மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 13 - வைக்கம்: வீதிகளில் நடமாட ஓர் உரிமைப்போர்!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

போராட்டத்தை வாழ்த்தி, கடிதம் எழுதிய காந்தி, அதில் ‘காவலர்கள் எவ்வளவு பலப் பிரயோகம் செய்தாலும், அகிம்சை முறையிலேயே போராட வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ‘

வைக்கத்திலுள்ள சிவன் கோயில் மற்றும் அதைச் சுற்றிய தெருக்களில் நடப்பதற்கு ஈழவர், புலையர், தீயர் சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து நடந்த இந்தியாவின் மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்றுதான் வைக்கம் போராட்டம்!

1924-ல் கேரள காங்கிரஸ் கட்சியின் தீண்டாமை விலக்குக்குழு, இந்தப் போராட்டத்தை மார்ச் 30 அன்று தொடங்கியது. இந்தப் போராட்டத்துக்கு மக்களை நோக்கி அறைகூவல் விடுக்கப்பட்டபோதும், கோயில் - கிராமம் என்கிற அமைப்புகளைப் பகைத்துக்கொண்டு வாழ இயலுமா, வேளாண்மைத் தொழிலில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுமே என்கிற வாழ்வாதார அச்சங்களால் மக்கள் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், டி.கே.மாதவன், ஏ.கே.பிள்ளை, வேலாயுத மேனன், டி.ஆர்.கிருஷ்ணசாமி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் எத்தனை பேர் வந்தாலும், தினசரி மூவர் மட்டும் காவல்துறையினரின் தடுப்புகளைத் தாண்டி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் நோக்கி நடந்தார்கள். முதல் நாளில் குஞ்ஞப்பி, பாகுலேயன், கோவிந்த பணிக்கர் என்கிற புலையர், ஈழவ, நாயர் சமூகத்தைச் சேர்ந்த மூவர் தடையை மீறினார்கள். உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனையும் ஐந்நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மெல்ல மெல்ல இந்தப் போராட்டம் வைக்கத்தைச் சுற்றிலும் பேசப்படும் விஷயமாக மாறியது. நாராயண குரு இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டக்காரர்கள் தங்குவதற்கு பேளூர் மடத்தை வழங்கினார்.

போராட்டத்தின் தினசரி நிகழ்வுகள் காந்திக்குக் கடிதமாகச் சென்றன. போராட்டத்தை வாழ்த்தி, கடிதம் எழுதிய காந்தி, அதில் ‘காவலர்கள் எவ்வளவு பலப் பிரயோகம் செய்தாலும், அகிம்சை முறையிலேயே போராட வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ‘இந்தப் போராட்டம் வலுவடைய, தேசியத் தலைவர்கள் இங்கு வந்தால் நல்லது’ என்று ஜார்ஜ் ஜோசப், காந்திக்குக் கடிதம் எழுதினார். வட இந்தியாவிலிருந்து ஒரு தலைவர் உடனடியாக வைக்கம் சென்றடைவது கஷ்டம் என்பதால், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பெரியார் அவர்களை அங்கே அனுப்புவது என்று தேசிய கமிட்டி முடிவுசெய்தது.

போராட்டங்களின் கதை - 13 - வைக்கம்: வீதிகளில் நடமாட ஓர் உரிமைப்போர்!

ஈரோட்டிலிருந்து உடனடியாக வைக்கத்துக்கு விரைந்த பெரியார், முதலில் வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை நோக்கிச் சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதில் முனைப்பாக இருந்தார். மக்களை நோக்கிப் பெரியார் தொடர்ந்து பேசினார். “இந்த அடிமைத்தனத்திலிருந்து நாம் வெளியே வர வேண்டுமென்றால், முதலில் நாம் கேள்விகளைக் கேட்க வேண்டும். காலம் காலமாக இங்கே நடைமுறையிலிருக்கும் ஆதிக்க நடைமுறைகள், ஆதிக்கச் சிந்தனைகளுக்கு எதிராகச் சிந்திக்க வேண்டும்” என்றார்.

“கள்ளை இறக்குவதால் தீயர் தாழ்ந்தவர்கள் என்றால், அவர்கள் இறக்கும் கள்ளை அருந்துபவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்தவர்களாகத்தானே இருக்க முடியும்... நம் உடம்பில், வலது பக்கம், இடது பக்கத்தைவிட உயர்ந்தது என்றால், நம்மை யாராவது அவர்களின் வலது காலால் உதைத்தால் சந்தோஷப்படுவோமா... இறக்கும் மாட்டை அறுக்கும் பறையர் சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களென்றால், மனித உடலை அறுக்கும், பிராமண டாக்டர்களும், நாயர் டாக்டர்களும் தீண்டத்தகாதவர்கள்தானே?” என்று பெரியார் தொடர்ந்து ஊர் ஊராகச் சென்று உரையாற்றினார்.

ஈழவரின் மீதான தீண்டாமையைக் குறித்துப் பேசும்போது “உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை பயன்படுகிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை, தாய் உண்டா... இடது கையைத் தொடும்போதெல்லாம் வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா... நாம் கடவுளைத் தொழும்போது வலது கையுடன் மட்டும்தான் செல்கிறோமா... கோயிலுக்குச் செல்லும்போது நமது இடது கையை விட்டுவிட்டுச் செல்கிறோமா... வலது பக்கம், இடது பக்கத்தைவிட உயர்வானது என்றால், இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்கிறோமா?” என்றெல்லாம் கேட்டார் பெரியார். அவரின் கேள்விகள் எளிய ஜனங்களைச் சிந்திக்கச் செய்தன, போராட்டத்துக்குப் புத்துயிர் ஊட்டின.

வைக்கம் போராட்டத்துக்கான ஆதரவு, நாளுக்கு நாள் பெருகியது. ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் சமைக்கும் முன்பு, ஒரு பிடி அரிசியைப் போராட்டத்துக்கு என எடுத்துவைத்தார்கள். வைக்கம் போராட்டம் ஒரு மக்கள் போராட்டமாக உருமாறியது.

பெரியாரைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் பேச அனுமதித்தால், இனி இந்தப் போராட்டங்களை அடக்க இயலாது என்று சமஸ்தானம் யோசித்தது. பெரியாருக்கு வைக்கம் பகுதிக்குள் நுழைய, பேச அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. மறுபுறம் அடியாட்களைவைத்து வன்முறையை ஏவுவது, காவல்துறையினரை வைத்து தடியடி நடத்துவது, சத்தியாக்கிரகிகளின் கண்களில் சுண்ணாம்பைப் பூசுவது உள்ளிட்ட பல வன்முறைகள் அங்கே அரங்கேறின.

மே 21, 1924 அன்று, பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டார். “எனக்கு இந்திய நீதிமன்றங்கள் நியாயம் செய்யும் என்கிற நம்பிக்கை இல்லை” என்று உரக்க அறிவித்து, சிறைக்குச் சென்றார் பெரியார். அவர், சிறையில் இருந்த ஒரு மாத காலமும் நாகம்மையார் வைக்கத்தில் பிரசாரம் செய்தார். காங்கிரஸின் தேசியத் தலைவர்கள் பலர் வைக்கம் நோக்கி விரைந்தனர். கேளப்பன், கே.பி.கேசவமேனன், இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன், கோவை அய்யாமுத்து, எம்.வி.நாயுடு, குரூர் நீலகண்டன் தொடங்கி நாராயணகுரு உள்ளிட்ட பலர் வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

சிறையிலிருந்து ஒரு மாதக் காலத்துக்குப் பிறகு பெரியார் வெளியே வந்தார். வெளிவந்தவர் நேரடியாக வைக்கத்தில் பிரசாரத்தைத் தொடங்கினார். மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தண்டனைக் காலமான நான்கு மாதங்கள் கோட்டயம், திருவனந்தபுரம் சிறைகளில் கால்களில் விலங்குச் சங்கிலி பூட்டப்பட்டு கடுங்காவலில் இருந்தார். அவர் சிறையிலிருந்த காலத்தில் பெரியாரை அழிக்க, ‘சத்ரு சங்கார யாக’த்தை நம்பூதிரிகளும் பார்ப்பனர்களும் இணைந்து நடத்தினார்கள். பெரியார் உயிருடன் சிறையிலிருந்து திரும்பினார். ஆனால், யாகம் நடத்திய சில தினங்களில் ‘திருவாங்கூர் மகாராஜா இறந்தார்’ என்று செய்தி வந்தது.

இதன் பின்னர் சென்னைக்கு வந்த பெரியார், ‘மயிலாப்பூரில் ஆறு மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக’ அரசு விரோத வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ‘பெரியார் மீண்டும் வைக்கம் செல்வதைத் தடுக்கவே இந்தக் கைது’ என்று பத்திரிகைகள் அரசைச் சாடி எழுதின.

போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி காந்தி வைக்கத்துக்கு வந்தார். டெல்லியிலிருந்து சென்னை வழியாக ஈரோட்டுக்கு வந்த காந்தியை, பெரியார் வரவேற்றார். இருவரும் வர்க்கலையி லிருந்து இரவே வைக்கம் நோக்கிச் சென்றனர். பெரியாரையும் காந்தியையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார் மகாராணி. ‘நான்கில் மூன்று பொதுச்சாலைகளில் எல்லோரும் நடமாடலாம்’ என்று அறிவிக்கப்பட்டதுடன் போராட்டம் 1925 நவம்பரில் முடிவுக்கு வந்தது. பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்கிற பட்டத்தை திரு.வி.க கொடுத்தார். பெரியாரின் தலைமையில் பெரும் வெற்றிவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர், அந்தப் போராட்டம் அனைத்து கேரள கோயில்கள் என விரிவாக்கம் பெற்றது. இந்தப் போராட்டத்தில் பெற்ற உத்வேகத்தில்தான் காந்தி இந்தியாவெங்கும் ஆலயப் பிரவேச இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியா சுதந்திரம் பெற்று, ஒரு ஜனநாயக நாடாக மலர்ந்தது. பாபா சாகேப் அம்பேத்கர் நமக்குச் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துகிற அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொடுத்தார்.

இவையெல்லாம் இல்லாத காலத்தில், நம் ஊர்கள் எப்படியிருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இன்றைக்கும் கோயிலுக்குச் செல்லும் ஒவ்வொருவரும், தங்களின் சாதிகள் எப்போது உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டன என்பதைத் தங்களின் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பது காலத்தின் அவசியம். இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கு நடைமுறையில் இருக்கும் தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகள், பாகுபாடுகள் அனைத்தையும் நம் சமூக வரலாறாக நம் பிள்ளைகளுக்குக் கல்விச்சாலைகள் போதிக்க வேண்டும்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த நெருக்கடிகள், தீண்டாமைக் கொடுமைகளை யெல்லாம் கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர், ‘திருவாங்கூரைப் பைத்தியக்காரர்களின் புகலிடம்’ என்று வர்ணித்தார். இன்றைக்கு ஜனநாயகமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் இல்லாதிருந்தால், இந்த நாடு என்னவாக இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்!

(தொடரும்)

*****

போராட்டங்களின் கதை - 13 - வைக்கம்: வீதிகளில் நடமாட ஓர் உரிமைப்போர்!

வைக்கம் போராட்ட ஆவணம்!

வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சம உரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல்படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, பெரியார் கேரள மக்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார். வைக்கத்தை, சமூகநீதியின் அடையாளமாக்கிவிட்ட பெரியார், அங்கு போய் அப்படி என்ன செய்தார்... இரண்டு முறை சிறை சென்றார். நான்கு மாதக் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். வைக்கத்தில் கழித்த 141 நாளில், சிறையில் 74 நாள்கள் இருந்தார். வைக்கம் போராட்டத்தின் முழு விவரப் பின்னணியில் பெரியார், காந்தி பங்களிப்புகளைத் தரும் ஆய்வாளர் பழ.அதியமான் அவர்களின் முக்கிய நூல் ‘வைக்கம் போராட்டம்’!