Published:Updated:

தேர்தல் நாளில் வாக்களிப்பீர்களா அல்லது விடுமுறையை அனுபவிப்பீர்களா? - இளைஞர்களின் பதில்கள்

இளைஞர்கள்
இளைஞர்கள்

தமிழகத் தேர்தல்களைப் பொறுத்தவரை 50 முதல் 70% வரைதான் வாக்குகள் பதிவாகின்றன. இதற்கு என்ன காரணம்... இன்றைய இளைஞர்கள் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களிடம் நேரடியாகப் பேசினோம்.

தேர்தலில் வாக்களிப்பது என்பது, நம் ஜனநாயகக் கடமை. தமிழக தேர்தல்களைப் பொறுத்தவரை 50 முதல் 70% வரைதான் வாக்குகள் பதிவாகின்றன. இதற்கு என்ன காரணம்... இன்றைய இளைஞர்கள் வாக்களிப்பது பற்றி விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களிடம் நேரடியாகப் பேசினோம். இளைஞர்கள், கூறிய பதில்களை இங்கு பார்ப்போம்.

கெஸியா செல்வ ஜெபா.பொ - கல்லூரி மாணவி, கோயம்புத்தூர்.
கெஸியா செல்வ ஜெபா.பொ
கெஸியா செல்வ ஜெபா.பொ

``இப்போதுள்ள இளைஞர்கள் எல்லாருமே கண்டிப்பாக வாக்களிப்பார்கள். வாக்களிப்பதைக் கடமையாக நினைக்கிறார்கள். அரசியலைப் பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசியல்வாதிகளைக் கிண்டல் பண்ணுவதற்காக மீம்ஸ் தயார் செய்து அதன் மூலம் அரசியலை நுகர்ந்துவருகிறார்கள். எனக்கும் அரசியலைப் பற்றி பெரிய அளவில் புரிதல் இல்லை. அதற்காக நான் ஓட்டுப் போடாமலும், நோட்டாவுக்குப் போடுவதாகவும் இல்லை. அடுத்த ஐந்தாண்டு யாரோ ஒருவர் என் பிரதிநிதியாக இருக்கப்போகிறார் என்பதை மனதில் வைத்திருக்கிறேன். நான் முதன்முறையாக வாக்களிக்கப்போகிறேன். வாக்களிக்கும் தினத்தைப் பெரிய அளவில் விடுமுறை நாளாகக் கொண்டாட முடியாது. ஏனென்றால் கொரோனா காரணமாக பல மாதங்களாக விடுமுறையில்தானே இருந்தோம்! அரசியலைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அதிகம் தெரியாத நிலையில் இருக்கும் நான், எனது தொகுதியைப் பொறுத்தவரை சிறிதளவேனும் யோசித்து அரசியலை கற்றுக்கொண்ட பிறகு வாக்களிப்பேன்.

செல்வ கிருத்திகா - கல்லூரி மாணவி, மதுரை

``நான் இப்போதுதான் முதன்முறையாக வாக்களிக்கப்போகிறேன் எனவே வாக்களிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் ஒரு ஓட்டுக்கு அவ்வளவு மதிப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். என்னிடம் இருக்கும் ஒரே ஓர் அதிகாரம் வாக்குரிமை என்று நம்புகிறேன். நல்ல அரசியல் இல்லை, நல்ல கட்சி இல்லை, இது சரியில்லை, அது சரியில்லை எனப் புலம்புவதற்கு பதில், வாக்களிக்கும் தினத்தன்று சிந்தித்துச் சரியான நபருக்கு வாக்களிக்க வேண்டும். அந்த நாளை விடுமுறை நாளாகக் கருத மாட்டேன். எனது தலையாய கடமைகளில் ஒன்றான எனது வாக்கைச் செலுத்தும் நாளாக எண்ணிச் செயல்படுவேன்.’’

திருமலா - கல்லூரி மாணவி, மதுரை

``வாக்குச்சாவடிக்குச் செல்ல என் மனம் தயங்குகிறது. விலையில்லா பொக்கிஷம்தான் நேரம். அதை நேர்மையற்ற, அக்கறையற்ற துரோகிகளுக்கு நான் ஏன் வீணடிக்க வேண்டும்? பட்டப்படிப்பை முடிப்பதற்கு பதிலாக ஆடு மாடு மேய்த்திருந்தால் சிறிது பணத்தையாவது சேமித்திருக்கலாம் என்று எண்ணும் நிலைக்கு, இளைஞர்களைத் தவிக்கவிட்டனர் இந்த அரசியல்வாதிகள். இவர்களுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்? மதுக்கடைகளைத் திறந்து பெண்களின் வாழ்வை நாசமாக்கினர். கொரோனா நோய்யால் மக்கள் அவதிப்பட்டபோது உதவாத இந்த அரசியல்வாதிகளுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்? ”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முகேஷ் - சமூக ஆர்வலர், புதுக்கோட்டை.
முகேஷ்
முகேஷ்

``இங்கு மக்களின் பிரச்னைகள், அழுகைகள் ஓய்ந்தபாடில்லை. கடந்த பத்து வருடங்களில் மக்களை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு, அவர்களைச் சிரிக்கக்கூட விடாமல் பார்த்துக்கொண்டது இப்போதைய ஆளும் அரசு. இது மாற்றத்துக்கான நேரம் என்று தோன்றுகிறது. அதனால் கண்டிப்பாக வாக்களிப்பேன்.”

தமிழ்செல்வி , கல்லூரி மாணவி , நாகை
தமிழ்செல்வி
தமிழ்செல்வி

``எங்களைச் சுற்றியிருக்கும் அரசியல் நிலவரம் சரியில்லை என்பதால் இந்த தடவை நான் கண்டிப்பாக வாக்களிப்பேன். நம் நாட்டின் நிலையை மாற்றக்கூடிய ஆயுதமாக நான் என் வாக்கை நினைக்கிறேன். நம் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைந்து கொண்டேயிருக்கிறது விவசாயிகள் தற்கொலை நீடித்துக்கொண்டேயிருக்கிறது. கல்வி முறையிலும் சரி, மற்ற எல்லா துறைகளிலும் சரி... நம் நாடு பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. எனவே, 10 ஆண்டுக்காலம் ஏதும் மாறாமல் இருப்பது மனதை மரத்துப்போகச் செய்துவிட்ட, காரணத்தால் இந்த முறை ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் என்ற ஒரு நப்பாசையோடு வாக்களிக்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.”

செல்வகுமாரி, கல்லூரி மாணவி, நாகை.
செல்வகுமாரி
செல்வகுமாரி

``கண்டிப்பாக வாக்களிப்பேன். வாக்களிப்பது நம் அனைவரின் கடமை. சின்ன வயதிலிருந்து ஓட்டுப் போட்டு அரசியலில் பங்கெடுத்துக்கொள்ள ஆசை! இது நான் முதன்முறையாக ஓட்டு போடப்போகிற தேர்தல். எல்லா தேர்தல்போலவும் இப்போதும் வாக்குறுதிகளை அள்ளி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் வாக்குறுதிகள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் இருந்துவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் நல்லவர்கள்போல நடந்துகொள்ளும் அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்ட நம்மிடம் இருக்கிற ஒரே ஆயுதம் வாக்குதான். ஒருநாள்தான் நம் கைக்கு அதிகாரம் வருகிறது. அதைச் சரியாகப் பயன்படுத்தி நிச்சயம் ஓட்டுப் போடுவேன்.”

ஆனந்த குமார் - கல்லூரி மாணவர், தூத்துக்குடி.
ஆனந்த குமார்
ஆனந்த குமார்

``ஓட்டுப் போடுவது நம் உரிமை, ஜனநாயகக் கடமை. எனவே, கண்டிப்பாகத் தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தலில், பல நேரங்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படும். இந்த மாதிரியான பிரச்னைகள் வராமலிருக்க அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். வாக்குரிமை மட்டும் இல்லையென்றால், ஆட்சியாளர்கள் நம்மை மனிதர்களாகக்கூட மதிக்க மாட்டார்கள். இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குச் சிறிதளவேனும் மக்கள் நலனில் அக்கறை இருப்பதற்குக் காரணம், மக்களுடைய ஓட்டுதான்.தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே நம்முடைய பலம். அந்த பலத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தவறவிடக் கூடாது.”

சித்திரை குமார் - கல்லூரி மாணவர், திருச்செந்தூர்.
சித்திரை குமார்
சித்திரை குமார்

``வாக்குரிமை என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் விஷயம் இல்லை. ஒருகாலத்தில், பெரும் பணக்காரர்களுக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்தது. தேர்தலின்போது நாம் செலுத்தும் வாக்குதான், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது‌. சில பேர், `ஓட்டுப் போட்டு என்ன ஆகப்போகிறது’ என்கிறார்கள். நாம் ஓட்டுப் போடவில்லை என்றால், நம்முடைய ஓட்டை, கள்ள ஓட்டாக மாற்றிவிடும் சூழல் இருக்கிறது. நம்முடைய ஓட்டை வேறு ஒருவன் கள்ள ஓட்டாகப் போடுவதற்கு, நாமே ஓட்டுப் போடலாமே... மேலும், வாக்கு செலுத்தினால்தான் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்கத் தகுதியுள்ளவர்களாக நாம் மாறுவோம்.”

சுயேச்சை வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?- சிந்திக்கவைக்கும் இளம் வாக்காளர்கள்
ஜெ.டெனிஸ், கல்லூரி மாணவர், தூத்துக்குடி
ஜெ.டெனிஸ்
ஜெ.டெனிஸ்

``கண்டிப்பாக ஓட்டுப் போடுவேன். அதற்காகத்தானே ஒரு நாள் விடுமுறை கொடுக்கிறார்கள். ஓட்டுப் போட்ட பிறகு செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்வதைவிட முக்கியம் ஓட்டு போடுவதற்கு முன் யோசிப்பது. பொதுவாக ஒரு கட்சியின் மீது கொண்ட அபிமானத்தின் பேரில் வாக்களிக்கின்றனர். ஒரு சிலர்தான் ஒவ்வொரு கட்சியும் கூறும் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பார்கள். ஒரு சிலர் `எவன் வந்தாலும், அவன்தான் சம்பாதிக்கப்போறான். வேற யாராச்சும் வித்தியாசமா வர மாட்டாங்களா’ என எதிர்பார்ப்பார்க்கள்.

எவர் ஒருவர் சொத்து சேர்க்கவோ, பணம் சம்பாதிப்பதையோ நோக்கமாக வைத்திருக்கவில்லையோ அவருக்கே என் ஓட்டு. அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள், செயல்பாடுகள், இதற்கு முன் என்ன செய்தார்கள் என்றெல்லாம் பார்த்து சரியான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து வாக்களிப்பேன். ”

பால்ராஜ் - தனியார் நிறுவன ஊழியர், தாயனூர்.

``தேர்தலில் கட்டாயமாக வாக்களிப்பேன். தேர்தல் என்பது நமது கடமையைச் செய்வதற்கான நாளே தவிர, கொண்டாடுவதற்கான நாள் இல்லை. மேலும் வாக்களிப்பதற்கு எவ்வித சிரமமும் இல்லாமல் இருப்பதற்குத்தான் விடுமுறையே. அரசியல் நிலைப்பாட்டை அறிந்து, அன்றாட வாழ்வில் நம் பிரச்னைகளுக்கான தீர்வு காணும் ஒரு நபரைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் வழிதான் தேர்தலே தவிர செல்ஃபி எடுத்து ஷேர் செய்வதற்கு அல்ல. ஆகவே நம்மில் ஒருவரை நமக்காகச் சட்டமன்றத்தில் குரல் எழுப்ப வாக்களிப்பேன்.”

`அரசியல் மாற்றம் வேண்டுமா... எந்த மாதிரியான மாற்றங்கள் வேண்டும்?’ - இளைஞர்களின் பார்வை

இதற்கு முன் இருந்ததுபோல, யாரையும் சார்ந்து தங்களது வாக்கை அளிக்காமல், அரசியல் களத்தில் தங்களது தேவையை நன்றாக உணர்ந்துள்ள இளைஞர்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். இதனால் இளைஞர்களின் ஓட்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு