ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்திய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமர்நாத் யாத்ரீகர்களை அவசர அவசரமாக வெளியேற்றி, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்புகள் முடக்கப்பட்டன. முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட, ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறைவைக்கப்பட்டனர். இப்படித்தான், ‘மிஷன் காஷ்மீர்’ ஆபரேஷனை நடத்தியது மத்திய அரசு. தற்போது, அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அரசு சொல்லிவருகிறது. ஆனால், அங்கு அத்தனை அரசியல் தலைவர்களும் இன்றுவரை வீட்டுக்காவலில்தான் இருக்கிறார்கள்.
காஷ்மீரில் என்ன நடக்கிறது? என்பது தெரியாத சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தன் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் ஜம்மு- காஷ்மீரில் எம்.எல்.ஏ-வாக இருந்த யூசுப் தாரிகாமியைச் சந்திப்பதற்காக ஆகஸ்ட் 9-ம் தேதி காஷ்மீர் பயணமானார். அதே நாளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் காஷ்மீர் சென்றார். ஆனால், அவர்கள் இருவரையும் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் போலீஸார் தடுத்துநிறுத்தி, டெல்லிக்குத் திருப்பி அனுப்பினர்.

அதன் பிறகு ஒரு வாரத்துக்கு முன்பாக, ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்கள் காஷ்மீர் சென்றனர். அவர்களும் ஸ்ரீநகர் விமானநிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தன்னுடைய கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான யூசுப் தாரிகாமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் யெச்சூரி. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காஷ்மீருக்குச் சென்று யூசுப் தாரிகாமியை யெச்சூரி சந்திக்கலாம் என்று அனுமதி அளித்தது. அவரை சந்திப்பதோடு திரும்ப வேண்டும் என்றும், அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபடக்கூடாது என்றும் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

அதன்படி நேற்று காஷ்மீர் சென்ற சீதாராம் யெச்சூரி, தன் நண்பர் யூசுப் தாரிகாமியைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் ஒரு புகைப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.
காஷ்மீரின் கத்துவா என்ற இடத்தில், ஒரு கோயிலில் வைத்து சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை வெளி உலகுக்குக் கொண்டு வந்தவர்தான் யூசுப் தாரிகாமி என்பது குறிப்பிடத்தக்கது.