
கிழக்கிந்திய கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையைக் கொண்டுவந்து பிரிட்டனின் சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யும்.
சீனப் பேரரசன் ஷென்னாங் ஒருநாள் சுடுநீர் அருந்திக்கொண்டிருந்தான். அப்போது காற்று வீச, அருகிலிருந்த செடி ஒன்றிலிருந்து இலைகள் வந்து அவன் கோப்பையில் விழுந்தன. அப்போது நீரின் நிறம் மாறியது. அதைப் பார்த்தவனுக்கு அந்த இலையின்மீது ஆர்வம் ஏற்பட்டது. நிறம் மாறிய நீரை ஒரு மிடறு அருந்தியதில் அதன் வாசனையும் ருசியும் உற்சாகமூட்டின. கி.மு. 2737-ல் நிகழ்ந்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, இந்தச் செடியைக் கண்டறிந்து அதை வளர்ப்பது, இலைகளைப் பறிப்பது, அதை உலர்த்துவது, நொதிக்கவைப்பது எனச் சீனச் சமூகம் தேயிலையின் நுட்பங்களை அடைந்தது. சீனர்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் தேநீர் அருந்துதல் என்பது முதன்மையான இடத்தைப் பெற்றது. சீனாவின் தேசிய பானமாகத் தேநீர் கொண்டாடப்பட்டது. இன்று சீனர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படுகிற ஏழு அடிப்படைப் பொருள்களில் தேநீரும் ஒன்று. சீனாவிலிருந்து தேநீரின் ருசியும், வாசனையும் மெல்ல மெல்ல உலகெங்கும் பரவின!
பீரிலிருந்து தேநீருக்கு..!
1662-களில் போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரீன் டி பிராகன்ஸா, தேநீரை இங்கிலாந்தில் அறிமுகம் செய்தார். எதிர்பாராதவிதமாக பிரிட்டன் மக்களின் விருப்ப பானமான பீரை தேநீர் முந்திக்கொண்டது. 17-ம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் தேநீரைச் சுவைத்துவிட்டு அதன் ருசியில் மயங்கிப்போனார்கள். அதன் சுவை அவர்களை நிலைகுலையச் செய்தது. ஐரோப்பா முழுவதுமுள்ள அரசவைக் குடும்பத்தாரும், செல்வந்தர்களும் விரும்பி அருந்தும் பானமாகத் தேநீர் மாறியது.
சீனாவிலிருந்து பீங்கான், நறுமண மசாலாப் பொருள்கள், தேயிலை எனப் பல பொருள்களை இறக்குமதி செய்தபோதும், தேயிலைதான் அதிகப்படியான லாபத்தைக் கொடுக்கும் பண்டமாக இருந்தது. சீனாவிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்ய, பெரும் படையாக நிறுவனங்கள் லண்டனிலிருந்து புறப்பட்டன. ஆனால் 1698-ல் தேயிலையை இறக்குமதி செய்வதற்கான உரிமை கிழக்கிந்திய கம்பெனி எனும் ஒற்றை நிறுவனத்துக்கு ஏகபோகமாக வழங்கப்பட்டது. இதற்கான சட்டத்தை இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் அவர்கள் இயற்றினார்கள்.
இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்ட தேநீர், அங்கிருந்து அவர்களின் ஆட்சியின் கீழிருந்த காலனிகள் அனைத்துக்கும் சென்றது. அங்கேயெல்லாம் தேநீரின் ருசி பரவி வியாபாரம் சூடுபிடித்த நேரம், மீண்டும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டது. தன் காலனிய நாடுகள் அனைத்தும், இனி தேயிலையை பிரிட்டன் நிறுவனங்களிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என்றது அந்தச் சட்டம்.
கிழக்கிந்திய கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையைக் கொண்டுவந்து பிரிட்டனின் சந்தையில் மொத்தமாக விற்பனை செய்யும். அந்தச் சந்தையில் ஏலம்விடப்படும் தேயிலையைப் பிற பிரிட்டன் நிறுவனங்கள் வாங்கி அவர்களின் காலனிய நாடுகளில் வியாபாரம் செய்யலாம். இங்கிலாந்தின் காலனியாக இருந்த அமெரிக்காவின் பாஸ்டன், நியூயார்க், பிலடெல்பியா மற்றும் சார்லஸ்டனில் இருந்த வணிகர்கள், இவர்களிடமிருந்து பெற்று மறு விற்பனை செய்தனர்.
வரி... சட்டம்... கலகம்!
கிழக்கிந்திய கம்பெனி இறக்குமதி செய்யும் தேயிலைக்கு 25% வரி, அதன் பின்னர் உள்ளூர் நுகர்வுக்குக் கூடுதல் வரிகள், நிறுவனங்களின் லாபம், மறு விற்பனையாளரின் லாபம் எனத் தேயிலையின் விலை அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்தது. இங்கிலாந்தின் மறுகரையில் இருந்த நெதர்லாந்தில் தேயிலைக்கு வரியே கிடையாது. நெதர்லாந்திலிருந்து மலிவான விலையில் தேயிலைக் கடத்தல் சரக்காக இங்கிலாந்துக்குள் நுழைந்தது. இங்கிலாந்து வியாபாரிகளின் வழியே அந்தத் தேயிலை அமெரிக்காவுக்குப் பெரிய அளவில் சென்றது.

அதனால், பிரிட்டனில் இறக்குமதியாகும் தேயிலைக்குப் பெரிய கிராக்கி இல்லாத நிலை ஏற்பட்டதையும், தனது வரி வருவாயில் இழப்பீடு ஏற்படுகிறது என்பதையும் உணர்ந்த இங்கிலாந்து அரசு, உடனடியாகக் களத்தில் இறங்கியது. உள்ளூர் நுகர்வுக்கான வரிகளைக் குறைத்துவிட்டு, காலனிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்குப் புதிய ஏற்றுமதி வரிகளை விதித்தது. அத்துடன் ‘இனி காலனிய நாடுகளுக்குத் தேயிலையை ஏற்றுமதி செய்யும் உரிமையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டுமே’ என அறிவித்தது. பிரிட்டனிலிருந்து தேயிலையுடன் கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்கள் அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டன. ஆனால், புதிய வரிகளின் செய்தி அதற்கு முன்னரே அமெரிக்காவுக்குச் சென்றடைந்து, அமெரிக்கச் சமூகத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டுமே இறக்குமதி, ஏற்றுமதி உரிமை முழுமையாகக் கொடுக்கப்பட்டது, பிரிட்டன் வியாபாரிகள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மெல்ல அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சாமுவேல் ஆடம்ஸுடன் (Samuel Adams) கைகோத்தார்கள். நியூயார்க், பிலடெல்பியா, சார்லஸ்டனில் உள்ள வியாபாரிகள் தங்களின் தேயிலைக் கொள்முதல்களை ரத்துசெய்தார்கள். ஆர்டர் கொடுத்த சரக்குகளை வேண்டாம் என மறுத்தார்கள்.
பாஸ்டனின் ஆளுநர் தாமஸ் ஹட்சின்சன் (Thomas Hutchinson) தன் நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார். தேயிலைக் கப்பல்களின் வருகை, நகரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தபோதிலும் வந்துகொண்டிருக்கும் டார்ட்மவுத், எலியனார், பீவர் ஆகிய மூன்று பெரிய கப்பல்கள் கரைசேரும்படியாகத் துறைமுகத்தில் ஏற்பாடுகளைச் செய்தார். ‘கப்பல்கள் வந்தே தீரும், துறைமுகத்தில் தேயிலையை இறக்குவோம், புதிய வரிகள் அமலுக்கு வரும், அனைவரும் வரி செலுத்தியாக வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார்.
1773, டிசம்பர் 16 அன்று நள்ளிரவில் அமெரிக்கக் குடியேறிகள் 60 பேர், அங்குள்ள மாகாகாத் தொல்குடிகள்போல் உடையணிந்துகொண்டு, பாஸ்டன் துறைமுகத்திலுள்ள கிரிஃபின்ஸ் வார்ஃபுக்குச் சென்றார்கள். துறைமுகத்துக்கு வந்து சுங்கச் சோதனைக்காகக் காத்திருந்த கப்பல்களில் ஏறினார்கள், தேயிலைப் பெட்டிகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக் கடலில் வீசினார்கள். மூன்று கப்பல்களில் இருந்த 342 பெட்டிகள் தேயிலையையும் முற்றாக அழித்தார்கள்.
பிரிட்டிஷ் அரசால் இந்த நிகழ்வை ஜீரணிக்கவே முடியவில்லை. கோபம் தலைக்கேறியது. கடலில் வீசப்பட்ட தேயிலையின் மதிப்பை அறிய முற்பட்டது. அது பதினெட்டாயிரம் பவுண்ட் எனக் கணக்கிட்டார்கள். அதிரடியாக, ‘சகிக்க முடியாத செயல்கள் சட்டம்’ (Intolerable Acts) என்கிற புதிய சட்டம் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் இயற்றப்பட்டது. கடலில் வீசப்பட்ட மொத்தத் தேயிலையின் மதிப்பையும் மாசாசூசெட்ஸ் மக்கள் வரியாகச் செலுத்தும் வரை பாஸ்டன் துறைமுகம் இழுத்து மூடப்பட்டது. மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் பல பொருள்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது அரசு.

அமெரிக்கச் சுதந்திரப் போராட்டம்!
தேயிலையின் மீதான வரிகளை எதிர்த்து போராட்டங்கள் நிகழ்ந்தபடி இருந்தன. பிரிட்டன் அரசு பல சமரச முயற்சிகளில் ஈடுபட்டது. இறுதியாக 1778-ல் தேயிலை மீதான வரி ரத்துசெய்யப்பட்டது. இந்தத் துயர காலங்களில்தான் மக்கள் ஒன்றிணைந்தார்கள். அவர்கள் ஒன்றிணைந்ததன் வழியே, ‘பிரிட்டன் தங்கள்மீது சுமத்தும் வரிகளையும் கொடுங்கோன்மையையும் ஏற்க முடியாது’ என்பதைத் தெரிவித்தார்கள். 1775 முதல் 1783 வரை அமெரிக்கச் சுதந்திரப் போர் நடைபெற்றது. பிரான்ஸும் ஸ்பெயினும் காலனிகளுடன் கைகோத்து இந்தப் போரில் அவர்களின் பக்கபலமாக நின்றன. இந்தப் போரில் 13 காலனிகள் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்றன. பாஸ்டனின் இந்தத் தேநீர்க் கலகமும், கொண்டாட்டமும் அமெரிக்கப் புரட்சியின் தொடக்கப்புள்ளியாக அமையும் என்று யாருமே யூகிக்கவில்லை. தேநீர்க் கோப்பையிலிருந்து கிளம்பிய புயல், ஒரு தேசத்தை விடுதலை பெறச் செய்தது.
பாஸ்டனிலுள்ள காங்கிரஸ் தெருவில், பாஸ்டன் தேநீர் விருந்து அருங்காட்சியகம் அமைந்திருக்கிறது. அந்த அருங்காட்சியகத்தில், பாஸ்டன் தேநீர்க் கலகம் குறித்த விரிவான ஓர் ஆவணப்படம் திரையிடப்படுகிறது. அங்கே கலந்துரையாடும் ஒரு கண்காட்சியும் இருக்கிறது. அந்த அருங்காட்சியகத்தில் அந்தக் கலகத்தில் இடம்பெற்ற எலியனார், பீவர் கப்பல்களின் மாதிரிகள் இருக்கின்றன. பாஸ்டன் கலகத்தில் கப்பல்களிலிருந்து தூக்கிக் கடலில் வீசப்பட்ட அசலான தேயிலைப் பெட்டிகள் இரண்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வசிப்பவர்கள், சுற்றுலாவுக்குச் செல்பவர்கள், அந்தத் தேயிலைப் பெட்டிகளின்மீது கைவைத்து சுதந்திரத்தின் கதகதப்பை உணரலாம்!
தேயிலையின் விலை ஒரு நாட்டின் விடுதலைக்கே வித்திட்டது. 2014-ல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.410. இன்றைக்குக் காலை (2022) இந்தக் கட்டுரையை எழுதும்போது என் வீட்டுக்கு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,068!
(தொடரும்)
தேயிலையின் ரத்த வரலாறு!
தேயிலையை இறக்குமதி செய்த பிரிட்டிஷ்காரர்கள், அதற்கு பதிலீடாக சீனர்களுக்கு முதலில் வெள்ளியைக் கொடுத்தார்கள். ஒருகட்டத்தில் பெருமளவிலான வெள்ளி அவர்களது நாட்டிலிருந்து வெளியேறுகிறது என்று கருதியவர்கள், சீனாவுக்குள் போதைப்பொருளான அபினைக் கடத்திக்கொண்டு சென்றார்கள். அபினைக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக வெள்ளியைப் பெற்றார்கள். இந்த வெள்ளியைவைத்தே தேநீருக்கான தொகையைச் செலுத்தினார்கள். சீனாவை மட்டுமே இனி தேயிலைக்காக நம்பியிருக்கக் கூடாது என்று முடிவுசெய்து, சீனர்களிடமிருந்து தேயிலைச் செடிகளை, அதன் வளர்ப்புமுறைகளையெல்லாம் கடத்திச் சென்று, இங்கிலாந்தில் பயிரிட்டார்கள். தேயிலையைத் தங்களின் காலனிய நாடுகளான இந்தியா, பர்மா, இலங்கை எனப் பல நாடுகளில் வளர்க்கத் தொடங்கினார்கள். அதற்குத் தமிழர்களைக் கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றார்கள். தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, குமுளி, மாஞ்சோலை என எல்லா மலைகளிலும் இருந்த மழைக்காடுகளை அழித்துவிட்டு, தேயிலையைப் பயிரிட்டார்கள். அடுத்தமுறை பருகும்போது உங்கள் கோப்பையிலிருக்கும் தேநீரின் நிறத்தைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அந்தச் சிவப்பில் ஒரு சொட்டுக் குருதி இருப்பதை உணர்வீர்கள்!