
உணவுக்காக பேருந்துகள் நிற்கும் இடங்களில், அவர்கள் கொடுக்கும் உணவைத்தான் நாம் சாப்பிடவேண்டிய நிலை இருக்கிறது.
‘தரமற்ற உணவு, கொள்ளை விலை’ போன்ற தொடர் குற்றச்சாட்டுகளால், வரைமுறைப்படுத்தப்பட்ட மோட்டல்கள் மீண்டும் பழைய குற்றச்சாட்டுகளுக்கே ஆளாகியிருப்பது பயணிகளை வேதனைக்கு உள்ளாக்கிவருகிறது!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வோருக்காக தினமும் 1,000 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் நாள்தோறும் தோராயமாக 60,000 பேர் பயணம் செய்கிறார்கள். இந்தப் பேருந்துகள் உணவு இடைவேளைக்காக சில மோட்டல்களில் நிறுத்தப்படுபோது, அங்கு அரங்கேறும் அடாவடிப் பேச்சுகள், கூடுதல் விலை, மோசமான பராமரிப்பு போன்றவற்றால் அரசு பஸ்ஸில் பயணிக்கும் பயணிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துவந்தனர்.
இந்த நிலையில், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ‘தரமான உணவு, நியாயமான விலை, இலவச கழிப்பறை வசதி’ உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளோடு மோட்டல்கள் வரைமுறைப்படுத்தப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட இந்த மோட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பயணிகளிடம் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், மறுபடியும் மோட்டல்கள் மீதான குற்றச்சாட்டுகள் குவிய ஆரம்பித்திருக்கின்றன.

இதையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்குப் புகார் மனு அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மோட்டல்கள் மிகவும் மோசமான தரம்கொண்டதாக இருக்கின்றன. கழிவறைகள் படுமோசமாக இருக்கின்றன. ஆனாலும் பயணிகளிடம் ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் கழிவறைகள், சிகிச்சை நோக்கங்களுக்காகச் செல்வோருக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். உணவுப் பொருள்களின் விலை எம்.ஆர்.பி-யைவிட மிகவும் அதிகமாகவும், சுவையும் தரமும் மட்டமாகவும் இருக்கின்றன.
‘பயணிகளுக்குச் சுத்தமான உணவு, நியாயமான விலை, இலவசக் குடிநீர், இலவசக் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்து தரப்படும்’ என்று உறுதியளித்திருக்கும் மோட்டல்கள் இவற்றில் எதையும் கடைப்பிடிப்பதில்லை. இப்படி விதிகளை மீறுவோர்மீது, அரசும் குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுப்பதில்லை. இது குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியதற்கும் ‘வர்த்தக ரகசியம்’ என்று கூறி தகவல் மறுக்கப்பட்டிருக்கிறது’’ என்று கொதித்தவர், விதி மீறும் மோட்டல்கள் குறித்த பட்டியலையும் நம்மிடம் கொடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து, போக்குவரத்துக்கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் சிலரிடம் பேசினோம். “நாங்கள் பணியைத் தொடங்கும்போதே ‘இந்த ஹோட்டல்களில்தான் நிற்க வேண்டும்’ என்று சொல்லிவிடுகிறார்கள். அவ்வாறு நிறுத்தியதற்கான ஆதாரமாக, சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து சீல் வைக்கப்பட்ட பேப்பர் வழங்கப்படுகிறது. பணியை முடிக்கும்போது சீல் வைக்கப்பட்ட பேப்பரை நிர்வாகத்திடம் நாங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதை மீறி வேறு இடத்தில் பஸ்ஸை நிறுத்தும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சமீபத்தில்கூட அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். எனவேதான் வேறு வழியில்லாமல் இந்த மோட்டல்களிலேயே வாகனங்களை நிறுத்துகிறோம்” என்றனர்.
நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் அன்பழகன், “உணவுக்காக பேருந்துகள் நிற்கும் இடங்களில், அவர்கள் கொடுக்கும் உணவைத்தான் நாம் சாப்பிடவேண்டிய நிலை இருக்கிறது. விலை அதிகமாக இருப்பதோடு, ஆறிப்போன உணவுகளையே மீண்டும் சூடு செய்து வழங்குவதால், தரம் மிக மோசமாக இருக்கிறது. பில் கொடுக்கும்போது மீதமிருக்கும் பணத்தையும் அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்த்து கேள்வி கேட்டால், திமிராகப் பதில் சொல்கிறார்கள். மோசமான நிலையிலுள்ள கழிப்பறை வசதிக்கும்கூட தனியாகக் கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் செய்வதுபோல், பயணிகளுக்கான உணவை போக்குவரத்துத்துறையே தயாரித்து வழங்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நிறுத்தப்பட்ட ‘அம்மா’ குடிநீர் திட்டத்தை, பெயரை மாற்றியாவது தொடரலாம்” என்றார்.

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு அரசு விரவுப் போக்குவரத்துக் கழக (எஸ்.இ.டி.சி) மேலாண்மை இயக்குநர் இளங்கோவனிடம் பேசியபோது, “அவ்வப்போது இது போன்ற புகார்கள் வருகின்றன. உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விதிமுறை மீறல் இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கை செய்கிறோம். கழிப்பறை வசதிக்காகப் பணம் வசூல் செய்வது தொடர்பான புகார் வந்ததும், சம்பந்தப்பட்ட மோட்டல்களில் விசாரணை மேற்கொண்டோம். ஆனால், ‘பேருந்துப் பயணிகளிடம் பணம் வாங்கவில்லை. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்தவர்கள் குளிப்பதற்காகப் பயன்படுத்தியதால், அவர்களிடமிருந்து மட்டுமே கட்டணம் வசூல் செய்தோம்’ என விளக்கம் அளித்திருக்கிறார்கள். எம்.ஆர்.பி-க்கு மேல் உணவுப்பொருள்களின் விலை இருக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறோம். உணவுத் தயாரிப்பு விஷயத்தில், ரயில்வே நிர்வாகம்போல் போக்குவரத்துத்துறையால் செய்ய முடியாது. குறிப்பிட்ட மோட்டல்கள் தொடர்ந்து விதி மீறலில் ஈடுபடுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட மோட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்றார்.
இப்படித்தான் சொல்லிக்கொண்டேயிருக்கிறீர்கள், செய்துகாட்டுங்கள்!