
மனசாட்சியின் பேரோசை - இராக் போர் எதிர்ப்பு!
என் கல்லூரிப் பருவத்தில்தான் இராக் ராணுவம் குவைத் மீது படையெடுத்தது. நாளிதழ்களில் தினசரி இந்தப் போர் பற்றிய செய்திகள் பக்கம் பக்கமாக வரும், செய்திகளைத் தாண்டி போரின் பாதிப்புகளான, கச்சா எண்ணெய் வரத்து குறைவு, பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு மெல்ல தமிழகத்தையும் எட்டியது. மதுரையில் பெட்ரோலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தோம். நகரப் பேருந்துகளின் நிறுத்தங்கள் குறைக்கப்பட்டன. உலகில் எங்கோ நடைபெறும் போர் நம்மை லேசாகப் பதம் பார்த்தபோது, போர் நடைபெறும் இடத்தில் வசிக்கும் மக்கள் எத்தகைய பாதிப்புகளை அனுபவிப்பார்கள் என்று மனம் அங்கலாய்த்தது.
1990 தொடங்கியதிலிருந்து உலகின் வெவ்வேறு பகுதிகளில் போர் நடைபெற்ற வண்ணம் இருந்தது. ருவாண்டா, குரோஷியா, அல்ஜீரியா, சோமாலியா, ஜார்ஜியா, போஸ்னியா, வெனிசுலா, காங்கோ, ஏமன், அல்பேனியா, கொசோவோ, மாசிடோனியா என எங்கு திரும்பினாலும் போர்க் கொடூரம் மக்களை வாட்டியெடுத்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே கார்கில் போரும் இதே காலகட்டத்தில்தான் நடைபெற்றது.
இந்தச் சூழலில்தான் இராக், குவைத் மீது படையெடுத்ததும். உடனே அதை எதிர்த்து போருக்கு அழைப்பு விடுத்தது அமெரிக்கா. காத்திருந்ததுபோல 35 நாடுகளின் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்தன. இது குவைத்தை மீட்பதற்கான போர், சதாமிடமிருந்து இராக்கை மீட்டு ஜனநாயகத்தை மலரச் செய்வதற்கான போர் என ஊடகத்தில் செய்திகள் வந்தன. ஆனால், மெல்ல இந்தப் போருக்கும் வளைகுடாவில் எந்த நாட்டின் விடுதலைக்கும் தொடர்பில்லை, இது எண்ணெய்க்கான யுத்தம், வளைகுடா நாடுகளில் இருக்கும் எண்ணெயைப் பங்கிடத் துடித்துக்கொண்டிருந்த நிறுவனங்கள் இந்தக் கரும்புகைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்றன என்பதும் புலப்பட்டது. 1991-ல் இந்தப் போர் முடிவடைந்தது. இராக்கில் சதாம் வழக்கம்போல் தன் ஆட்சியைத் தொடர்ந்தார். வளைகுடா முழுவதும் நிலவும் பதற்றத்துக்கு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைதான் காரணம் என்பதை விளக்கும் பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் வெளிவந்தன.

2001, செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் நடைபெற்றதுமே அமெரிக்கா போரின் பெரும் வியூகங்களை வகுக்கத் தொடங்கியது. ‘இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ஒசாமா பின் லேடன் மற்றும் அவரது அல்-கொய்தா அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசுதான் அடைக்கலம் கொடுக்கிறது. உடனே ஒசாமாவை எங்கள் வசம் ஒப்படைக்கவில்லையெனில், ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுப்போம்’ என்று அறிவித்தார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல்கள் நடைபெற்று 15 நாள்களில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மீதான தனது தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானைச் சூறையாடின. பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். இந்த வேதனைகளை, அழிவுகளைத் தாங்க முடியாமல், ‘இனிப் போர்களே வேண்டாம்’ என்கிற முழக்கம் உலகம் எங்கும் எழத் தொடங்கியது. ஆனால், ‘சதாம் உசேன் வசம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களால் உலகத்துக்கே ஆபத்து. இராக் உடனடியாகப் பேரழிவு ஆயுதங்களை அழிக்க வேண்டும்’ என்று அடுத்த போர் வெறியோடு அமெரிக்கா கொக்கரிக்கத் தொடங்கியது.
2001, 2002, 2003 ஆண்டுகளில், பிரேசிலின் போர்ட்டோ அலெக்ரேவில் நடைபெற்ற உலகச் சமூக மன்றத்தின் சர்வதேச அமர்வுகளில், போர்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. போர்களின் மூலம் எங்கேனும் அமைதி ஏற்பட்டிருக்கிறதா, வன்முறையின் மூலம் நாடுகளிடையே நட்பு மலர்ந்திருக்கிறதா என்று எளிய மக்கள் தங்களின் கேள்விகளை முன்வைத்தார்கள். அமெரிக்காவின் போர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இனி போர்களே வேண்டாம் என்கிற அழுத்தமான மனநிலையுடன் பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்றார்கள்.
ஜனவரி 3, 2003 தொடங்கி ஏப்ரல் 12, 2003-க்குள் உலகம் முழுவதும் 3,000 போர் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி 15 அன்று உலகின் 800 நகரங்களில் ஒரே நேரத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை மனிதகுல வரலாற்றில் நிகழ்த்தப்படாத ஓர் அணிதிரட்டல் என இதை ஊடகம் விவரித்தன. லண்டனில் 7.5 லட்சம் பேர், ரோமில் 30 லட்சம் பேர், ஸ்பெயினில் 11 லட்சம் பேர், கனடாவில் 10 லட்சம் பேர், அமெரிக்காவில் 150 இடங்களில் போராட்டங்கள் என உலகம் முழுவதும் 3.5 கோடி பேர் ஒரே நாளில் வீதிகளில் திரண்டார்கள். நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகம் நோக்கி ஒரு லட்சம் பேர் ஊர்வலமாகச் சென்றார்கள். இந்தியா முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையின் மெரினாவில் காந்தி சிலை அருகில் பெரும் போராட்டம் நடைபெற்றது.

அமெரிக்கா முழுவதும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார், கை-கால்கள் இழந்து தவிக்கும் போர் வீரர்களுடன் வீதிக்கு வந்தார்கள். போருக்கு எதிரான பாடல்கள், ஓவியங்கள் எனப் பல வடிவங்களில் எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினார்கள். போரின் அழிவுகளைக் கைகளில் பதாகைகளாக ஏந்தினார்கள். ‘No blood for oil, end the war now’ என்பது அன்றைய மிகப் பிரபலமான வாசகம்.
அமெரிக்க மக்கள் எப்போதுமே போருக்கு எதிரான தங்களின் நிலைப்பாட்டை உரக்க அறிவித்திருக்கிறார்கள். இந்த முறையும் அவர்கள் ‘எங்கள் அரசு தவறு செய்துவிட்டது’ என்றார்கள். இருப்பினும், இத்தனை பெரும் போராட்டங்களுக்குப் பின்பும், 2003-ல் அமெரிக்காவின் 4,60,000 துருப்புகள் இராக்குக்குள் நுழைந்தன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். 20 லட்சம் இராக்கியர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக மாறினார்கள். 5,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் இராக்கில் கொல்லப்பட்டார்கள். 2008-ல் அமெரிக்கப் படைகள் இராக்கிலிருந்து விலகுவதாக ஜார்ஜ் புஷ் அறிவித்தார். ஆனால், 2011-ல் ஒபாமா காலகட்டத்தில்தான் அவர்கள் வெளியேறினார்கள். கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள், 35 நாடுகளின் படைகள் இராக்கில் தேடியும் ஒரு பேரழிவு ஆயுதத்தையும் கண்டுபிடிக்கவில்லை. பேரழிவு ஆயுதம் என ஒரு துண்டுகூடக் கிடைக்கவில்லை.
இராக் மக்கள், அமெரிக்க ராணுவம் தங்கள்மீது வீசிய வெள்ளை பாஸ்பரஸ் ரசாயனத்தின் விளைவுகளை இன்றளவும் அனுபவிக்கிறார்கள். அமெரிக்கப் படைகள் வீசிய கதிர்வீச்சுத் தன்மைகொண்ட குண்டுகளால், இன்றைக்கும் இராக்கின் பல பகுதிகளில் புற்றுநோய் மரணங்கள் அதிகரித்தபடியிருக்கின்றன. வியட்நாமில் அவர்கள் காடுகளை அழிக்க வீசிய ‘ஏஜென்ட் ஆரஞ்சு ரசாயனம்’ இன்றும் அங்கே பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. ஜப்பானில் ஹிரோஷிமா - நாகசாகி இன்றைக்கும் மனிதகுலம் மறக்க நினைக்கும் கோர நினைவாக உலுக்கியெடுக்கிறது. இத்தனை பேரழிவுகளுக்குப் பின்பும் ரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்களைக் கடந்து ராணுவ விஞ்ஞானிகள் இன்று உயிரியல் ஆயுதங்களுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் போர் வேண்டாம் என்று நாம் போராடுகிறோம், மறுபுறம் போர்த் தளவாடங்கள், ஏவுகணைகள், டிரோன்கள், ரேடார்கள் எனப் போருக்கான எல்லாக் கருவிகளும் நம் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் நுழைந்திருக்கிறது. எந்த வீட்டுக்குச் சென்றாலும் குழந்தைகள், இளைஞர்கள் குழுவாகப் போர் விளையாட்டுகளில் மணிக்கணக்காக ஈடுபடுவதைப் பார்க்கிறேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் கேட்கும் துப்பாக்கிச் சத்தம், ஏவுகணைகளின் ஓசை என்னை அச்சம்கொள்ள வைக்கிறது!
(தொடரும்)

பேட்ரிக் டைலர்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைமைச் செய்தியாளரும், எழுத்தாளருமான பேட்ரிக் டைலர், இராக் போர்-எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து இவ்வாறு எழுதினார்: ‘உலகில் இரண்டு வல்லரசுகள் உள்ளன. ஒன்று அமெரிக்கா, மற்றொன்று உலகம் முழுவதுமுள்ள மக்களின் மனசாட்சி.’ இந்த வார்த்தைகளின் கூர்மை, அறிவுஜீவிகளின் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது, உலகம் முழுவதும் செயல்படும் ஜனநாயக இயக்கங்களுக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியது. ‘A World of Trouble: The White House and the Middle East from the Cold War to the War on Terror’ என்பது அவரது முக்கியமான புத்தகம்!