
2004, ஜூலை 10 அன்று நள்ளிரவில், தங்ஜம் மனோரமாவின் வீட்டுக்குள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் எட்டு வீரர்கள் நுழைகிறார்கள்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்!
இந்தியாவில் 1958-ல் ஒரு புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. மாநில அரசின் ஒப்புதலுடன் இந்தச் சட்டத்தை ஒரு மாநிலம் முழுக்கவோ அல்லது குறிப்பிட்ட மாவட்டங்களிலோ நடைமுறைப்படுத்தலாம். முதலில் அது மணிப்பூரிலும், பின்னர் மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எனப் படிப்படியாகப் பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் அமலிலுள்ள பகுதிகளில், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது!
இந்தச் சட்டம் அமலில் இருக்கும் பகுதியில், ராணுவம் நினைத்தால் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கலாம், சந்தேகத்தின் பெயரில் ஒருவரைச் சோதனையிடலாம், கைது செய்யலாம், அவர் வசமுள்ள பொருள்களைப் பறிமுதல் செய்யலாம், நிராயுதபாணியாக இருப்பினும் சந்தேகித்தாலே துப்பாக்கியால் சுடலாம். கடந்த 30 ஆண்டுகளாக இந்தச் சட்டத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள், ஆவணப்படங்கள் வெளிவந்துள்ளன.
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சந்தோஷ் ஹெக்டே கமிஷன், மணிப்பூருக்குச் சென்று தீவிரமாக ஒரு விசாரணையை மேற்கொண்டது. இந்த கமிஷன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு மேற்கொண்டு, இந்தச் சட்டம் அந்த மாவட்டத்தில் தேவைதானா என்பதைத் தெரிவிக்க வேண்டும். ‘இந்தச் சட்டம் எல்லையற்று ஒரு பகுதியில் அமலில் இருக்கக் கூடாது’ என்றும், ‘இதை முன்வைத்து நிகழ்த்தப்படும் துப்பாக்கிச்சூடுகள், லாக்கப் மரணங்கள் ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றும் வழிகாட்டியது இந்த கமிஷன்.

அதேபோல நீதிபதி ஜீவன் ரெட்டி கமிஷன், ‘இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்தது. இந்தச் சட்டம் வன்மத்தின், வெறுப்பின், ஒடுக்குமுறையின் சின்னமாகத் திகழ்கிறது என்று விவரித்தது. விக்கிலீக்ஸ் கோப்புகள் வெளியானபோது, ‘வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் ஒரு பகுதியாக அல்லாமல், ஒரு காலனிபோல் நடத்தப்படுகின்றன’ என்று அதன் ஆவணங்கள் தெரிவித்தன.
தீவிரவாதிகள், பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் எல்லையற்ற அதிகாரத்தால், இதுவரை 50,000 பேருக்கு மேற்பட்டவர்கள் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நிராயுதபாணியான குடிமக்கள் என்றால் யோசித்துப் பாருங்கள்..!
தங்ஜம் மனோரமா!
2004, ஜூலை 10 அன்று நள்ளிரவில், தங்ஜம் மனோரமாவின் வீட்டுக்குள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையின் எட்டு வீரர்கள் நுழைகிறார்கள். தங்ஜம் மனோரமாவை ஒரு போராளி என்றும், தீவிரவாதக்குழுக்களுடன் தொடர்புடையவர் என்றும் கூறி அவரை அழைத்துச் செல்கிறார்கள். தன் மகள் ஏன் நள்ளிரவில் அழைத்துச் செல்லப்படுகிறாள் என்பதறியாமல் தங்ஜம் மனோரமாவின் தாயார் அலைமோதுகிறார். அண்டை வீடுகளைச் சேர்ந்தவர்கள் கூடி, “பொறுமையாக இருங்கள். விசாரித்துவிட்டு அவளை அனுப்பிவிடுவார்கள்” என்று அவரைச் சமாதானப்படுத்துகிறார்கள். ஆனால், மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து 4 கி.மீ தூரத்தில் சாலையோரத்தில் தங்ஜம் மனோரமா சடலமாகக் கிடந்தார். அவரது தொடை முழுவதும் வெட்டுக்காயங்கள் இருந்தன. பிரேத பரிசோதனை அறிக்கை, அவர் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையும், அவரது பிறப்புறுப்பில் 16 குண்டுகள் இருந்ததையும் உறுதி செய்தது.
இப்படியான சம்பவங்களை அங்கே ராணுவம் நிகழ்த்துவது வாடிக்கைதான் என்றாலும், இந்த முறை மணிப்பூர் மாநிலமே கோபத்தில் கொதித்தெழுந்தது. பெண்கள் குமுறினார்கள். தங்ஜம் மனோரமா கொலைசெய்யப்பட்ட ஐந்தாவது நாள், பன்னிரண்டு தாய்மார்கள் தங்களின் வீடுகளிலிருந்து கிளம்பினார்கள். `இருபத்தி நான்கு ஆண்டுகளாகப் பொறுமையாகச் சகித்துக்கொண்டுதான் இருந்தோம். இனி பொறுக்க முடியாது. இந்தச் சட்டத்தை ஒழித்தே தீர வேண்டும்’ என வெகுண்டெழுந்தார்கள். நான்கு நாள்களாக அவர்களுக்குள் தொடர்ந்து பேசி, கடுமையான மன உறுதியைத் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு, வைராக்கியத்துடன் கிளம்பினார்கள். அவர்கள் செல்லும் வழியில் இருந்த கடவுளை வழிபட்டார்கள். மணிப்பூர் நகரத்தின் மையத்தில், ராணுவத்தின் தலைமையகமாகச் செயல்படும் காங்கலா கோட்டையின் வாயிலை அடைந்தார்கள்.
நொடிப்பொழுதில் அவர்கள் தங்கள் உடலில் அணிந்திருந்த ஆடைகளைக் கலைந்தார்கள். 12 பேரும் நிர்வாணமாகத் தங்கள் கைகளில் ஒரு பெரிய துணி பேனரை மட்டும் பிடித்துக்கொண்டு முழங்கினார்கள். அந்த பேனரில் ‘Indian Army Rape us’, ‘Indian Army take our Flesh’ என்கிற வாசகங்கள் இருந்தன. அவர்கள் அனைவரும் ஒற்றைக் குரலில், ‘`நாங்கள் அனைவரும் மனோரமாவின் அம்மாக்களே, எங்கள் உடலையும் எடுத்துக்கொள்ளுங்கள்... உங்கள் வெறியைத் தீர்த்துக்கொள்ளுங்கள்’’ என ராணுவ அதிகாரிகளைப் பார்த்துக் கதறினார்கள்.
அந்தப் பெண்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை. அவர்கள் நிராயுதபாணிகளாகவே காங்கலா கோட்டை முன் நின்றார்கள். ராணுவம் நினைத்திருந்தால் அவர்கள் அனைவரையும் ஒரே நொடியில் சுட்டு வீழ்த்தியிருக்கலாம். ஆனால், ஊடகம் முன்னிலையில் இதைச் செய்ய மாட்டார்கள்தானே... நிர்வாணம் என்கிற ஆயுதம், எதிர்கொள்ள முடியாமல் ராணுவ அதிகாரிகளைத் திணறடித்தது. முகமெல்லாம் வெளுத்துப்போய் குழம்பிய நிலையில், கைகளைப் பிசைந்துகொண்டு செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

ராணுவ அதிகாரிகள் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் அங்கிருந்து விலகவில்லை. ‘`தங்ஜம் மனோரமாவின் கொலைக்கு நீதி வேண்டும். அரசு நடத்தும் எவ்வித விசாரணை மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உடனடியாக இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்’’ என்றார்கள். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத் தன்மையை இந்தியாவுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்துவதில் வெற்றிபெற்றார்கள்.
ஆணின் அதிகாரத்துக்கும் மதிப்பீடுகளுக்கும் உட்பட்டதாகவே பெண்ணின் உடல் இந்தச் சமூகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் உடல்மீது சுமத்தப்பட்டிக்கும் மென்மை, வெட்கம், நாணம் என்கிற அனைத்தையும் உடைத்து நொறுக்கும்விதமாக அதே பெண்ணுடலை எதிர்ப்பின் குறியீடாக, எதிர்ப்பியக்கத்தின் சின்னமாக மாற்றினார்கள்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பன்னிரண்டு பெண்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். மணிப்பூர் நகரமே அவர்களை சிறை வாயிலில் காத்திருந்து வரவேற்றது. அவர்களின் நிர்வாணப் போராட்டத்தின் ஓர் ஆண்டு நிறைவையொட்டி, அவர்களுக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அனைவரின் கைகளிலும் புத்தாடைகள் இருந்தன. அனைவருமே ஒரு திருவிழாவின் செய்முறைபோல அந்த 12 பெண்களுக்கும் ஆடைகளை வழங்கினார்கள். உலக ஊடகம் அனைத்தும் அவர்களைப் பேட்டி கண்டன. அவர்களின் மனநிலையை, துணிவை, திட்டமிடுதலை ஆவணப்படுத்தின. வரலாற்றின் வீரமங்கைகளாக அவர்கள் வடகிழக்கு முழுவதும் கொண்டாடப்பட்டார்கள்.
தங்ஜம் மனோரமா, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இன்றுவரை அந்த அதிகாரிகளில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. ஆனால், மணிப்பூரின் ஏழு மாவட்டங்களிலிருந்து அந்தக் கொடூரச் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியிலும், நான்கு வடகிழக்கு மாநிலங்களின் 43 மாவட்டங்களில் இந்தச் சட்டம் அமலில் இருக்கிறது. கடந்த ஆண்டு நாகாலாந்திலுள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்துவிட்டு வேனில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 13 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. அவர்கள் 13 பேருமே, அன்று காலை சுரங்கத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியவர்கள், அப்பாவிகள், சாமானியர்கள் என்கிற உண்மைத் தகவல்கள் வெளிவந்ததும், ‘இந்தச் சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது’ என்கிற வார்த்தையுடன் இந்தச் சம்பவத்தை இழுத்து மூடினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோதுகூட அவர்கள் தங்களின் ராணுவத்துக்கு இப்படி அப்பாவிகளைச் சுட்டுக் கொல்லும் உரிமையை, அதிகாரத்தைக் கொடுத்திருக்கவில்லை.
மகாஸ்வேதா தேவியின் ‘திரெளபதி’ என்ற சிறுகதையில், ஒரு பழங்குடிப் பெண் இந்திய ராணுவ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவார். கதையின் இறுதியில் அவர் ‘இந்த ஆடைகளால் என்ன பயன்?’ என்று கேட்பார். ஏனோ எனக்கு அந்த வரி இப்போது நினைவுக்கு வருகிறது!
(தொடரும்)
போராளி - இரோம் ஷர்மிளா!
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் ‘மாலோம்’ படுகொலை நிகழ்ந்தது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பத்து அப்பாவிப் பொதுமக்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். அந்த 10 பேரில் 62 வயது மூதாட்டி லெய்ஸாங்பாமும், தேசிய சாகச விருது பெற்ற 18 வயதுச் சிறுவன் சினாம் சந்திரமணியும் இருந்தனர். 28 வயது பெண்மணியாக இருந்த இரோம் ஷர்மிளா, அதைப் பார்த்துக் கொதித்தெழுந்தார். அந்தப் படுகொலை நிகழ்ந்த மூன்றாம் நாளே, அதாவது 2,000 ஆண்டு, நவம்பர் 5-ம் தேதி அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். காவல்துறையினர் அவரைத் தற்கொலைக்கு முயல்வதாகக் கைதுசெய்தார்கள். இருப்பினும் விடாமுயற்சியாக அவர் தொடர்ந்து 16 ஆண்டுகள் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிராக, தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இரோம் ஷர்மிளாவுக்குப் பல தேசிய சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. வடகிழக்கிலிருந்து நீதி கேட்டு எழுந்து, உலகை வலம்வந்த உரிமைப் பெருங்குரலாக அவர் கருதப்படுகிறார்!