மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 15 - பத்து லட்சம் முகமூடிகள்: அநாமதேய இயக்கத்தின் கலகம்!

பத்து லட்சம் முகமூடிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பத்து லட்சம் முகமூடிகள்

திரும்பிய திசையெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் நம்மை ஒவ்வொரு விநாடியும் கூர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.

ஆலன் மூர் - டேவிட் லாயிடால் எழுதப்பட்ட ‘வீ ஃபார் வென்டேட்டா’ என்கிற நாவல், ஆங்கிலத்தில் திரைப்படமாக 2005-ல் வெளிவந்தது. ஓர் அணு ஆயுதப் போருக்குப் பிறகு, உலகின் மற்ற பகுதிகள் அழிந்து மீதமிருந்த பிரிட்டனில் Norsefire எனும் ஓர் பாசிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. தங்கள் சிந்தாந்தத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் அவர்கள் விதவிதமாக வேட்டையாடுகிறார்கள். அகதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், மாற்று மதத்தவர் என்று அனைவரையும் கைதுசெய்கிறார்கள், கொலை செய்கிறார்கள், வைரஸ் தொற்றை ஏற்படுத்துகிறார்கள். Guy Fawkes Mask அணிந்துகொண்டு வரும் ‘வீ’’ என்கிற ஒரு புரட்சியாளன், அந்த அரசை வீழ்த்தப் போராடுகிறான். ஒரு ரயிலில் வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு லண்டன் நகரத்துக்குள் நுழைகிற அவன், அங்கே இருக்கும் நாடாளுமன்றத்தைத் தகர்க்க திட்டமிடுகிறான். நவம்பர் 5-ம் தேதி நிகழவிருக்கும் அந்த வெடிப்பின் பெரும் நெருப்பைப் பார்க்கப் பொதுமக்களை அழைக்கிறான். அந்த அரசுக்கு எதிரானவர்கள் அனைவரும் முகமூடியை அணிந்துகொண்டு பெருவெள்ளமாகத் திரண்டுவருவதுதான் இந்தத் திரைப்படத்தின் கதை.

போராட்டங்களின் கதை - 15 - பத்து லட்சம் முகமூடிகள்: அநாமதேய இயக்கத்தின் கலகம்!

யார் இந்த Guy Fawkes?

கத்தோலிக்கத் திருச்சபையை மீண்டும் பிரிட்டனின் ஆட்சி பீடத்தில் அமர்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் Guy Fawkes போராடுகிறார். இது நிகழ வேண்டுமெனில், பிரிட்டன் மன்னர் முதலாம் ஜேம்ஸ் கொலை செய்யப்பட வேண்டும். இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்துவிட்டு லண்டனுக்குத் திரும்புகிறார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் அடித்தளத்தில் இருந்த நிலவறையில் ஏராளமான வெடிமருந்தைத் திரட்டிவைக்கிறார். வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனைக்கு வந்த ஒரு மொட்டைக் கடுதாசி இந்தத் திட்டத்தை அம்பலப்படுத்துகிறது. 1605, நவம்பர் 5-ம் தேதி அதிகாலை, காவல்துறை அந்த நிலவறையில் இருந்த Guy Fawkes-ஐ கைதுசெய்தது. அவர் நாடாளுமன்றத்தைத் தகர்க்கும் தனது திட்டத்தை விவரிக்கிறார். உடன் அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தைத் தகர்க்கும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு நவம்பர் 5-ம் தேதியும் பிரிட்டனில் Guy Fawkes இரவு கொண்டாடப்பட்டது. அன்று இரவு Guy Fawkes-ன் பெரிய உருவ பொம்மையை எரித்து நகரமே நெருப்புமயமாகத் திருவிழாபோல் இருக்கும்.

போராட்டமாக மாறிய பெருவிழா!

உலகம் முழுவதும் இன்று மக்கள் தீவிரக் கண்காணிப்புக்குள்தான் வாழ்கிறார்கள். திரும்பிய திசையெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் நம்மை ஒவ்வொரு விநாடியும் கூர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்கின்றன. மின்னஞ்சல், முகநூல், வாட்ஸ்அப், இணையதளங்கள், தொலைபேசி என நாம் பாவிக்கும் கருவிகளும் நம்முடைய ஒவ்வோர் அசைவையும் அறிந்துகொள்கிறது. நம் கருவிகள் நம்மை நிழல்போல் தொடர்கின்றன. கூகுள், மைக்ரோசாஃப்ட், யாஹூ, ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு விநாடியும் அவற்றின் பயனர்களின் அந்தரங்கத் தகவல்களை விற்பனை செய்கின்றன.

நாம் என்ன பேசுகிறோம், அடுத்து என்ன வாங்கப்போகிறோம் என்பதில் தொடங்கியவர்கள், ‘நாம் யாருக்கு அடுத்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்’ என்று நம்மை மூளைச்சலவை செய்வது வரை வந்துவிட்டார்கள். பல நாடுகளின் தேர்தல்களில், எப்படி வாக்குப்பதிவுக்கு முன்னர் மக்கள் திசைதிருப்பப்பட்டார்கள் என்பதை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்தின. ஸ்நோடென் விவகாரத்துக்குப் பிறகு அனைவருக்குமே நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்கிற அச்சம் மேலோங்கியிருக்கிறது.

`Data is the New Capital’ என்கிற இன்றைய டிஜிட்டல் உலகின் தலையாய வாசகத்தின்படி, இன்று நம்முடைய ஒவ்வொரு சிறு தகவலும், தரவும்தான் நம் காலத்தின் ஆகப்பெரிய மதிப்பிட முடியாத மூலதனம், சொத்து. தரவுப் பொருளாதாரம் (The Big Data Economy) என்று இதை அழைக்கிறார்கள். இன்று அதிகாரத்துக்கு எதிராகப் பேசுபவர்கள், போராடுகிறவர்கள், பொதுமக்களிடம் செல்வாக்குமிக்கவர்கள் அனைவரும் உடனடியாகத் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள் மிரட்டப்படுகிறார்கள்; கொலைசெய்யப்படுகிறார்கள். ஓர் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு எதிர்க்கருத்து அவசியம் என்பதை ஆட்சியாளர்களுக்கும், தரவுப் பொருளாதார நிறுவனங்களுக்கும் புரியவைக்கவேண்டிய காலகட்டத்துக்கு வந்திருக்கிறோம்.

தொழில்நுட்பத்தின் இந்த அசுரவேகம், ஆட்சியாளர்களுக்குப் பெரிய அளவுக்குத் தங்களின் அதிகாரத்தை விரிவாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவுகிற அதேநேரத்தில், அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்த ஆட்சியாளர்களைக் கலங்கடிக்கவும் ஒரு குழு உருவாகத்தானே செய்யும்... அப்படி அநாமதேய, பெயரில்லாத குழு ஒன்று அவ்வப்போது இணையக் கலகங்களில் ஈடுபட்டு, உலகின் வல்லரசுகளைக் கலங்கடித்துவருகிறது. தொழில்நுட்பமும், நுட்பமான அறிவும்தான் அவர்களின் போராட்டக் கருவிகள்.

அப்படியான ஒரு பெயரில்லாத இணையக் கலகக்குழுதான் Anonymous Hacktivist Group. பொதுவாக இந்தக் குழுவை அதிகார வர்க்கமும், கார்ப்பரேட்டுகளும் `கிரிமினல்கள்’ என்றே அழைப்பார்கள். உலகம் முழுவதுமுள்ள மட்டற்ற அதிகாரம் படைத்தவர்களின் அட்டூழியங்களை இவர்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துகிறார்கள். அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இந்தியா, துருக்கி மற்றும் பல நாடுகளிலுள்ள அரசுகளின் அறமற்றச் செயல்களை இவர்கள் முடக்கியிருக்கிறார்கள். சிறார் பாலியல் இணையதளங்கள், செல்வாக்கான தேவாலயங்கள், பேபால்-மாஸ்டர்-விசா உள்ளிட்ட பணப் பரிவர்த்தனைத் தளங்கள் என இவர்களின் இலக்குகள் பல. அதேவேளையில் ஆக்கிரமிப்பு இயக்கம் தொடங்கி, விக்கிலீக்ஸ் வரை பல பொதுவான மக்கள் இயக்கங்களை அவர்கள் வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள். உலகம் முழுவதுமே இந்த நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் இவர்களை ‘டிஜிட்டல் ராபின் ஹுட்’ என்று அழைக்கிறார்கள். 2012-ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை, உலகின் செல்வாக்குப் பொருந்திய நூறு பேரில் ஒருவராக இந்தப் பெயரில்லாத இயக்கத்தை அறிவித்தது. இந்தியாவின் ஆதார் அட்டைத் தகவல்கள் எப்படிப் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை இதே இயக்கம் அம்பலப்படுத்தியது. ஆர்.எஸ்.சர்மா என்கிற ஆதார் திட்டத்தின் தலைவர், அவர்களுக்குச் சவால்விட்டு தனது ஆதார் எண்ணை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். சில மணி நேரத்தில், அவரது மொத்த ஜாதகத்தையும், அவர் சமீபத்தில் இணையத்தில் வாங்கிய பொருள்கள் வரை அனைத்தையும் இந்த இயக்கத்தார் வெளியிட்டு தெறிக்கவிட்டார்கள்.

போராட்டங்களின் கதை - 15 - பத்து லட்சம் முகமூடிகள்: அநாமதேய இயக்கத்தின் கலகம்!

2005-ல் ‘வீ ஃபார் வென்டேட்டா’ திரைப்படம் வெளிவந்த பிறகு இந்த முகமூடி பிரபலமானது, மெல்ல ஓர் உரையாடல் உருவானது. 2011-ல் பெயரில்லாத இணையக் கலகக்குழு லண்டன் மக்களுக்கு ஓர் அழைப்பு விடுத்தது. அதில், தங்களுக்கு ஆதரவானவர்கள் அனைவரும் நவம்பர் 5-ம் தேதி, லண்டனின் ட்ராஃபால்கர் சதுக்கத்தில் முகமூடியுடன் திரளும்படி கேட்டுக்கொண்டது. அன்றைய இரவு 50 பேர் முகமூடி அணிந்து வந்தார்கள். உலகில் எல்லாக் காரியங்களும் சிறியதாகவே தொடங்கும் என்பதை இந்த இயக்கமும் மெய்ப்பித்தது. சிறியதாக இருப்பினும் தொடக்கம்தானே முக்கியம்... கண்காணிப்பு, அதிகார துஷ்பிரயோகம், ஊழல், ராணுவமயமாக்கல், காவல்துறை வன்முறை உள்ளிட்டவற்றுக்கு எதிரான பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கி, இன்றைக்கும் லண்டனில் மட்டும் பத்து லட்சம் பேர் ஒவ்வொரு நவம்பர் 5-ம் தேதி இரவும் முகமூடிகளை அணிந்தபடி கூடுகிறார்கள். லண்டன், வாஷிங்டன் தொடங்கி உலகின் பல்வேறு நகரங்களில் நவம்பர் 5-ம் தேதி, உலக அரசுகளின் அதிகாரக் குவிப்பையும் கண்காணிப்பையும் எதிர்த்து ஒரு வலுவான குரலாக இந்த இயக்கம் வளர்ந்துவருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதும், கைது செய்வதும் ஆங்காங்கே நிகழத்தான் செய்கின்றன. வெளிப்படையாகப் போராடுகிறவர்களின் வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்படும் இந்தக் காலத்தில், இந்தியாவிலும் முகமூடிகள் ஒரு போராட்டக் கருவியாக மாறும் காலத்தை நெருங்கிவிட்டோம்.

Guy Fawkes தினம் என்பது ஆட்சியதிகாரம், தங்களுக்கு எதிரான சதியை முறியடித்த வெற்றித் திருவிழாவாகவே வடிவமைக்கப்பட்டது. ஆனால் காலம், இன்று அதே திருவிழாவை அதிகாரத்துக்கு எதிரான குறியீடாக மாற்றியிருக்கிறது. ஒரு போராட்டம் காலத்துக்கு ஏற்ப உருமாறும், புதிய அர்த்தங்களைப் பெறும் என்பதற்கு இந்தத் திருவிழாவும் போராட்டமும் சாட்சிகள். Guy Fawkes முகமூடியின் தொடர் விளைவாக, அதிகாரத்துக்கும் கண்காணிப்புக்கும் எதிரான கருவியாக ‘Money Heist’ சீரீஸில் முக்கிய நாயக பிம்பமாக வெளிப்பட்டது Dali Mask. முகமூடிகளும் போராட்டக் கருவிகளே என்கிறது காலம்!

(தொடரும்)

*****

போராட்டங்களின் கதை - 15 - பத்து லட்சம் முகமூடிகள்: அநாமதேய இயக்கத்தின் கலகம்!

தொழில்நுட்பப் புரட்சியின் கோர முகம்!

ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியர், ஷோஷனா ஜுபோஃப். இவர் தனது தீவிர ஆய்வின் முடிவில், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘The age of Surveillance Capitalism’ என்கிற அந்தப் புத்தகத்தில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பிற தகவல் / தரவு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை எவ்வாறு கண்காணித்து, கணித்துத் தொகுக்கின்றன என்பதையும், பின் தங்களுக்குத் தேவையான வகையில் தகவல்களைச் செலுத்தி உலகம் முழுவதுமுள்ள இணைய-சமூக ஊடக வாடிக்கையாளர்களை எப்படி ரோபோக்களைப்போல் இயக்குகின்றன என்பதையும் தெளிவாக விளக்குகிறார். அதோடு, ‘கண்காணிப்பு முதலாளித்துவம்’ ஜனநாயகத்தை வேரோடு அழித்துவிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கிறார் ஷோஷனா ஜுபோஃப்!