மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 11

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த மக்கள், பசி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் மரணத்தின் நிழலிலேயே வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்கள் காடுகளில், மலைகளில் ஓர் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். ஆதிப் பொதுவுடைமைச் சமூகங்கள் காடுகளில் அலைந்து திரிந்து கிழங்குகள், தேன், பூச்சிகள் இவற்றைச் சேகரிப்பது, மிருகங்களை உணவுக்காக வேட்டையாடுவது எனக் குழுவாகத் தங்களின் வாழ்வியல் தேவைகள் அனைத்தையும் சேகரித்து தங்களுள் பகிர்ந்துகொண்டன. இன்றளவும் உலகிலுள்ள பல பழங்குடி இனக்குழுக்கள் பகிர்ந்துகொள்ளும் நடைமுறையுடன், ஒரு பொது வாழ்வியலையே வாழ்கிறார்கள்!

காடுகளிலிருந்து மனிதர்கள் சமதளத்துக்கு இடம்பெயர்கிறார்கள். ஒரு விதையில் உருவாகும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்த பெண்கள் வேளாண்மையை மனிதகுலத்துக்கு வழங்குகிறார்கள். விதையிலிருந்துதான் மனிதன் தனது முதல் உற்பத்தியைத் தொடங்குகிறான். இதுவரை அந்தந்த நேரத்தின் உணவுத் தேவைக்காக மட்டுமே வேட்டையாடிய அவனுக்கு விவசாயம், தேவைக்கு அதிகமான உணவைக் கொட்டித் தருகிறது. இந்த உபரி தானியங்கள்தான் இந்தச் சமூகத்தில் பொது என்கிற நிலையை மாற்றி, இது என்னுடையது என்கிற பண்பை உருவாக்கியது. `நான்’, `என்னுடையது’, `என் சொத்து’ என்கிற மனநிலை உருவானவுடன் மனிதனிடத்தில் ஒரு மேலாதிக்க உணர்வு பிறக்கிறது.

போராட்டங்களின் கதை - 11

`நான், என் நிலம், நீ என் நிலத்தில் கூலி’ என்று தொடங்கிய பயணத்தில், ஒருநாள் ஆதிக்கம் செய்பவன் அதிகாரம் தலைக்கேறி, “நீங்கள் என் அடிமைகள்” என்று சக மனிதனை விளித்தான். அடிமைகள் நிலத்துக்கு நிலம் வெவ்வேறுவிதமாக நடத்தப்பட்டார்கள். போரில் பிற நாட்டு வீரர்களை - மக்களைக் கொன்றவர்கள், பிறகு அவர்களைக் கொல்லாமல் அடிமைகளாகத் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்று, அவர்களை ராணுவம், கட்டடம் கட்டுதல், பண்ணைகள், அரண்மனை வேலைகள் என்று ஈடுபடுத்தத் தொடங்கிய வழக்கம், இந்த மனிதகுல வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள் எனலாம். தமிழ்நாட்டில் அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்புசாலியான், குடிப்பறையன், கொத்தடிமை என்கிற பல்வேறு பெயர்களில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

19-ம் நூற்றாண்டில் அடிமைகள் உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்பட்டார்கள். அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’, இன்றும் அடிமைச் சமூகத்தின் பாடுகள் பற்றிய மிக முக்கிய நாவலாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் நிலவிய அடிமைமுறைகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் எனப் பல்வேறு வடிவங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆண், பெண் இருபாலாரையும் மடங்களுக்கு, கோயில்களுக்கு தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். அடிமைகளின் உடல்கள்மீது முத்திரை குத்தும் வழக்கமும் இருந்திருக்கிறது.

பிரெஞ்சு சமூகத்தின் நலிவடைந்த மக்கள், பசி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் மரணத்தின் நிழலிலேயே வாழ்ந்தார்கள். அரசவை, கீழ்த்தட்டு மக்களின் கஷ்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. திருச்சபையின் ஆசீர்வாதம் கிடைத்தால் போதும், மன்னர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலையே இருந்தது. 1847-ம் ஆண்டு, பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், 12 மணி நேர வேலை நேரத்தை பிரெஞ்சுத் தொழிலாளர்கள் வென்றனர்.

இயந்திரங்கள் உருவான பிறகு, உற்பத்தி புதிய விசையைக் காண்கிறது. ஐரோப்பா தொடங்கி உலகம் முழுவதும் பஞ்சாலைகள் நிறுவப்படுகின்றன. மனிதர்கள் அங்கே அடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்படு கிறார்கள்; 16-18 மணி நேரம் வரை கொடூரமாக வேலை வாங்கப்படுகிறார்கள். ஒரு வேலை நாளின் நேரத்தை நீட்டிப்பதின் மூலம் மனித உழைப்பைக் கொள்ளையடித்து, முதலாளிகள் தங்களின் உற்பத்தியைப் பெருக்குகிறார்கள். முதலாளிகளின் லாபம் அசுர வேகத்தில் வளரும்போது தொழிலாளியின் ஆயுள் குறைகிறது. அவன் மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறான் என்று 1867-ல் காரல் மார்க்ஸ் தனது `தாஸ் கேபிடல்’ நூலில் எழுதினார்.

1886-ம் ஆண்டு, மே மாதம் 1-ம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வலியுறுத்தி மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் வீதியில் திரண்டு போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தப் போராட்டத்தில் பெரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதில் பல நூறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு ‘ஹே-மார்க்கெட் படுகொலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொழிலாளர்களின் தியாகத்தின் எதிரொலியாக, தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் எட்டு மணி நேரம் வேலை என்கிற கோரிக்கை உலகம் முழுவதும் நெருப்பைப்போல் பரவியது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்... அது ஒன்றே உங்கள் விலங்குகளை அறுத்தெறிவதற்கான தீர்வு’ என்ற காரல் மார்க்ஸின் வார்த்தைகள், உலகத் தொழிலாளர்களின் முழக்கமாக மாறின.

ஹே-மார்க்கெட் படுகொலையைக் கண்டித்து, தொழிலாளர்களின் எட்டு மணி நேரக் கோரிக்கைக்கு வித்திட்ட போராட்டத்தை நினைவுகூரும் வகையில் 1890, மே 1 அன்று, உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினார்கள். 1891-ல் நடந்த இரண்டாவது மாநாட்டில், மே முதல் நாளை இனி ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கான நாளாக அனுசரிப்பது என்று முடிவுசெய்தனர். இதுவே தொழிலாளர் தினமான ‘மே 1’ உருவான கதை.

1923 மே 1 அன்று, பொதுவுடைமைக் கட்சித் தலைவராக இருந்த ம.சிங்காரவேலர், மே நாள் கொண்டாட்டத்தை சென்னையில் முதன்முதலில் நடத்தினார். விடுதலை பெற்ற இந்தியாவில் முதன்முறையாக 1957-ல், கேரள முதல்வர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு, மே ஒன்றை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் அரசு 1967-லும், தமிழ்நாட்டில் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு 1969-லும் மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, 1990-ல் வி.பி.சிங் மே தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவித்தார்.

மனிதனின் உழைப்புதான் இந்த உலகத்தின் எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரம். உழைப்பின்றி பருத்தி விளையாது, பருத்தி துணியாக மாறாது. துணி, நீங்கள் அணிந்திருக்கும் உடையாக மாறாது. உழைப்பின்றி இந்த உலகில் அணுவும் அசையாது. உழைப்பு வேண்டும்; ஆனால் உழைப்பாளி வேண்டாதவன். இயந்திரங்களை கவனிக்கும் அளவுக்கு அதைச் செயல்படுத்தும் மனிதனை கவனிக்க மாட்டோம் என்று ஒரு முதலாளி சிந்திக்கத் தொடங்கிவிட்டான் எனில், அந்த வேலையிடம் தொழிலாளிக்கு நரகமே. உழைப்பாளி தீட்டு என்றால் அவன் வியர்வையில் விளைந்த நெல்லும், அவன் நெசவு செய்த துணியும், அவன் உற்பத்தி செய்த அனைத்தும் தீட்டுதானே?

மனிதகுல வரலாற்றில் ஜனநாயகம் ஒன்றே மனிதனை மதித்து, அவனுக்கு உரிமைகளை வழங்கியது. தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றியது, தொழிலாளர்களின் வாழ்வில் மலர்ச்சியையும் மாண்புகளையும் வழங்கியது. உழைப்புக்கு ஈடாக உத்தரவாதமான சம்பளத்தை வழங்கியது. சம்பளம் தவிர்த்து அவனுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைக் கொடுப்பனவு, நகர இழப்பீட்டு கொடுப்பனவு, பணிக்கொடை, சம்பள விடுப்பு, ஓய்வூதியம் எனப் பல்வேறு சலுகைகளை வழங்கி மகிழ்ந்தது.

செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு, சுமங்கலித் திட்டத்தில் பெண்கள் மீட்பு என்று நாளிதழ்களில் வாசிக்கும்போது, முதலாளிகளின் லாப வெறி இன்னும் தணியவில்லை என்பது புலப்படுகிறது. உலகமயம் வந்த பிறகு காலச்சக்கரம் இன்னும் வேகமாகப் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மூலதனத்தை ஈர்க்கிறோம் என்கிற பெயரில், ‘எங்களின் குடிமக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வளாகங்களில் எங்கள் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது’ என்று போட்டி போட்டு அறிவித்துவருகின்றன.

போராட்டங்களின் கதை - 11

எட்டு மணி நேர வேலை என்பது அரசு நிறுவனங்களில், பொதுத்துறை நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டபோதும் தனியார் துறையில் அது இன்றைக்கும் ஒரு கட்டாயமாக இல்லை. முறைசாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையே வேறு. இன்றைக்கு ஐடி துறையினரைப் பார்க்கும்போது மீண்டும் நாம் நவீன அடிமை முறைக்குள்தான் வாழ்கிறோம் என்பதையே உணர்கிறேன். ஒரு நாளில் காலை 9:30 மணிக்கு வேலையைத் தொடங்குபவர்கள், நள்ளிரவு வரை சோறு தண்ணியில்லாமல் வேலை செய்து கிடப்பதை கொரோனா காலத்தில் நாம் அனைவரும் நம் வீடுகளிலேயே கண்கூடாகப் பார்த்தோம்.

லட்சக்கணக்கானவர்கள் உலகெங்கிலும் போராடி, உயிர் நீத்து நமக்குப் பெற்றுக்கொடுத்த எட்டு மணி நேர வேலை நேரத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என்கிற உணர்வாவது இன்றைய நவீன தொழிலாளர்களுக்கு இருக்கிறதா?

நீங்கள் ஸ்பார்ட்டகஸைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒரு த்ரேசிய கிளாடியேட்டர். ரோம் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு, அடிமையாக விற்பனை செய்யப்பட்டவர். ஸ்பார்ட்டகஸ் அடிமைகளை எதிர்த்துச் சண்டையிடவில்லை. மாறாக, அடிமைத்தனத்தின் அடிப்படைகளை எதிர்த்து போரிட விரும்பினார். ‘நம்முடைய உரிமையை மீட்டெடுப்பதில் நம் உயிர் போகட்டுமே’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து போர் புரிந்தார். சுமார் மூன்று ஆண்டுகள் நடைபெற்ற போரின் தொடக்கத்தில், தங்களிடம் ஆயுதம் இல்லாததால், “உங்களைப் பிணைத்து வைத்திருந்த சங்கிலிகளையே ஆயுதங்களாகப் பயன்படுத்துங்கள்” என்றார் ஸ்பார்ட்டகஸ். அந்தக் குரல், இன்றைக்கும் மிக முக்கியமான முழக்கமாக அர்த்தத்துடன் திகழ்கிறது. இன்று நம்மை மீண்டும் அடிமைகளாக மாற்ற முயலும் சமூக அமைப்பை எதிர்க்க, ஸ்பார்ட்டகஸ் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்!

(தொடரும்)