
எப்படியேனும் இந்தியர்களைச் சமாதானப்படுத்தி, இந்தப் போரில் தங்கள் பக்கம் நிற்கச் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்தில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப்போர், உலக சரித்திரம் அதுவரை கண்டிராத பெரும் போராக நடைபெற்றது. உலகின் அனைத்துப் பெரிய அரசுகளும் இதில் ஏதோவொரு வகையில் அச்சு நாடுகளின் பக்கமோ, நேச நாடுகளின் பக்கமோ நின்றன. நாஜி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் ஜப்பானும் இணைந்து அச்சு நாடுகள் எனும் அணியாக நின்றன. பிரிட்டன் மற்றும் அதன் பேரரசில் இடம்பெற்ற அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இணைந்து `நேச நாடுகள்’ எனும் அணி உருவானது. பிரிட்டன், ஜெர்மனியின்மீது போர் தொடங்குவதாக அறிவித்தவுடன், அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்த லின்லித்கோ, இந்தியாவும் ஜெர்மனிக்கு எதிராகப் போர்நிலையில் இருப்பதாகத் தன்னிச்சையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய மக்களின் விருப்பம், அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என எதையும் அறிந்துகொள்ளாமல், கலந்து பேசாமல் எடுத்த சர்வாதிகார முடிவென விமர்சிக்கப்பட்டது.
‘பாசிசத்துக்கும் நாசிசத்துக்கும் எதிராகவே நாங்கள் களத்தில் இருப்போம்’ என காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியதுடன், சில முக்கிய நிபந்தனைகளையும் வைத்தது. ‘இந்திய மக்கள் இந்தப் போரில் அடிமைகளாகக் கலந்துகொள்ள மாட்டார்கள்’ என்ற ஜவஹர்லால் நேருவின் தெளிவான வார்த்தைகள், பிரிட்டிஷாருக்குப் பெரும் கலக்கத்தைக் கொடுத்தன. போர் தொடர்ந்து நடைபெற்றது. அதன் பாதிப்புகளாக விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறை, எதிலும் நிச்சயமற்ற நிலை என உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை மக்கள் அனுபவித்தார்கள்.
தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் என ஒவ்வொன்றாகக் கைப்பற்றிய ஜப்பான், இந்திய எல்லையிலுள்ள பர்மாவையும் இந்தப் போரில் கைப்பற்றியது. அடுத்து அவர்கள் இந்தியாவுக்குள் நுழையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எப்படியேனும் இந்தியர்களைச் சமாதானப்படுத்தி, இந்தப் போரில் தங்கள் பக்கம் நிற்கச் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்தில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. ‘போர் முடிந்த பிறகு இந்தியாவுக்கு விடுதலை தரப்படும்’ என்கிற அறிவிப்புகளை காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்த்தார்கள். மாறாக, அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இந்திய மக்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சர்ச்சிலுக்குக் கடிதம் எழுதினார்.

இந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிரிப்ஸ், டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கிரிப்ஸ் முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் முற்றிலும் நிராகரித்தது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காமல் கிரிப்ஸ் தோல்வியுடன் திரும்பினார். என்னதான் கூடுதல் அதிகாரங்கள் கொடுத்தாலும், வைஸ்ராய்க்குக் கீழ், பொம்மைகள்போல் செயலாற்ற முடியாது. முழு சுதந்திரம் ஒன்றே தீர்வு என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்தது.
ஜுலை 15, 1942 அன்று, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் வார்தாவில் கூடியது. அதில் ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் செயற்குழுவின் இந்தத் தீர்மானத்துக்கு பம்பாயில் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றார்கள். காந்தி அதில் உரையாற்றும்போது, “இந்தத் தருணத்திலிருந்து நீங்கள் விடுதலை பெற்றவர்கள். விடுதலை பெற்றவர்கள் எப்படிச் செயல்படுவார்களோ, அப்படியே செயல்படுங்கள். நாடு முழு விடுதலை அடையும் வரை நாம் அமைதியடையக் கூடாது. இந்தியாவின் விடுதலையை நனவாக ஆக்குவோம். செய்வோம் அல்லது செத்து மடிவோம்” என்றார். ‘செய் அல்லது செத்து மடி’ என்கிற இந்த முழக்கம் ஒரு காட்டுத்தீயைப்போல் இந்தியாவெங்கும் பரவியது.
காங்கிரஸ் கூட்டம் நிறைவுபெற்ற சில மணி நேரங்களிலேயே காந்தி, நேரு எனத் தலைவர்கள் அனைவரும் அதிரடியாகச் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. இந்தச் செய்திகள் இந்தியா முழுவதும் போய்ச் சேர ஓரிரு தினங்கள் ஆகின. 1942, ஆகஸ்ட் 11-ம் தேதி `வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க, ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, பம்பாய் எனப் பல மாகாணங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றன.
இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகி, ரகசியமாகவே போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்கள். வினோபா கைதுசெய்யப்பட்டார். ஜெயபிரகாஷ் நாராயண், அருணா ஆசஃப் அலி, ராம் மனோகர் லோகியா உள்ளிட்டவர்கள் வட இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினார்கள். அவர்கள் பயணித்த வழி நெடுகிலும் கிராமங்களை விடுதலை பெற்றதாக அறிவித்தார்கள். காங்கிரஸ் பொதுக்குழுவிலிருந்து காமராஜர் தப்பி, தலைமறைவாக இருந்தே போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியபடி தமிழ்நாடு நோக்கி வந்தார். ஆங்கிலேய காவல்துறை அவர் விருதுநகரை நெருங்கும்போது கைதுசெய்தது.
இந்தியா முழுவதும் மாணவர்கள் கல்விச்சாலைகளைப் புறக்கணித்தனர். கிராம மக்கள் வரிகளைச் செலுத்த மறுத்தனர். நெசவாளர்கள் தங்களின் துணிகளை ஆங்கிலேய கம்பெனிகளுக்கு விற்க மறுத்தனர். இந்தியா முழுவதும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்தனர். விவசாயிகளும் நெசவாளர்களும் இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்கள்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. தேவகோட்டை, ராஜ பாளையம், காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. குலசேகரப்பட்டினத்திலிருந்த ஆங்கிலேய உப்பள அதிகாரி வில்ஃபிரெட் லோனை போராட்டக்காரர்கள் கொலை செய்து அவர் வசமிருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினார்கள். திருவாடானைச் சிறையை உடைத்து, கைதுசெய்யப்பட்ட அனைவரையும் மக்கள் விடுதலை செய்தனர். கோவை சூலூர் விமான தளத்திலிருந்த 20 லாரிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
காந்தி, நேரு இருவரையும் தென்னாப்பிரிக்கா அல்லது ஏமன் நாட்டுக்குக் கடத்தி, சிறைவைக்க ஆங்கிலேயர்கள் திட்டம் வகுத்தார்கள். ஆனால், இதைச் செய்தால் இந்தச் செய்தி போராட்டத்தைக் கட்டுக்கடங்காமல் மாற்றிவிடும் என்பதால் அந்த முடிவைக் கைவிட்டனர். நேரு மூன்று ஆண்டுகளும், காந்தி இரண்டு ஆண்டுகளும் சிறையில் இருந்தனர். காந்தி சிறையிலிருந்த காலத்தில், கஸ்தூர்பா காந்தியும், அவருடைய உதவியாளர் மகாதேவும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
பிரிட்டிஷாரிடமிருந்து இந்து ராஜ்ஜியத்துக்கு அதிகாரம் மாற்றப்படவிருக்கிறது என முஸ்லிம் லீக் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. ராஜாஜி இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இந்து மகாசபை இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதன் அப்போதைய தலைவர் சாவர்க்கர், ‘இந்து மகாசபாவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒழுக்கமாக அரசுக்கு வேலை செய்யுங்கள். ஆங்கிலேய ராணுவத்தில் சேவை செய்யுங்கள்’ என்று கடிதம் எழுதினார். வங்காள இந்து மகாசபையின் தலைவராக இருந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, “எல்லா வகைகளிலும் வங்கத்தில் இந்தப் போராட்டத்தைத் தோல்வியடையச் செய்வோம்” என்றார். எப்படியெல்லாம் இந்தப் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற ஆலோசனைகளைப் பட்டியலிட்டு ஆங்கிலேயர்களுக்குக் கடிதம் எழுதினார்.
இந்தியாவெங்கும் போராடியவர்கள்மீது விமானத் தாக்குதல் தொடங்கி துப்பாக்கிச்சூடு, தடியடி என ஆங்கிலேயர்கள் மூர்க்கமாகத் தாக்கினார்கள். ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்து நிர்வாணமாகத் தெருவில் நிறுத்தினார்கள். சாட்டையடி, செருப்படி எனப் பல சித்ரவதைகளை மக்கள் அனுபவித்தனர். இந்தியா முழுவதும் 550 தபால் அலுவலகங்கள் எரிக்கப்பட்டன. 250 ரயில் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. முக்கிய ரயில் தண்டவாளங்கள் பெயர்த்தெறியப்பட்டன. 200 காவல் நிலையங்கள் சாம்பலாக்கப்பட்டன. 85 பெரும் அரசு அலுவலகங்கள் தீயிடப்பட்டன. 2,500 இடங்களில் தந்திக்கம்பிகள் வெட்டி வீசப்பட்டன.
1857-க்குப் பிறகு, தன்னெழுச்சியாக 1942-ல்-தான் இந்தியா கிளர்ந்தெழுந்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதினார்கள். இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் ‘ஆகஸ்ட் புரட்சி’ என்கிற பெயரை இந்தப் போராட்டம் பெற்றது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் குருதியை ஆறாக ஓடவிட்டார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் என்பது உலகில் நடைபெற்ற போராட்டங்களில் முதன்மையானதாகத் தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களை அலங்கரித்துவருகிறது. சாதி, மத, மொழி பேதங்களைக் கடந்து, மக்கள் ஒன்றிணைந்து இந்திய சுதந்திரத்தைச் சாத்தியமாக்கினார்கள். இந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை அல்லவா?
(தொடரும்)

போராளி
`ஜெயபிரகாஷ் நாராயண்’ அல்லது `JP’ என அறியப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு ஒரு மார்க்சிஸ்ட்டாக இந்தியா திரும்பியவர், நேருவின் அழைப்பின்பேரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியைத் தனது ஆதர்சமாகக்கொண்டு செயல்படத் தொடங்கினார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த காலத்தில், தலைவர்களுடனான உரையாடல்களின் வழியே தனது அரசியல் வாழ்வின் திசைவழியைத் தீர்மானித்தார். 1954-ல் ஆச்சார்யா வினோபா பாவே தொடங்கிய சர்வோதய இயக்கத்துக்கும், பூமி தான இயக்கத்துக்கும் ஆதரவளிப்பதாக அறிவித்த ஜெயபிரகாஷ், ஹஸாரிபாக்கில் அதற்கென ஓர் ஆசிரமத்தை நிறுவினார். 1970-களில் பீகாரில் நிலவிய ஊழலுக்கு எதிராகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கவும் தார்க்குண்டே-வுடன் இணைந்து முழுப் புரட்சி இயக்கத்தைத் தொடங்கினார். 1975-ல் நெருக்கடி நிலைக்கு எதிராக நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் ஜெயபிரகாஷ் பெரும் பங்காற்றினார். வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிர அரசியல் போராளியாகவே தன் சமூகக் கடமையை நிறைவேற்றினார்!