
உலகம் முழுவதும் காடுகளைப் பராமரிப்பது, பாதுகாப்பது தொடர்புடைய பல்வேறு சட்டங்களை அரசுகள் இயற்றிவருகின்றன.
இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு அலாதியானது. இயற்கையை ரசிக்கிறோம், சந்தோஷப்படுகிறோம், அதைப் பயன்படுத்திப் பலனடைகிறோம். ஆனால், இயற்கையை நெருங்கி அதை நம் போன்ற ஓர் உயிராக உணர்கிறோமா... அதன் அழிவில், அதன்மீது நிகழ்த்தப்படும் வன்முறையின்போது நாம் அதற்காகக் கவலைப்படுகிறோமா... அதைக் காக்கப் போராடுகிறோமா... பழங்குடிகள், விவசாயிகள், கடலோடிகளைப்போல ‘இயற்கையின் சிறு அங்கம்தாம் நாம். நாம் முழுக்க முழுக்க இயற்கையைச் சார்ந்திருக்கிறோம்’ என மனப்பூர்வமாக உணர்கிறோமா? இல்லை!
சுந்தரவனக்காடுகள் என்பவை ‘உலகத்தில் உவர்த்தன்மையுள்ள அலையாத்திச் சதுப்புநிலக் காடுகளில் மிகவும் முக்கியமானவை. `சுந்தர்வன்’ (Sundarban) என்றால் வங்காள மொழியில் ‘அழகான காடு’ என்று பொருள். அதைத் தமிழில் `சுந்தரவனம்’ எனலாம். ஆனால், நீண்டகாலமாக அதைச் சுந்தரவனக்காடுகள் என்றே அழைத்துவந்தோம். தமிழ்நாட்டில் பிச்சாவரத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் இதை, `அலையாத்திக் காடுகள்’ என்று அழைக்கிறார்கள். 2004 சுனாமியின்போது அலையாத்திக் காடுகளின் அருமையை இந்த உலகமே உணர்ந்தது. தமிழ்நாட்டில் பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் ஆழிப்பேரலைகளை மட்டுப்படுத்தி, அதன் பாதிப்பை வெகுவாகக் குறைத்ததைப் பார்த்தோம்.

வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் பரப்புக்கு இடைப்பட்ட பகுதியில், உலகின் மிகப்பெரும் அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. கங்கை நதி கடலில் கலக்கும் இடமான கழிமுகத்தின் விளிம்பில் இந்தக் காடுகள் அமைந்துள்ளன. இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் இந்தக் காடுகள் 10,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் படர்ந்திருக்கின்றன. இதில் 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு, வங்காளதேசத்துக்குட்பட்ட நிலத்தில் இருக்கிறது. 1997-ம் ஆண்டு, யுனெஸ்கோ தனது உலக பாரம்பர்யத் தலங்கள் பட்டியலில் இந்தக் காடுகளை அறிவித்தது.
ஏராளமான காட்டுயிர்கள் இந்த அலையாத்திக் காடுகளைத் தங்களின் வசிப்பிடங்களாகக் கொண்டுள்ளன. இந்தியாவின் பெருமைமிகு வங்கப் புலிகளையும் (Bengal Tiger), இறாவதி ஓங்கில்களையும் (Irrawaddy Dolphins) இங்கே மட்டுமே காண முடியும். நாற்பது லட்சம் பேர் இந்தக் காடுகளை அதன் இயற்கை வளங்களைத் தங்களின் அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டு வசிக்கிறார்கள். இந்த நிலப்பகுதியை இயற்கைச் சீற்றங்களிலிருந்து காக்கும் பெரும் அரணாக இந்தக் காடுகள் செயல்படுகின்றன. இந்தக் காடுகள் அழிந்தால் இரு நாடுகளைச் சேர்ந்த ஐந்து கோடி மக்கள் தங்களின் வாழ்வையும் உடைமைகளையும் இழந்து நிர்க்கதியாவார்கள்.
உலகம் முழுவதும் காடுகளைப் பராமரிப்பது, பாதுகாப்பது தொடர்புடைய பல்வேறு சட்டங்களை அரசுகள் இயற்றிவருகின்றன. ஆனால், சட்டங்களை இயற்றும் அதே அரசுகள்தான் அந்தச் சட்டங்களைக் கடுமையாக மீறுவதாக, அவற்றை அவமதிப்பதாக இருக்கின்றன. இந்தியா, வங்க தேசம் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியாக இந்த அலையாத்திக் காடுகள் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளைச் சேதப்படுத்தும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.
1960-களில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்ட ஃபராக்கா அணையிலிருந்து (Farakka Barrage) ஃபராக்கா அனல்மின் நிலையத்துக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இதே பகுதியில் பெரிய அளவில் செயல்படும் இறால் பண்ணைகளின் கழிவுகள் கங்கை ஆற்றில் கலக்கப்படுகின்றன. அதேபோல் இரு நாடுகளிலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எனும் பெயரில் முளைத்திருக்கும் பல்வேறு கட்டுமானங்களின் விளைவாக இந்தப் பகுதியின் உவர்த்தன்மை அதிகமாகி, அங்குள்ள காடுகளைக் கடுமையாக பாதித்து அழிவுக்குள்ளாக்கியது.
2014-ல் 3,57,665 லிட்டர் உலை எண்ணெய் (Furnace oil) ஏற்றி வந்த கப்பல், இந்தக் காடுகளின் ஊடே ஓடும் ஷீலா நதியில் கவிழ்ந்தது. 2015-ல் 520 டன் நிலக்கரியுடன் வந்த கப்பல் பாசாரு ஆற்றில் (Passur River) கவிழ்ந்தது. 2016-ல் 1,235 டன் எடையுள்ள நிலக்கரியுடன் வந்த கப்பல் ஷீலா நதியில் கவிழ்ந்தது. அதே 2015-ல் 500 டன் எடை ரசாயன நஞ்சை ஏற்றிவந்த கப்பல் போலா நதியில் கவிழ்ந்தது. இந்தத் தொடர் நிகழ்வுகளால், இந்தக் காடுகளும், அதன் நீர்ப்பரப்பும் மாசுபட்டன. அதன் நஞ்சால் காட்டுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.
இப்படி அங்கே தொடர்ந்து 60 ஆண்டுகளாகப் பல்வேறு இடையூறுகள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா-பங்களாதேஷ் நாடுகளின் கூட்டு ஒப்பந்தத்தில் உருவான 1,320 மெகாவாட் ராம்பால் அனல்மின் நிலையம் இந்தப் பகுதியை முற்றாகச் சிதைக்கத் தொடங்கியது. இந்த அனல் மின் நிலையம் தினசரி 13,000 டன் நிலக்கரியை எரித்து, அதன் கழிவுகளை 25 ஏக்கர் பரப்பில் நிலக்கரி சாம்பல் நிறைந்த நச்சுக்குளங்களாகச் சேமிக்கிறது. இந்த அனல்மின் நிலையத்துக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய, வங்கக் கடல் பகுதியில் ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு, அவை பெருஞ்சரக்குப் படகுகளில் தினசரி கொண்டுவரும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலக்கரிப் போக்குவரத்தில், தினசரி பெரும் அளவில் நிலக்கரி ஆற்றில் விழுந்து ஆற்றையும், அது போய் சேரும் கடலையும் மாசுபடுத்துகிறது. கடல் உயிரினங்களை அச்சுறுத்துகிறது.
இதன் அருகிலேயே ஓரியன் குழுமத்தின் 660 மெகா வாட் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இங்கே தயாராகும் மின்சாரம் மற்றும் இங்குள்ள அற்புதமான நீர் வளத்தைப் பயன்படுத்தும்விதமாக இங்கே துறைமுகங்கள், சிமென்ட் ஆலைகள், பல்வேறு நஞ்சான ஆலைகள் தொடர்ந்து புதிது புதிதாக வந்தபடியே இருக்கின்றன. இந்த அபாயத்தை உணர்ந்த மக்கள் இனி அமைதியாக இருந்தால், உலகின் அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் காடுகளை, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துவிடுவோம் எனப் போராட்டத்துக்கு ஆயத்தமானார்கள்.

2001-ல் வங்க தேசத்தில் போராட்டம் தொடங்கியது. ‘சலோ சலோ டாக்கா சலோ’ (March to Dhaka) எனும் பிரமாண்டப் பேரணி, தலைநகர் டாக்கா நோக்கிப் புறப்பட்டது. 20,000 பேர் டாக்காவின் மத்திய ஷாகீத் மினாரின் கீழ் திரண்டார்கள். அங்கே இந்தத் திட்டம் குறித்த பொது வாக்கெடுப்பில் 41,000 பேர் வாக்களித்தனர். அடுத்து போராட்டக்காரர்கள் டாக்காவிலிருந்து ராம் பால் அனல்மின் நிலையம் நோக்கி 400 கிலோமீட்டர் நடைப்பயணம் சென்றார்கள். இதைத் தொடர்ந்து, 2016-ல் ராம் பால் அனல்மின் நிலையத்திலிருந்து ஓரியான் அனல்மின் நிலையம் நோக்கி 160 கிலோமீட்டர் பேரணி நடைபெற்றது. பழங்குடிகள், மாணவர்கள், தொழிலாளர் சங்கங்கள் என வங்கச் சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்து மக்கள் பங்குகொண்டனர். இந்தியாவிலிருந்தும் 11 பேர்கொண்ட குழு இந்த நெடும் பயணத்தில் கலந்துகொண்டது.
வங்க தேசத்தின் வரலாற்றில், நெடிய ஜனநாயகப் போராட்டமாக இவை பார்க்கப்படுகின்றன. ‘இந்தப் பகுதியின் நுரையீரலைப்போல் செயல்படும் இந்தக் காடுகளை விட்டுவையுங்கள். இல்லையேல், பல கோடிப் பேரின் வாழ்வு சிதைக்கப்படும்’ என்ற மக்களின் குரல், சர்வதேச அளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 2017, ஜனவரி 7-ம் தேதி வங்கதேச மக்களுக்கு ஆதரவாக உலகின் 30 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. வங்கம் தழுவிய அரை நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, பெல்லட் குண்டுகள் எனக் களத்தில் இறங்கினார்கள். அங்கே மஹ்தப் என்கிற இளைஞர், காவல்துறையினரின் துப்பாக்கிகளை நோக்கி, “நீங்கள் என்னைச் சுடலாம். ஆனால், என் காட்டை அழிக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று சொன்ன வார்த்தைகள், உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின.
வங்க தேசம் போன்ற சிறிய நாடுகளை நோக்கி, பெரும் மூலதனங்கள் செல்லக் காரணம் அங்கே இருக்கும் சட்டங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம், இஷ்டம்போல் செயல்படலாம் என்பதே. 22 ஆண்டுகளைக் கடந்தும் இன்றைக்கும் மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். ஒரு காடு, ஒரு மலை, ஓர் அருவி, ஓர் ஆற்றுப்படுகை என இயற்கையை எப்போதாவது நெருங்கிச் சந்திக்கும் மனிதர்கள் களிப்படைகிறார்கள். ஒரு செல்ஃபி எடுக்கிறார்கள். ஒரு குழுப் புகைப்படம் எடுத்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். ஆனால், இயற்கையின் அழிவு குறித்த செய்திகளை வாசிக்கும் பெரும்பாலானவர்களால் அந்த வலியை உணர முடிவதில்லை... உங்களால்?
(தொடரும்)
********

Forest of Tides
ஒரு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்யும் நிமித்தமாக சுந்தர்வனங்களில் சென்று தங்கும் மனிஷா ஷோப்ரஜனி, மெல்ல மெல்லத் தன்னைச் சுற்றிய வாழ்வை உற்று நோக்குகிறார். மிக எளிமையான வாழ்க்கை, அரிதான சில செளகரியங்கள், குறைந்த அடிப்படை வசதிகள், காட்டுயிர்களின் தாக்குதல்கள் என இந்த அலையாத்திக் காடுகளில் வசிப்பது எத்தனை கடினமானது என்று உணர்கிறார். அங்குள்ள வாழ்க்கைக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறார். அங்கே மக்கள் மீன் வலைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், மரம் எனக் கைக்குக் கிடைக்கும் பொருள்களையெல்லாம் கொண்டு கலைநயத்தோடு கட்டிய வீடுகளைப் பார்த்து வியக்கிறார். `Forest of Tides’ என்கிற இந்த நூலில், அவர் அங்கே தங்கியிருந்த காலத்தில் சந்தித்த மீனவர்கள், தேன் சேகரிப்பவர்கள், மரம் வெட்டிகள், வனத்துறை அதிகாரிகள் என அவர்களுடனான உரையாடல்களையும், கதைகளையும், வாழ்வையும் விவரித்திருக்கிறார்!