Published:Updated:

`` 'டங்கல்' படத்தை ஷீ ஜின்பிங் பாராட்டினார்!" மோடியின் சூப்பர்சானிக் பிரசாரம்

சாவர்க்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவோம் என்பது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில், சிவசேனா கட்சியும் இருக்கலாம்.

ஜின்பிங் டங்கல் படத்தை பாராட்டியதாக மோடி பேச்சு
ஜின்பிங் டங்கல் படத்தை பாராட்டியதாக மோடி பேச்சு

கடந்த 2018-ம் ஆண்டு இந்து மகா சபை, மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்தது. அது ஓர் அதிர்ச்சிகரமான கோரிக்கை. அதாவது, ரூபாய் நோட்டில் காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு, சாவர்க்கர் புகைப்படத்தை அச்சிட வேண்டுமாம். இந்து மகா சபையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர், சாவர்க்கர் .

சாவர்க்கரை வணங்கும் மோடி
சாவர்க்கரை வணங்கும் மோடி
Vikatan

இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் ஸ்வாமி சக்ரபாணி, "வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரத்துக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பரியவை. அவருக்கு இத்தகைய கௌரவத்தை அளிப்பதுதான் சரியானது" என்றும் கருத்து வெளியிட்டார். தற்போது, 'வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவோம்' என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் தாறுமாறாக வாக்குறுதிகளை அளித்துவருகின்றன. அதில், சாவர்க்கருக்கு 'பாரத ரத்னா' விருது என்பதும் ஒன்று.

சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டதன் பின்னணியில், சிவசேனா கட்சியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பல கூட்டங்களில், இந்த விஷயத்தை வலியுறுத்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசிவந்துள்ளார். சமீபத்தில்கூட, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், "காந்தி மற்றும் நேரு போன்ற தலைவர்கள் நாட்டுக்கு ஆற்றிய தொண்டுகளை மறக்கவில்லை. அதேவேளையில், இந்த இரு குடும்பத்தையும் தாண்டி நாட்டுக்காக உழைத்தவர்கள் ஏராளம்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நம்மால் 14 நிமிடங்கள்கூட சிறையில் இருக்க முடியாது. ஆனால், வீர் சாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் அடைபட்டுக் கிடந்துள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை'' எனப் பேசினார். தேர்தல் முடிவடைந்ததும், தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டுமென்பதுகூட, மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா கட்சியின் திட்டமாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். இப்போது சாவர்க்கருக்கு, பாரத ரத்னா என தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதேவேளையில், ஹரியானா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் பெயரைப் பயன்படுத்தியதும் தவறு என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனை, பபிதா போகத். கடந்த 2014 மற்றும் 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பபிதா போகத் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவரின், வாழ்க்கையைத் தழுவித்தான் 'டங்கல் ' இந்தி படம் வெளியானது. சீனா உள்பட உலக நாடுகளில் 'டங்கல்' திரைப்படம் சக்கை போடு போட்டது. தற்போது, பபிதா போகத் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி, தேர்தலிலும் போட்டியிடுகிறார். தாத்ரி தொகுதியில் போட்டியிடும் பபிதா போகத்தை ஆதரித்து, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

Babita Phogat
Babita Phogat

அப்போது, சீன அதிபர் ஜின்பிங், `டங்கல் ' படத்தைப் பார்த்ததாகத் தன்னிடத்தில் கூறியதாகவும் மாமல்லபுரத்தில் ஜின்பிங்கைச் சந்தித்தபோது, `டங்கல்' படம் வெகு சிறப்பாக இருந்தது 'என்று ஜின்பிங் பாராட்டியதாகவும் பிரதமர் மோடி கூட்டத்தில் பேசினார். 'ஹரியானா மக்களிடத்தில் இதைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் ஹரியானா மாநிலப் பெண்கள் குறித்து பெருமை கொள்கிறேன்' என்றும் பிரதமர் மோடி கூறியபோது, பலத்த கரகோஷம் எழுந்தது.

பிரதமர் மோடி இவ்வாறு கூறியதும், மேடையில் இருந்த பபிதா போகத்துக்கு புல்லரித்துப்போய்விட்டது. கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்களிடத்தில் பேசிய பபிதா போகத், ''பிரதமர் மோடியைப் பார்த்துத்தான் அரசியலில் ஈடுபட ஆர்வம் பிறந்தது. மோடி எடுக்கும் உறுதியான முடிவுகள் என்னைக் கவர்ந்தன. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது அத்தகைய முடிவுகளுள் ஒன்று'' என்றார், உற்சாகத்துடன்.

தற்போது 29 வயதான பபிதா போகத் மட்டுமல்ல, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் மற்றும் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் உள்ளிட்டவர்களையும் பாரதிய ஜனதா கட்சி ஹரியானா தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது.