
“விஷப்பூச்சிகளுக்கு மத்தியிலதான் பிள்ளைகள் படிக்கப் போய்க்கிட்டிருக்காங்க...”
முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி ஒன்று அடிப்படை வசதிகள் இன்றி, கட்டடங்கள் பெயர்ந்து, இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக நமக்குப் புகார்கள் வர, நேரடி விசிட் அடித்தோம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சவளக்காரன் என்னும் கிராமத்தில் இயங்கிவருகிறது இந்த அரசினர் மேல்நிலைப்பள்ளி. 1998-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்கூடத்தின் சிமென்ட் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்துவிழக்கூடிய நிலையில் காட்சியளிக்கிறது. மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையிலும், பாதைகள் புதர்கள் மண்டியும், முறையான தண்ணீர் வசதியின்றியும் காணப்படுகின்றன. அண்மையில் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கழிப்பறைக்குச் செல்லும்போது பாம்புக் கடிபட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர்பிழைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.



இது தொடர்பாகப் பேசிய மாணவர்களின் பெற்றோர், “எங்க ஊர்ல இருக்கிற பெரும்பாலானோர் கூலி வேலைதான் பாக்குறோம்... எங்க பிள்ளைங்க எல்லாருமே இந்தப் பள்ளியை நம்பித்தான் இருக்காங்க. ரொம்ப வருஷமாவே இந்தப் பள்ளிக்குச் சரியான அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுக்கப்படலை. கட்டடமெல்லாம் பழுதடைஞ்சு, காரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியுற ஆபத்தான நிலைமையில இருக்கு. சேதமடைஞ்ச கட்டடம் பூட்டித்தான் கிடக்குனு ஆசிரியர் சொன்னாலும், அந்தக் கட்டடத்தைச் சுத்தித்தான் எங்க பசங்க படிச்சுக்கிட்டு இருக்காங்க. அது எப்போதும் எங்க பசங்களோட உயிருக்கு ஆபத்துதான். ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியா எங்க ஊரு பள்ளிக்கூடத்தைச் சீரமைச்சுக் கொடுக்கணும்” என்றனர்.

இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் பேசும்போது, “எங்க ஸ்கூல்ல படிச்ச நிறைய பசங்க கால்பந்து போட்டியில கலந்துக்கிட்டு தேசிய அளவுல பரிசுகள் வாங்கியிருக்காங்க. ஆனா சவளக்காரன் பள்ளிக்கு விளையாட்டு மைதானமே கிடையாது. ஸ்கூல்லருந்து அரை கிலோமீட்டர் தூரத்துல இருக்குற வயல்வெளியைத்தான் நாங்க விளையாட்டு மைதானமா பயன்படுத்தினோம். பள்ளிக்கூடத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கேட்டு நிறைய போராட்டம் நடத்திட்டோம். பொம்பளைப் பிள்ளைங்கதான் நிறைய பேர் படிக்கிறாங்க. அவங்களுக்குச் சரியான கழிப்பறை இல்லை. நாப்கின் மாத்தக்கூட சுகாதாரமான ஒரு இடம் கிடையாது. பாம்பு, தேளுனு பல விஷப்பூச்சிகளுக்கு மத்தியிலதான் பிள்ளைகள் படிக்கப் போய்க்கிட்டிருக்காங்க. இந்தப் பிரச்னைகளையெல்லாம் சரிசெஞ்சு தரணும். முதல்வர் கவனத்துக்குப் போனா, நல்லது நடக்கும்னு நம்புறோம்” என்றனர் எதிர்பார்ப்புடன்.



இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் அழகர் சாமி (பொறுப்பு) அவர்களின் விளக்கம் கேட்டோம். அவர், “சவளக்காரன் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுவதாக ஜூ.வி மூலம் அறிந்து, அந்தப் பள்ளியின் நிலைகுறித்து ஆய்வுசெய்தோம். சில பழைய கட்டடங்கள் இடிக்கப்படாமலும், மாணவர்களுக்கு கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் இருந்தன. தற்போது, ஆதிதிராவிட நலத்துறையிடம் நிதி கோரிக்கை அனுப்பியிருக்கிறோம். எனவே, விரைவில் சவளக்காரன் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும்” என்றார்.
திருவாரூர்க்காரரான முதல்வர் ஸ்டாலின் விரைந்து உதவி செய்வாரா?