின்றன. நிலைமை இவ்வாறு இருக்க இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பை மட்டுமே வெளியிட்டிருப்பதாகவும், எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

``இதற்கு முன்பும் இது போன்ற அன்பார்லிமென்டரி வார்த்தைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. காகிதங்கள் வீணாகாமல் இருக்க இப்போது அதை இணையத்தில் வெளியிட்டோம். எந்த வார்த்தையும் தடைசெய்யப்படவில்லை. நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை வெளியிட்டிருக்கிறோம். இது வழக்கமான நடைமுறைதான். 1,100 பக்கங்கள் கொண்ட இந்த அகராதியை அவர்கள் (எதிர்க்கட்சியினர்) படித்திருப்பார்களா... படித்திருந்தால், இப்படித் தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னர் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. 2010-லிருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓம் பிர்லா
ஓம் பிர்லா
Twitter/@loksabhatv

உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தச் சுதந்திரம் இருக்கிறது. அதேநேரத்தில் அவையின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும். நீக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் அனைத்தும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியால் நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நீக்குவது கிடையாது" என்று சபாநாயகர் ஓம் பிர்லா தனது விளக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார், ``இந்த அன்பார்லிமென்டரி முறை ஏற்கெனவே இருப்பதுதான். இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களைச் சேர்த்திருக்கிறார்கள். இவற்றில் கிட்டத்தட்ட 50 சொற்கள் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் நீக்கம் செய்யப்பட்டவை. இவ்வாறாகப் பல்வேறு சொற்களைக் காட்டுகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு சொல், நாம் பயன்படுத்தும்போது இரு வேறுவிதமான சூழல்களில் அதற்கான பொருள் மாறுபடுவதாக இருக்கும். உதாரணமாக ‘இவர் என் மாமா’ என்று உறவின் முறையில் சொல்வது., ‘அவர் எனக்கு மாமாவாக இருக்கிறார்’ இதற்கு வேறு அர்த்தம் வருகிறது. இவ்வாறாக எந்தச் சூழலில், எப்படிப் பயன்படுத்தினார்களோ அதற்கு ஏற்ற மாதிரிதான் மாற்றுகிறார்கள். அதையெல்லாம் அன்பார்லிமென்டரி என்று சொல்லும்போது அந்தச் சூழலோடு சேர்த்துத்தான் அன்பார்லிமென்டரி ஆகிறது. அதாவது ஏதோ ஒரு சூழலில் ஒரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அந்தச் சொல்லை மட்டும் எடுத்து அன்பார்லிமன்டரி என்று சொன்னால், அந்தச் சூழலை நீக்கிவிட்டுப் பார்க்கும்போது அந்தச் சொல்லுக்கான பொருள் வேறு மாதிரி இருக்கும்.

உதாரணத்துக்கு மக்களவைத் தலைவர் பற்றி பத்து சொற்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘நீங்கள் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்’, ‘நீதி வழங்க வேண்டும்’ என்று சொன்னால் அது அன்பார்லிமென்டரி என்கிறார்கள். `எங்களுக்கு நியாயம், நீதி வழங்குங்கள்’ என்று சொல்வது கோரிக்கைதானே! சபாநாயகரைப் பார்த்து என்ன தான் கேட்பது” என்று கேள்வியை முன்வைக்கும் ரவிக்குமார், “ஜனநாயக நாட்டில் ஏதும் பேசக் கூடாது என்றால் எப்படி?” என்று தன் விமர்சனத்தை முன்வைக்கிறார்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

“நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டம், உண்ணாவிரதம் செய்யக் கூடாது என்று மற்றொரு தடை உத்தரவு போட்டிருக்கிறார்கள். எந்தவிதத்திலும் வன்முறையோ, சட்டவிரோதமாக இல்லாமல் அறவழியில் நடக்கும் இது போன்ற போராட்டங்களை நாடாளுமன்ற ஆரம்ப காலத்திலிருந்தே நடத்துவது வழக்கம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக நாடாளுமன்ற அலுவல் முறையையும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் முடக்குவதாக இருக்கிறது. நாடாளுமன்றம் என்ற அமைப்போடு நீதித்துறை, ஊடகத்துறை, தேர்தல் ஆணையத்தை மற்ற விசாரணை அமைப்புகளை அவர்களுக்குச் சாதகமாக மாற்றுவது... என்று ஜனநாயக நிறுவனங்களும், அமைப்புகளும் முடக்கப்படுகின்றன. எனவே, இது எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது பாஜக அரசு, நாட்டிலுள்ள ஜனநாயகத்தை மொத்தமாக முடித்துவிட்டு ஓர் அதிகாரத்துவ ஆட்சியை நோக்கிப் போகிறார்கள் என்பது தெரிகிறது” என்கிறார்.