
-பிரீத்தி அகர்னா.ச
‘என்ன... சர்ச் சாமி கும்பிடுறவங்க பொங்கல் கொண்டாடுறீங்களா?’ - இப்படி எங்களை பலரும் கேட்டிருக்காங்க. அந்த ஆச்சர்யம் உங்களுக்கும் இருந்ததுனா, நாங்க எப்படி யெல்லாம் பொங்கல் கொண்டாடுவோம்னு இந்தக் கட்டுரையில படிக்க படிக்க, உங்க ஆச்சர்யம் இன்னும் விரியும்.
ஒவ்வொரு வருஷமும், ஒரு தமிழ்ப் பெண்ணா தை மாசம் எப்போ வரும், பொங்கல் எப்போ வரும்னு காத்திருப்பேன். பொங்கலன்னிக்கு என் ரெண்டு அண்ணன் களும், ‘இன்னிக்குத்தான் உனக்கு ரொம்பப் பிடிச்ச நாளாச்சே... நாங்க சொல்லாமலே சீக்கிரம் ரெடியாகிடுவ...’னு சொல்லுவாங்க.

எங்க அம்மா பொங்கலை முழுமையா தமிழ் முறைப்படி செய்யலைன்னாலும், உள நிறைவா செய்வாங்க. பொங்கல் வைக்காத தைத் திருநாள் எங்க வீட்டுல இருந்ததே இல்ல. அப்புறம் புத்தாடை போட்டுக்கிட்டு, சித்தி, மாமா, அத்தைனு எல்லாரோட வீட்டுக்கும் போய் பொங்கல் வாழ்த்துச் சொல்லி பொங்கல் கொடுத்துட்டு வருவேன்.
ராஜபாளையம் பக்கத்துல இருக்குற தேவதானம்தான் எங்க ஊரு. இங்க பொங்கல் அன்னிக்கு இளவட்டக் கல் தூக்குறது, வழுக்கு மரம் ஏறது, ஆட்டம்பாட்டம், இசை நாற்காலி, கோலப்போட்டினு களைகட்டும். சின்ன வயசுல பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் வாங்குற அந்தத் துள்ளலான ஆர்வத்தை மறக்க முடியாது. இந்தப் போட்டிகள் எல்லாம் ஊருக்குப் பொதுவில் நடக்கும். இன்னொரு பக்கம், கிறிஸ்துவ ஆலயங்கள்ல சமத்துவப் பொங்கலும், விளையாட்டுப் போட்டிகளும், பரிசுகளும்னு களைகட்டும்.

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்னு மூன்று நாள்கள் தைத்திருநாள் கொண்டாட்டங்கள் எனக்கு மூன்று மணி நேரத்தில் தீர்ந்துபோனதுபோல ஏக்கமா இருக்கும். குறிப்பா, மாட்டுப்பொங்கல். அன்னிக்கு தேவதான மக்கள் எல்லாரும் படை யெடுத்துச் செல்லும் இடம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரம். ஆறு, குளம், கிணறுனு நீர்வளம் மிகுந்த எங்க ஊர்ல, நடக்கப் பழகுறதுபோலவே குழந்தைகளுக்கு மூணு வயசுலயிருந்து நீச்சலும் பழக்கிடுவாங்க.
வேலை நிமித்தம் ஊரை பிரிஞ்சிருக் கிறவங்க எல்லாம் பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது, அந்த நீச்சல் நினைவுகளைத் தட்டி எழுப்பப் போற இடம்... சாஸ்தா கோயில் ஆறு.

மாட்டுப் பொங்கலுக்குக் கூட்டம் அலைமோதும் அங்க. சாப்பாடு கட்டிட்டு வந்து, தண்ணியில ஆசைத் தீரத் தீர ஆடிட்டு, ஈர உடம்போட ஆத்தோரமா உக்காந்து அந்த கட்டுச்சோற்றை சாப்பிடுற அனுபவம் இருக்கே... சான்ஸே இல்ல. காணும் பொங்கலுக்கு பெரிய வங்களைப் பார்க்கப்போறது, ஆசி பெறுவதுனு நாள் மலரும்.
பொங்கலோ பொங்கல்... சமத்துவப் பொங்கல்!