Published:Updated:

`குறைகளைக் கேட்காமல், மனுக்களை வாங்காமல் சென்ற அமைச்சர்கள்’ - தொழிலாளர்கள் வேதனை; நடந்தது என்ன?

அமைச்சர்கள் ஆய்வு

`அரசுப் பணத்தில் ஆய்வு செய்வதற்காக வந்துவிட்டு, தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம்?’ எனத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

`குறைகளைக் கேட்காமல், மனுக்களை வாங்காமல் சென்ற அமைச்சர்கள்’ - தொழிலாளர்கள் வேதனை; நடந்தது என்ன?

`அரசுப் பணத்தில் ஆய்வு செய்வதற்காக வந்துவிட்டு, தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம்?’ எனத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Published:Updated:
அமைச்சர்கள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த உப்பு நிறுவனத்தில் வாலிநோக்கம், சிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியிகளிருந்து சுமார் 1,300 தொழிலாளர்கள் தினக்கூலியாகப் பணியாற்றிவருகின்றனர்.

இந்த நிலையில் அரசு உப்பு நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புகளின் தரம் மற்றும் அங்கு உப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் வந்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெறவிருந்த மேடைக்குக்கூடச் செல்லாமல், அலுவலகத்துக்குள் சென்ற அமைச்சர்கள், அறையில் அதிகாரிகளுடன் 45 நிமிடங்கள் கலந்துரையாடினர். அமைச்சர்களை நேரில் பார்த்து மனுக்களைக் கொடுப்பதற்காக உப்பளத் தொழிலாளர்கள் வெளியில் காத்திருந்தனர். அமைச்சர்களைச் சந்திக்க அலுவலகத்துக்குள் அனுமதிக்குமாறு தொழிலாளர்கள் கூறியபோது, `அலுவலகத்துக்குள் அனுமதி இல்லை, அமைச்சர்கள் வெளியே வரும்போது மனுக்களைக் கொடுத்து கோரிக்கையைக் கூறுங்கள்' என அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்கள்
அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்கள்

ஆனால் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த அமைச்சர்கள், உப்பு நிறுவனத்துக்குள் சென்று முறையாக ஆய்வு செய்யாமல் பெயரளவுக்கு வெளியே நின்றிருந்தபடியே நிறுவனத்தைப் பார்த்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றனர். `நீண்ட நேரம் காத்திருக்கும் எங்களிடம் குறைகளைக்கூடக் கேட்காமல் இவ்வளவு அவசரமாக எங்கு செல்கிறார்கள்?’ எனத் தொழிலாளர்கள் கேட்டபோது, சாயல்குடி அருகே கனிராஜபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் ரிசார்ட்டைத் திறந்துவைக்கச் செல்வதாக அதிகாரிகள் கூறியதைக் கேட்டு தொழிலாளர்கள் கொந்தளித்தனர். அரசுப் பணத்தில் ஆய்வு செய்வதற்காக வந்துவிட்டு, தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர்கள் செல்வது எந்த வகையில் நியாயம் எனத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பிருக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் சிவாஜி, "தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தை ஆய்வு செய்வதாகக் கூறி அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர். நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி வைக்கப்பட்டிருந்தது. நிறுவனத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளும், சி.ஐ.டி.யூ நிர்வாகிகளும் மனுக்களோடு காத்திருந்தோம்.

ரிசார்ட் திறப்புவிழாவில் அமைச்சர்கள்
ரிசார்ட் திறப்புவிழாவில் அமைச்சர்கள்

அமைச்சர்கள் வந்தார்கள், அறைக்குச் சென்றார்கள் சிறிது நேரம் அறையில் அமர்ந்திருந்தார்கள். என்ன பேசினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. பிறகு கீழே இறங்கி காரில் ஏறிச் சென்றுவிட்டார்கள். தொழிற்சங்கத்தைச் சந்திக்கவில்லை. தொழிலாளர்களைச் சந்திக்கவில்லை. எந்தக் குறையும் கேட்கவில்லை. காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்கள். தொழிலாளிக்கு டி.ஏ கேட்டால் கொடுக்கப் பணம் இல்லை என்று கடந்த எட்டு மாதங்களாக நிறுத்திவைத்திருக்கிறார்கள். நிறுவனப் பணம், அரசாங்கப் பணம் இப்படி ஆய்வு என்ற பெயரில் வீணடிக்கப்படுகிறது. தொழிலாளிகளும் தொழிற்சங்கங்களும், `ஆய்வுக்கு அமைச்சர்கள் வருகிறார்கள், புதிய பகுதியை விசாரித்து இந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவார்கள், நிறுவன வளர்ச்சிக்கு ஏதும் அறிவிப்பார்கள்’ என்று ஆவலோடு காத்திருந்தோம்.

அமைச்சர்கள் ஆய்வு
அமைச்சர்கள் ஆய்வு

ஆனால் கண்துடைப்புக்கு ஆய்வு நடத்திவிட்டு, தனியார் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் தொழிலாளர்களின் நிலை குறித்து அமைச்சர்களிடம் எடுத்துக் கூறி எங்களைச் சந்திக்க வைத்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் பேசாமல் அமைச்சர்கள் பின்னாடியே சென்றது அவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. `திராவிட மாடல் ஆட்சி’ எனப் பெருமைகொள்ளும் மு.க.ஸ்டாலின், தனக்கு கீழுள்ள அமைச்சர்களிடம் முதலில் தொழிலாளர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்'' எனக் கூறினார்.