மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 12 - நைரோபியின் பசுமை வீராங்கனைகள்!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

இன்றைய பெரு நகரங்களில் மரங்கள், குளங்கள், வெட்டவெளிகளெல்லாம் அசுர வேகத்தில் காணாமல்போகின்றன.

“உங்கள் வீட்டு மரம் எங்களுக்குப் பெரும் தொந்தரவாக இருக்கிறது... உங்கள் மரத்தின் இலைகள் எங்கள் காம்பவுண்டுக்குள் விழுவதால் தினசரி பெருக்குவது பெரிய சிரமமாக இருக்கிறது. இது காடு அல்ல நகரம். காட்டில்தான் மரங்களை வளர்க்க வேண்டும். உடனடியாக உங்கள் வீட்டின் மரத்தை வெட்டுங்கள் அல்லது எங்கள் வீட்டுக்குள் நுழையும் மரத்தின் கிளைகளை நாங்களே வெட்டுவோம்” என்கிற தொனியிலான பிரச்னைகளை நான் தொடர்ந்து பல நகரங்களில் கேள்விப்படுகிறேன்!

மனிதர்கள் எப்படி மரங்களுக்கு எதிரியானார்கள் என்பது புரியவேயில்லை. நகரங்களில் குடிபெயர்வதற்கு முன்பு நிச்சயம் அவர்களுக்கு ஒரு சொந்த கிராமம் இருந்திருக்க வேண்டும். அதில் குளங்களும், மரங்களும், வானமும் நிச்சயமாக இருந்திருக்கும்தானே... பறவைகளின் கீச்சொலிகளை, பூச்சிகளின் ரீங்காரத்தை அவர்கள் நிச்சயம் கேட்டிருப்பார்கள். பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்ததும் அவர்களின் தன்மை எப்படி இவ்வளவு மாறிவிடுகிறது... கான்கிரீட் காட்டின் சுண்ணாம்பு வாசனை அவர்களை இப்படி மாற்றிவிடுகிறதோ... சுவாசிக்கக் காற்று, பசிக்குக் கனி, வெயிலுக்கு நிழல் தருகிற மரம்... வீட்டுக்கு நிலை, ஜன்னல், கட்டில், மேசை, நாற்காலிக்கு என அனைத்துக்கும் தேவைப்படும் மரம்... மனித வாழ்வின் பேரங்கம். இந்த மரத்தால் பெறும் அத்தனை பலன்களும் வேண்டும்... ஆனால் ‘மரங்கள், அதன் இலைகள் எனக்கு அலர்ஜி’ எனச் சொல்லும் ஒரு நவயுக மனிதனை என்னவென்று வரையறுப்பது?

இன்றைய பெரு நகரங்களில் மரங்கள், குளங்கள், வெட்டவெளிகளெல்லாம் அசுர வேகத்தில் காணாமல்போகின்றன. ஒரு மெட்ரோ திட்டம், சாலை விரிவாக்கம், அரசின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் என ஏதோ ஒரு திட்டத்துக்காக அல்லது வளர்ச்சியின் பெயரில் தினசரி இயற்கையை சகட்டுமேனிக்கு அழித்துவருகிறோம். கடந்த பத்து ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவுகள் கற்றுக்கொடுத்த பாடங்களுக்குப் பின்பும் ஒரு நகரத்துக்குள் இருக்கவேண்டிய வெட்டவெளிகளை, பூங்காக்களை அழித்துவருகிறோம், ஆறுகளின் போக்கை கான்கிரீட் சுவர்கள் கட்டி மாற்றுகிறோம். நாம் உண்மையில் இன்னும் இயற்கையைப் புரிந்துகொள்ளவே இல்லை.

1989-ல் கென்யாவின் தலைநகரமான நைரோபியிலுள்ள உஹுரு பூங்காவில் 60 மாடி வளாகம் ஒன்றைக் கட்ட அரசு முடிவுசெய்தது. அந்த வளாகத்தில் கென்யா டைம்ஸ் பத்திரிகையின் அலுவலகம், ஷாப்பிங் மால்கள், வணிக மையங்கள், அலுவலகங்கள், ஆடிட்டோரியம், கண்காட்சிக் கூடங்கள், இரண்டாயிரம் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் எனத் திட்டத்தின் வரைவு முன்வைக்கப்பட்டது.

கரூரா காடுகளின் விளிம்பிலுள்ள உஹுரு பூங்காதான் நைரோபி நகரத்தின் எஞ்சிய பசுமைவெளி. வங்காரி மாத்தாய் களத்தில் இறங்கினார். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல கடிதங்களை கென்ய அரசுக்கு எழுதினார். ஆனால், அவரது கடிதங்கள் எதற்கும் பதில் வரவில்லை. இந்தத் திட்டத்தின் முக்கியப் பங்குதாரராக, ‘ராபர்ட் மேக்ஸ்வெல்’ என்கிற பிரிட்டிஷ் நிறுவனம் இருந்தது என்பதால், பிரிட்டிஷ் தூதரகத்துக்கும் அழுத்தம் கொடுத்தார்.

போராட்டங்களின் கதை - 12 - நைரோபியின் பசுமை வீராங்கனைகள்!

‘உஹுரு பூங்காவின் ஒரு சிறிய பகுதியைத்தான் இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்துகிறோம், இந்தத் திட்டம் கென்யாவுக்கு மிகவும் முக்கியமானது. அறியாமையிலுள்ள சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’ என்று அரசு அறிக்கை வெளியிட்டது. வங்காரி மாத்தாய் தனது பசுமைப் பட்டை (Green Belt Movement) இயக்கத்தினருடன் போராட்டங்களைத் தொடங்கினார். அரசு இந்த எதிர்ப்பை, போராட்டங்களை மதிக்காமல் உஹுரூ பூங்காவில் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டியது. வங்காரி மாத்தாய் உடனடியாக கென்ய உயர் நீதிமன்றத்தில் இந்தக் கட்டட வேலைகளுக்குத் தடை கோரி வழக்கு தொடர்ந்தார். கென்ய உயர் நீதிமன்ற நீதிபதி, அதிரடியாக இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி, “இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் தலைக்குள் மூளை இல்லை. மாறாகப் பூச்சிகள்தான் ஊர்கின்றன” என்றார்.

அந்தநேரம் நடைபெற்ற விழா ஒன்றில், கென்ய ஜனாதிபதி டேனியல் அரப் மோய், “வங்காரி மத்தாய் ஒரு நல்ல ஆப்பிரிக்கப் பண்பாடுடைய பெண்ணாக, ஆண்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். இந்தப் பசுமைப் பட்டை இயக்கம் என்பது கணவரால் கைவிடப்பட்டவர்களின் சங்கம்” என்று விவரித்தார். இதைத் தொடர்ந்து பசுமைப் பட்டை இயக்கத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்கிறோம் என்று அவப்பெயரை ஏற்படுத்த முயன்றார்கள். பல்வேறு வழிகளில் இந்தப் போராட்டத்தை ஒடுக்க முயன்றது கென்ய அரசு.

1964-ல் அமெரிக்காவுக்குச் சென்று தனது உயிரியல் பட்டப் படிப்பை முடித்த வங்காரி, அடுத்து பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கால்நடை உடற்கூறுதுறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்து கென்யாவுக்குத் திரும்பி, நைரோபி பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பேராசிரியர் பணியும் கிடைத்தது. பேராசிரியராக மட்டுமல்லாமல் அவர் மரங்கள் நடுவதிலும் பெரும் ஆர்வம்கொண்டிருந்தார். கென்யா முழுவதும் மரங்கள் நடுவதற்கென்றே பசுமைப் பட்டை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அடுத்த ‘முப்பது ஆண்டுகளில் மூன்று கோடி மரங்களை கென்யா முழுவதும் நட்டு வளர்ப்பது’ என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய வங்காரிக்கு, இந்தப் பசுமைப் பணிகளைச் செய்ய அவரது பேராசிரியர் வேலை இடையூறாக இருந்தது. உடனே தனது வேலையை ராஜினாமா செய்தார்.

கென்யா முழுவதும் பயணம் செய்த வங்காரி மாத்தாயிக்கு, பெண்கள் பெரும் உற்சாகமான வரவேற்பளித்தார்கள். மரங்கள் நடுவதுடன் நில்லாமல் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து, பசி, பஞ்சம், வறுமை, பட்டினி, வேலையின்மை எனச் சாமானியர்களை பாதிக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கினார் மாத்தாய். ‘மாற்றத்துக்கான பெண்கள்’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். பல சமூகப் போராட்டங்களை நடத்தி, பலமுறை சிறை சென்றார். இத்தகைய பெரும் பணிகளைச் செய்துவந்த இந்த இயக்கத்தின் பெண்களைத்தான் கென்ய ஜனாதிபதி, ‘கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்’ எனக் கேலி பேசினார் என்றால், ஆப்பிரிக்கச் சமூகத்திலுள்ள ஆணாதிக்கத்தின் அளவை நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.

வங்காரி மாத்தாய் ஒரு துளியும் பின்வாங்கவில்லை. கென்ய அரசு பசுமைப் பட்டை இயக்கத்தின் அலுவலகத்தை மூடியது. உடன் அலுவலகத்தை வங்காரி தனது வீட்டுக்கே மாற்றினார். கென்யா முழுவதுமுள்ள பசுமைப் பட்டை இயக்கத்தினரைத் தலைநகரம் நோக்கி அழைத்து, தொடர்ந்து பலவிதமான போராட்டங்களை நடத்தினார். காவல்துறையினர் பலமுறை கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள், போராட்டக்காரர்களைச் சிறையில் அடைத்தார்கள். வங்காரி மாத்தாயிக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. கென்யா அரசு, போராட்டத்துக்கு இடையே கூலிப்படைகளைக் கொண்டு கலவரங்களை நிகழ்த்தியது. இதில் வங்காரி மாத்தாய் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் பல காலம் கோமா நிலையில் இருந்தார். அதன் பின்னர் போராட்டம் வலுத்தது. தினசரி பெரும் கூட்டமாக மக்கள் வந்து பூங்காவில் கூடினார்கள். நைரோபியின் மக்கள் அங்கே கூடியவர்களுக்கு உணவு, குடிநீர், தூங்குவதற்குத் தேவையான விரிப்புகள் கொடுத்து முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஒரு மக்கள் போராட்டமாக அது உருமாறியது.

கென்ய அரசின் அராஜகமான எதிர்வினைகளை இந்த உலகம் பார்த்துக்கொண்டிருந்தது. கண்டனங்கள் மெல்ல மெல்ல எழுந்தன. இந்தத் திட்டத்துக்கு நிதியளிப்பதாக இருந்த பிரிட்டிஷ் நிறுவனம் பின்வாங்கியது. வங்காரி மாத்தாய் ஒரு வெற்றிபெற்ற வீராங்கனையாக நலம்பெற்றுத் திரும்பினார். ‘இயற்கையைப் பாதுகாக்க ஜனநாயகம் ஒன்றே வழி’ என்றார் வங்காரி. 1989-ல் தொடங்கிய போராட்டம் 1999-ல் வெற்றிபெற்றது. அரசு, வேறுவழியின்றி இந்த வளாகம் கட்டும் திட்டத்தைக் கைவிட்டது. நைரோபியின் உஹுரு பூங்கா மற்றும் அதைச் சுற்றிய கரூரா காடுகள் பாதுகாக்கப்பட்டன. இன்றைக்கும் நைரோபியின் நுரையீரலாக, எஞ்சிய பசுமையின் குறியீடாக, இந்தக் காடுகள் ஒரு வரலாற்றுச் சாட்சியமாக மக்களை ஈர்த்தபடி இருக்கின்றன.

ஐ.நா-வின் அறிக்கை ஒன்று இன்றைய நகர வாழ்வியலில் பூங்காக்களின் தேவை குறித்துப் பேசுகிறது. ஒரு நகரத்தில் பெரிய பூங்காக்கள் இருந்தால் அங்கே குற்றங்கள் குறைவாக இருக்கும், பசுமையான வெளிகள் மனித மனங்களை ஆற்றுப் படுத்தும் என்கிறது அந்த அறிக்கை. மனிதன் வாழவும், ஞான மடையவும் இயற்கையும் பசுமையும் அவசியமானவையல்லவா?!

(தொடரும்)

****

போராட்டங்களின் கதை - 12 - நைரோபியின் பசுமை வீராங்கனைகள்!

வங்காரி மாத்தாய்

ஆய்வாளர், பேராசிரியர், பசுமைப் பட்டை இயக்கத்தின் நிறுவனர், தேசிய மகளிர் கவுன்சிலின் தலைவர், கென்யாவின் நாடாளுமன்ற உறுப்பினர், சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர். தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டால், எல்லாப் பொறுப்புகளும் நம்மை வந்தடையும் என்பதை நிரூபித்தவர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான கோல்டுமேன் விருது, அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் இந்திரா காந்தி விருது எனப் பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. ஒவ்வொரு விருதுக்கும் ஒரு மரத்தை நட்டு அதைக் கொண்டாடுவார், ‘மரங்கள் நடுவதைவிட வேறு பெரும் கொண்டாட்டம் ஏதுமில்லை’ என்பார்.

`கல்வியறிவு அதிகரிக்க அதிகரிக்க மனிதர்களுக்கு எளிமையாக வாழ்வது பெரும் சுமையாக மாறிவிடுகிறது’ என்று சொல்லும் வங்காரி மாத்தாயின், The Challenge of Africa, Unbowed: My Autobiography என்கிற இரு புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை!