அரசியல்
அலசல்
Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா, ஓவியங்கள்: சுதிர்

‘உங்க அப்பாகூட இப்படிப் பேசுனது இல்லை தம்பி!’

தலைமை நிலையச் செயலாளரான கையோடு, கட்சி வளர்ச்சிக்காக பம்பரமாகச் சுழலும் அந்த வாரிசுத் தலைவர், மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் பேசுகிறார் என்று புகார் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில், கோவில்பட்டியில் நடந்த கட்சிக் கூட்டத்தில், “கோவில்பட்டின்னாலே நம்ம கட்சிதான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அவ்வளவு பலமா இருந்த கட்சி, இன்னைக்கு பலமிழந்திருக்கு. எந்த உழைப்பையும் கொடுக்காம, கட்சித் தலைமைக்கு விசுவாசமாகவும் இல்லாம இடையூறு மட்டுமே செஞ்சுக்கிட்டு இருக்குறவங்களுக்கு கதவு திறந்தே இருக்கு... வெளியே போகலாம்” எனப் பேசிவிட்டார். “வயதானவர்கள் கட்சியைவிட்டு ஒதுங்க வேண்டும்” என்றரீதியில் அவர் பேசியது கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. “கட்சியை வளர்க்கணுங்கிற எண்ணம் நல்லதுதான். நிர்வாகிகளையும் கொஞ்சம் மதிச்சுப் பேசுங்க. உங்க அப்பாகூட இப்படிப் பேசுனது இல்லை தம்பி” என்று சில மூத்த நிர்வாகிகள் வாரிசிடம் விசனப்பட்டிருக்கிறார்கள். “நான் பேசுனது தவறுன்னா, அந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன். கட்சியோட வளர்ச்சிதான் எனக்கு முக்கியம்” என்று பதிலுக்கு எகிறிவிட்டாராம் குட்டிப்புலி.

கரை வேட்டி டாட் காம்

கவுன்சிலர்களின் கணவர்கள் சங்கம்... திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உப்புக்குப் பெயர்போன அந்த மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன. எல்லா ஊர்களையும்போல, பெண் கவுன்சிலர்களின் கணவர்களே ‘ஆக்டிங்’ கவுன்சிலர்களாக வலம்வந்தாலும், இங்கே சங்கம் வைக்காத குறையாக, கூடிக் கூத்தடிக்கிறார்களாம். அதிலும் ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகியாக இருக்கும் துணை மேயரின் கணவரே சங்கத் தலைவர்போல் செயல்படுகிறாராம். வார்டுகளில் நடக்கும் பணிகளில் தங்களுக்கும் கமிஷன் தர வேண்டும் என்பதே இந்தச் சங்கத்தின் ஒற்றைக் கோரிக்கை. “கவுன்சிலருக்கு கொடுக்கச் சொன்னாக்கூட பரவாயில்லை. உங்களுக்கு எதுக்குங்க தரணும்?” என்று ஒப்பந்ததாரர்கள் திருப்பிக் கேட்க, “கமிஷன் தரலேன்னா, நீ வேலை பார்க்க முடியாது... எங்களுக்கு அமைச்சர் ஆதரவு இருக்கிறது” என மிரட்டுகிறது இந்த கவுன்சிலர்களின் கணவர்கள் சங்கம். இதனால் என்ன நடவடிக்கை எடுப்பது என்று கையைப் பிசைகிறதாம் மேயர் தரப்பு.

பெரிய தல... சின்ன தல!

மேற்கிலிருக்கும் அந்த முக்கிய மாவட்டத்தின் தாமரைக் கட்சித் தலைவர், அண்மையில் ஆளுங்கட்சிப் பிரமுகரைக் கொச்சையாக விமர்சித்த வழக்கில் கைதாகி, தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இவருக்கு சீனியர்கள் பலரையும் ‘ஓவர் டேக்’ செய்து மாவட்டப் பொறுப்பு வழங்கப்பட்டதால், ஏற்கெனவே கட்சியினருக்குக் கசப்பு இருக்கிறது. ‘வைட்டமின்-ப’ சத்து அதிகம் இருக்கிறது என்பதுடன், மாநிலத் தலைவரின் தயவும் இருப்பதால் கட்சிக்குள் கெத்துகாட்டுவதையே வேலையாக வைத்திருந்தாராம் அவர். கைதாகி வெளிவந்தபோது கிடைத்த உற்சாக வரவேற்பில், ‘நான் பெரிய தலைக்கு சின்ன தல...’ என்கிறரீதியில் இப்போது தடலாடியாகச் செயல்பட்டுவருகிறாராம் அவர். இதனால், ‘வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இல்லை... அப்புறம், உங்க பெரிய தலயே நேத்து வந்தவர்தான்... கொஞ்சம் அடக்கி வாசிங்க...’ என மற்ற நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் எதிர்ப்புக்கொடியை ஏற்றிக் கட்டியிருக்கிறார்களாம்.

கரை வேட்டி டாட் காம்

‘அம்மா மட்டும் இருந்திருந்தால்..!’

வெயில் மாநகர மாவட்ட அ.தி.மு.க-வின் இளம்பெண்கள் பாசறை நிர்வாகி ஒருவர் கசமுசா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சொந்தக் கட்சியின் ஐடி விங் மண்டல நிர்வாகியின் உறவினர் பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறாராம் அவர். அந்தப் பெண் திருமணமானவராம். இது தொடர்பான தகராறில், பாசறை நிர்வாகியிடம் ஐடி விங் நிர்வாகி வாதம் செய்யும் ஆடியோ உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘‘அவள் புருஷன் சரியில்லை. என்கிட்ட அன்பை எதிர்பார்த்ததால, நானும் அவ அழகுல மயங்கிட்டேன்’’ என்று சமாளிக்கிறார் பாலியல் நிர்வாகி. இதை எப்படி டீல் செய்வது என்று தெரியாமல் மாவட்ட நிர்வாகிகள் கையைப் பிசைய, ‘அம்மா மட்டும் இருந்திருந்தால்...’ என்று கொதிக்கிறார்கள் பெண் நிர்வாகிகள்.

‘தி.மு.க ஏன் இங்கே தடுமாறுது?!’

தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் ஒருவழியாக முடிந்துவிட்டது. இதில் அதிக களேபரங்களைச் சந்தித்தது கொங்கு மண்டலம்தான். அங்குள்ள அந்த முக்கிய மாவட்டத்தில், அமைப்புரீதியாக மாவட்டங்கள் குறைக்கப்பட்டன. பதவி குறைவதால் பலரும் அதிருப்தியான நிலையில், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்தவர் மட்டும் மிகவும் சஜகமாகவே இருந்தாராம். “அட செலவு, அலைச்சல் மிச்சம்ப்பா... நான் என் பர்சனல் வேலையைப் பார்ப்பேன்...” என கூலாகச் சொல்லியிருக்கிறார். கூடவே, கட்சி அலுவலகத்துக்கு தான் வாங்கிப் போட்டிருந்த பொருள்களை யெல்லாம் இரவோடு இரவாகத் தன் வீட்டுக்கே அள்ளிச் சென்றுவிட்டாராம். அதேபோல ஒரு மாதம் அமெரிக்கா டூர் செல்லவும் தேதி குறித்துவிட்டாராம். “இப்பவாச்சும் புரியுதா தி.மு.க இங்கே ஏன் தடுமாறுதுனு?!” என கமென்ட் அடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்!