மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 23 - 1857 - முதல் இந்திய சுதந்திர போர்!

முதல் இந்திய சுதந்திர போர்
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் இந்திய சுதந்திர போர்

விடுதலை வேள்வியில் இந்தியாவெங்கும் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. இவற்றுக்கு மத்தியில் நடைபெற்ற ஒரு போர், இந்திய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது.

இந்திய துணைக் கண்டத்தில் வணிகம் செய்யும் நோக்கில், 1600-ம் ஆண்டில் பிரிட்டிஷ் வணிகர்களால் லண்டனில் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. 1611-ல் ஆந்திராவின் மசூலிப்பட்டினத்திலும், 1612-ல் குஜராத்தின் சூரத்திலும் அவர்கள் கால்பதித்தார்கள். குதிரைகள், வேட்டைநாய்கள், கலைப்பொருள்கள், மது வகைகள் என இந்திய நிலத்தில் அந்தக் காலத்தின் அரிதான பொருள்களைப் பரிசாகக் கொடுத்து, சூது நிறைந்த திட்டங்களால் மன்னர்களை, ஜமீன்தார்களை வீழ்த்தினார்கள்.

மெல்ல மெல்ல சென்னை, மும்பை, கொல்கத்தா என அவர்களின் வர்த்தகம் விரிவுபெற்றது. அடுத்தடுத்து எல்லாத் துறைமுக நகரங்களிலும் தங்களின் கிட்டங்கிகளை அமைத்து, அவற்றிலிருந்து பருத்தி, தேநீர், இண்டிகோ, நறுமணப் பொருள்கள் என இந்தியாவின் விலையுயர்ந்த சரக்குகளை லண்டன் சந்தைகள் வழியாக உலகெங்கும் அனுப்பி வியாபாரத்தைப் பெருக்கினார்கள். வியாபாரம் பெருக, லாபம் கொட்டியது. லாபம் அதிகரிக்க, இந்தியாவின் மீதான அவர்களின் ‘பாசம்’ பெருகியது, பிடிமானம் இறுகியது.

1670-ம் ஆண்டில் பிரிட்டிஷ் பேரரசர் இரண்டாம் சார்லஸ், வெளிநாடுகளில் போர்களை நடத்துவதற்கும், அந்த நாடுகளைக் காலனிகளாக மாற்றுவதற்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி அளித்தார். பக்ஸார் போர் மற்றும் பிளாசிப் போர்களில் பெற்ற வெற்றியால், இந்தியாவின் பல பகுதிகளில் நிலவரி வசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்கள் பெற்றார்கள். இதுவே இந்தியாவில் பிரிட்டிஷார் ஆட்சி அமைய வழிவகுத்தது. 1773-ல் இந்தியாவில் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களை நிர்வகிக்கும் தலைமையகத்தை, கொல்கத்தாவில் நிறுவினார்கள். கிழக்கிந்திய கம்பெனி தனக்கான காவல்படை, ராணுவப்படை மற்றும் நீதிமன்றங்களை ஏற்படுத்தியது.

போராட்டங்களின் கதை - 23 - 1857 - முதல் இந்திய சுதந்திர போர்!

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார போதை உச்சத்துக்குச் சென்றது. ஊழல்கள் கட்டுக் கடங்காமல் சென்றது. ரத்தம் சொட்டச் சொட்ட இந்தியர்களின் வியர்வையை உறிஞ்சியது கிழக்கிந்திய கம்பெனி. அவர்களின் அளவற்ற ஏற்றுமதியால், இந்தியாவில் செயற்கையான பஞ்சங்கள் உருவாகின. கோபத்தின் பேரலைகள் இந்தியச் சமூகத்தில் மெல்ல மெல்ல எழுந்தன. இந்தியா முழுவதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்துக்கு எதிரான கலகங்கள் ஆங்காங்கே ஏற்பட்டன. மதுரையிலும் நெல்லையிலும் ஆற்காடு நவாப் கிழக்கிந்திய கம்பெனியுடன் சேர்ந்து தனது ஆட்சியை விரிவுபடுத்த முயன்றார். அதற்கு எதிராக, தெற்குச் சீமையில் பூலித்தேவன் பல பாளையக்காரர்களை ஒருங்கிணைத்தார். அது பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. 1806-ல் வேலூர் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகக் கலகம் வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.

விடுதலை வேள்வியில் இந்தியாவெங்கும் பல கிளர்ச்சிகள் நடைபெற்றன. இவற்றுக்கு மத்தியில் நடைபெற்ற ஒரு போர், இந்திய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது. புகைந்து கொண்டே இருந்த அதிருப்தியின் நெருப்பு, பாரக்பூரிலிருந்து கிளம்பியது. 1857-ம் ஆண்டு, பாரக்பூரில் ‘ஒன்பதாவது நேட்டிவ் இன்ஃபேன்ட்ரியை’ச் சேர்ந்த மங்கள் பாண்டேயின் குரல் ஓங்கி ஒலித்தது. ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கிய அவன் வாளிலிருந்துதான் சுதந்திரத்துக்கான புரட்சியின் முதல் துளிக் குருதி இந்திய மண்ணில் விழுந்தது. மே 11, 1857... ஒரே இரவில் நாற்பது மைல்களைக் கடந்து, ரத்தம் தோய்ந்த சீருடையுடன் சில நூறு சிப்பாய்கள் இதிகாசத் தலைநகரான டெல்லியைக் கைப்பற்றியதும், எண்ணி இருபதே நாள்களில் இந்துஸ்தான் படைத்தளங்களில் கலகங்கள் வெடித்ததும், அடுத்த ஓரிரு வாரங்களில் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து புரட்சிக்கு உரமூட்டியதும் எவரும் எதிர்பாராத இந்திய வரலாற்றின் திருப்பங்கள். தந்திகள் பறந்தன, தபால் சாரட்டுகள் விரைந்தன. இருட்டு அப்பிய சந்து பொந்துகளில் ரகசியங்களைச் சலித்தெடுக்க ஒற்றர்கள் கண்கள் உருட்டித் திரிந்தனர். எல்லாம் மெல்லக் கசியக் கசிய, இங்கிலாந்து உறைந்தது.

ஒழுக்கமான அடிமைகளாக இருந்த இந்தியர்கள், எப்படிக் கிளர்ந்தெழுந்தார்கள் என்று ஆங்கிலேயர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்தியர்கள்தான் இப்படி நம்மைத் தாக்குகிறார்களா என ஆங்கிலேயர்களால் நம்ப முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இந்தப் போர், இரண்டரை ஆண்டுக்காலம் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தியாவின் நெடிய வரலாற்றைக் குறுக்கே வெட்டினால் எலும்புகளும் நரம்புகளுமாய், சதைகளும் தோலும் குருதியுமாய், சாதி, சமயம், காலனியம், நவீனத்துவம் ஆகிய அனைத்துக் கூறுகளும் ஒரே சமயத்தில் தென்படுகிற ஒரே இடமாக 1857 மட்டுமே காட்சி தருகிறது. அதனால்தான் இதை `முதல் இந்தியச் சுதந்திரப் போர்’ என்று வரலாற்று அறிஞர்கள் பலர் அழைத்தார்கள். இது, வெறுமனே சிப்பாய்கள் மட்டும் சம்பந்தப்பட்ட எழுச்சியாக இல்லை. ஏழை எளிய விவசாயிகளும், குடியானவர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாகக் கலந்துகொண்ட மாபெரும் மக்கள் எழுச்சி.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக வரலாற்றிலேயே ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவில் தோன்றிய மிகப் பிரமாண்டமான எழுச்சி அது. அதன் விரிவும் வீச்சும் அதுவரை இங்கு நிகழாதவை. இந்தப் போரை மிக நெருக்கமாக கவனித்த மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இதை ‘இந்திய மீட்சியின் ஒரு முக்கியமான கூறு’ என்று கணித்தார்கள்; வர்ணித்தார்கள்.

மங்கள் பாண்டே தொடங்கி இந்த எழுச்சியின் நாயகர்கள் ஒவ்வொருவருமே நமக்கு உத்வேகம் ஊட்டுபவர்களாக இருக்கின்றனர். பாபுகுன்வர் சிங்கின் வீரம், நானா சாகேப்பின் தந்திரம், ஜுவாலா பிரசாத்தின் தீரம், ஜான்சிராணி லட்சுமிபாயின் போர்த்திறம் என எல்லாம் பிரமிக்கவைக்கின்றன. இவர்கள் அனைவருமே இந்த எழுச்சியை ஏந்திப் பிடித்தார்கள். 1,60,000 மைல் பரப்பளவுக்குத் தனியொரு மனிதனாக வெள்ளையர் படையைத் தனது கெரில்லா போர்முறையில் அலைக்கழித்தார் தாந்தியா தோப்பே. 1859-ம் ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதி அவர் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவுடன் பெருமூச்சுவிடுகிறார்கள் வெள்ளையர்கள். அத்துடன் கிட்டத்தட்ட மகத்தான அந்த எழுச்சி முடிவுக்கு வருகிறது. ஒரு லட்சம் சிப்பாய்களும், ஒரு லட்சம் மக்களும் இந்தப் போரில் மாண்டார்கள்.

“ஒரு புயலின் நெருக்கத்தை நான் உணர்கிறேன். ஒரு சூறாவளியின் முனகலை நான் கேட்கிறேன். அது எங்கே, எப்போது, எப்படித் தாக்கும் என்று என்னால் சொல்ல முடியவில்லை” - லெப்டினன்ட் கர்னல் மார்ட்டினோ, தன் சக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் பெரும் நடுக்கத்துடன் இப்படிக் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்டியடித்து, நாடு விடுதலை பெற எத்தகைய எழுச்சியான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியது இந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதை உணர வேண்டும்.

ஏறக்குறைய இந்தப் போருடன் கிழக்கிந்திய கம்பெனியின் கதை முடிவுக்கு வருகிறது. ஆங்கிலேய முடியரசின் நேரடி ஆட்சி இந்தியாவில் அமலுக்கு வருகிறது. 1877-ல் அரசி விக்டோரியா, இந்தியாவின் மகாராணி ஆகிறார். பிரிட்டன் அரசு, அனைவருக்கும் அதிகாரத்தின் சிறு துளிகளைப் பிரித்துக் கொடுத்தது. அரசு சீர்திருத்தம், அரசியல் புனரமைப்பு என்கிற சொற்கள் புழக்கத்துக்கு வந்தன. இனி இந்திய அரசர்கள், தலைவர்கள், மக்கள் என அனைவரையும் சமமாக நடத்துவோம் என்று இந்தியர்களுக்குக் குறைந்தபட்ச மரியாதையை, தன்மானத்தை இந்த எழுச்சிதான் பெற்றுக்கொடுத்தது.

நாம் பெற்ற சுதந்திரப் போராட்டத்தின் திசைவழியை, முறையாக நாம் நம் அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. அதன் விளைவுதான், இன்றைக்கு உலகின் எல்லா நாடுகளும் உலகளாவிய ஒப்பந்தங்கள், ஷரத்துகளின் மூலம் மீண்டும் நம்மை அடிமைப்படுத்துவதை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். ஒரு கிழக்கிந்திய கம்பெனிக்குப் பதிலாக, இன்றைக்குப் பல கம்பெனிகள் இந்தியச் சந்தையையும், இந்தியாவின் இயற்கை வளங்களையும் அபகரிக்க வரும்போது, கோபப்படுவதற்கு மாறாக அவர்களைச் சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்கிறோம். நம் தொழிலாளர் நலச் சட்டங்களையெல்லாம் பட்டங்கள்போல் பறக்கவிடுகிறோம். அவர்களுக்கு மட்டும் வருடம்தோறும் லட்சம் கோடிகளில் வரிச்சலுகை கொடுத்துவிட்டு, இந்திய ஜனங்களின்மீது ஒட்டுமொத்த அரசின் பாரத்தையும் ஏற்றுகிறோம்.

1857 முதல், ஜாலியன் வாலா பாக் வரை குருதியில் தோய்ந்த நம் வரலாற்றுச் சுவடுகளை, நம் அடுத்த தலைமுறையினருக்குக் கதைகளாக, கவிதைகளாக, நாடகங்களாக, பாடல்களாகச் சொல்லவேண்டிய தருணமிது. இல்லையேல் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று நடந்தது’ என்று ஒரு சாராரும், ‘நாங்கள் எழுதிய மன்னிப்புக் கடிதங்களைப் பிரித்துப் படிக்க பயந்தே வெள்ளையர்கள் இந்தியாவைவிட்டு ஓடினார்கள்’ என்று மற்றொரு சாராரும் நம் குழந்தைகளுக்கு வகுப்பெடுக்கக்கூடும்!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 23 - 1857 - முதல் இந்திய சுதந்திர போர்!

1857: எழுச்சியின் பேரோசை!

இந்திய வீரர்களின், விவசாயிகளின், சாமானியர்களின் ரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. மீரட்டின் எழுச்சி, கிழட்டு பகதூர் ஷாவின் ஊசலாட்டம், கையாலாகாத்தனம் தெரிகின்றன. பாபு குன்வர் சிங் தன் தள்ளாத வயதிலும், குதிரையில் பாய்ந்து போரிடும் ஒலி கேட்கிறது. ஜான்சிராணி லட்சுமிபாய், போரிடும் வீரர்களின் நடுவே புயலெனப் புகுந்து உற்சாகப்படுத்துகிற கீச்சொலி கேட்கிறது. நானா சாகேப் இறுதிவரை புதிராகவே இருக்கிறார். வரலாற்றுப் பேராசிரியர் கா.மோகன்ராம் அவர்களின் எழுத்துநடை 1857-ல் நடந்த ஒவ்வோர் அசைவையும் ஓர் ஆவணப்படம்போல் மிகத் துல்லியமாகக் காட்சி வடிவில் விவரிக்கிறது. இன்றைய நவகாலனியத்தை எதிர்த்து வெற்றி கொள்வதற்கான தந்திரங்களைக் கற்றுக்கொடுக்கிறது இந்த நூல். 1857-ல் நிகழ்ந்த முதல் இந்தியச் சுதந்திரப் போரைப் புரிந்துகொண்டால் மட்டுமே, அதன் தொடர்ச்சியாக அடுத்த 90 ஆண்டுகளில் இந்தியா எப்படி சுதந்திரம் பெற்றது அல்லது அது எப்படி சுதந்திரப் போராட்டத்தின் திசைவழியை அமைத்துக்கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள இயலும்.