Published:Updated:

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரைக் கடுமையாகச் சாடி ஒரு வீடியோவைப் பதிவுசெய்திருந்தார் சாட்டை துரைமுருகன்.

மிரட்டல் வழக்கில் கைதாகி, ஜாமீன் பெற்ற யூடியூபர் சாட்டை துரைமுருகன், மீண்டும் அவதூறு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும்கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும், சீமானையும் கடுமையாக விமர்சனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ட்விட்டர் கருத்து மோதல்கள் முற்றியநிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட நான்கு பேர் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்துக்குச் சென்று பிரபாகரனை விமர்சித்த வினோத்தை நேரில் சந்தித்துப் பேசியதோடு,

சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்

காவல்துறையினர் முன்னிலையில் வினோத்தை மறுப்பு தெரிவித்து, மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட வேண்டும் என்று எச்சரித்து வீடியோவும் வெளியிடச் செய்துள்ளனர். அவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்துபோய் வினோத் கே.கே.நகர் காவல்துறையினருக்குப் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதேநேரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மணல் கடத்தலுடன் தொடர்புபடுத்திப் பேசியதாக, கரூர் மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி கொடுத்த புகாரில் கரூர் போலீஸார் பதிவு செய்த வழக்கில் தற்போது மீண்டும் சாட்டை துரைமுருகன் கைதுசெய்யப்பட்டு லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீமானின் தம்பிகள் கைது
சீமானின் தம்பிகள் கைது

இது குறித்து நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான எங்கள் அண்ணன் சீமானை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிடுகிறார். அவரை எங்களது தம்பிகள் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு தவறு என்றும், அடிப்படை முகாந்திரம் இல்லாத கருத்துகளைச் சொல்வதாகவும், அதனை மறுத்து வருத்தம் தெரிவித்து இன்னொரு வீடியோ பதிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். அதைப் பொருட்படுத்தாமல் வினோத்

சீமான் - பிரபாகரன்
சீமான் - பிரபாகரன்

அதே தவறையே செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்... இந்நிலையில்தான் எங்கள் அண்ணன்கள் நான்கு பேர் வினோத்திடம் நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார்கள். அதற்கு அவர் மிரட்டியதாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார், அதன்பேரில் போலீஸாரும் கைதுசெய்கிறார்கள். வழக்கை விட்டுத்தள்ளுங்கள். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். கடந்த ஆண்டு, மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரைக் கடுமையாகச் சாடி, தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பதிவுசெய்தார் சாட்டை துரைமுருகன்.

நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைதுசெய்த போலீஸார்
நாம் தமிழர் நிர்வாகிகளைக் கைதுசெய்த போலீஸார்

அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது வழக்கு போட்டு கைதுசெய்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்... அடுத்ததாக கலைஞரை விமர்சனம் செய்த வழக்கில் மீண்டும் கைதுசெய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும்கட்சி செய்யும் செயல்’’ என ஆவேசமாகக் கூறினார்கள்.

இது தொடர்பாக திருச்சி தி.மு.க பிரமுகர் சூர்யா சிவாவிடம் பேசினோம். ”கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கட்சி தி.மு.க என்கிற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். அரசியல் தலையீடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி இதில் எதுவுமே கிடையாது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, இது கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சி. அண்ணா, கலைஞர் ஆட்சிக்காலத்திலிருந்து பார்த்தால் நன்கு புரியும். வாய் இருந்தால் போதும், யார், யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை அடுக்கலாம் என்பதற்குச் சாட்டை துரைமுருகன் ஓர் எடுத்துக்காட்டு. கடந்த ஆண்டுகளில் தி.மு.க-அ.தி.மு.க-விலுள்ள முக்கியத் தலைவர்களைக் காது கொடுத்துக்கூடக் கேட்க முடியாத அளவுக்குக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சாட்டை துரைமுருகன் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்

இது சரியா? உங்கள் தலைவரை ஒருவர் தவறாகப் பேசுகிறார் என்றதும் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு நேரில் சென்று மன்னிப்புக் கேட்டு, வீடியோ பதிவிடும்படி வற்புறுத்துகிறீர்களே... அது தவறு இல்லையா? உங்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரம் வினோத்துக்கும்தானே இருக்கிறது... எதற்காக அவரை சாட்டை துரைமுருகன் மிரட்ட வேண்டும்... ஒருவர்மீது ஊழல் புகார் குற்றச்சாட்டுகளைச் சொல்வதற்கு முன் ஆதாரங்களை வைத்துக்கொண்டுதானே பேச வேண்டும்... ஆதாரம் இல்லாமல் பேசியதால் அவர்மீது கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதன்பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் எங்கிருந்து வருகிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி?” என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு