மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 14 - ஸ்டோன்வால் கலகம்: மாற்று பாலினத்தவர்களின் வரலாற்றுப் போர்!

ஸ்டோன்வால் கலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டோன்வால் கலகம்

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணுக்குரிய சமூக அந்தஸ்தைப் பெறும் முயற்சியாக, பல பெண்கள் ஆண்களின் உடையை அணிவார்கள்.

பாலினத் தேர்வு என்பது இயற்கையானது. ஆனாலும்கூட நம் சமூகத்தில் ஆண்களையும் பெண்களையும் நாம் சமத்துவமாக நடத்துவதில்லை. பாலின ஏற்றத்தாழ்வுகள் நம் சமூகத்தில் கடுமையாகக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்- பெண் பாலின ஏற்றத்தாழ்வுப் பிரச்னைகளையே இன்னும் நம் சமூகம் சரிவரப் புரிந்துகொள்ளாத சூழலில், மாற்றுப் பாலினத்தவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். காலங்காலமாக அவர்கள் இந்தச் சமூகத்தில் அவமானத்தால், புறக்கணிப்பால், ஒடுக்குமுறைகளால் துன்பப்பட்டுவருகிறார்கள். இந்தச் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்களாக, தீண்டத்தகாதவர்களாகவே அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!

1954-ல் அமெரிக்கச் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தவேண்டியவர்களின் பட்டியலை அரசு வெளியிட்டது. அந்தப் பட்டியலில், ஓரினச் சேர்க்கையாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அரசு, ராணுவம் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

ஒருபால் ஈர்ப்புடையோர், திருநர், பால் புதுமையர்கள் போன்ற மாற்றுப் பாலினத்தவர்களைக் கண்டு முகம்சுளிப்பது, ஓரின ஈர்ப்பை ஒரு நோய்போல் கருதுவது போன்ற நிலை இன்றும் நிலவுகிற சூழலில், 1960-களில் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குக் கடுமையான சமூக நெருக்கடிகள் இருந்தன. அவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருந்தபோதும், பொதுவெளிகளில் அவர்களுக்கு அனுமதியில்லை. காவல்துறையினர் அவர்களைக் கண்டால் கேலி பேசுவது, அடிப்பது, துன்புறுத்துவது வாடிக்கையாக இருந்தது.

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆணுக்குரிய சமூக அந்தஸ்தைப் பெறும் முயற்சியாக, பல பெண்கள் ஆண்களின் உடையை அணிவார்கள். இந்த எதிர் ஆடை அணிதல் (Cross Dressing) ஓர் அலையாகவே உலகம் முழுவதும் நடைபெற்றது. வீடுகளிலிருந்து விலகி தனித்து வாழும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், சாகசத்தில் ஈடுபடும் மனநிலையிலுள்ள பெண்கள் எனப் பலர் ஆண்களின் உடைகளை அணிவதைப் பாதுகாப்புணர்வு அளிப்பதாகக் கருதினார்கள். இதேபோல் ஆண்கள் பலர், பெண்களின் ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். இவர்கள் அனைவரையுமே ‘பாலினத்துக்குரிய உடைகளை உடுத்தவில்லை’ என்கிற குற்றச்சாட்டின் பெயரில் கைதுசெய்தார்கள்; துன்புறுத்தினார்கள்.

நியூயார்க்கில் பல விடுதிகள், மாற்றுப் பாலினத்தவர்களுக்கு அடைக்கலமாக விளங்கின. நியூயார்க்கின் லோயர் மன்ஹாட்டன் பகுதியின் கீரின்விச் பகுதியில் ‘ஸ்டோன்வால் இன்’ (Stonewall Inn) என்கிற விடுதி, மாற்றுப் பாலினத்தவர்களை அனுமதித்தது. அது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடமாக இருந்தது. மெல்ல மெல்ல இந்த விடுதி, மாற்றுப் பாலினத்தவர்கள் கூடும் ஒரு வாடிக்கையான இடமாக, அவர்கள் தங்களுள் பாதுகாப்பை உணரும் இடமாகவும் உருமாறியது.

மாற்றுப் பாலினத்தவர்கள் அமெரிக்கச் சமூகத்தில் வன்முறை, பாகுபாடுகள், தொந்தரவுகளை தினமும் சந்தித்துவந்தார்கள். பாலியல் சுரண்டலை, வன்கொடுமைகளை நாள்தோறும் அனுபவித்தார்கள். 1950-60-களில் அமெரிக்காவின் பெரும் பகுதி மாகாணங்களில், ஒருபால் ஈர்ப்பும், ஒருபால் புணர்ச்சியும் குற்றமாகவே கருதப்பட்டன. இல்லினாய்ஸ் தவிர்த்த 49 மாகாணங்களில் ஒருபால் புணர்ச்சி சட்ட விரோதமானதாக இருந்தது. ரொக்க அபராதம் தொடங்கி, பல மாதங்கள் சிறைத் தண்டனை என ஒவ்வொரு மாகாணத்திலும் தண்டனைகள் ஒன்றை ஒன்று மிஞ்சின.

ஸ்டோன்வால் விடுதி ஒரு மாஃபியாவால் நடத்தப்பட்டது. இந்த விடுதியில் நடைபெறும் கூடுகை சட்டவிரோதமானது என்பதால், தொடர்ந்து காவல்துறைக்குப் பெரும் லஞ்சம் மாமூலாகக் கொடுக்கப்பட்டது. பெரும் லஞ்சம் கொடுப்பதால், மறுமுனையில் மாற்றுப் பாலினத்தவர்களிடம் குடிப்பதற்கும், உணவுக்கும் பல மடங்கு பணத்தை வசூல் செய்தது விடுதி. அத்துடன் நில்லாமல், அங்கே வரும் மாற்றுப் பாலினத்தவர்கள் யார் என்பதை இந்த மாஃபியாக்கள் துல்லியமாக அறிய ஏற்பாடுகள் வைத்திருந்தார்கள். இந்த விடுதிக்கு வரும் மாற்றுப் பாலினத்தவர் பணக்காரர் எனில் உடன் அவர்களின் குடும்பத்தாரிடம் தகவல் கொடுப்போம் என்றும், நல்ல உத்தியோகத்தில் இருப்பவர் எனில் அவர்களின் அலுவலகத்தில் இதைப் பற்றித் தகவல் கொடுப்பதாகச் சொல்லியும் மிரட்டுவார்கள், கைம்மாறாகப் பணம் பறிப்பார்கள். விடுதியில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஒவ்வொருவரும் பெரும் விலை கொடுத்தார்கள்.

லஞ்சம் பெற்ற பின்பும்கூட அந்த விடுதியைக் காவல்துறை நிம்மதியாக இயங்க அனுமதிக்காது. காவல்துறையினர் பெரும் கும்பலாக வந்து அங்கே இஷ்டம்போல் குடிப்பார்கள், சாப்பிடுவார்கள், அடிக்கடி ரெய்டும் செய்வார்கள், அங்கிருப்பவர்களைத் துன்புறுத்துவார்கள், ஒவ்வொரு மாதமும் வழக்கும் பதிவுசெய்வார்கள்.

போராட்டங்களின் கதை - 14 - ஸ்டோன்வால் கலகம்: மாற்று பாலினத்தவர்களின் வரலாற்றுப் போர்!


1969, ஜூன் 28-ம் தேதி அதிகாலை, ஒன்பது காவல்துறை அதிகாரிகள் ஸ்டோன்வால் விடுதியை ரெய்டு செய்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் பார்டெண்டர்களைக் கைதுசெய்ய முயன்றார்கள். அதற்கு அங்கே கூடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மெல்ல அங்கே தள்ளுமுள்ளு நிகழத் தொடங்கியது. காவல்துறையினர் உள்ளே சென்று வழக்கமான நேரத்தில் வெளியே வரவில்லை என்றவுடன், விடுதிக்கு வெளியே நூற்றுக்கணக்கில் மக்கள் கூடத் தொடங்கினார்கள். விடுதிக்குள் காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகிக்கத் தொடங்கியதும் நிலைமை இன்னும் மோசமானது. அங்கே கூடியிருந்தவர்கள் காவல்துறையினர்மீது பாட்டில்களை எறியத் தொடங்கினார்கள். காவல்துறையினர் முதலில் எதிர்த்து பார்த்தார்கள். பின்னர், அவர்கள் தங்களை விடுதிக்குள் இருந்த ஓர் அறையில் பாதுகாப்பாகப் பூட்டிக்கொண்டார்கள்.

காவல்துறையினரின் அராஜகம் ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதிக்கு வெளியே முழக்கங்கள் எழுப்பினார்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியவில்லை. `காவல்துறையினர் இத்தோடு ஒழியட்டும்’ என்று விடுதிக்குத் தீ வைத்தார்கள். பதற்றம் மேலும் அதிகரித்தது. காவல்துறை அதிகாரிகள் பெரும் பட்டாளமாக அங்கே வந்தனர். உள்ளே இருந்த அதிகாரிகளை எரியும் விடுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர். காவல்துறை அதிகாரிகள், அங்கு கூடியிருந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு மிரட்டினார்கள், கடுமையான வன்முறையைப் பிரயோகித்தார்கள். இந்தத் தகவல் நியூயார்க் நகரம் முழுவதும் பரவியது, கூட்டம் கூட்டமாக மக்கள் ஸ்டோன்வால் விடுதி நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். கலகம், ஒரு கலவரமாக மாறியது. ஜூலை 1-ம் தேதி அதிகாலை வரையாக மூன்று நாள்கள் அது நீடித்தது.

1960-களில் அமெரிக்கச் சமூகத்தில், வியட்நாம் போர் எதிர்ப்பு, மனித உரிமை இயக்கங்கள், எதிர்க் கலாசார (Counter Culture) நடவடிக்கைகள் எனப் பல அரசியல் கருத்துகளும் இயக்கங்களும் மலர்ந்திருந்தன. ஸ்டோன்வால் விடுதியைச் சுற்றிலும் வசித்த மக்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கு வந்தார்கள். அவர்கள்தான் காவல்துறையினரின் வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். காவல்துறையினர் அவர்களின் முரட்டுத்தனத்துக்காகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். மறுபுறம் “ஓரினச் சேர்க்கையாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கக் கூடாது, விடுதிக்குத் தீ வைத்திருக்கக் கூடாது” என்றும் விமர்சனங்கள் எழுந்தன. “இல்லை, வேறு வழியின்றியே ஆத்திரப்பட்டார்கள். அவர்களின் கோபம் நியாயமானது” எனப் பெரும் விவாதம் அமெரிக்கச் சமூகத்தில் நிகழ்ந்தது.

‘ஸ்டோன்வால் விடுதிக் கலகம்’ அமெரிக்கச் சமூகத்தில் ஓர் ஆழமான விவாதத்தைச் சாத்தியப்படுத்தியது. மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைப்போரில் ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. சில மாதங்களிலேயே மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளைப் பேசும் மூன்று நாளிதழ்கள் தொடங்கப்பட்டு, அவை தங்களின் உரிமைகளை மக்களிடம் பேசின. `ஓரினச் சேர்க்கையாளர்கள் விடுதலை முன்னணி’ (Gay Liberation Front) என்கிற பெரும் அமைப்பு தொடங்கப்பட்டது. 1970, ஜூன் 28-ம் தேதி, ஸ்டோன்வால் கலகத்தின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ‘சம உரிமை ஒன்றே இலக்கு’ என முதல் ஓரினச் சேர்க்கையாளர் பெருமிதப் பேரணி (Pride Rally) நியூயார்க்கில் நடைபெற்றது. இன்றைக்கு, உலகம் முழுவதும் ஜூன் 28-ல் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

2016-ல் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஸ்டோன்வால் விடுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தேசியச்சின்னமாக அறிவித்தார். 2019-ம் ஆண்டு ஸ்டோன்வால் எழுச்சியின் 50-வது ஆண்டையொட்டி, 50 லட்சம் பேர் பெருமிதப் பேரணியில் கலந்துகொண்டனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் காவல்துறை வன்முறையுடன் நடந்துகொண்டதற்குக் காவல்துறை ஆணையர் ஜேம்ஸ் நீல் வருத்தம் தெரிவித்தார். இன்று அமெரிக்காவில் பாலினத் தேர்வு, பாலின உறவுகள் குறித்த கருத்துகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இந்தியச் சமூகத்தில் நாம் பயணிக்கவேண்டிய தூரமோ ரொம்பப் பெரிது!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 14 - ஸ்டோன்வால் கலகம்: மாற்று பாலினத்தவர்களின் வரலாற்றுப் போர்!
போராட்டங்களின் கதை - 14 - ஸ்டோன்வால் கலகம்: மாற்று பாலினத்தவர்களின் வரலாற்றுப் போர்!

Stonewall Riots: Coming Out in the Streets / The Stone wall Reader

`ஸ்டோன்வால் இன்’ விடுதியில் என்ன நடந்தது, அந்தக் கலகத்தில் பங்காற்றியவர்கள், அதை நேரில் பார்த்த சாட்சியங்கள் என்ன சொல்கிறார்கள், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக அன்றைய நாளிதழ்கள் என்ன எழுதின என இந்த நூல்கள் இரண்டும் ஒரு முழுமையான ஆவணத் தொகுப்புகளாகத் திகழ்கின்றன. ஸ்டோன்வால் கலகத்துக்குப் பிறகு, அமெரிக்கச் சமூகம் மாற்றுப் பாலினத்தவர்கள் தொடர்பான விஷயங்களை எவ்வாறு கையாண்டது என்பதை LGBTQ சமூகத்தின் பார்வையில் அலசும் ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. மனித மனங்களில் மாற்றங்களை நிகழ்த்த, நாம் நம் வகுப்பறைகளில் எதையெல்லாம் போதிக்க வேண்டும் என்கிற ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் இந்த நூல்கள் வழங்குகின்றன!