Published:Updated:

`ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள்... கங்கனாவுக்கு மட்டும் Y Plus?’-மஹூவா மொய்த்ரா எம்.பி காட்டம்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு வழங்க இந்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்கவிருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்துத் தொடர்ந்து பேசிவருகிறார் நடிகை கங்கான ரனாவத். `அவரது மரணத்துக்கு நெப்போடிசம்தான் காரணம்’ என்றும், `பாலிவுட்டில் போதைப் பொருள்கள் அதிக அளவில் புழங்குகின்றன’ என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறார். பின்னர் மகாராஷ்டிரா அரசின் மீதும், மும்பை காவல்துறை மீதும் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் கங்கனா.

சமீபத்தில் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், `சஞ்சய் ராவத் என்னை வெளிப்படையாக மும்பைக்கு வரக் கூடாது என்று மிரட்டுகிறார். மும்பை ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் உணரப்படுகிறது?’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்தச் செய்தி பெரும் பேசுபொருளானது. கங்கனாவின் இந்தக் கூற்றுக்கு சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதோடு சஞ்சய் ராவத், `மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறியதற்கு கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தார். இவர்களுக்கிடையே வார்த்தை மோதல்கள் பற்றி எரிய ஆரம்பித்தன.

அதோடு சிவசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சர்நாயக் (Pratap Sarnaik) ``தேசவிரோதச் சட்டத்தின்கீழ் கங்கனா கைது செய்யப்பட வேண்டும்’’ என்றும், ``அவர் மும்பைக்கு வந்தால் மராட்டியப் பெண்கள் அவரின் கன்னத்தில் அறையாமல்விடக் கூடாது’’ என்றும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் கங்கனா ரனாவத், `வரும் 9-ம் தேதி (இன்று) மும்பை வருகிறேன். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ என்று சவால் விடுத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், கங்கனாவின் குடும்பத்தினர் ஹிமாச்சலப்பிரதேச முதல்வரைத் தொடர்புகொண்டு கங்கனாவுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரினர். இதற்கிடையே கங்கனாவுக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆயுதம் தாங்கிய 10 கமாண்டோக்கள் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் கங்கனாவுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பில், 11 காவலர்களால் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர். இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் இதில் அடங்குவர்.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ``மகாராஷ்டிராவையும் மும்பையையும் அவமானப்படுத்திய ஒருவருக்கு ஒய் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதை கேட்கும்போது வலியும் வேதனையும் உண்டாகின்றன. மகாராஷ்டிராவை அவமதிக்கும் எவரையும் அனைவரும், அனைத்துக் கட்சியினரும் கண்டிக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

மஹூவா மொய்த்ரா
மஹூவா மொய்த்ரா

திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா, ``குறைந்த அளவு காவலர்கள் உள்ள இந்தியா போன்ற நாட்டில், நடிகர்களுக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது ஆச்சர்யமளிக்கிறது” என்றார். ஒவ்வொரு லட்சம் மக்களுக்கும் 138 காவலர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், பாலிவுட் நடிகைக்கு ஒய் ப்ளஸ் பாதுகாப்பை வழங்குவதன் பின்னணியிலுள்ள காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு, ``ஒரு லட்சம் மக்களுக்கு 138 காவலர்கள், உலக அளவில் 71 நாடுகளில் குறைந்த அளவு காவலர்களைக்கொண்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கும்போது பாலிவுட் கலைஞருக்கு ஏன் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்... இருக்கும் காவலர்களைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டாமா உள்துறை அமைச்சரே?" என்று விமர்சனமும் செய்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு