Published:Updated:

`சட்டத்தை முழுமையாகப் படித்துவிட்டுப் பேசுங்கள்!' குடியுரிமைச் சட்டம் குறித்து சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

`குடியுரிமை விதி, குடியுரிமைச் சட்டத்தை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் சட்டத்தை முழுமையாகப் படித்துவிட்டு பேச வேண்டும்' என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்ட மசோதா என்பது தனிப்பட்ட நபரின் விருப்பமான சட்டம் கிடையாது. அதேபோல இந்தக் குடியுரிமைச் சட்டமும் திடீரென கொண்டு வரப்பட்ட சட்டமல்ல.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்ததைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் குடியுரிமைச் சட்டம். இதை எதிர்க்கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் மக்களையும் இளைஞர்களையும் பெண்களையும் திசைதிருப்பும் விதமாக பொய்க் குற்றச்சாட்டுகள், பொய்ப் பிரசாரங்கள், வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு நாட்டு மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரை, எந்தக் குடிமகனுக்கும் இதில் பாதிப்பு கிடையாது. இந்தியாவில் பிறந்த முஸ்லிம்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்தியக் குடியுரிமை விதி 2003-ல் கொண்டு வரப்பட்டு குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் கணக்கெடுப்பு போன்றவற்றைக் கொண்டு வந்ததும் காங்கிரஸ் கட்சிதான். 2003-ல் குடியுரிமை விதியை உருவாக்கிக்கொண்டு வந்ததும் காங்கிரஸ்தான்.

சசிலா புஷ்பா
சசிலா புஷ்பா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும் தற்போது குடியுரிமைச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாளை வேறொரு சட்டம் கொண்டு வரும்போது அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இப்படி எதிர்ப்பு தெரிவிப்போர் குடியுரிமைச் சட்டத்தை முழுமையாகப் படித்து விட்டு அதுகுறித்து விவாதிக்க வேண்டும். இச்சட்டத்தை அவர்கள்தான் தேர்தல் ஆதாயத்துக்காக முஸ்லிம்களையும் பிற மதத்தினரையும் தூண்டி விடுகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு