இஸட், இஸட் ப்ளஸ், எக்ஸ், ஒய் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், வி.ஐ.பி-களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்துவருகிறது. இதில் இஸட் ப்ளஸ் என்பது மிக மிக உயரிய பாதுகாப்பு பிரிவு. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற நீதிபதி, மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். இஸட் ப்ளஸ் பாதுகாப்பில் நாள் ஒன்றுக்கு 36 வீரர்கள், மூன்று வேளை சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

2020 ஜனவரியில், அதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுவந்த `இஸட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொண்டது. அதேபோல், அப்போதைய துணை முதல்வர் பதவியிலிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் `ஒய்’ பிரிவு பாதுகாப்பையும் விலக்கிக்கொண்டது. இந்த நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து, தமிழக முதல்வர் ஆனார் மு.க.ஸ்டாலின். அதையடுத்து, அவருக்கு `இஸட் ப்ளஸ்’ பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. இதேபோல், தமிழக போலீஸிலும் முதல்வர் பாதுகாப்புக்கென தனிப் பிரிவு உண்டு. இந்தப் பிரிவை எஸ்.பி அந்தஸ்தில் அதிகாரி ஒருவர் கவனிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, இரண்டு டி.எஸ்.பி-கள் உள்ளனர். இவர்கள் கண்காணிப்பில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வழக்கமாக முதல்வர் வீட்டிலிருந்து கிளம்புகிறார் என்றால், மூன்று ரூட்கள் தேர்தெடுக்கப்படும். கான்வாய் கிளம்பும்போது, பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி-தான் எந்த ரூட்டில் முதல்வர் கார் போக வேண்டும் என்பதைத் தீர்மானித்து உத்தரவிடுவார். முதல்வர் காருடன் கான்வாய் போகும்போது எந்த வேகத்தில், எப்படிப் போக வேண்டும் என்பதையும் இவர்தான் கண்காணித்துக்கொண்டேயிருப்பார்.

இப்படியிருக்க.. கடந்த 20-ம் தேதியன்று முதல்வர் பாதுகாப்பு பிரிவில் `எக்ஸ் 95’ ரக துப்பாக்கி வீரர்களைக் கூடுதலாக நியமித்துள்ளனர்.
அந்தத் துப்பாக்கியில் அப்படி என்ன விசேஷம் என்று போலீஸ் உயரதிகாரிகளிடம் விசாரித்தோம். ``உலக அளவில் முக்கியத் தலைவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, அவ்வப்போது மார்க்கெட்டுக்கு வரும் அதிநவீன துப்பாக்கிகளை வாங்கி பாதுகாப்பு வீரர்களுக்கு கொடுப்பது வழக்கம்.
இந்தியாவில் துணைநிலை ராணுவப் படையினரிடம் `எக்ஸ் 95’ ரக துப்பாக்கிகள் இருக்கின்றன. உலகத் தரத்துக்குத் தகுந்த மாதிரி பாதுகாப்பு அம்சங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தவகையில்தான், தமிழக முதல்வருக்கும் இந்த வகை துப்பாக்கியைக் கையாளும் வகையில் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையகம் டெல்லி அருகே உள்ளது. அங்கு சென்று பயிற்சி முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் இந்த வீரர்கள். முதல்வருக்கு மூன்று ஷிஃப்ட் -களில் 12 வீரர்கள் பாதுகாப்புப் பணியில் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் ஆயுதங்களுடன், கூடுதலாக எக்ஸ் 95 ரக துப்பாக்கிகளையும் வைத்திருப்பார்கள்.
எக்ஸ் 95 ரக துப்பாக்கியால் எந்த இலக்கையும் படு துல்லியமாகச் சுடலாம். டவார் ரைஃபிள் (Tavor) குடும்பத்தைச் சேர்ந்தது. இஸ்ரேல் நாட்டு தயாரிப்பு துப்பாக்கி இது. நிமிடத்துக்கு 750-950 ரவுண்ட்ஸ் சுடக்கூடியது. இதில், ஓடும் காரில் இருந்தபடியே இலக்கை நோக்கித் துல்லியமாகச் சுடலாம். ஏராளமான அதி நவீன வசதிகள் இருக்கின்றன என்பதை மட்டும்தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்'' என்றார்.
ஆனால், துப்பாக்கி நிபுணர்களில் ஒரு தரப்பினர், ``இந்த வகைத் துப்பாக்கிகள் காடு ,மலை, எல்லையோரங்களில் காவல் பணி செய்கிறவர்களுக்கு நன்றாகப் பயன்படும். மக்கள், கட்சித் தொண்டர்கள் புடை சூழ வலம்வரும் முதல்வருக்கு தேவைப்படாது. ஏனென்றால், ஏதாவது அசம்பாவிதம் என்றால் துப்பாக்கியை வைத்திருக்கும் வீரர் சுட ஆரம்பித்தால், ஒரே நேரத்தில் பலர்மீது குண்டு பாய்ந்துவிடும் ஆபத்தும் உண்டு '' என்றார்கள்.

இவர்கள் சுட்டிக்காட்டிய விஷயத்தையும் நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரியிடம் சொன்னபோது, ``எந்த ரக நவீன துப்பாக்கி என்றாலும், ஆட்டோமேட்டிக் ஆக்ஷன், செமி ஆட்டோமெட்டிக் ஆக்ஷன், சிங்கிள் ஆக்ஷன் என மூன்று முறைகளில் சுடும் வசதி உண்டு. சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி துப்பாக்கியை வைத்திருக்கும் வீரர் முடிவு செய்து ட்ரிக்கரை இயக்குவார். இதற்கெல்லாம் நீண்டகாலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.