போராட்டங்களின் கதை - 26 - ஜார்ஜ் ஃபிளாய்ட்: நிறவெறியின் அழுத்தத்தில் மூச்சுத்திணறி இறந்த மானுடன்!

அமெரிக்காவுக்கு வெளியே லண்டனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. லாரி ஓட்டுநரான பெல்லி முஜிங்கா கோவிட்டின் இரண்டாம் அலையில் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் மின்னேசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃபிளாய்ட் என்கிற கறுப்பினத்தவர் ஒரு கடைக்குச் செல்கிறார். அவர் அங்கே வாங்கும் பொருளுக்குக் கடைக்காரரிடம் இருபது டாலர் கொடுக்கிறார். அது கள்ளநோட்டுப்போல இருப்பதாகச் சந்தேகித்த கடைக்காரர், ரகசியமாக போலீஸுக்குத் தகவல் கொடுக்கிறார். உடனடியாக அங்கே வரும் போலீஸ் சந்தேகத்தின் பெயரில் ஜார்ஜ் ஃபிளாய்டை மடக்கிப் பிடிக்கிறது. டெர்ரக் சவுவின் என்கிற போலீஸ் அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்டைத் தரையில் தள்ளி அவரது கழுத்தில் தனது கால் முட்டியை வைத்து பலமாக அழுத்துகிறார். ஃபிளாய்ட் மூச்சுவிட முடியாமல் துடிதுடிக்கிறார். ஆனாலும், அந்த போலீஸ்காரர் தனது பிடியைத் தளர்த்தவில்லை. மூச்சுவிட முடியாத ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார்!
இதுபோல் ஓராயிரம் நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நிகழ்ந்திருந்தபோதிலும், இந்தச் சம்பவம் வழக்கமானதாக இருந்துவிடவில்லை. இந்தச் சம்பவம் நிகழும்போதே அதை 18 வயது இளம்பெண் டார்னெல்லா ஃபிரேசியர் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவுசெய்தார். இந்தக் காட்சி உலகம் முழுவதுமுள்ள தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் ஒளிபரப்பானது.
அமெரிக்காவில் வாஷிங்டன்தான் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்களின் மையமாக இருந்தது. வாஷிங்டன் நகரில் தொடங்கிய போராட்டங்கள், உலகம் முழுவதுமே காட்டுத் தீயாகப் பரவியது. வெள்ளை மாளிகைக்கு அருகில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் பிளாசா என்கிற ஒரு போராட்ட மையம் ஏற்படுத்தப்பட்டது. தினசரி அங்கே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டார்கள். அங்கிருந்துதான் இணையத்தில் பல ஹேஷ்டேக்குகள் உலகை வலம்வந்தன. #BlackLivesMatter #wecantbreathe என்கிற வார்த்தைகள் உலக மக்களை ஒன்றிணைத்தன. `Enough is enough, Stop killing us, Justice for George Floyd’ போன்ற பதாகைகளை உலக மக்கள் ஏந்தினார்கள்.

பெல்லி முஜிங்கா!
அமெரிக்காவுக்கு வெளியே லண்டனில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. லாரி ஓட்டுநரான பெல்லி முஜிங்கா கோவிட்டின் இரண்டாம் அலையில் உயிரிழந்தார். கோவிட் தொற்றின் ஊடே கடுமையான பணிச்சுமையில் அவர் வேலை செய்துவந்தபோது, தன்னுடன் வேலை செய்த ஒரு வெள்ளையர் காரி உமிழ்ந்ததைப் பற்றி மனவேதனையுடன் பகிர்ந்திருந்தார். பெல்லி முஜிங்கா இறந்து ஒரு மாதத்துக்குப் பிறகு, ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது, லண்டனில் நடைபெற்ற போராட்டங்களின் உந்துவிசையாக பெல்லி முஜிங்காவே இருந்தார். பெல்லி முஜிங்கா வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என விசாரணை அதிகாரிகள் அதை மூடியிருந்தபோது, இந்த முறை நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக பிரிட்டனிலுள்ள இனவாதம் வெட்டவெளிச்ச மானது; அம்பலப்படுத்தப்பட்டது.
லண்டனில் காலனிய காலத்தின் பெருமிதங் களாக எஞ்சியிருந்த அடிமை வணிகர்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இனவாத அரசியல் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலைமீது ஒருவர் ‘இவர் ஓர் இனவாதி’ என ஸ்ப்ரே பெயின்ட்டால் எழுதினார். லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக 20,000 பேர் திரண்டனர். லண்டனிலுள்ள பாராளுமன்ற சதுக்கத்துக்குப் பெரும் ஊர்வலமாகப் போராட்டக் காரர்கள் சென்றார்கள். பிரிட்டனிலுள்ள இனவாதத்தை ஆராய, அரசு ஒரு குழுவை அறிவித்தது.
நியூசிலாந்தின் பூர்வகுடிகளான மாவோரிகள் மற்றும் பசிபிக் தீவினர் மீதான வெள்ளையர்களின் வன்மம் குறித்த உரையாடலை இந்தப் போராட்டங்கள் தொடங்கிவைத்தன. வெலிங்டனில் நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் 20,000 பேர் திரண்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலும், சிட்னியிலும் நிகழ்ந்த போராட்டங்கள் அங்கேயுள்ள அபார்ஜின மக்களின் உரிமைகள் குறித்த உரையாடலை மேலும் சூடுபிடிக்கச் செய்தன.
பல்வேறு ஆப்பிரிக்கத் தேசங்களைத் தனது காலனிகளாக அடிமைப்படுத்திவைத்திருந்த பிரான்சில், போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெற்றன. ஜார்ஜ் ஃபிளாய்டைப்போலவே பாரிசில் ஆதம் த்ராவோரே கொல்லப்பட்டார். அவர்மீது மூன்று காவலர்கள் தங்களின் முழு பலத்தையும் பிரயோகித்துக் கொன்றனர். ஆனால் காவலர்கள்மீது எந்த வழக்கும் இல்லை. `எங்களுக்கு விவாதங்கள் வேண்டாம், நீதி மட்டுமே வேண்டும்’ என்று மக்கள் பெரிய அளவில் திரண்டார்கள். கொலம்பியாவில் கோவிட் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதற்காக ஆண்டர்சன் அர்போலேடாவும், அவரின் நண்பர்கள் மூவரும் ஜார்ஜ் ஃபிளாய்டைப்போலவே கொல்லப்பட்டார்கள்.
அமெரிக்க நிலத்தில் அடிமைகள்!
17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களில் அடைத்துக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள், அங்கே வெள்ளை எஜமானர்களுக்கு அடிமைகளாக உழைத்துக் கிடந்தார்கள். அவர்களை அடுத்து லத்தீன் அமெரிக்கர்கள், ஆசியர்கள் எனப் பல அலைகளாக அடிமைகள் அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்பட்டார்கள். அமெரிக்க நிலத்தின் பூர்வகுடிகளான செவ்விந்தியர் களைப்போலவே இவர்கள் அனைவருமே கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். கறுப்பர்கள் எவ்வாறு தங்களின் உடல்களை, உயிரைத் தக்க வைத்துக்கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’ (ரூட்ஸ்) நாவலை வாசிக்கலாம்.
பாகுபாடுகளை, ஒடுக்குமுறைகளை இனியும் சகிப்பதில்லை எனக் கறுப்பின மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டங்கள் இருபதாம் நூற்றாண்டில்தான் பெரிய அளவில் சூடுபிடித்தன. மால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங்கின் குரல்கள் கறுப்பின மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தன. வாக்குரிமை, நியாயமான நீதி விசாரணை, அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, பொதுக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் உரிமைகள் என சிவில் உரிமைகளின் சகாப்தம் 1960-களில்தான் தொடங்கியது.
இத்தனை வரலாற்று உரிமைகள் கிடைத்தபோதும், இன்றைக்கும் அமெரிக்காவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு கறுப்பரை அமெரிக்கக் காவல்துறை கொலை செய்கிறது போன்ற புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பதாகவே உள்ளன. ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நீதிகேட்டுப் போராட்டங்கள் நடைபெற்றபோது, அது கறுப்பின மக்களின் போராட்டமாக இருக்கவில்லை, அதில் எல்லா இன-நிற-நில பேதங்களைக் கடந்து மக்கள் சங்கமித்தார்கள். குடும்பம் குடும்பமாக, குழந்தை குட்டிகளோடு தங்களின் இசைக்கருவிகளோடு, கூடாரங்களோடு மக்கள் சாரை சாரையாகக் குவிந்ததுதான் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் குறியீடாக இருந்தது. ‘நீதி இல்லையேல் அமைதி இல்லை’ என்பதுவே உலகம் முழுவதும் கிளர்ந்தெழுந்த மக்களின் குரலாக இருந்தது.
இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்டுகள் யார் யார்?
இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளாக அமலில் இருக்கும் சாதி என்கிற உலகின் ஆகக் கொடூர நடைமுறை, விதவிதமான சட்டங்கள் போட்டும் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் எத்தனை ஜார்ஜ் ஃபிளாய்டுகள் கொல்லப்படுகிறார்கள்... எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன, வீடுகள் எரிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்திய அரசின் தேசியக் குற்றப்பதிவுப் பணியகம் வருடா வருடம் புள்ளிவிவரங்களை வெளியிட்டபடியே இருக்கிறது.
தலித் மற்றும் பழங்குடிகளின்மீது இந்தியச் சமூகத்தில் நிகழ்த்தப்படும் பாகுபாடுகள், வன்கொடுமைகள் அனைத்தும் இங்கே தற்செயல் நிகழ்வுகள் அல்ல. மாறாக, ஒரு கட்டமைக்கப்பட்ட நடைமுறையாகவே உள்ளது. இந்தியாவிலுள்ள தீண்டாமைகளின் வடிவங்கள், உலகில் வேறு எங்கும் இத்தனை நுட்பமாக இருப்பதாகத் தகவல் இல்லை. இன்றைக்கும் இங்கே ஊர் - சேரியாகவே நம் மக்கள் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள்போல ‘இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது தினசரி நிகழும் வன்கொடுமைகளுக்கு ஏன் இந்தியர்களும் உலகத்தவர்களும் குரல் கொடுப்பதில்லை?’ என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்தியர்களில் முற்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் இந்த வன்கொடுமைகளைப் புனிதத்தின் பெயரில் நிகழ்த்துகிறார்கள். அவர்கள் இந்தப் போராட்டங்களில் பங்குகொள்ள மாட்டார்கள்.
இந்தியாவில் தினசரி நிகழும் வன்கொடுமைகளை, கொலைகளை, ஆணவக்கொலைகளை, வீடுகள் எரிப்பை, பாலியல் வன்கொடுமைகளை, உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களின் தற்கொலைகளை இந்திய ஊடகங்கள் பங்குச் சந்தையின் குறியீடுகளைப்போல் முதன்மைச் செய்திகளாக தினசரி வெளியிட்டால், நிச்சயம் உலக மக்கள் இந்தியாவின் இந்த அகோர நிலைக்கு எதிராக நம்முடன் கைகோப்பார்கள்.
ஐ.நா-வில் நாம் அவ்வப்போது உதிர்க்கும் ‘வசுதேவ குடும்பகம்’ என்கிற வெற்று வார்த்தை, அர்த்தம் பெற வேண்டுமெனில் சாதி, மதங்களைக் கடந்து, இந்த வன்கொடுமைகளுக்கு எதிராகக் குழந்தை குட்டிகளுடன் இந்தியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாகப் பொதுவெளியில் திரள வேண்டும். அந்த நாளில்தான் உலக அரங்கில் நாம் நம்மை மனதாரப் பாகுபாடற்ற தேசமாக அறிவித்துக்கொள்ள இயலும்!
(தொடரும்)
போராளி
மார்ட்டின் லூதர் கிங்
ஆகஸ்ட் 1963-ல், ஆப்பிரிக்கர்களின் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடம் ‘I have a dream’ என்ற உலகப் புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். ``100 ஆண்டுகள் ஆன பிறகும் நாம் இங்கு அடிமைகளாகவே இருக்கிறோம். நியாயம் என்னும் கஜானா இங்கு காலியாகவே இருக்கிறது. நமக்கு இங்கு சமத்துவம் கிடைக்காமல் ஓயப்போவதுமில்லை; அமைதியடையப்போவதுமில்லை. இந்தப் போராட்டம் தீவிரவாதமாக மாறப்போவதில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம்தான். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கும் வரை, போராடிச் சளைத்த நமது தேகம் ஓய்வெடுக்க, நகரத்தின் ஹோட்டல்களில் இடம் கிடைக்கும் வரை, மிசிசிப்பியின் மூலையில் இருக்கும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை, நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்றார். அவருடைய பேச்சின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரகோஷமும் ஆரவாரமுமே இன்றைய கறுப்பின மக்களின் விடுதலையாக மலர்ந்திருக்கிறது!