பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்!

புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்!

“எங்க அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாருக்குமே பரம்பரை வீடு இது. எங்கூட பொறந்தது ஒரு அண்ணன் ஒரு தம்பி.

“காடு வரை பிள்ளை… கடைசி வரை யாரோ...” கண்ணதாசனின் இந்த வரியின் கடைசி வார்த்தையில் தொடங்குகிறது சுபாவின் வாழ்க்கை.

38 வயது நிரம்பிய இளம் தாய் சுபா, புதுச்சேரி நகராட்சி மயான ஊழியர். கணவர் கைவிட்ட நிலையில் தன் ஆறு பிள்ளைகளுடன், தான் பணிபுரியும் இடுகாட்டிலேயே வசித்துவருகிறார். சவங்களைச் சுமந்துவரும் ஓலைக் கீற்றுகள் இவர்கள் படுத்துறங்கும் மெத்தைகள். சங்கும், தப்படிக்கும் கருவியும் இக்குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள்.

புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்!
புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்!

தன் மகனுடன் சவக்குழி தோண்டிக் கொண்டி ருந்த சுபா, “கொஞ்ச நேரம் இருக்கறீங்களா... சாயந்திரம் ஒருத்தங்க (உயிரிழந்தவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறார்) வர்றாங்க, அவங்களுக்காகக் குழி தோண்டிக்கிட்டு இருக்கேன். கொஞ்ச நேரத்துல வந்துடறேன்” என்று கூறிவிட்டுச் சென்று, 30 நிமிடங்களில் திரும்பி நம்மிடம் பேசத் தொடகினார்.

“எங்க அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா எல்லாருக்குமே பரம்பரை வீடு இது. எங்கூட பொறந்தது ஒரு அண்ணன் ஒரு தம்பி. அண்ணன் லவ் பண்ணி கல்யாணம் கட்டிக்கிட்டு வெளியில போனதுக்கப்புறம் எப்போதாவதுதான் எங்களைப் பார்க்க வருவாரு. நானும் தம்பியும் மட்டும் இங்கயே இருந்துட்டோம்.

எங்களைப் போலவே பக்கத்துச் சுடுகாட்டுல வேலை செய்யற ஒருத்தருக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துச்சி. எங்களுக்கு நாலு பொம்பளப் புள்ளைங்களும், ரெண்டு ஆம்பளைப் பசங்களும் பொறந்தாங்க. அப்பா, இறந்ததுக்கு அப்புறம் அம்மாதான் சுடுகாட்டு வேலைகளைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க இறந்ததுக்கப்புறம் என் வீட்டுக்காரரு பார்த்துக்கிட்டிருந்தாரு. வாழ்க்கை சந்தோஷமாத்தான் போயிட்டிருந்தது. திடீர்னு என் வீட்டுக்காரரு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட்டு இங்க வர்றத நிறுத்திட்டாரு. உலகமே இருண்டுபோன மாதிரி ஆயிடுச்சி. எம்புள்ளைங்கள பார்க்க பார்க்க எனக்கு அழுகை வந்துச்சி. ஆனால் அதே புள்ளைகளால்தான் அந்தச் சூழலைத் தாண்டும் தைரியமும் வந்துச்சி. கடப்பாறையையும், மண்வெட்டியையும் எடுத்துக்கிட்டு சவக் குழிகளைத் தோண்டும் வேலையில இறங்கினேன்.

அட்வான்ஸ் குடுத்து வாடகை வீட்டில் குடியிருக்கற அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை வருமானமும் இல்லை. சுடுகாட்டு வேலைக்கு அரசாங்கத்துல இருந்து எனக்கு சம்பளம்னு எதுவும் கிடையாது. இறுதிச்சடங்கு முடிஞ்ச பிறகு இறந்தவங்களோட சொந்தக்காரங்க குடுக்கற பணத்துலதான் வாழ்க்கையை நடத்திக்கிட்டு வர்றோம். ஒரு சடங்குக்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கிடைக்கும். அதுலயும் சிலர் பேரம் பேசிக் குறைச்சிடுவாங்க. சிலர் அநாதை சவங்களை எடுத்துக்கிட்டு வருவாங்க. அவங்ககிட்டலாம் காசு கேட்க மாட்டோம்.

ஒரு மாசத்துல அதிகபட்சமா 3-5 இறுதிச் சடங்குகள்தான் வரும். சில மாசத்துல ஒண்ணுமே வராது. அந்த நேரத்துல வெளியில வட்டிக்குப் பணம் வாங்கிக்குவேன். அதை வெச்சிக்கிட்டு நான் எப்படி வாடகைக்கு வீடு எடுக்க முடியும்? குழந்தைங்க இங்க சத்தம் போட்டு விளையாடுறது தொந்தரவா இருக்குதுன்னு அரசியல் செல்வாக்குள்ளவங்க அடிக்கடி போயி நகராட்சியில் புகார் குடுத்துடுவாங்க. அதிகாரிங்களும் உடனே எங்களை வெளியே போகச் சொல்லுவாங்க. கொஞ்ச நாள் அட்வான்ஸ் இல்லாமல் ஒரு வீட்டுல வாடகைக்கு இருந்தோம். ஆனால் சுடுகாட்டுல இருந்தவங்கெல்லாம் இங்க இருக்கக் கூடாது. அந்தப் பசங்கக் கூட விளையாடினால் எங்க பசங்களும் வீணாப்போயிடுவாங்கன்னு அக்கம்பக்கத்துல இருந்தவங்க வீட்டுச் சொந்தக்காரங்ககிட்ட பிரச்னை பண்ணுனாங்க. அதனால மறுபடியும் இங்கேயே வந்துட்டோம்.

இப்போ நான் ஆறாவது தலைமுறையா இந்த வேலையைச் செய்யறேன். ஆனால் இதுவரை எங்களுக்கு அரசாங்கத்துல இருந்து சம்பளம்னு ஒண்ணு கிடையாது. இத்தனை குழந்தைகளையும் வெச்சிக்கிட்டு இங்கதான் (இறுதிச் சடங்குகள் நடக்கும் மேல் கூரை மட்டும் வேயப்பட்ட திறந்தவெளிக் கட்டடம்) மழையில நனஞ்சிகிட்டுப் படுத்துக் கெடப்போம். மழை நின்னதும் தண்ணிய தள்ளிவிட்டுட்டுப் படுப்போம். மழை விடலைன்னா அன்னைக்கு எங்களுக்கு சிவராத்திரிதான். அந்த நேரத்துல புள்ளைங்க குளிர்ல நடுங்கும்போதும், நமக்குல்லாம் ஏன்மா வீடே இல்லைன்னு அவங்க கேட்கும்போதும் உசுரப் பிடுங்கறதுபோல வலி வரும்.

எனக்கப்புறம் என் பசங்க இந்த வேலையைச் செய்யக் கூடாதுன்னு வைராக்கியமா இருந்தேன். ஆனால் விதியை மாத்த முடியுமா? என் பையன் பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு குழியைத் தோண்ட ஆரம்பிச்சிட்டான். மூத்த பொண்ணுக்கு மட்டும்தான் கல்யாணம் கட்டிக் குடுத்திருக்கேன். மீதிப் புள்ளைங்கள கரையேத் தணும்னா அவன் வேலை செய்தால்தான் சரி வரும்னு நானும் விட்டுட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் செய்யும் இந்த வேலை புனிதமானது. அதற்காக கடவுளுக்குப் பலமுறை நன்றி சொல்லுவேன். ஆனால் அந்த வேலையைச் செய்யும் எங்களை மக்கள் ஏன் ஒதுக்க றாங்கன்னுதான் தெரியலை” என்றார் வேதனையாக.

சுபாவின் கேள்விக்கு பதில் இருக்கிறதா நம்மிடம்..?