
ஆப்பிரிக்காவின் தேசியப் போராட்டம் - நெல்சன் மண்டேலா எனும் பீனிக்ஸ் பறவை!
வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் தேவைப்படும். ஆப்பிரிக்கர்களுக்கோ உள்நாட்டின் ஒரு பகுதிக்குள் பயணம் செய்யவே பாஸ்போர்ட் தேவைப்படும். அதிலும் நாட்டின் சில பகுதிகளுக்குள் நுழையவே முடியாது என்கிற தடைகள் வேறு... என்றால் கற்பனை செய்து பாருங்கள்!
1948-ல் பிரிட்டிஷ்காரர்களின் தேசியக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தது. கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. தென்னாப்பிரிக்க அரசு, கறுப்பின மக்களின்மீது நிகழ்த்திய ஒடுக்குமுறைகள் சொல்லி மாளாது. வெள்ளைக்காரர்கள் குடியிருக்கும் பகுதிகளுள் ஆப்பிரிக்காவின் பூர்வகுடிகள், இந்தியர்கள் உள்ளிட்ட மற்ற இனத்தவர்கள் இனி நுழைய முடியாது என்று அறிவித்தது. ‘அரசியல் அதிகாரத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இருக்க முடியும்’ என்று சட்டத் திருத்தம் கொண்டுவந்தது.
சமூகத்தின் பல மட்டங்களிலும் இது குறித்து ஓர் உரையாடல் தொடங்கியது. ஆப்பிரிக்க மாணவர் காங்கிரஸின் தலைவர்களாகப் பொறுப்பேற்ற நெல்சன் மண்டேலா, வால்டர் சிசுலு, ஆலிவர் டாம்போ ஆகியோர் இந்த அடிமைத்தளைக்கு எதிராகக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அறப் போராட்டம் ஒன்றே இதற்குத் தீர்வு என்பதில் அவர்கள் ஒருமித்த கருத்துடன் இருந்தனர்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழையாமைச் செயல்பாடுகளுக்கு அறைகூவல் விடுத்தது. அரசு உடனடியாக, சட்டவிரோத அமைப்புகளுக்குத் தடை மற்றும் கம்யூனிசத்தை ஒழிக்கும் சட்டத்தை இயற்றியது. இதற்கு எதிர்வினையாக, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், தென்னப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய காங்கிரஸ், ஆப்பிரிக்க மக்கள் இயக்கம் ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, பேச்சு சுதந்திரத்துக்கான மாநாட்டை நடத்தின.
மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற, பெரும் வேலை நிறுத்தத்தின்போது 8,000-க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க மக்கள் கைதுசெய்யப்பட்டார்கள். 1950, ஜூன் 26 அன்று தேசிய அளவிலான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அன்று நாடு முழுவதும் மக்கள் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் பலர் தங்களின் வேலையை இழந்தனர். ஆப்பிரிக்கர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு பாஸ்போர்ட்டுகளை எரித்தனர். போராட்டத்தின் பகுதியாக, `வெள்ளையர்களுக்கு மட்டும் அனுமதி’ என்று அவர்கள் அறிவித்திருந்த பகுதிகளுக்குள் அத்துமீறி ஆப்பிரிக்கப் பூர்வகுடிகள் நுழைந்தனர். போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில், ஒருவர்கூட நீதிமன்றத்தில் பிணை கேட்கவில்லை; நீதிமன்றத்தில் வாதிடவில்லை; மாறாகச் சிறைச்சாலைகள் அனைத்தையும் நிரப்புவது என முடிவுசெய்தனர்.
‘அராஜகம்... கம்யூனிசம்...’ என்று பல வார்த்தைகளால் இந்தப் போராட்டத்தை வர்ணித்து, மக்களிடம் ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் தலைவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்று தென்னாப்பிரிக்க அரசு களத்தில் இறங்கியது. மண்டேலாவின் அறப்போராட்டங்களால் மக்கள் ஈர்க்கப்படுவதை உணர்ந்து, 1956-ம் ஆண்டு மண்டேலாவைத் தேசத்துரோக வழக்கில் கைதுசெய்தது. நான்காண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றார் மண்டேலா.

ஆனால், இந்தப் போராட்டங்கள் தென்னாப்பிரிக்கா முழுவதிலும் ஒரு தொடர் நிகழ்வாக மாறியது. அரசு இன்னும் கடுமையாகப் போராட்டக்காரர்களை ஒடுக்கத் தொடங்கியது. ஷார்ப்வில்லேவில் நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்காரர்கள் இந்தக் கறுப்புச் சட்டங்களை எதிர்த்து அங்கிருந்த காவல் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். உடன் காவல்துறை துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தியது. அதில் 69 பேர் கொல்லப்பட்டார்கள், 180 பேர் காயமடைந்தார்கள்.
இந்தக் கட்டத்தில் சில ஆப்பிரிக்கத் தலைவர்கள், ‘தாங்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்’ என்று ஒரு முழக்கத்தை முன்வைத்தனர். மண்டேலா அதைக் கடுமையாக எதிர்த்தார். ‘இந்தப் போராட்டம் ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்’ என்றார். ஆப்பிரிக்க காங்கிரஸின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, போராட்டம் இன்னும் தீவிரமடைந்தது.
தென்னாப்பிரிக்க அரசின் அடக்குமுறைகள் அதிகரிக்க அதிகரிக்க, மண்டேலாவின் கருத்தோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. ‘வன்முறையால் ஒடுக்கும் அரசுக்கு, ஏன் வன்முறையால் பதிலளிக்கக் கூடாது?’ என்று நண்பர்களுடன் ஆலோசித்தார்.
அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகவும் குற்றம் சுமத்தி, மண்டேலாவுக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது அரசு. அதை அஞ்சாமல் எதிர்கொண்டார் மண்டேலா. சிறையில் இருந்துகொண்டே லண்டன் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் தன் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார். பிறகு விடுதலை பெற்ற மண்டேலாவை, பொது நிகழ்வுகளில் பங்கேற்க அரசு தடைவிதித்தது. அந்தக் காலகட்டத்தில், உலகம் முழுவதும் நடைபெற்ற பல மாற்றங்கள் மண்டேலாவை ஊக்கப்படுத்தின. ஃபிடல் காஸ்ட்ரோ தனது தோழர்களுடன் க்யூபாவில் அடைந்த வெற்றி, ஆப்பிரிக்க மக்களிடம் உத்வேகத்தைக் கொண்டுவந்தது. அரசுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடுக்க, `Spear of the Nation’ என்கிற புதிய இயக்கத்தை மண்டேலா தொடங்கினார். அதற்குப் பல நாடுகள் ஆதரவளித்தன. அவரது இயக்கம் தொடுக்கும் தாக்குதல்களில், பொதுமக்களுக்கு எந்த இடையூறும் வரக் கூடாது என்பதில் மண்டேலா உறுதியாக இருந்தார்.
1962-ல் மண்டேலா தனது தோழர்களுடன் கைதுசெய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது “நான் ஆப்பிரிக்க மக்களுக்காகப் போராடுவதற்காக என் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறேன். எவ்வாறு வெள்ளை இன ஆதிக்கத்தை எதிர்க்கிறேனோ, அதே அளவு கறுப்பின ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன். அனைத்து இன மக்களும் வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நான் எனது உயிரைத் துறக்கவும் தயார்” என்று தன் நிலைப்பாட்டை சுமார் மூன்று மணி நேரம் அச்சமின்றி வெளிப்படுத்தினார். அவரது வாதங்களைக் கேட்ட பின்னும், அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர், ராபன் தீவுச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனைக்கு எதிராக, தென்னாப்பிரிக்கா முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன.

எட்டடிக்கு ஏழடி சிறை அறையில், அவருக்கு ஒரு பாய் மட்டுமே வழங்கப்பட்டது. முதலில் கல் உடைக்கும் வேலையும், பின் சுரங்கத்தில் சுண்ணாம்பு வெட்டும் வேலையும் மண்டேலாவுக்கு ஒதுக்கப்பட்டன. சுண்ணாம்புப் பாறைகளின் அதிகபட்சமான வெள்ளை ஒளி அவரது கண்களைக் கடுமையாக பாதித்தது. 1982-ல் அவர் கேப்டவுனின் போல்ஸ்மூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
1986 தொடங்கி, உலகம் முழுவதும் மண்டேலாவை விடுதலை செய்ய வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெற்றன. 1989-ல் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். ஜோகன்னஸ்பெர்கிலுள்ள மைதானத்தில் ஒரு லட்சம் பேர் மத்தியில், மண்டேலா வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் உரையை நிகழ்த்தினார். 27 வருட சிறைவாசத்தில் அவர் துளியும் தளரவில்லை என்பதை உலகம் பிரமிப்புடன் பார்த்தது.
ஜாம்பியா, ஜிம்பாவே, நமீபியா, அல்ஜீரியா, ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மண்டேலா பயணமானார். ‘அனைத்து நாடுகளும், தென்னாப்பிரிக்காவில் ஆட்சியிலிருக்கும் நிறவெறி அரசைத் தனிமைப்படுத்த வேண்டும்’ என்று கோரினார். அமெரிக்க ஜனாதிபதி புஷ், க்யூப ஜனாதிபதி காஸ்ட்ரோ, இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமன், இந்தோனேசிய ஜனாதிபதி சுகர்தோ, மலேசிய பிரதமர் மகாதிர், ஆஸ்திரேலியப் பிரதமர் பாப் ஹாக் உள்ளிட்ட பலரை மண்டேலா சந்தித்தார்.
1994-ல் தென்னாப்பிரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. உலகமே இந்தத் தேர்தலை உற்றுநோக்கியது. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றது. உலகமெங்கிருந்தும் வந்திருந்த 4,000 விருந்தினர்கள் மத்தியில், மண்டேலா தென்னாப்பிரிக்க வரலாற்றின் முதல் கறுப்பினப் பிரதமராகவும், மக்களாட்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னாப்பிரிக்கப் பிரதமராகவும் பதவியேற்றார். அவரது ஆட்சியில் தென்னாப்பிரிக்கா அதுவரை காணாத பல வரலாற்று மாற்றங்களைக் கண்டது. ‘இதுவொரு வானவில் அரசு, இதில் எல்லா வண்ணங்களும் இருக்கும். எல்லா வண்ணங்களும் பாதுகாக்கப்படும்’ என்றார்.
நிறவெறி அரசுக்கு எதிராக, தங்களின் உள்நாட்டுக் கடவுச்சீட்டுகளை எரிப்பது என்கிற கோபத்திலிருந்து எழுந்த ஒரு சிறு பொறி, பெரும் தீப்பிழம்பாக மாறி ஒரு தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டது. அச்சுறுத்தல், சிறை, தண்டனைகள் என எவ்வளவு வதைத்தும் மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவைபோல் உயிர்த்தெழுந்து, தன் நாட்டை விடுதலை நோக்கி அழைத்துச் சென்றார் மண்டேலா. ‘எல்லாவித ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற, தொடர்ந்து போராடுவது ஒன்றே தீர்வு’ எனும் பாடத்தை தனது வாழ்வையே காகிதமாக்கி எழுதிக் காட்டினார் மண்டேலா. உலகெங்கும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அத்தனை மக்களுக்குமான பெரும் பாடமாக அது எப்போதும் உயிர்த்திருக்கும்!
(தொடரும்)

போராளி டெஸ்மண்ட் டுட்டு
தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்குப் பெரும்பங்காற்றிய மற்றுமொரு தலைவர் டெஸ்மண்ட் டுட்டு. 1931-ல் பிறந்த டெஸ்மண்ட், கல்வியை முடித்துவிட்டு ஓர் ஆங்கில ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். அடுத்து, இறையியலைப் பயின்றவர், 1960-ல் ஒரு பாதிரியாராக மாறினார். தென்னாப்பிரிக்காவில் அனைவருக்கும் சம உரிமை, சமமான கல்வி முறை ஆகியவற்றுக்காகவும், தூர தேசங்களுக்கு அடிமைகளாக ஆப்பிரிக்கர்கள் அனுப்பப்படுவது, உள்நாட்டிலேயே பாஸ்போர்ட் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராகவும் போராடினார். ‘பாகுபாடுகளற்ற அனைவருக்குமான அரசு’ என்கிற ஒரு கோஷத்தை முன்வைத்ததில், டெஸ்மண்ட் முக்கியப் பங்காற்றினார். 1984-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. Crying in the Wilderness. The Struggle for Justice in South Africa, Hope and Suffering: Sermons and Speeches, The Rainbow People of God: The Making of a Peaceful Revolution என்பவை அவரது முக்கிய நூல்கள்!