
பாரிஸ் அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்த மாநாடு நடைபெற்ற அதேநேரத்தில் பெர்லின், மெல்போர்ன், லண்டன் எனப் பல நகரங்களில் காலணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது
இங்கிலாந்தில் தொடங்கிய தொழில் புரட்சி, உலகம் முழுவதுமே தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைப் பெருமளவில் கொண்டுவந்தது. 1750 முதல் 1850 வரையிலான காலகட்டத்தில், இந்தத் தொழில் புரட்சி மிக வேகமாக நிகழ்ந்தது. ‘மனிதகுலத்தின் வளர்ச்சிக்காகவே தொழிற்சாலைகள்’ என்கிற நிலை மாறி, ‘பெரு முதலாளிகளின் அசுர லாபத்துக்கே தொழிற்சாலைகள்’ என்கிற நிலையை நோக்கி உலகம் சென்றது. அசுர லாபம் ஒன்றே நோக்கம் என்று உருமாறிய உலகின் புதிய திசையில், லாபத்துக்கான குறுக்குவழிகளைக் கண்டடைவதே ஆய்வுக்கூடங்களின் வேலையாக மாறியது. கடந்தகாலங்களில் விஞ்ஞானிகள், ஆய்வுகள் என்கிற பெயரில் செய்த கொடூரமான பல செயல்களால் பூமிப்பந்தும், அதில் வாழும் மனிதர்களாகிய நாமும் பல நெருக்கடிகளைச் சந்தித்தோம்/சந்தித்துக்கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமான ஒரு பிரச்னைதான் பருவகால மாற்றம்!
ஒவ்வோர் ஆண்டும் வெயில் காலத்தில், “வெளியே போகவே யோசனையா இருக்கு... வெயில் கடுமையா இருக்கு... தாங்க முடியலை” என்கிற வார்த்தைகளை அனைவருமே அதிகமாகக் கேட்கிறோம்; சொல்கிறோம். ஒவ்வோர் ஆண்டும் வெயிலும் வெக்கையும் அதிகரித்தபடியே இருக்கின்றன. உலகின் அனைத்து ஊடகங்களிலும் கடந்த இருபது ஆண்டுகளாக பூமி வெப்பமடைதல் (Global Warming), பருவநிலை மாற்றம் (Climate Change) என்கிற வார்த்தைகள் தொடர்ந்து புழங்கப்படுவதைப் பார்க்கிறோம்.

உலகம் முழுவதுமுள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றுகிற கார்பன் மற்றும் மீத்தேன் வாயுக்கள் வளிமண்டலத்தைச் சூழ்ந்து, ஒரு படலமாக மாறி, பூமிக்குப் பல புதுப்புது பிரச்னைகளைக் கொடுத்தபடி இருக்கின்றன. வளிமண்டலத்திலிருந்து வெளியேறவேண்டிய வாயுக்களை இந்தப் படலம் தடுத்துவைத்திருப்பதால்தான் பூமியின் தட்பவெப்பம் அதிகரித்தபடி இருக்கிறது. கோளம் வெம்மையாதலின் விளைவாகவே துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி கடல் மட்டம் உயர்கிறது. பருவகாலம் அதன் சுழற்சியின் சமனை இழந்து, ‘பருவகால மாற்றம்’ நோக்கி இந்த பூமியை அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
ஒரு பருவம் முழுவதிலும் பெய்யவேண்டிய மழை, ஓரிரு நாள்களில் அல்லது வாரங்களில் மொத்தமாகப் பொழிந்து பேரழிவுகளை நிகழ்த்துகிறது. கடல் மட்டம் உயர்வதால் இன்னும் 30 ஆண்டுகளில் உலகின் பல நகரங்கள் முதல் சில நாடுகள் வரை முழுமையாகவே மூழ்கிவிடும் ஆபத்து நெருங்கி வந்துவிட்டது என்கிறார்கள். காடுகள் பற்றியெரிவதும், நகரங்கள் மூழ்குவதும் ஆபத்துகள் நம்மை நெருங்குவதற்கான அறிகுறிகள். சென்னை முதல் சிதம்பரம் வரை நாம் 2015-ல் அனுபவித்த துன்பங்களைச் சொல்லி மாளாது. ஆனால், இவை அனைத்துமே பூமி வெப்பமடைதல் மற்றும் பருவகால மாற்றத்துடன் நேரடித் தொடர்புடையவை என்பதை நாம் அறிந்திருக்கிறோமா?
பருவகால மாற்றத்துக்கான ஐ.நா-வின் சிறப்புக் கூடுகை, பிரான்ஸ் தலைநகரம் பாரிஸில் திட்டமிடப்பட்டிருந்தது. 2015, நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை இந்த உச்சி மாநாட்டின் (COP21) அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. இந்த மாநாட்டை முன்னிட்டு உலகம் முழுவதுமிருந்து சூழலியலாளர்கள் பங்குபெறும் பேரணிகளும், கருத்தரங்குகளும் பாரிஸில் திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிகழ்வுகளில் பங்கேற்க இரண்டு லட்சம் பேர் பாரிஸ் வர பயண ஏற்பாடுகளைச் செய்திருந்த நிலையில், பாரிஸ் நகரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 129 பேர் பலியானார்கள்.
இந்த எதிர்பாராத கொடூர நிகழ்வு நடைபெற்றதும், இரண்டு லட்சம் பேர்கொண்ட பேரணிகளை, பொது நிகழ்வுகளை இந்த நகரம் தாங்குமா, அதற்கான சூழல் இருக்கிறதா என்று ஆய்வுசெய்தார்கள். இந்தத் தாக்குதல்களின் தாக்கத்திலிருந்து பாரிஸ் விடுபடும் முன்னர் இப்படியான ஒரு பிரமாண்ட நிகழ்வை இந்த நகரம் தாங்காது என்று அரசு அறிவித்தது. பிரான்ஸ் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இருப்பினும் இப்படி ஒரு மாநாடு நடைபெறும் நிலையில், உலக நாடுகளைப் பருவகால மாற்றம் தொடர்பான உடன்படிக்கையில் உறுதியேற்கச் செய்வதில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்பதில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் உறுதியாக இருந்தார்கள். ஓர் அமைதிப் பேரணியை நடத்தவும் திட்டமிட்டார்கள். ‘இந்தப் பேரணியில் காலணிகள் மட்டுமே பங்கேற்கும்’ என அறிவித்தார்கள். உலகம் முழுவதுமிருந்து பருவநிலைச் செயற்பாட்டாளர்கள் தங்களின் காலணிகளை பிரான்ஸுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பாரிஸ் நகரத்தின் Place de la Republique-ல் 11,000 ஜோடி ஷூக்கள், செருப்புகள் அணிவகுத்து நின்றன. `அணிவகுக்கும் காலணிகள்’ (Marching Shoes) என்று இதற்குப் பெயரிட்டார்கள். `ஒற்றைத் திசையில் பத்து லட்சம் பேர்’ என்று இந்த அணிவகுப்பைக் கலைஞர்கள் விவரித்தார்கள். `பாரிஸில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அஞ்சலி செலுத்தும் கால்கள்’ எனவும் இந்த அணிவகுப்பை அழைத்தார்கள்.
ஐ.நா-வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தொடங்கி, போப் ஃபிரான்சிஸ் வரை உலகின் பல முக்கியப் பிரபலங்கள் தங்களின் காலணிகளையும் அனுப்பியிருந்தார்கள். ஒவ்வொரு காலணியிலும் விதவிதமான அலங்காரங்கள், வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. பான் கி மூன் தனது காலணிகளுடன் கைப்பட எழுதிய ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தார். அதில், “உலகமே பாரிஸ் நகரத்தில் பூமி வெப்பமாவதைத் தடுக்கக் கூடியிருக்கும் இந்த வேளையில், நாம் அனைவரும் இங்கே தீவிரவாதத் தாக்குதல்களில் பலியானவர்களின் காலணிகளுக்குள் நின்று உலகில் அமைதியை நிலைநாட்டுவோம்” என்கிற செய்தியை எழுதியிருந்தார்.
பாரிஸ் அணிவகுப்பைத் தொடர்ந்து, இந்த மாநாடு நடைபெற்ற அதேநேரத்தில் பெர்லின், மெல்போர்ன், லண்டன் எனப் பல நகரங்களில் காலணிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. பல காலங்களாக, இதேபோல் காலணிகளை அடுக்கிவைப்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தபோதிலும், பாரிஸ் நிகழ்வுக்குப் பிறகு இந்த வடிவத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
இந்தக் காலணிகளின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, எனக்கு ஆஷ்விட்ஸ் கேம்புக்கு வெளியே குவிந்திருந்த காலணிகள், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலக வர்த்தக மையத்துக்கு வெளியே குவிந்த காலணிகள், 1984 டெல்லியில் நிகழ்ந்த சீக்கிய கலவரத்துக்குப் பிறகு குவிந்த காலணிகள், 1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு அயோத்தியில் குவிந்திருந்த காலணிகள், 1991-ல் கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு வெளியே குவிந்திருந்த காலணிகள் எனப் பல காட்சிகள் நினைவுக்கு வந்தன.
இவ்வாறாக, இன்று ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் பொருட்டு காலணிகளை அணிவகுக்கவைப்பது, உலக அளவில் ஓர் எதிர்ப்பின் வடிவமாக மாறியிருக்கிறது.
1994-ல் அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாசாரத்தின் விளைவாகக் கொல்லப்பட்ட 40,000 பேரைக் குறிக்கும்விதமாக, வாஷிங்டனின் கேபிட்டல் சதுக்கத்தில் வட்ட வடிவில் 40,000 காலணிகள் குவிக்கப்பட்டன. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், தங்கள் மருத்துவத்துக்கு அரசு அதிகமான நிதியை ஒதுக்குமாறு, லண்டன் சுகாதாரத்துறை முன்னர் தங்களின் காலணிகளை அணிவகுத்துவைத்தார்கள். இப்படி மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் எனப் பலர் தங்களின் காலணிகளைப் போராட்டக் கருவியாக மாற்றிவருகிறார்கள். நாமும் நம் காலணிகளைப் பாதுகாப்பாக வைத்திருந்தால், அது இனிவரும் இந்திய வரலாற்றின் முக்கியப் போராட்டங்களில் ஒன்றுக்குப் பயன்படும் என்பது மட்டும் நிச்சயம்!
(தொடரும்)

*******
An Inconvenient Truth!
பருவநிலை மாற்றத்தை ‘இந்த பூமியை நெருங்கியிருக்கும் ஆபத்து’ என்று விவரிக்கும் அல் கோர், ஒரு மிக முக்கியமான சூழலியல் போராளி. இது குறித்து ஒரு முக்கியமான பவர் பாயின்டைத் தயாரித்தார் அவர். அதை உலகம் முழுவதுமாக நடக்கும் பெரும் கூடுகைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் காண்பித்து உரையாற்றியிருக்கிறார். பூமி எப்படி உருவானது, பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன, பூமியில் வாழ்வு எப்படிச் சாத்தியமானது, கரியமில வாயுவை அளப்பதன் முக்கியத்துவம், வளிமண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள், பூமி சூடாவதால் ஏற்படும் சங்கிலித் தொடர் பாதிப்புகள் என இந்த ஆவணப்படம் ஒவ்வொரு கல்லூரியிலும் திரையிடப்பட வேண்டிய ஓர் ஆவணம். பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் உள்ளடக்கிய அவரது உரையை அப்படியே ஓர் ஆவணப்படமாக மாற்றினார் டேவிஸ் குக்கன்ஹீம். உலக அளவில் மிகப் பிரபலமான ஆவணப்படமாகக் கொண்டாடப்பட்டு, பல மில்லியன் டாலரை இந்த ஆவணப்படம் குவித்தது. அல் கோர் வட அமெரிக்காவில் துணை அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!