அலசல்
Published:Updated:

ஸ்கேன் ரிப்போர்ட் - குடலைப் புரட்டும் துர்நாற்றம்... நாய்கள் தொல்லை...

திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட கடைக்கோடி மக்கள், தங்களது அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்கு நீண்ட தூரம் பயணித்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும்... உயிர்போகும் அவசரமென்றாலும், பெரிய அளவிலான அரசு மருத்துவமனை எதுவும் இந்த மாவட்டங்களில் இல்லை. இந்த நிலையில்தான், இந்த மண்ணின் மைந்தரான கருணாநிதி கடந்த 2006-ல் முதல்வராகப் பதவியேற்றதுமே, `திருவாரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி 2010-ல் மருத்துவமனைப் பணிகள் நிறைவுற்று, அது கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இப்போது எப்படி இருக்கிறது அந்த மருத்துவமனை? இதோ ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்...

முதலில் நாம் சென்றது, உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு. உள்ளே நுழையும்போதே நாய் ஒன்று கால்களுக்கு இடையே புகுந்து ஓடியது. உள்ளே நோயாளிகள் பலரும் மூக்கைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். நாற்றம் குடலைப் புரட்டியது... வழக்கமாக வரும் மருத்துவமனை மருந்து, பினாயில் வாடையோடு, துர்நாற்றமும் கலந்து வீசியது. எங்கிருந்து துர்நாற்றம் வருகிறது என்றபடியே மெதுவாக நடந்து சென்று சிகிச்சைப் பிரிவின் பின்பக்கம் எட்டிப் பார்த்தோம். குட்டைபோலக் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி யிருந்தது. ‘‘மருத்துவமனையோட மொத்தக் கழிவுநீரும் செல்லக்கூடிய குழாயிலயும், கழிவுநீர் தொட்டிகள்லயும் உடைப்பெடுத்திருக்கு. அதனாலதான் இங்கே கழிவுநீர் தேங்கி நிக்குது. நோயோட வேதனையில, இந்த நாத்தத்தால இங்கே இருக்கவே முடியலைங்க... குமட்டலா இருக்கு” என்று புலம்பினார்கள் அங்கிருந்த நோயாளிகள். அதன் அருகிலேயே இருக்கிறது, ஐ.சி.யூ வார்டு. ‘‘கழிவுநீர் தேங்கிக் கிடக்குறதால, கொசுக்கள், ஈக்களோட தொந்தரவு அதிகமா இருக்குது. சில நேரத்துல ஐ.சி.யூ வார்டுக்குள்ளயும் கொசுக்களும் ஈக்களும் நுழைஞ்சுடுது. மழை பெஞ்சா நிலைமை இன்னும் மோசமாகிடுது. இது களிமண் பூமிங்கிறதால மருத்துவக்கழிவுகள் மண்ணோடு சேர்ந்து சொத சொதன்னு அப்படியே நிக்குது’’ என்று கவலையுடன் சொன்னார்கள் அங்கிருந்த ஊழியர்கள் சிலர்.

ஸ்கேன் ரிப்போர்ட் - குடலைப் புரட்டும் துர்நாற்றம்... நாய்கள் தொல்லை...

மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட பழைய பெட்களும், உடைந்த கட்டில்களும் திறந்தவெளியில் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன. குப்பைக் குவியல்களுக்கும் பஞ்சமில்லை. சில கழிவறைகள் பயன்படுத்தும் நிலையிலேயே இல்லை. மருத்துவமனை வளாகத்தில் எங்கு பார்த்தாலும் நாய்கள் திரிந்துகொண்டிருந்தன. இது பற்றியெல்லாம் மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தபோது, ‘‘இதுக்கே இப்படி அதிர்ச்சியாகுறீங்களே... நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நிலைமை இன்னும் மோசமா இருந்துச்சு. அதாவது, மொத்த மருத்துவ மனையோட குப்பைக் கிடங்கே இங்கேதான் இருந்துச்சு. எவ்வளவு குப்பைகள் சேர்ந்தாலும் இங்கேயே குவிச்சிவெச்சுடுவாங்க. இங்கேயே எரிச்சு, அந்தப் புகையால நோயாளிகள் கடுமையா பாதிக்கப்பட்டாங்க. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னாடிதான், திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளரா நியமிக்கப்பட்டிருக்குற அமைச்சர் மெய்யநாதன், இதைப் பார்த்துட்டு, ‘மருத்துவமனை வளாகத்துல இப்படியா குப்பைகளைக் கிடங்கு மாதிரி சேர்த்து வெக்குறது?’னு சத்தம் போட்டு, மருத்துவக் கல்லூரி அமைஞ்சிருக்குற விளமல் ஊராட்சி நிர்வாகம் மூலம் தினந்தோறும் குப்பைகளை அப்புறப்படுத்த ஏற்பாடு செஞ்சார். அதனால, இப்ப நிலைமை பரவாயில்லை. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமைலயும், மற்ற விசேஷ நாள்கள்லயும், ஊராட்சித் துப்புரவு வாகனம் இங்கே வராது. இங்கே குப்பை கொட்டி வைக்கக்கூடிய தொட்டிகளோ, கட்டுமானங்களோ கிடையாது. இதனால்தான் குப்பைகள் ஆங்காங்கே குவிஞ்சு கிடக்கு’’ என்றார்கள்.

மருத்துவமனையின் உள்விவகாரங்களை நன்கறிந்த ஒருவர் சொன்ன தகவல்களைக் கேட்டபோது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ‘‘சார்... பேருக்குத்தான் இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையா இன்னும் முழுமையா செயல்படவே ஆரம்பிக்கலைங்கிறதுதான் உண்மை. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குத் தனிக் கட்டடமே கிடையாது. ரொம்ப கிரிட்டிக்கலான விபத்து கேஸ்களுக்கும், உயிருக்கு ஆபத்தான நிலையில வர்றவங்களுக்கும் இங்கே சிகிச்சை கொடுக்குறதே இல்லை. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜுக்கு அனுப்பிடுறாங்க. இதனால போற வழியிலேயே பலரும் செத்துடுறாங்க. குறிப்பா, இதயநோய் பிரச்னைகளுக்கு ஆஞ்சியோ செய்யுற வசதி இங்கே இல்லை. புற்றுநோய் பாதிப்பு களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவர் இல்லை. அறுவை சிகிச்சை நிபுணர்களே புற்றுநோயாளிகளுக்கு சில சிகிச்சைகளை அளிக்குறாங்க. இதனால இங்கே கீமோதெரபி பண்ண முடியாம நோயாளிகள் ரொம்பவே பாதிக்கப்படுறாங்க’’ என்றார்.

ஸ்கேன் ரிப்போர்ட் - குடலைப் புரட்டும் துர்நாற்றம்... நாய்கள் தொல்லை...

மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜோசப்ராஜிடம் பேசினோம். ‘‘ஆஞ்சியோ சிகிச்சை செய்வதற்கான வசதிகள் இங்கு இல்லை என்பது உண்மைதான். புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இல்லாததால்தான், அதற்கான சிறப்பு மருத்துவர் பதவி நியமிக்கப்படவில்லை. இந்த மருத்துவ மனையை அனைத்துச் சிகிச்சை வசதிகளும்கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறோம். பிரச்னைகள் அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும். மிகவும் கிரிட்டிக்கலான சிகிச்சைகளைக்கூட இங்கே செய்து நிறைய பேரைக் காப்பாற்றியிருக்கிறோம். இங்கே இல்லாத பிரிவுகளுக்கு மட்டுமே வேறு மருத்துவமனை களுக்கு நோயாளிகளை அனுப்புகிறோம். கழிவுநீர் வெளியேறாததற்குக் காரணம், இங்கிருக்கும் நில அமைப்புதான். கழிவுநீர் வெளியேற்றும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும்” என்றார்.

`ஆட்சி மாறினால், காட்சிகள் மாறும்’ என்ற பொதுமக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?!