Published:Updated:

எடப்பாடி ஆட்சி, ரஜினி - கமல் அரசியல்... ஆந்திராவிலிருந்து ரோஜா ஸ்பெஷல் பேட்டி!

̀̀``எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லியிருக்கிறோம்... படிப்படியாக மதுவிலக்கை ஆந்திராவில் அமல்படுத்துவோம்" என்கிறார் ரோஜா!

Published:Updated:

எடப்பாடி ஆட்சி, ரஜினி - கமல் அரசியல்... ஆந்திராவிலிருந்து ரோஜா ஸ்பெஷல் பேட்டி!

̀̀``எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லியிருக்கிறோம்... படிப்படியாக மதுவிலக்கை ஆந்திராவில் அமல்படுத்துவோம்" என்கிறார் ரோஜா!

விஜயவாடாவில் தொழில்துறை வளர்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பிஸியாக இருந்தார் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வுமான ரோஜா. இவர் எம்.எல்.ஏ-வாக இருப்பது இது இரண்டாவது முறை. ஆந்திர மாநில தொழில் துறையின் கீழ் வரும் கட்டமைப்புத் துறையின் சேர்மன் பதவியிலும் இருக்கிறார். கட்சியின் மகிளா பிரிவின் தலைவராகவும் இருக்கிறார். மே 4-ம் தேதியன்று மாலை வாட்ஸ்அப் வீடியோ கான்ஃபரன்ஸில் ரோஜாவுடன் உரையாடினோம். சில கேள்விகளைக் கேட்டோம். ``எங்கள் தொகுதியில் சிலருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தினார்கள். அவர்களில் இருவருக்கு பாஸிட்டிவ் இருப்பதாகச் சொன்னார்கள். இறுதிக்கட்ட பரிசோதனை முடித்துவிட்டு அனுப்புவதாகச் சொன்னார்கள். தொகுதி முழுக்க கொரோனா தடுப்பு மற்றும் உதவும் பணியில்தான் ஈடுபட்டு வருகிறேன்'' என்று புள்ளிவிவரங்களை அடுக்கியவரிடம் கேள்வியை அடுக்கினோம்.

``மதுபானங்களுக்கு அதிக விலை வைத்து, ஆந்திர அரசும் மதுக்கடைகளைத் திறந்துவிட்டதே?"

``மது வேண்டாம் என்றால் மதுப்ரியர்கள் கோபப்படுவார்கள். ஆனால், டி.வி-யில் பார்த்தேன். மதுக்கடைகளின் முன்பு கும்பல் கும்பலாக குவிந்த நபர்களைப் பார்க்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. கொரோனா பரவும் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை அவர்கள் பின்பற்றத்தவறுகிறார்களே என்று நினைக்கும்போது கவலையாய் இருக்கிறது. ஒருத்தருக்கு தொற்று இருந்தால் கூட, மற்றவர்களுக்கு பரவி விடும். இதனால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட வாய்ப்பிருக்கிறதே?"

``மதுவை ஒழிக்க வேண்டும் என்கிற விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

``எங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லியிருக்கிறோம்... படிப்படியாக மதுவிலக்கை ஆந்திராவில் அமல்படுத்துவோம் என்று! ஜெகன்மோகன் சார் முதல்வர் ஆனவுடனேயே, பெட்டிக்கடைகள் மாதிரியான இடங்களில் இருந்த 44,000 மதுக்கடைகளை மூடிவிட்டார். 40% பார்கள், பொது இடங்களில் இருந்த 20% மதுக்கடைகளை மூடிவிட்டார். மதுபான வகைகளின் விலைகள் ஷாக் அடிக்கிற ரேட் இருக்கும். அதன் மூலமாக வரும் வருமானத்தை ஏழை எளியவர் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்துவோம் என்றார் முதல்வர். திறந்திருக்கிற கடைகளையும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து 11 மணி முதல் 7 மணிவரை நேரக்கட்டுப்பாடு கொண்டுவந்துவிட்டார். கள்ளச்சாரயம் வந்துவிடக் கூடாது என்பதால் மே 3-ம் தேதி மதுக்கடைகளைத் திறந்தார். அதுவும் மத்திய அரசு சொன்னதன் பேரில்தான்! குடி மறுவாழ்வு நிலையங்களையும் திறக்கத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர்."

``கொரோனா நேரத்தில் நீங்களே முன்னின்று சமைத்து உணவுகளை மக்களுக்கு தருகிறீர்களே?"

``பொதுவான கேன்டீன் இருக்கு. அப்பப்ப போய் உட்காருவேன். எல்லா துறையினருக்கும் கேன்டீனில் இருந்து சாப்பாடு ரெடி பண்ணி அனுப்புகிறோம். டாக்டர்கள், முனிசிபாலிட்டி, போலீஸ்... என்று பலதரப்பட்டவர்களுக்கு தருகிறோம். நான் உட்பட எல்லாருக்கும் ஒரே சாப்பாடு. முன்பு ஏழை எளியவர்களுக்கு கேன்டீனில் நான்கு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வந்தோம். இப்போது இந்த கொரோனா நேரத்தில் அதை இலவசமாக வழங்கி வருகிறோம். இரண்டு வேன்களில் உணவுகளை எடுத்துப்போய் பொது இடங்களில் வைத்து விநியோகிக்கிறோம்."

``கொரோனா பணியில் தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் வித்தியாசம் தெரிகிறதா?"

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

``நிச்சயமாக! ஜெகன் மோகன் முதல்வர் ஆனதும் ஒரு காரியம் செய்தார். ஐம்பது மக்களுக்கு ஒரு தன்னார்வத் தொண்டர் என்கிற வகையில் 4 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தினார். அவர்களின் வேலைகளில் ரேஷன் கார்டு பெற உதவுவதில் தொடங்கி பல அடங்கும். அரசிடம் எந்த உதவி கேட்டும் நேரிடையாகப் போக வேண்டியதில்லை. தன்னார்வத் தொண்டர் மூலம் மக்கள் அணுகி வந்தார்கள். இந்த சிஸ்டத்துக்கு மக்களிடத்தில் நல்ல பெயர். அந்த சிஸ்டம் இந்தக் கொரோனா சீசனில் மிகவும் நன்றாக வேலை செய்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் யாருக்காவது சளி, ஜுரம் பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஊரடங்கு அமலில் இருப்பதால், மக்கள் வெளியே வரமுடியாது. அத்தியாவசியத் தேவைகளான பென்ஷன் வாங்குவதில் ஆரம்பித்து, ஆளுக்கு ரூ.1000 ரூபாய் வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு அரசு உதவிகளை நேரிடையாக வீட்டுக்கே கொண்டுபோய் சேர்க்கிறார்கள். அதேநேரம், அரசுக்குத் தேவைப்படும் புள்ளி விவரங்களை இந்த தன்னார்வத் தொண்டர் மூலம் மக்களிடம் நேரிடையாக அரசு கேட்டுப் பெறுகிறது. பல நல்ல அம்சங்களை ஜெகன் மோகன் செயல்படுத்திவருவதன் பின்னணி இதுதான். என்னுடைய தொகுதியிலும் தன்னார்வத் தொண்டர்கள் செயல்படுகிறார்கள்."

``ஆந்திர அரசியல் எப்படியிருக்கிறது?"

``எங்க மாநிலத்தில் அரசியல் எப்பவுமே `ஹாட்'தான். முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு வெளியே எங்கேயும் போகமாட்டார். ஃபீல்டுல போயி வேலை செய்யச் சொன்னா.. அவரு ஹைதராபாத்தில் உட்கார்ந்துகொண்டு ஆலோசனை சொல்வதிலேயே இருக்கிறார். போராடிக்குது போலிருக்கிறது! அவரு மகனும் அப்பா மாதிரிதான் செயல்படுகிறார். முன்னாள் அமைச்சர். இவர் நின்ற தொகுதியிலும் போய் ஏதும் செய்வதில்லை. அவர்களின் கட்சியை வைத்து மாநிலத்துக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம். அப்பா மாதிரியே இவரும் ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு ஜெகன் சாரை திட்டுவதும் குறை சொல்வதுமாக இருக்கிறார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஒரே ஒரு தலைநகர்... அதுவும் அமராவதியில் நிறுவ முயன்றார். ஆனால், எதையும் உருப்படியாக செய்யவில்லை. அவருக்குப் பிறகு முதல்வரான ஜெகன் மோகன், மூன்று தலைநகர்களை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். எவ்வளவு நல்ல திட்டம் தெரியுமா... இது?"

``கமல், ரஜினி.. போன்ற தமிழ் சினிமா ஹீரோக்கள் அரசியலில் கால் பதித்து வருகிறார்களே?"

``கமல் சாருடன் நான் படம் நடித்ததில்லை. அதனால், பெரிசா ஏதும் தெரியாது. அதனால் அவரைப் பற்றி ஏதும் சொல்லமுடியாது. ரஜினியுடன் நடித்திருக்கிறேன். அடிப்படையில் அவர் ரொம்பவும் நல்ல மனிதர். அரசியலில் அவர் முதல்வராக மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், ரஜினியின் ஆதரவாளர்கள் அவர்தான் முதல்வராக வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிறருக்கு முதல்வர் பதவி என்றால் அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை ரஜினியால் சமாதானப்படுத்த முடியுமா... அல்லது ரஜினிதான் முதல்வராக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் ரஜினியை சமாதானப்படுத்துவார்களா... இந்த இரண்டில் எது நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு பிறகு நான் கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும்."

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

``தமிழ்நாடு அரசியலை கவனித்து வருகிறீர்களா?"

``தெரியும். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா... இப்படி ஜாம்பவான்கள் அவரவர் பாணியில் ஆட்சி செய்த மாநிலம். இப்போது உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரும்போது அவரைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஓ.பன்னீர் செல்வம் கூட முதல்வராக இருந்ததாலே அறிமுகம் ஆனவர். ஆனால், எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் அம்மா இல்லாத காலத்திலும் கட்சியை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். ஆட்சியையும் நன்றாக நடத்துகிறார்."

``தொழில் துறையின் சேர்மன் நீங்கள்... அதைப்பற்றி சொல்லுங்களேன்?"

ரோஜா
ரோஜா

``டி.சி.எல். மாதிரி பெரிய பெரிய நிறுவனங்கள் இங்கே ஆரம்பிப்பதற்கு அனுமதி அளித்திருக்கிறோம். வேலைகள் நடந்த வண்ணம் உள்ளன. மைக்ரோ லெவலில் சிறு, குறு தொழில் பார்க் இருக்கிறது. கொரோனா நேரத்தில் அங்கு வேலை செய்கிறவர்களின் நல வாழ்வுக்காக சில கோடிகளை முதல்வர் ஜெகன்மோகன் ஒதுக்கியிருக்கிறார். எங்கள் துறையின் புதிய நிர்வாக இயக்குநராக கரிகாலன் பதவி ஏற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துச் சொன்னேன். தொழில்துறை தொடர்பான ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தேன். சவால்களை சந்திப்பது எனக்குப் பிடிக்கும். சினிமாவைவிட அரசியலில் சவால்கள் அதிகம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில்தான் என்பதால், இங்குள்ள அரசியல் எனக்கு அத்துப்படி. எனக்கு ஆதரவாக என் கணவர், சகோதரர் இருப்பது பெரிய பலம். முதல்வர் ஜெகன்மோகன் எனனை, தன் சகோதரி போல வழிநடத்துகிறார்."