Published:Updated:

`எடியூரப்பாவை அவமானப் படுத்திவிட்டீர்கள் மோடி..!’ - சித்தராமையாவின் திடீர் சப்போர்ட்

பிரதமர் மோடி, கர்நாடக முதல்வரை அவமானப்படுத்திவிட்டதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.

Siddaramaiah
Siddaramaiah

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ், ஜே.டிஎ.ஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர்.

Yediyurappa
Yediyurappa

காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த ஜேடிஎஸ் சமீபத்தில் தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டது. ஆட்சி கவிழ்ப்புக்கு சித்தராமையாவும் ஒரு காரணம் என முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி, சித்தராமையா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அடுக்கி வருகிறார். இந்நிலையில் இவை அனைத்துக்கும் மாறாக புதிய விஷயம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளது. எடியூரப்பாவை அவமதித்ததாகப் பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்தியுள்ளார் சித்தராமையா.

`3 ஆண்டுகளுக்கெல்லாம் இந்த ஆட்சி தாங்காது!’ - சித்தராமையா ஆரூடம்

கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக மழை, வெள்ளம் தொடர்ந்து வருகிறது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த புதன் கிழமை கர்நாடகாவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Siddaramaiah
Siddaramaiah

அது முடிந்த பிறகு வெள்ள நிவாரண விஷயம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச, கர்நாடக முதல்வர் எடியூரப்பா வரும் வெள்ளிக் கிழமை டெல்லி செல்லவுள்ளார் என அம்மாநிலச் சட்டத்துறை அமைச்சர் ஜே.சி மதுசுவாமி தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் முதல்வரின் டெல்லிப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இங்கேயே பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எடியூரப்பாவைச் சந்திக்க அனுமதி மறுத்ததே முதல்வரின் டெல்லிப் பயணம் ரத்துக்குக் காரணம் என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கு சித்தராமையா தன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ``பிரதமர் மோடி கர்நாடக முதல்வரைச் சந்திக்க மறுத்துள்ளார். அதுவும் வெள்ளத்துக்குப் பிறகான அவசரக் காலத்தில் கூட அவர் முதல்வரைச் சந்திக்க மறுப்பது எடியூரப்பாவுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இது நம் மாநிலத்துக்கு அநீதி விளைவிக்கும் செயல். சுய மரியாதை உள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், `கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளச் சேதத் தொகை 35,160 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே என வெளியிட்டுள்ளது. ஏன், எடியூரப்பா தலைமையிலான அரசு திவாலாகிவிட்டதா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.