மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 18 - துருக்கி: குட்டைப் பாவாடை அணிந்த ஆண்கள்!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

தெற்கு துருக்கியின் மெர்சின் நகரத்தில் வசிக்கும் ஒஜ்கேசான் அஸ்லன் (Ozgecan Aslan), தனது கல்லூரியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள்.

ஆதி மனிதன் உடைகள் ஏதுமின்றிக் காடுகளில் அலைந்து திரிந்தான். அப்போது யாரும் தங்களின் சக பெண்களின் உடலை இழிவாகப் பார்க்கவில்லை. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கும், வன்முறைக்கும் ஆளாகவில்லை. ஆடைகள் ஏதும் இல்லாத காலத்தில், ஏன் பெண்களின் உடல்மீது ஆண்கள் இத்தகைய வன்முறைகளை நிகழ்த்தவில்லை என்ற கேள்வியைக் கொஞ்சம் உங்கள் மனதில் அசைபோடுங்கள்.

மனிதர்கள், சமூகக்குழுக்களாக வாழ முனைந்தார்கள். வல்லமைகொண்ட மூளையுடனும், நிமிர்ந்த உடலுடனும் அவர்கள் தன்னைச் சுற்றிய அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தினார்கள். இந்த அதிகாரத்தை மனிதர்கள் அடைய ஆண்களுடன் பெண்களும் களத்தில் சரிசமமாக நின்றார்கள். ஒவ்வொன்றாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆணின் பார்வை, தன்னுடைய வாழ்வில் இதுகாறும் சமமாக இருக்கும் பெண்மீது விழுந்தது. அடுத்தகட்ட நகர்வாகப் பெண்களை ஆண்களுக்குப் பணி செய்பவர்களாக, ஆண்களின் கட்டுப்பாடுகளில் இயங்குபவர்களாக, ஆண்களைச் சார்ந்து வாழ்பவர்களாக மாற்றத் துடித்தான்.

உலகம் முழுவதும் தோன்றிய மதங்கள், ஆணுக்கு இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமது கலாசார விதிகளை எழுதியமைத்தன. பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. பெண் உடலின்மீது புனிதம், கற்பு என்ற சுமைகளை ஏற்றின. இந்தப் புனிதங்களைப் பெண்ணுடல்மீது ஏற்றிய பிறகு, பெண் முற்றாக ஆணுக்கு அடிமையானாள். பெண்ணின் உடல், ஆணின் விளையாட்டு மைதானமாக மாறியது. அங்கே ஆண் தொடர்ந்து எல்லா ஆட்டங்களிலும் வெற்றிபெறுபவனாக வாழ்க்கை வடிவம் பெற்றது.

போராட்டங்களின் கதை - 18 - துருக்கி: குட்டைப் பாவாடை அணிந்த ஆண்கள்!

பெண்களுக்கு எதிரான வன்முறை உலகெங்கிலும் ஒரு தொற்றைப்போல் நிதானமாகப் பரவிவருகிறது. உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, புணர்வுக்கு வற்புறுத்தப்பட்டோ, வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர் என்கிறது ஐ.நா-வின் அறிக்கை. நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில் ஒரு நோட்டம் விட்டால் பாலியல் வன்கொடுமைகள் குறித்த செய்திகளை தினசரி நீங்கள் காணலாம். வன்முறையும் பாலியலும் இன்று பெரும் விற்பனைச் சரக்காக மாறியுள்ளன. எவ்வளவு கொடூரமான பாலியல் வன்முறை, கொலையாக இருப்பினும் அதை வாசித்துவிட்டுக் கடந்துபோகும் அளவுக்கு உணர்வுகள் மரத்துப்போன சமூகமாக நாம் மாறியிருக்கிறோம்.

தெற்கு துருக்கியின் மெர்சின் நகரத்தில் வசிக்கும் ஒஜ்கேசான் அஸ்லன் (Ozgecan Aslan), தனது கல்லூரியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வழக்கமான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றவுடன், அவளின் குடும்பத்தார் அவளைக் காணவில்லை என்று தேடினர். அவள் கடத்தப்பட்டிருப்பதாகச் செய்தி வந்தது. அவளைக் கடத்தியவர்கள் அவளைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். அஸ்லன் அதைக் கடுமையாக எதிர்க்கவே, அவள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். அஸ்லனின் படுகொலைச் செய்தி துருக்கியில் பெரும் அலைபோல் எழுந்தது. பெண்களின் மீதான வன்முறை, பாதுகாப்பற்றச் சமூகச்சூழல் எனப் பெரும் விவாதங்கள் எழுந்தன. ‘அஸ்லன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு, அவள் குட்டைப் பாவாடை அணிந்திருந்ததுதான் காரணம்’ என தேசிய ஊடகங்கள் துருக்கி முழுவதும் அங்கு எழுந்த உரையாடலைத் திசைதிருப்பின.

துருக்கி, ஐரோப்பாவுக்கும் அரபுலகத்துக்கும் பாலமாக இருக்கும் நாடு. மேற்குலகின் நவீன நாகரிகத்துக்கான வாசலாகவே அது பார்க்கப்படுகிறது. ஆனால், துருக்கியில் தொடர்ச்சியாக அடிப்படைவாதக் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் இருந்துவருவதால், அங்கே தொடர்ந்து மதமும், மதம் சார்ந்த கருத்துகளுமே மைய நீரோட்டக் கருத்தாக்கமாக மாறிவருகின்றன. மதத்தின் கை ஓங்கினால் அங்கே பெண்கள் இரண்டாம் பிரஜைகளாக, அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள். அங்கே பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்தால் அவர்களை மிரட்டுவது, தாக்குவது மதத்துக்குச் செய்யும் சேவை, தேசியம் சார்ந்த நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது. இப்படியான வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் பல நேரங்களில் காவல்துறையினரை அழைப்பார்கள், சம்பவ இடத்துக்கு வரும் காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்களை அடித்துத் துன்புறுத்தும் நிகழ்வுகள் துருக்கியில் சகஜம்.

துருக்கியில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள, அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் பெண்கள் குறித்து எத்தகைய பார்வை கொண்டிருக்கிறார்கள் என அறிந்துகொள்வது உதவும். 2014-ல் துருக்கியின் பிரதமராக இருந்த ரெசெப் தாயிப் எர்டோகன், “ஒவ்வொரு துருக்கியப் பெண்மணியும் மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் யாரும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துகொள்ளக் கூடாது. கருச்சிதைவு நடைமுறை தடை செய்யப்பட வேண்டும்” என்றார். “பெண்கள் ஒருபோதும் தங்களை ஆண்களுக்குச் சமமானவர்களாகக் கருதக் கூடாது. அப்படி நினைப்பது இயற்கையின் விதிகளுக்கு எதிரானது” என்றார். இப்படி ஓர் உரையை அவர் எங்கு ஆற்றினார் என்று தெரியுமா... துருக்கியில் நடைபெற்ற பெண்களுக்கான நீதி மற்றும் உரிமைகள் தொடர்பான ஒரு தேசியக் கருத்தரங்கில். அடிப்படையில் அவர் பெண்களைச் சமையற்கட்டுக்குள்ளேயே சுருக்கிவிடும் சிந்தனைகொண்டவராகவே இருந்தார். துருக்கியின் துணை பிரதமர் ஒருவர், “பெண்கள் பொது இடங்களில் சிரிக்கக் கூடாது” என்றார். ‘துருக்கியில் நடைபெறும் பலாத்காரச் சம்பவங்களை ஊடகங்களில் தொடர்ந்து செய்திகளாகக் காட்டக் கூடாது. ஏனெனில், இவ்வாறு காட்டுவது துருக்கியின் மதிப்பை உலக அரங்கில் தாழ்த்தும்’ என்று அங்கே இயங்கும் ஊடகங்களுக்கும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

துருக்கியிலுள்ள ஒழுங்கு நடத்தை குறித்த விதிகளின்படி, ‘பெண்கள் எவ்வாறு உடை உடுத்த வேண்டும், பெண்கள் எப்படி நடக்க வேண்டும், பேச வேண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும்’ என அனைத்துக்கும் வழிகாட்டுதல்கள் உள்ளன. பொதுவெளியில் மக்களை பாதிக்காத வகையில் பெண்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று ஓர் அரசே ‘வழிகாட்டி’ ஒன்றை வெளியிடுகிறது எனில், அந்தச் சமூகத்தின் பொதுவான மனநிலையை நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்.

உலகம் முழுவதுமே, அடிப்படைவாதச் சமூகங்கள் பெண்கள் தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதித்தபடியே இருக்கின்றன. `பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது, லெகின்ஸ் அணிந்தால் ஆபாசமாக இருக்கிறது, குட்டைப் பாவாடை அணிந்தால் எங்களை அழைப்பதுபோலவே இருக்கிறது’ என ஒவ்வொரு நிலத்தில் ஒவ்வொரு மனநோய். `பெண்கள் இவ்வாறாக நடந்துகொள்வதுதான் பாலியல் பலாத்காரங்கள் நடைபெறக் காரணம்’ என்பதான உரையாடல் உலகம் முழுவதுமே நடைபெற்றவண்ணம் இருக்கிறது. பாலியல் வன்முறை எனும் நோய் தலைக்கு ஏறிய ஆண்களால் மட்டுமே இவ்வாறாகச் சிந்திக்க முடியும். ஆண்கள் சதா இந்தக் குற்றங்களுக்குப் பெண்களையே காரணமாகச் சிந்தித்தபடி இருக்கிறார்கள்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தின் டக்ஸிம் சதுக்கத்தில், அஸ்லனுக்கு ஆதரவான போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றவண்ணம் இருந்தன. அப்படிப் போராட்டங்கள் நடைபெற்ற நேரத்தில் ஒரு நாள் ஆயிரக்கணக்கான ஆண்கள் குட்டைப் பாவாடை அணிந்து ஊர்வலமாக இஸ்தான்புல் நகரத்தில் வலம்வந்தார்கள். பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தி, `இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்கிற செய்தியைப் பெண்களுக்குத் தெரிவிக்கும்விதமாக அந்தச் சமூகத்தின் முற்போக்காளர்கள் இத்தகைய ஒரு போராட்ட வடிவத்தைத் தேர்வுசெய்தார்கள். இந்தப் போராட்டம் உலக வரலாற்றில் பேசப்படுகிற ஒரு முக்கியப் போராட்டமாக மாறியது.

உலகம் முழுவதுமே சமத்துவத்தின் அவசியத்தை போதிக்க ஆயத்தமாகும் நேரத்தில், இன்றைய திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் வேலையை, பெண்களைச் சடங்கு, சம்பிரதாயங்கள், கற்பு, தாலி சென்டிமென்ட்டுக்குள் மூழ்கடிக்கும்விதமாக மூளைச்சலவை செய்துவருகின்றன. நான் இஸ்தான்புல்லில் தங்கியிருந்த நேரம், அங்கே தொலைக்காட்சியில் ‘ஒழுக்கமாக உடை அணியும் பெண்களுக்கு மட்டுமே சொர்க்கத்தில் இடம்’ என்று ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நிலம்தான் வெவ்வேறு, உள்ளடக்கம் ஒன்றே என்று வருத்தப் பெருமூச்சுவிட்டேன்.

‘பெண்கள் உன்மையிலேயே விடுதலை பெற ஆண்மை அழிய வேண்டும்’ என்கிற பெரியாரின் ஒற்றைவரிதான் இந்த இடத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. ஆண்களின் மனநிலையை நன்கு அறிந்த பெரியார், ‘ஆண்களால் ஒருபோதும் பெண்களுக்கு விடுதலை வாங்கித் தர இயலாது’ என்றார். பெண்கள்மீது `புனிதம்’ என்ற பெயரில் சுமத்தப்பட்டிருக்கும் எல்லாச் சுமைகளையும் உதறித் தள்ளாமல், பெண்களுக்கு விடுதலை என்பது இல்லை!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 18 - துருக்கி: குட்டைப் பாவாடை அணிந்த ஆண்கள்!

No Nation for Women!

இந்தியாவில் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று அறிய விரும்புகிறவர்கள், அவசியமாக வாசிக்கவேண்டிய நூல் இது. காவல் நிலையத்தில் வைத்து செய்யப்படும் பலாத்காரங்கள், ஆணவக்கொலைகள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், பாலியல் தேவைகளுக்காகக் குழந்தைகள் கடத்தப்படுவது என இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் பதைபதைக்க வைக்கிறது. இந்தியா முழுவதும் ஆறு ஆண்டுகள் பயணித்த இந்த நூலின் ஆசிரியர் பிரியங்கா துபே, “ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறையும் ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெறுகிறது” என்கிறார். ‘இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் 77 சதவிகிதம் பேர் அதைப் பற்றி வெளியே பேசுவதே இல்லை’ என்கிற செய்தி, இன்றைக்கும் பெண்கள் எப்படி குடும்பத்துக்காகத் தங்களின் உணர்வுகளை அடமானம் வைக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த நூலை வாசித்துவிட்டு, சமீபத்தில் வெளிவந்த ‘ஜன கண மன’ திரைப்படத்தையும் அப்படியே கையோடு ‘The Great Indian Kitchen’ திரைப்படத்தையும் பார்த்தால், இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அனுமானிக்கலாம்!