மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 20 - இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

இந்தி எதிர்ப்பு போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தி எதிர்ப்பு போராட்டம்

ஜவஹர்லால் நேரு உயிருடன் இருந்தவரை, இந்தியை ஆட்சிமொழியாக்க இசையவில்லை. அவரது இறப்புக்குப் பிறகு, மீண்டும் 1965-ல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது.

இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம். உலகிலேயே அதிகபட்சமான மொழிகள் பேசப்படும் ஒரு நாடு. இந்தோ-ஆரிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்த்ரோ - ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள் என வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த 1,652 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன!

இந்தி மொழியை, ஒட்டு மொத்த இந்தியாவின் மொழியாக மாற்றிவிடும் முயற்சி நெடுங்காலமாகவே நடைபெற்றுவருகிறது. சுதந்திரப் போராட்டக் காலத்துக்கு முன்பிருந்தே இந்தி மொழியையும், பின்னர் இந்துஸ்தானி மொழியையும் வெவ்வேறு காலங்களில் பொதுமொழியாக்கும் முயற்சிகள் தோல்வியுற்றன. அடிப்படைவாதிகள் அனைவருமே இந்தி மொழிக்காகக் குரல் கொடுத்தனர். காந்தியும்கூட மொழி விஷயத்தில் கடும் குழப்பங்களுடனேயே இருந்தார் என்பதை அவரது எழுத்துகளின் மூலம் அறிகிறோம். தமிழ்நாடு இந்தித் திணிப்பை எதிர்த்து 1938, 1965, 1986 ஆண்டுகளில் மூன்று தன்னெழுச்சியான வரலாற்றுப் பேரலைகளை எழுப்பியது.

1937-ல் மதராஸ் மாகாணத்தின் பிரதமராக இருந்த ராஜாஜி, பதவியேற்ற ஒரே மாதத்தில் அமைச்சரவையைக்கூடக் கலந்தாலோசிக்காமல் ‘இனி 125 பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்’ என்று அறிவித்தார். திருச்சி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில், அறிஞர் அண்ணாதுரை இந்தித் திணிப்பைக் கண்டித்து ஆற்றிய உரைதான் காத்திரமான முதல் எதிர்ப்பு குரல். இதையடுத்து பெரியார் தனது கண்டனங்களைப் பதிவுசெய்ய, அது ஒரு மக்கள் போராட்டமாக மாறியது. திருச்சியிலும் காஞ்சியிலும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடத்தப்பட்டன. பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சியிலிருந்து சென்னைக்குப் பெரும்படையுடன் நடைப்பயணம் சென்றார். அது பேரணியாக சென்னை கடற்கரையில் சங்கமித்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் கைதுசெய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடுங்காவலில் சிறைவைக்கப்பட்டார். நடராசன், தாளமுத்து இருவரும் சிறையில் இறந்த செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இத்தனை நெருக்கடியான சூழலிலும், ராஜாஜி தலைமையிலான அமைச்சரவை பதவி விலகும் வரை பிடிவாதமாகவே இருந்தது. பின்னர் 1940-ல் ஆங்கிலேய அரசு ‘இந்தி இனி கட்டாயப் பாடம் இல்லை’ என அறிவித்தது.

போராட்டங்களின் கதை - 20 - இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

ஜவஹர்லால் நேரு உயிருடன் இருந்தவரை, இந்தியை ஆட்சிமொழியாக்க இசையவில்லை. அவரது இறப்புக்குப் பிறகு, மீண்டும் 1965-ல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது. `ஆங்கிலம் படிப்படியாக இனி நீக்கப்படும். மத்திய அரசின் சட்டங்கள், ஆணைகள், கட்டளைகள் என அனைத்தும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படும்’ என்கிற அவர்களின் ஆணவம், ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியில் மட்டுமே’ என்கிற அறிவிப்பு வரை சென்றது. தி.மு.க-வின் அன்றைய மக்களவை உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன், க.ராசாராம், மாநிலங்களவை உறுப்பினர் அறிஞர் அண்ணா ஆகியோர் இந்த அறிவிப்புக்கு எதிராக இந்தியாவின் முதல் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். தமிழ்நாட்டில் படிப்படியாகப் போராட்டங்கள் வலுத்தன. கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிரிழந்தார். மதுரை தியாகராயர் கல்லூரியின் மாணவர்கள் நா.காமராசன், கா.காளிமுத்து ஆகியோர் தலைமையில், பெரும் மாணவர் கூட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது. காவல்துறையினர் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள், கைதுசெய்தார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரும் பேரணி நடைபெற்று ராசேந்திரன் என்கிற மாணவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய பாதுகாப்புச் சட்டத்தைக் காட்டி, போராடுகிறவர்களை மிரட்டியது மத்திய அரசு. தமிழ்நாடெங்கும் கட்டுக்கடங்காத போராட்டங்கள். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், காமராஜர் மத்திய அரசின் முடிவுகளை விமர்சித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன், ‘இந்தி பேசாத மக்கள்மீது இந்தியைத் திணிக்க வேண்டாம். ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும்’ என்று அறிவித்தார்.

1986-ம் ஆண்டு, பிரதமர் ராஜீவ் காந்தி ‘இந்தியாவிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு இனி புது டெல்லியிலிருந்து வரும் கடிதங்கள் இந்தியில்தான் வரும்’ என்றார். ‘நவோதயா பள்ளிகள் இனி இந்தியா முழுவதும் தொடங்கப்படும். அதில் இந்தி கட்டாயப் பாடமாக இருக்கும்’ என்றும் அறிவிப்புகள் வெளிவந்தன. இதே 1986-ல் மதுரைக்கு வந்த மத்திய அரசு அதிகாரிகள், ஒரு கூட்டத்தின் மேசையிலிருந்த பெயர்ப் பலகைகளில் ‘ஏன் இந்தியில் எழுத்துகள் இல்லை?’ என அவற்றைத் தூக்கி எறிந்தனர். இந்தச் சிறு பொறி மீண்டும் பெரும் நெருப்பாகப் பற்றிக்கொண்டது. உடனடியாக தி.மு.க இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-வது பகுதியின் 343-வது பிரிவின் நகலை, பொது இடங்களில் எரிப்பது என்று முடிவுசெய்தது. உருவ பொம்மைகள் எரிப்பு முதல் அஞ்சலகத்தில் குண்டு வெடிப்பு என இந்த முறை போராட்டம் தமிழ்நாடெங்கும் பெரு நெருப்பாகப் பற்றிக்கொண்டது.

பேராசிரியர் அன்பழகன் தலைமையில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவைத் தீயிட்டுக் கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சட்ட எரிப்புப் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. கலைஞர் உள்ளிட்ட தி.மு.க-வின் தலைவர்கள் அனைவரும், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சிறைக்குச் சென்றனர். இந்தப் போராட்டங்களில் பங்குகொண்ட தி.மு.க-வின் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை இழந்தார்கள்.

ஏன் இந்த மொழிப் போர்?

ஒரு மொழியின் திணிப்பை எதிர்த்து, தமிழர்கள் மட்டும்தான் போராடிவருகிறார்களா என்றால் ‘இல்லை’ என்பதே பதில். உலகம் முழுவதும் தங்களின் தாய்மொழியைப் பாதுகாக்கப் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. அயர்லாந்தில் ஐரிஷ் மொழிக்காகவும், வேல்ஸில் வேல்ஸ் மொழிக்காகவும், நியூசிலாந்தில் மாவோரி மொழிக்காகவும், ஆஸ்திரேலியாவில் அபார்ஜின மொழிகளுக்காகவும் என நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. போராடிய மொழிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்கிற வரலாற்று உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சீனாவில் பத்து மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த 302 மொழிகள் பேசப்பட்டன. சீனாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஒற்றை மாண்டரின் மொழியை அனைவர் மீதும் திணித்து அங்குள்ள ஏராளமான மொழிகளை வழக்கொழியச் செய்துவிட்டது என்பது சமீபத்திய வரலாறு. ஐரோப்பா முழுவதிலும் தமிழ்நாட்டைவிட அளவு சிறியதாகவும், நம்மில் பத்தில் ஒரு பங்கு மக்கள்தொகை மட்டுமே கொண்ட ஒவ்வொரு நாடும், அவர்களின் தாய்மொழியை ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, பயிற்று மொழியாக நேசிக்கிறார்கள்.

நடராசன், தாளமுத்து
நடராசன், தாளமுத்து

அன்றைக்கு ராஜாஜியிடம் “ஏன் இந்தி?” என்று கேட்டதற்கு, “இந்தியைக் கற்றுக்கொண்டால்தான் தென்னிந்தியர்கள் வட இந்தியர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலும்” என்றார், இன்றும்கூட “பானி பூரி விற்பவரிடம் வாங்கிச் சாப்பிட உதவும்” என்பதைத் தாண்டிய விளக்கங்கள் வரவில்லை. ‘இந்தி மொழி நம்மீது ஏன் திணிக்கப்படுகிறது?’ என்கிற கேள்வி எழவே செய்கிறது. இந்தி மொழி குறித்த வட இந்தியத் தலைவர்களின் உரைகளைக் கேட்டால், அதில் ஆதிக்கம் ஒன்றே நோக்கம் என்பது விளங்கும்.

இந்தியாவை ஒரு காலனியாக நிர்வகிக்க, ஆங்கிலத்தைப் புகுத்தினார்கள். ஆனால், கொடுவாய்ப்பாக அந்த மொழி உலக அளவிலான அறிவியலின், தொழில்நுட்பத்தின், வளர்ச்சியின் மொழியாக இருந்ததால் இந்தியாவும் தமிழ்நாடும் இத்தனை பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன.

இன்றைக்கு அலை அலையாகத் தமிழ்நாட்டை நோக்கி வரும் வட மாநிலத்தவர்களைப் பார்க்கும்போது, வட மாநிலங்கள் அனைத்திலும் தமிழைத் துணைப் பாடமாக வைத்தால் அது அவர்களின் எதிர்காலத்துக்கு நலம் பயக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழர்கள் வேலை தேடி மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர் எனப் பயணப்படுகிறார்கள். எனவே, இங்கே பள்ளிகளில் தாய்மொழி தவிர்த்து அரபி, பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், மாண்டரின் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுப்பது அவர்களின் எதிர்காலத்துக்கு உதவும் என்பதுதான் காலம் காட்டுகிற திசைவழி.

பேசப்படும் மொழிகளும், எழுதப்படும் சொற்களும் ஒரு கலை வடிவமே. அதில் ஒரு மக்கள் கூட்டத்தின் விழுமியங்கள், மதிப்பீடுகள் தலைமுறைகள் கடந்து நினைவிலும் வாழ்விலும் கடத்தப்பட்டுவருகின்றன. ஒரு மொழி அழியும்போது, ஒரு பண்பாடும் சேர்ந்தே அழியும்!

(தொடரும்

போராட்டங்களின் கதை - 20 - இந்தி எதிர்ப்பு போராட்டம்: தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

மொழிப் போர் தியாகிகள் தினம்!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி, மொழிப் போர் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்மொழிக்காகத் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில், இந்த நாளில் அவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம். சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன், மயிலாடுதுறை சாரங்கபாணி எனப் பலர், இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் மொழியைக் காப்பதற்காகத் தங்களது உயிரை நீத்துள்ளனர். சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில்தான் மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபம் இருக்கிறது. தமிழ்நாட்டின் மொழிப் போரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரை தமிழுக்காக அர்ப்பணித்துள்ளனர் என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி!