பாலஸ்தீனத்தின் காஸாவில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 45 சதவிகிதம் மக்கள் வேலையில்லாமலும், 80 சதவிகித பேர் வெளிநாட்டு உதவியை நம்பியிருப்பதாகவும் பாலஸ்தீனிய, ஐ.நா சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2007 முதல் காஸா பகுதி இஸ்லாமிய ஹமாஸ் கட்சியால் ஆளப்பட்டுவருகிறது. இஸ்ரேல், எகிப்துடன் இணைந்து, பாலஸ்தீனம்மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் பல ஆண்டுகளாக அங்கு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.

இந்த நிலையில், ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஐ.நா-வின் உலக உணவுத் திட்டம் மூலம் உணவளிக்கப்பட்டு வந்தது. தற்போது கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக, உலக உணவுத் திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து உலக உணவுத் திட்டத்தின் பாலஸ்தீன இயக்குநரான Samer Abdel jaber செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், ``உலக உணவுத் திட்டம் மூலம் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேருக்கு, ஒரு நபருக்கு 10.30 டாலர் மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுவந்தன.
இந்த நிலையில், கடுமையான நிதிப்பற்றாக்குறை காரணமாக பாலஸ்தீனர்களுக்கு உதவியை நிறுத்துவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடியால்தான் வலிமிகுந்த இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும், காசா, மேற்கு கரையிலுள்ள 1.40 லட்சம் பேருக்கு ஐ.நா தனது உதவியைத் தொடரும். போதுமான நிதி பெறப்படாவிட்டால், ஆகஸ்ட் மாதத்துக்குள் உணவு, பண உதவியை முழுவதுமாக நிறுத்துவதற்கும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
ஐ.நா-வின் இந்த முடிவை எதிர்த்து `பசி வேண்டாம்' என்று கோஷமிட்டு வருகின்றனர் பாலஸ்தீனர்கள்.