
“எனக்கு சினிமா ஆசை வந்ததுக்கு முக்கிய காரணமே.. சிவாஜி சார் தான்...”
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அது மாபெரும் கனவு.
சரித்திரத்தை பின்னணியாகக் கொண்ட படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர். அமரர் கல்கியின் மகத்தான காவியப் படைப்பான பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக்க துடித்தார். தமிழில் மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவின் வசனத்தின் மூலம் ஆங்கிலத்திலும் பொன்னியின் செல்வனை வண்ணப்படமாக எடுத்து வெளியிட வேண்டும் என்ற ஆசையும் அவர் மனதில் கொழுந்துவிட்டெரிந்தது.
காலத்தை வென்று நிற்கிற காவியமான கல்கியின் பொன்னியின் செல்வன்மீது எம்.ஜி.ஆர். கொண்டிருந்த காதலும் தாகமும் கட்டுக்கடங்காதது. காரணம் கதை அப்படி! பிரமாண்டமான கதைக்களம், பிரமிக்க வைக்கும் வசன வீச்சுகள், திடுக்கிட வைக்கும் முடிச்சுகள், திருப்புமுனை சம்பவங்கள், விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேரக்டர்கள், விழி விரிய வைக்கும் லொகேஷன்கள் என கல்கி படைத்த பொன்னியின் செல்வன் ஒரு மகத்தான திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் கொண்டவை.
அதைப் படமாக்கும் முயற்சி ஆயிரம் யானைகளைக் கட்டி தீனி போடுவதற்கு சமம். ஆனால் அதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். 1958ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் அவர் தயாரித்து, இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்’ படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
எம்.ஜி.ஆருக்கு வசூல் மன்னன் என்ற பெயரையும் வானளாவிய புகழையும் கொடுத்தது. அந்த மகா வெற்றியின் ருசியை அணுஅணுவாக ரசித்த எம்.ஜி.ஆர். அதையும் மிஞ்சுகிற அமோக வெற்றியை, அழியாத புகழை பொன்னியின் செல்வன் தனக்கு அள்ளித்தரும் என்று ஆசைப்பட்டார். நினைத்ததை நடத்தியே முடிப்பவரல்லா? புயல்வேகத்தில் செயல்பட்டார். நாடோடி மன்னன் நாடெல்லாம் அபார வசூலை குவித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில் ‘திரையிலே தீந்தமிழ்க்காவியம்’ என்ற அடைமொழியோடு ‘எம்.ஜி.யார். பிக்சர்ஸ் அளிக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன், டைரக்ஷன் எம்.ஜி.ஆர்.’ என்று விளம்பரமே வெளியிட்டார். கணிசமான ஒரு தொகையை தந்து கதையை வாங்கினார். பின்னாளில் இயக்குநராக முத்திரை பதித்த மகேந்திரனிடம் இதற்கு திரைக்கதை எழுதித் தரச்சொன்னார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நட்சத்திரங்களையும் தேர்வு செய்தார்.
ஆனால் நாடோடி மன்னன் வெற்றியால் அடுத்தடுத்து வந்து குவிந்த படங்களால் ஆண்டுக் கணக்கில் நடிப்பிலேயே மும்முரமானார் எம்.ஜி.ஆர். அப்புறம் கட்சி ஆரம்பித்தது, அரசியல் பரபரப்பு, முதல்வராக முடிசூடல் என வேறொரு தளத்தில் வெற்றிக்கொடி நாட்டச் சென்றுவிட்டதால், பொன்னியின் செல்வன் காவியம் வெள்ளித் திரைக்கு வராமல் எம்.ஜி.ஆரின் மனத்திரையிலேயே தங்கி விட்டது.
கமல்ஹாசனுக்கும் பொன்னியின் செல்வன் மீது இதே காதல்தான்.

எப்படியாவது செல்லுலாய்ட் சித்திரமாக செல்வனைத் தீட்டிவிடலாம் என்ற கனவுதான்.
தீவிர வாசிப்புப் பழக்கம் கொண்ட கமலுக்கு பொன்னியின் செல்வன் திகட்டாத விருந்து. நூலை வாசிக்கும்போதே வந்தியத்தேவன் வடிவெடுத்து வாழ்ந்தவர் என்கிற அளவில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆரால் கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்பட முயற்சி தன்னால் கைகூடும், இந்தியத் திரையுலகமே தன் புகழ்பாடும் என்ற முனைப்போடு களத்தில் இறங்கினார். இதுகுறித்து அப்போது கமலுடன் இருந்த உதவி இயக்குநர் ராசி.
அழகப்பன் இன்னமும் அதே உற்சாகத்துடன் விவரிக்கிறார்: “பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்கும் உரிமை எம்.ஜி.ஆரிடமிருந்து மீண்டும் கல்கி குடும்பத்திற்கே சென்றுவிட்டது. அந்த சூழலில் அமரர் கல்கியின் புதல்வர் ராஜேந்திரனை சந்தித்து, கமல் அந்த உரிமையை வாங்கி வைத்திருந்தார். கதை குறித்த பல சுவாரஸ்ய நினைவுகளை ராஜேந்திரனுடன் பகிர்ந்துகொண்டார். இதனிடையே காலம் ஓடிவிட, கதை உரிமையை புதுப்பிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர். கண்ட மாபெரும் கலைக் கனவை தான் நிறைவேற்றலாம் என்ற ஆசையோடு அடிப்படைப் பணிகளுக்கு ஆயத்தமானார் கமல்.
ஆனால் ஏனோ காலம் கைகூடவில்லை; அந்தக் கலைக் கனவும் வசப்படவில்லை.”இதோ கம்பீரமாக அசத்துகிறார் இயக்குநர் மணிரத்னம். ஆம், அந்த இருவருக்கும் கைவசப் படாமல் போன இந்தக் காவியத் திரைப்பட முயற்சியை கையில் எடுத்து களத்திலும் இறங்கிவிட்டாரே!
1958 முதல் 2019வரை அறுபது ஆண்டுகளாக திரைத்துறையில் தீராக்கனலாக கனன்று கொண்டிருந்த, கானல் நீராக தெரிந்துகொண்டிருந்த பொன்னியின் செல்வனை கேமராவுக்குள் சிறைப்படுத்த தொடங்கிவிட்டார். ஆனாலும் கடும் சவால்கள் காத்திருக்கின்றன மணிரத்னத்திற்கு! அவர் எடுத்திருக்கும் இந்த முயற்சி அவர் வாழ்நாளில் வானளாவிய வரலாற்றுப் புகழை குவிக்கும் பெரும் புரட்சி.
பொன்னியின் செல்வன் எம்.ஜி.ஆருக்கும் கமலுக்கும் கனவாகப் போனதற்கு கனமான ஒரு காரணம், அதற்கான படா பட்ஜெட்தான். கட்டுக்குள் அடங்காத கோடிகளை கபளீகரம் செய்துவிடும் கதைக்களம் கொண்டது. முன்னணி நடிகர்களின் சம்பளம், அணிவகுக்கும் டெக்னீஷியன்களின் ஊதியம் முதல் ஆயிரக் கணக்கிலான துணை நடிகர்கள், நூற்றுக் கணக்கான யானை - குதிரைகள், கப்பல்கள் ஆடை அணிகலன்கள், அரண்மனைகள், விதவிதமான லொகேஷன்கள் என ஆகப்போகிற பெரும் பொருட்செலவை நினைத்தாலே கண்ணைக் கட்டும். ஆனாலும் அசராமல் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டார் மணிரத்னம்.
இதற்கான மொத்த பெருமையும் பொன்னியின் செல்வனை தயாரிக்கிற லைக்கா ப்ரொடக்ஷனையே சாரும். ஏற்கனவே தங்களது தயாரிப்பில் இருக்கிற ‘இந்தியன் 2’ படத்தையும் விரைவாக முடித்துவிடச் சொல்லி இயக்குநர் ஷங்கருக்கு அழுத்தம் தருகிறது லைக்கா. அந்த அளவிற்கு பொன்னியின் செல்வனுக்காக ‘மணியை’ கொட்டி படத்தை ‘ரத்னமாக’ ஜொலிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறது லைக்கா நிறுவனம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராகிறது படம். அத்தனை மொழிகளிலும் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் வரலாற்று நாயகர்களாக உருமாறப் போகிறார்கள்.
பொன்னியின் செல்வன் குறித்து பிரபல யூ டியூப் சேனலான வலைப்பேச்சு பத்திரிகையாளர் ஆர்.எஸ். அந்தணன் பகிர்ந்து கொள்கிறார் இப்படி:மணிரத்னத்தைப் பொறுத்த வரை அவரது படத்தில் நடிப்பவர் எவராக இருந்தாலும், அது முன்னணி நடிகரானாலும் அவர்களுக்கு ஆடிஷன் நடத்திதான் ஓகே செய்வார். பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் நடிக்கும் த்ரிஷாவுக்கும் இப்படித்தான் நடத்தியிருக்கிறார். யானைகள் பெருமளவு நடைபோடும் கதை இது என்பதால் முதல் ஷெட்யூல் தாய்லாந்தில் நடந்திருக்கிறது. இந்தியாவில் நடத்தினால் பிராணிகள் நல வாரியம், அதற்கான அமைப்புகள் போன்றவை கேள்விகள் எழுப்பக்கூடும்.
அதனால் நடைமுறைச் சிக்கல்கள் வரலாம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் செய்தாலும் அந்த அசல் பிரமாண்டம் கிடைக்காது. ஆகவேதான் தாய்லாந்து வனப்பகுதிகளில் ஏகப்பட்ட யானைகளை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்.
அதேசமயம் இந்த மாபெரும் கதையை மணிரத்னம் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்து முடிப்பாரா? அதற்குரிய பக்கபலம் அவருக்கு இல்லையே, தனி ஒருவராக இயக்குவதென்பது சாத்தியமா? ஏற்கனவே இருமுறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு குணமாகி வந்தவராச்சே? இப்படியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் மணிரத்னத்தை சுற்றி அலையடித்தன.
ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படி முதல் ஷெட்யூலை முடித்திருக்கிறார் மணிரத்னம். இதைவிட சர்ப்ரைஸ், நடுநடுங்கும் குளிரில்கூட அதிகாலை நான்கு மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர் ஆகி யூனிட்டையே அசத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு அர்ப்பணிப்போடு இயங்குகிறார். இன்னொரு முன்னேற்றமாக தன்னிடம் உதவி இயக்குநர்களாக இருந்த அழகம்பெருமாள், சுசி கணேசன் இருவரையும் இந்தப் படத்திற்காக தன்னுடன் இணைத்திருக்கிறார் என்கிறார்.
இன்னும் சில சவால்களும் மணிரத்னத்திற்கு உண்டு. முதலாவது - இந்தியத் திரையுலகில் சரித்திரப் பின்னணி கொண்ட கதைகளைப் படமாக்குவதில் இமாலயப் புகழ்பெற்றவர் பாகுபலி இயக்குநர் ராஜமௌலி. அவரை இந்த சரித்திரப் பட விஷயத்தில் மணிரத்னம் மிஞ்சுவாரா என்ற ஒப்பீடு விவாதமும் களைகட்டியிருக்கிறது. ஆனால் அந்த ராஜமௌலியே தான் ரசிக்கிற இயக்குநர் மணிரத்னம் என்று மெச்சுவதுதான் இதில் ட்விஸ்ட்.
அடுத்தது, பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்தவர்களுக்குத் தெரியும், அது தருகிற மெய்சிலிர்ப்பும் பரவசமும்! நூல் தருகிற அதே சுகானுபவத்தை இந்தத் திரைப்படம் தருமா என்பது த்ரில் கேள்வி.
ஐந்து பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் புதினத்தின் முதல் பாகம் - புதுவெள்ளம். அதில் அத்தியாயம்-1 ஆடித்திருநாள் இந்த வரிகளோடு தொடங்கும்: “ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்கு 982 ஆண்டுகளுக்கு (1950ல் எழுதியது) முந்திய காலத்துக்கு செல்வோமாக!”காலத்தை வென்று நிற்கிற தமிழ்க் காவியமான பொன்னியின் செல்வனை திரையில் காணும்போதும் கல்கி எழுதிய இதே சிலிர்ப்போடு ரசிகர்களின் கைபிடித்து அழைத்துச் சென்றால் போதும், அமரர் கல்கியின் செல்வனாகவே கொண்டாடப்படுவார் மணிரத்னம்!காவியக் கதாபாத்திரங்கள்!
கி.பி. 1000ஆம் ஆண்டு காலகட்டத்தில் சோழப்பேரரசை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். வல்லவரையன் வந்தியத்தேவன், ராஜராஜ சோழன் (அருள்மொழிவர்மன்), குந்தவைப்பிராட்டியார், வானதி, பூங்குழலி, மணிமேகலை, நந்தினி, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான், சின்னப் பழுவேட்டரையர், ஆதித்த கரிகாலன் - இவர்கள் உட்பட அழுத்தமான 21 கதாபாத்திரங்கள் கொண்ட பெருங்காவியக் கதை இது!
- எம்.பி. உதயசூரியன்
(02.03.2020 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)