
பாஜ.க தலைவர் கே.சுரேந்திரன் ஒரு குண்டு இல்லாத துப்பாக்கி. அவரது பேச்சைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
நாடு முழுவதும் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI)’ அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 28-ம் தேதி இந்த அமைப்புக்குத் தடைவிதித்தது மத்திய அரசு. இதுவரை கைதுசெய்யப்பட்ட 105 பேரில், 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, பி.எஃப்.ஐ அமைப்பு தொடங்கப்பட்டதே கேரளாவில்தான் என்பதால், அங்கு தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்களும், அவற்றில் வன்முறையும் வெடித்தன.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா, “கேரளா பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது” என பினராயி விஜயன் அரசைக் காட்டமாக விமர்சித்தார்.

கூடவே, கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், “மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ அமைப்பின் துணை அமைப்புகளில் ஒன்றான ரிஹாப் ஃபவுண்டேஷனின் தலைவராக முஹம்மது சுலைமான் இருக்கிறார். முஹம்மது சுலைமான்தான் இந்திய தேசிய லீக்குக்கும் தலைவர். ஆளும் சி.பி.எம் அரசு இந்திய தேசிய லீக்குடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சியைச் சார்ந்த ‘அஹமத் தேவர்கோவிலுக்கு’ அமைச்சர் பொறுப்பும் வழங்கியுள்ளது. அவரும் ரிஹாப் ஃபவுண்டேஷனுடன் தொடர்பில் இருக்கிறார். எனவே, ‘அஹமத் தேவர்கோவிலை’ அமைச்சரவையிலிருந்து நீக்கி, இடது முன்னணிக் கூட்டணியிலிருந்தும் தேசிய லீக்கை வெளியேற்ற வேண்டும்” என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வேட்டு வெடித்திருக்கிறார்.

இதற்கு பதில் கொடுக்கும்விதமாக அஹமத் தேவர்கோவில், “பாஜ.க தலைவர் கே.சுரேந்திரன் ஒரு குண்டு இல்லாத துப்பாக்கி. அவரது பேச்சைப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவர் சொல்வதுபோல் ரிஹாப் ஃபவுண்டேஷனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று முடித்துக்கொண்டார்.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், “கேரளாவில் இந்தச் சூழலை உருவாக்கியது இடதுசாரி அரசுதான்” என்று மாநில அரசை விமர்சித்திருக்கிறார். கூடவே, “ஆர்.எஸ்.எஸ்-ஸுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கும், மத்திய அரசின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையால் நன்மையைவிட தீமையே அதிகம்” என மத்திய பா.ஜ.க அரசையும் கண்டித்திருக்கிறார்.


சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இரு அமைப்புகளையும் கண்டிக்கும் தொனியில், “பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்வது முக்கியமல்ல. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மூன்று முறை தடை செய்தபோதும், ஏதாவது பலன்கொடுத்ததா... எனவே, பயங்கரவாத அரசியலைத் தனிமைப்படுத்தி, தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று சொன்னார்.
இது தொடர்பான வழக்கில், ‘போராட்டத்தின்போது, பி.எஃப்.ஐ கெரில்லா தாக்குதல் நடத்தியது.பொதுச்சொத்தை சேதப்படுத்திய யாரையும் சும்மா விடப்போவதில்லை’ என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது கேரள அரசு. பி.எஃப்.ஐ தடையைத் தொடர்ந்து கேரளாவில் சி.பி.எம்., பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளிடையே முக்கோண மோதல் உருவாகியிருக்கிறது.