மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 17 - பெரு: சோப்பு நுரையில் மிதந்த தலைநகரம்!

பெரு
பிரீமியம் ஸ்டோரி
News
பெரு

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகங்கள் எனத் தங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு வேண்டிய அனைத்தையும் விளாடிமிரோ மோன்டெசினோஸ் பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கினார்.

ஊழல் என்பது இன்று ஓர் அந்நியமான வார்த்தை அல்ல. அதன் அர்த்தத்தைக் காலம் அனைவரும் அறியும்படிச் செய்துவிட்டது. ஒருகாலத்தில் அருவருப்புபோல் உணரப்பட்ட வார்த்தை, மெல்ல மெல்ல நம் வாழ்வியலின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.எப்போதோ, எங்கோ ஓர் ஊழல் என்றிருந்த நிலை மாறி, இன்றைய காலம் ஊழல்களால் நிரம்பி வழிகிறது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்திலும் ஊழல் நடைபெறுகிறது என்கிற புரிதலுக்கு மக்களும் வந்துவிட்டார்கள்.

‘ஊழல் என்பது ஜனநாயகத்துக்கும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானது’ என்கிற புரிதல்களெல்லாம் உலகமயத்துடன் காணாமல்போனது. உலகமயம் ஊழலை அலுவலக நடைமுறைகளில் ஒன்றாக மாற்றியது. உலகின் பெரு நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சூறையாட வேண்டும், அந்த நாடுகளின் சந்தைகளைக் கைவசப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் பல சிறிய மீன்களைத் தங்களின் தூண்டில்களில் மாட்டிக்கொண்டே கிளம்பினார்கள். மன்னர் ஆட்சி எனில் மன்னர்களை, ஜனநாயகம் எனில் அதன் ஆளுங்கட்சிகளை - நாடாளுமன்ற உறுப்பினர்களை - நீதிபதிகளை - ஊடகங்களை என எந்த நாட்டில் யார், யாரையெல்லாம் விலைக்கு வாங்க வேண்டும் என்கிற முழுப்பட்டியலுடன் அவர்கள் புறப்பட்டார்கள்.

இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் பெரு நாட்டில் வேளாண்மை, மீன்பிடித்தல், ஜவுளி, கனிம வளம்தான் பிரதான தொழில்கள். இருப்பினும் 50% மக்கள் இன்றும் ஏழ்மையில் வாடுகிறார்கள். இத்தனை வளங்கள் இருந்தபோதும், மக்கள் வறுமையில் ஏன் சிக்கித் தவிக்கிறார்கள் என்கிற கேள்வி உங்கள் மனதில் எழவே செய்யும். இதற்கு ஒற்றை வார்த்தை பதில் ‘ஊழல்.’ ஊழல் எனில் சாதாரண ஊழல் இல்லை. தொடர் ஊழல்கள், கட்டுக்கடங்காத ஊழல்கள், இந்த ஊழல்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டே போனால் ஒரு சமூகம் என்னவாகும் என்பதை பெருவின் அனுபவத்தில் பார்க்கலாம்.

பெருவின் ஜனாதிபதியாக அல்பெர்டோ புஜிமோரி 1990-2000 வரை ஆட்சிசெய்தார். அல்பெர்டோ புஜிமோரி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதலே, ஓர் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்கிற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்தின. ஜனாதிபதி புஜிமோரியின் ஆசீர்வாதம் பெற்ற விளாடிமிரோ மோன்டெசினோஸ் என்கிற தேசிய உளவுப்பிரிவின் அதிகாரி, அவருக்கான எல்லா வேலைகளையும் கச்சிதமாகச் செய்து முடித்தார்.

ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகங்கள் எனத் தங்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு வேண்டிய அனைத்தையும் விளாடிமிரோ மோன்டெசினோஸ் பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கினார். பெரு நாட்டின் அதிகாரம் படைத்த ஆயிரத்து அறுநூறு பேருக்கு ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்தார். பெருவில் நடைபெறுவது தூய்மையான அரசியல்வாதிகளின் ஆட்சிதான், அவர்களின் ஜனாதிபதி ஒரு புனிதர் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த அவர்கள் ஊடகங்களுக்குச் செலவிட்ட வண்ணம் இருந்தனர். ஊழல்கள் பற்றி அவ்வப்போது பேச்சுகள் அடிபட்டாலும், ஊடகங்களைத் திறந்தால் அங்கே அவர்களின் ஜனாதிபதிகளை பிரதமர்களைப் பற்றிய வழிபாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கும். ‘பெரு, எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய வல்லரசாக வளரப்போகிறது’ என்பதாகப் பிரசாரங்கள் உச்சம் தொடும்.

போராட்டங்களின் கதை - 17 - பெரு: சோப்பு நுரையில் மிதந்த தலைநகரம்!

ஆனாலும், ஒருகட்டத்தில், அல்பெர்டோ புஜிமோரி மீதான ஊழல்கள் வெளிவந்து விசாரணைகள் தொடங்கியன. அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று அறிவிப்பதற்கு முன்பாகவே அவர் 2006-ல் 5,000 கோடி மதிப்பிலான தனது சொத்துகளுடன் ஜப்பானுக்குத் தப்பி ஓடினார். அல்பெர்டோ புஜிமோரி என்பவர் இப்படி எனில், அவருக்கு முன்பாக இருந்த ஜனாதிபதிகள் என்ன செய்தார்கள்?

பெருவின் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் பலர் ஒன்று சிறைச்சாலையில் இருக்கிறார்கள் அல்லது ஊழல் விசாரணைகளில் சிக்கியிருக்கிறார்கள். ஜனாதிபதி ஒல்லான்டா ஹும்லா, பிரேசிலைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் பெரும் தொகை பெற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி அலஜண்ட்ரோ டோலேடோ மிக மோசமான ஊழல்களில் ஈடுபட்டு, தற்சமயம் வட அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து பெருவுக்கு அவர் நாடு கடத்தப்படுவதைத் தடுக்க, பெரும் வழக்கறிஞர்களின் படையுடன் நீதிமன்றங்களில் வாதாடிவருகிறார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ஆலன் கார்சியா, ஊழல் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் நீதிமன்றத்தில் சரணடைய மறுத்தார். அவரைக் காவல்துறை கைதுசெய்யச் சென்ற நாளில் தற்கொலை செய்துகொண்டார். பெருவின் முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ பாப்லோ குசென்ஸ்கி நெடுங்காலமாக வீட்டுக்காவலில் இருக்கிறார். 2022, பிப்ரவரி 1-ம் தேதி, பெரு நாட்டின் பிரதமராக ஹெக்டர் வேலர் பின்டோ பதவியேற்றுக்கொண்டார். ஆனால், அவர்மீது குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தொடர்ந்து ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டதால், அவர் பதவியேற்று மூன்று நாள்களிலேயே ராஜினாமா செய்தார்.

சரி, மீண்டும் ஜனாதிபதி அல்பெர்டோ புஜிமோரி கதைக்கு வருவோம். ஜனாதிபதியின் அடியாளாகச் செயல்படும் விளாடிமிரோ மோன்டெசினோஸ், தங்களின் ஆட்சியைத் தக்கவைக்க பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார், வெளிப்படையாகக் குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறார் என்ற செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தின. ‘இவர்களின் ஊழல் எல்லை மீறிப் போகிறது’ என்று மக்கள் குமுறினார்கள்.

எத்தனை நாள்களுக்குத்தான் மக்கள் தங்களைச் சமாதானப்படுத்திக்கொள்வார்கள், எத்தனை நாள் இயலாமையில் தங்களின் கைகளைப் பிசைந்துகொண்டே இருப்பார்கள், ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் தங்களின் குமுறல்களை வெளிப்படுத்தித்தானே ஆக வேண்டும்... அறவழியில், அமைதியான வழியில் எதிர்ப்பைத் தெரிவிக்க ஜனநாயகம் நமக்கு ஏராளமான வழிமுறைகளை வழங்குகிறதுதானே... எளியவர்கள் வரலாறு முழுவதிலும் தங்களின் எளிய போராட்ட வழிமுறைகளால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

போராட்டங்களின் கதை - 17 - பெரு: சோப்பு நுரையில் மிதந்த தலைநகரம்!

அப்படி, பெருவின் தலைநகரம் லிமாவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியேயுள்ள பகுதியில் மதியம் கூடினார்கள். சிவப்பு, வெள்ளை நிறப் பட்டைகளுடனான பெருவின் தேசியக்கொடியை அவர்கள் அங்கு வைத்து சலவை செய்தார்கள். தொடர் ஊழல்களால் தங்களின் தேசியக்கொடி கறை படிந்துவிட்டதாகவும், அந்தக் கறையைப் போக்க ஒரே வழி அந்தக் கொடியைச் சலவை செய்வதுதான் என்றும் வீதியில் திரண்டார்கள்.

பெருவின் தேசியக்கொடி, ஒரு சோப்புக்கட்டி, ஒரு வாளி தண்ணீர், கொடியை உலர்த்த ஒரு கயிறு, இப்படியான எளிய கருவிகளுடன் போராட்டத்தில் இறங்கினார்கள். ஒரு தேசத்தின் ஊழலை அம்பலப்படுத்த எத்தனை எளிய வழிமுறை பாருங்கள். அப்படிச் சலவை செய்கிறவர்களின் கூட்டம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகரித்துக்கொண்டே போனது. உள்ளூர் ஊடகங்கள் அதைக் காட்ட மறுத்தன. இருப்பினும், மக்கள் அந்தக் காட்சிகளை, காணொளிகளை இணையத்தில் பதிவேற்றிய வண்ணமிருந்தார்கள். சர்வதேச ஊடகங்கள் அனைத்தின் கவனமும் தலைநகர் லிமா நோக்கிப் பாய்ந்தது.

மெல்ல மெல்ல பெரு நாட்டின் மற்ற நகரங்களிலும் இந்தப் போராட்ட வடிவம் ஒரு நெருப்பைப்போல் பற்றிக்கொண்டது. உலகமே இந்தப் போராட்ட உத்தியைப் பார்த்து வியந்தது. தங்கள் நாட்டு ஜனாதிபதியின் அடியாளாகச் செயல்படும் விளாடிமிரோ மோன்டெசினோஸ், ஆட்சியைத் தக்கவைக்க வாக்குகள் வாங்க, பணத்தை கவரில் போட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கும் காணொளி வெளியானது. ஜனாதிபதி உடனடியாக விளாடிமிரோ மோன்டெசினோஸைப் பதவிநீக்கம் செய்தார்.

உலகமயம் என்கிற கருத்தாக்கம், பணம் ஈட்டுதல் சார்ந்து இந்தச் சமூகத்தில் நம்பப்பட்ட அறங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலமும், அங்கேயுள்ள சொகுசு விடுதியும், அங்கே தங்கியிருப்பவர்களும் உங்கள் நினைவுக்கு வந்தால், இன்று முதல் உங்கள் குடும்பப் பலசரக்குச் சிட்டையில் ஒரு சோப்புக்கட்டியைச் சேர்த்து எழுதும் காலம் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 17 - பெரு: சோப்பு நுரையில் மிதந்த தலைநகரம்!

The Darker Nations: A Biography of the Short-lived Third World!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதுமே தென்னமெரிக்க நாடுகளின்மீது அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் செல்வாக்கு மேலதிகமானது. ரஷ்யா அங்குள்ள நாடுகளை ஒன்றிணைத்து அமெரிக்காவுக்கு எதிரான ஒரு நெருக்கடியைக் கட்டியமைக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்பட்டது. தென்னமெரிக்க நாடுகளில் பல சர்வாதிகாரிகளை ஆதரிப்பதன் வழியே அங்கே ஒரு ஸ்திரத்தன்மையில்லாத நிலையை ஏற்படுத்தவே அமெரிக்கா முயன்றது.

விஜய் பிரசாத் அவர்களின் ‘The Darker Nations: A Biography of the Short-lived Third World’ என்கிற நூலில் அவர் ‘மூன்றாம் உலக நாடுகள்’ என்பது நிலத்தை அல்ல, ஒரு திட்டத்தைக் குறிக்கும் சொல் என்று வரையறுக்கிறார். மூன்றாம் உலக நாடுகளின்மீது திணிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துமே அந்த நாடுகளில் ஏழ்மையை அதிகப்படுத்தியே வந்திருக்கின்றன என்பதை நிறுவுகிறார். ஜவஹர்லால் நேரு, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ என மூன்றாம் உலக நாடுகளை ஒரு மாற்று விசையாகப் பரிணமிக்க உழைத்த பலரைப் பற்றிய முக்கியக் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தியா, இந்தோனேசியா, இரான், பிரேசில், பொலிவியா, வெனிசுலா உள்ளிட்ட தேசங்களில், தேசிய விடுதலை இயக்கங்களின் தோல்வி எப்படி அந்த நாடுகளைப் பின்னோக்கித் தங்களின் நிலப்பிரபுத்துவத் தன்மைகள் நோக்கி அழைத்துச் சென்றிருக்கிறது என்பது குறித்த முக்கியக் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கலாம்!