ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டுவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு ‘தரமில்லை’ என மாவட்டம்தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசால் அறிவிக்கப்பட்ட 21 பொருள்களும் முழுமையாக வந்து சேரவில்லை என்றும் பொதுமக்கள் புலம்புகிறார்கள். ``புளியில் பல்லி... உருகிய வெல்லம்... பை இல்லை... கரும்பில் ஊழல்‘‘ எனப் பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான சர்ச்சைக்கும் குறைவில்லை. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பில் மிளகுக்குப் பதில் பருத்திக் கொட்டை, இலவம்பஞ்சுக் கொட்டை, வெண்டைக்காய் விதை, அவரைக் கொட்டை, பப்பாளி விதை ஆகியவை கலப்படம் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதேபோல், மஞ்சள் மற்றும் சீரகத்தில் மரத்தூள் கலந்திருப்பதைக் கண்டும் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர். கலப்படப் பொருள்களை ரேஷன் கடை ஊழியரிடம் காட்டியபோது, அவர் அலட்சியமாக பதில் கூறியதால், ஆவேசமடைந்த மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைக்கவே, `விகடன் டீம்’ திருப்பத்தூர் காக்கணாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் நியாயவிலைக் கடைக்கு விசிட் அடித்தது. அங்கு ரேஷன் கடை ஊழியர்களிடம் கலப்பட பொங்கல் பொருள்களைக் காட்டி வாக்குவாதம் செய்துகொண்டிருந்த பொதுமக்களைச் சந்தித்து, அவர்கள் கூறிய தகவல்களைக் காணொலியாகவும், செய்தியாகவும் விரிவாக வெளியிட்டிருந்தோம். விகடனில் வெளியான அந்தக் காணொல் வைரலாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காணொலியில் பேசியிருந்த மக்கள், பொங்கல் பரிசுப் பொருள்கள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கலப்படப் பொருள்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில், திருப்பத்தூர் குடோன் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் வேலூர் மண்டல மேலாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனிடம் கேட்டபோது, ‘``திருப்பத்தூர் குனிச்சி கிராமத்திலுள்ள குடோனில்தான் தரமில்லாத ஒரு லோடு பொருள்கள் கலந்துள்ளன. அதைச் சரிவர ஆய்வு செய்யாததால் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தரமில்லாத பொருள்களுக்கு பதிலாக மாற்றுப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன’’ என்றார்.