அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கரையெல்லாம் கழிவு... மீன்வலையிலும் பிளாஸ்டிக்... குப்பைக் கடலா மெரினா?!

மெரினா
பிரீமியம் ஸ்டோரி
News
மெரினா

மெரினாவில் சேர்ந்துவரும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு வேகமாக அகற்றிவருகிறோம்

உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா, குப்பைக்கழிவுகள் கொட்டப்படுவதில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

சென்னையில் கூவம் நதியிலும், கரையோரங்களிலும் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகள், கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால் நீரோட்டத்தில் அடித்துவரப்பட்டு கடலில் போய்ச் சேர்ந்திருக்கின்றன. அண்ணா சதுக்கம் முதல் சாந்தோம் வரையிலான 3 கி.மீட்டர் தூரத்துக்கு மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருள்கள், பாலிதீன் கவர்கள், தெர்மாகோல், வாட்டர் பாட்டில்கள், மது பாட்டில்கள் என நச்சுக்குப்பைகள் கடற்கரையைக் குப்பை மேடாக்கியிருக்கின்றன.

கரையெல்லாம் கழிவு... மீன்வலையிலும் பிளாஸ்டிக்... குப்பைக் கடலா மெரினா?!
கரையெல்லாம் கழிவு... மீன்வலையிலும் பிளாஸ்டிக்... குப்பைக் கடலா மெரினா?!

`கடற்கரையின் தன்மையே சீரழிந்துவிட்டது!’

குடும்பத்தினருடன் மெரினா கடற்கரைக்கு வந்திருந்த தம்பதியிடம் பேசியபோது, ``கடலில் கால் நனைக்கலாம், கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடலாம் என்றெல்லாம் என் குழந்தைகள் ஆசையோடு வந்தனர். ஆனால், கண்ணாடி பாட்டிலும், குப்பையுமாகக் கிடப்பதால் குழந்தைகளை அலையில் கால் நனைக்கக்கூட விடவில்லை.கடந்த ஆண்டுகளில்கூட இந்த அளவுக்கு அதிகமான குப்பைகள் இல்லை. சில நாள்கள் பெய்த கனமழைக்கே இவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கிறதென்றால், அடுத்தடுத்த மழையில் இன்னும் எவ்வளவு குப்பைகள் வந்து சேருமோ?” என்றனர் வேதனையோடு.

``மழைநாளில் ஆற்றிலிருந்து வரும் குப்பைகள்போலவே, சாதாரண நாள்களில் கடலுக்கு வந்துபோகும் பொதுமக்களால் தூக்கிவீசப்படும் பாலிதீன் கவர்கள், வாட்டர் கேன்களாலும் கடல் மாசடைகிறது. சொல்லப்போனால் இங்கிருக்கும் கடை வியாபாரிகள் பலரே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறார்கள். இரவு நேரங்களில் கடையை மூடிவிட்டுச் செல்லும்போது குப்பைகளைக் கடலில்தான் கொட்டுகிறார்கள்” என்றார் சங்கு விற்கும் நபரொருவர்.

கரையெல்லாம் கழிவு... மீன்வலையிலும் பிளாஸ்டிக்... குப்பைக் கடலா மெரினா?!
கரையெல்லாம் கழிவு... மீன்வலையிலும் பிளாஸ்டிக்... குப்பைக் கடலா மெரினா?!

பீச்சில் குதிரை ஓட்டும் நபரிடம் விசாரித்தபோது, ``இரவு நேரங்களில் `பார்’-ஆகவே மாறிவிட்டது மெரினா. பொரித்த மீன்களை வாங்கிக்கொண்டு, காவலர்களுக்கே தெரியாமல் பலர் இங்குதான் மது அருந்துகிறார்கள். அந்த பாட்டில்களை சிலர் நொறுக்கிவிட்டும் செல்கிறார்கள். மக்கள் மட்டுமின்றி, எங்கள் குதிரைகளின் கால்களையும் உடைந்த சில்லுகள் பதம்பார்த்துவிடுகின்றன” என்றார்.

`வலைகளில் மீன்களைவிட, குப்பைகள் சிக்குவதுதான் அதிகம்!’

நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த தென்னிந்திய மீனவர் சங்கத் தலைவர் பாரதி, ``ஆறும் கடலும் கலக்கும் முகத்துவாரம்தான் மீன்கள் இனப் பெருக்கத்துக்கும், கடல் வளத்துக்குமான ஆதாரப்புள்ளி. ஆனால், சென்னையின் கூவம், அடையாறு, கொசஸ்தலை, ஆரணி ஆகிய நான்கு முக்கிய ஆறுகளில் கலக்கும் ரசாயனக்கழிவுளும், நச்சுக்குப்பைகளும் சேர்ந்து சென்னை கடற்பகுதிகளின் மீன் இனங்களையும், கடல் வளத்தையும் வேகமாக அழித்துக்கொண்டிருக்கின்றன.

எடை குறைந்த, மிதக்கக்கூடிய குப்பைகள் அலைகளில் அடித்துவரப்பட்டு, கரைகளில் ஒதுங்கிவிடுகின்றன. ஆனால், சற்று கனமான பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களெல்லாம் நீருக்கு மேலேயும் வராமல், அடியிலும் சென்று சேராமல் இடைப்பட்ட பகுதியிலேயே அலைந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் மீன்களுக்காக வீசும் வலைகளில், மீன்களைவிட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் சிக்குகின்றன. பிடிபட்ட மீன்களின் வயிற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கின்றன” என்றார் வேதனையோடு.

பாரதி, ககன்தீப் சிங் பேடி, ஜீயோ டாமின்
பாரதி, ககன்தீப் சிங் பேடி, ஜீயோ டாமின்

`தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்!’

இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் விளக்கம் கேட்டோம்.

``மெரினாவில் சேர்ந்துவரும் குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்களைக்கொண்டு வேகமாக அகற்றிவருகிறோம். மேலும், மெரினாவில் குப்பைகள், பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க 16 பேர்கொண்ட கண்காணிப்புக்குழு அமைத்து மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை கண்காணிக்கிறோம், அபராதமும் விதிக்கிறோம். சென்னை ஆறுகள் மீட்பு அறக்கட்டளை (CRRT) திட்டத்தின்மூலம், அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரங்களில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. குப்பைகள் கடலுக்கு அடித்துச்செல்லப்படுவதை தடுக்கும்வகையில் ஆறுகளின் குறுக்கே இரும்பு வலைகளையும் அமைத்துவருகிறோம். அதேபோல, ஆறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கிறோம். இருப்பினும் பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருந்தால்தான் இதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்” என்றார்.

அடுத்தடுத்த சந்ததிக்குக் குப்பையைத்தான் விட்டுச் செல்லப் போகிறோமா?!

`மக்கள் மட்டுமல்ல, பெருநிறுவனங்களுக்கும் பங்குண்டு!’

``பிளாஸ்டிக் பயன்படுத்தும் மக்கள்மீது மட்டுமே எல்லாக் குற்றங்களையும் சுமத்தக் கூடாது. அதை உற்பத்தி செய்து விநியோகிக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கும் இதில் முக்கியப் பங்குண்டு. பெருநிறுவனங்கள் லாபத்துக்காக உற்பத்திசெய்யும் கழிவை அரசாங்கம் ஏன் செலவுசெய்து அப்புறப்படுத்த வேண்டும்... பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்பவர்கள்தான் அதன் கழிவுகளுக்கும் பொறுப்பு. எனவே, மற்ற உலக நாடுகளைப்போல இந்தியாவும் `நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ சட்டத்தை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். தற்போதிருக்கும் பிளாஸ்டிக் தடைச் சட்டம்போல பெயரளவுக்கானதாக இல்லாமல், தீவிரமாகக் கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும்!” - ஜீயோ டாமின், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு.