
இதுவரை கட்டப்பட்டுள்ள பெரிய அணைகள் ஒவ்வொன்றும், கோடிக்கணக்கான மக்களைத் தங்களின் சொந்த நாடுகளிலேயே அகதிகளாக மாற்றியிருக்கின்றன.
நீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மனிதன் வரலாறு நெடுகிலும் முயன்றான். ஒருகட்டத்தில் ஆறுகளைத் தடுத்து மதில் எழுப்பலாம் என்பதை அறிந்தான். கரிகாலச் சோழனால் காவிரிமீது கட்டப்பட்ட கல்லணை இன்றும் உலகின் முன்னோடியான அணைகளில் ஒன்றாக, வரலாற்றின் சாட்சியமாகத் திகழ்கிறது. கல்லணை, வைகை அணை, பெரியார் அணை, பக்ரா நங்கல் அணை, ஹிராகுட் அணை எனப் பல்வேறு அணைகளை நாம் அறிந்திருப்போம். தங்களைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களைச் செழிக்கச் செய்யும் இந்த அணைகளைச் சிறிய அணைகள் என்று வரையறுக்கிறோம்.
பெரிய அணைகள் என்பவை உலகின் பல பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கட்டப்பட்டுவருகின்றன. சீனாவின் யாங்சே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணைகளும் (Three Gorges Dam), குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையும் நாம் நன்கு அறிந்த பெரிய அணைகள். பெரிய அணைகள் கட்டுதல் என்பது இன்று உலக வங்கியின் துணையுடன் நடைபெறும் உலகின் மிகப்பெரும் தொழிலாக உருமாறியிருக்கிறது. உலக அளவிலான அணை-தொழிற்சாலையில், ஆண்டு ஒன்றுக்கு 20 பில்லியன் டாலர் புழங்குகிறது என்றால் அதன் வலிமையை நீங்கள் அறியலாம். இதற்காக, உலகம் முழுவதுமுள்ள ஊடகங்கள், ‘இந்தப் பெரிய அணைகள் வேண்டும்’ என்பவர்களை வளர்ச்சியை ஆதரிப்பவர்களாகவும், எதிர்ப்பவர்களை வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக நிற்பவர்களாகவும் சித்திரித்துவருகின்றன. `அணைகள் என்றாலே அது நன்மைதானே, பெரிய அணைகள் என்றால் அது மேலும் நிறைய நன்மைகளைத்தானே தரும்’ என்பதுதான் மக்களின் பொதுப்புரிதலாக இருக்கிறது. ஆனால் ‘மிகப்பெரிய அணைகள் பல்வேறுவிதமாக இந்தப் புவியை, அதன் சமனை குலைத்துவருகின்றன’ எனப் புவியியல் அறிஞர்கள் எச்சரித்துவருகிறார்கள். `பூமியின் பாறைமண்டலத்தில் மிகப்பெரிய அசைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு இந்தப் பெரிய அணைகளில் தேக்கும் நீரின் எடை அபாயகரமானது’ என்று அவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். `பெரிய அணைகளால் பூகம்பங்கள் வரலாம்’ என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை கட்டப்பட்டுள்ள பெரிய அணைகள் ஒவ்வொன்றும், கோடிக்கணக்கான மக்களைத் தங்களின் சொந்த நாடுகளிலேயே அகதிகளாக மாற்றியிருக்கின்றன. பெரிய நகரங்களின் தெருக்களில் பிச்சைக்காரர்களாக, புழுதிபடிந்த முகங்களுடன் அலையும் கோடிக்கணக்கான மக்கள் யார் என்பதைக் கொஞ்சம் அவர்களிடமே விசாரித்துப் பாருங்களேன். அவர்கள் அனைவருமே காணாமல்போன ஒரு கிராமத்தின் குடிமக்களாகவே இருப்பார்கள். இவர்களைப் பற்றி, இவர்களின் நிலை பற்றி பெரும்பான்மை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எப்போதாவது கவலைப்பட்டதுண்டா, சிந்தித்ததுண்டா?
அப்படி அலைபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருகாலத்தில் சொந்த வீடு, வயல்வெளிகள், கோயில், மாந்தோப்பு, புளியந்தோப்பு, மலைகள் சூழ்ந்த கிராமங்கள், திண்ணைகள் நிறைந்த தெருக்கள், மந்தைகள், சாவடிகள், ஊர்த் திருவிழாக்கள் என அனைத்தும் இருந்தன. அவர்களுக்கு ஒரு நிம்மதியான வாழ்வும் இருந்தது என்பதை அறிந்தால்தான் அவர்களின் வலியை உங்களால் உணர முடியும்.
நர்மதா அணைத் திட்டம்!
மத்தியப்பிரதேசத்தின் அமர்கந்தக் பீடபூமியிலிருந்து கிளம்பிப் பாய்ந்தோடும் நர்மதா ஆறு மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களின் வழியே 1,300 கி.மீ தூரம் பயணித்து அரபிக்கடலில் சங்கமிக்கிறது. இந்த நர்மதா ஆற்றின் குறுக்கே 3,200 சிறிய, பெரிய அணைகளைக் கட்ட அரசு முடிவுசெய்து, உலக வங்கி உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் கடன் கேட்டு விண்ணப்பித்தது. ஜப்பான் அரசும் கடன் கொடுக்க முன்வந்தது. ஆனால், கடன் ஒப்பந்தத்திலேயே தங்களின் சுமித்தோமோ நிறுவனத்திடம் மின்சார உற்பத்திக் கருவிகள் வாங்கும் ஒப்பந்தத்தையும் பெற்றுக்கொண்டது. 1985-ல் 450 மில்லியன் டாலர் கடனை உலக வங்கி உறுதிசெய்தது. ஆனால், 1987-ல்தான் இந்த அணைக்கான சூழலியல் தொடர்பான அனுமதிகள் அரசால் வழங்கப்பட்டன. சர்தார் சரோவர் அணைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எனப் பத்திரிகைகளில் தொடர்ந்து முழுப்பக்க விளம்பரங்கள் வந்தன.
நர்மதா பச்சாவ் அந்தோலன்!
நர்மதா அணைக்கட்டில் மூழ்கும் கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட்டதுமே நர்மதா அணைக்கு எதிரான போராட்டம் தொடங்கிவிட்டது. 1985-ல் மேதா பட்கர் உள்ளிட்ட காந்திய இயக்கத்தார் இந்தக் கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், இந்தத் திட்டம் தொடர்பாக இங்குள்ள கிராம மக்களுடன் எவ்வித கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை என்பதை அறிந்து, விதிமுறை மீறல்களையும், சூழலியல் சீர்கேடுகளையும் பட்டியலிட்டார்கள். அப்போதுதான் மக்களுக்கு வழங்கப்படும் தொகையில் இருக்கும் குளறுபடிகளையும் அறிந்து, அந்தப் பள்ளத்தாக்கில் போராடும் குழுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ‘நர்மதா பச்சாவ் அந்தோலன்’ என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். மேதா பட்கர் தனது முனைவர் பட்ட ஆய்வைக் கைவிட்டுவிட்டு, முழுமையாகப் போராட்டக் களத்துக்குச் சென்றார்.
1989-ல் நடைபெற்ற முதல் போராட்டத்தில், 50,000 பேர் திரண்டார்கள். 1990-ல் 6,000 பேர் ஆற்றின் கரைகளில் 100 கி.மீ தூரம் பாதயாத்திரை சென்றார்கள். ஒரு நதியைக் காக்க, அந்த நதியின் மடியில் வாழும் மக்களைக் காக்க கடந்த 37 ஆண்டுகளாக இடைவிடாமல் மேதா பட்கரின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டம், உலகின் ஒரு முன்னோடியான போராட்டமாக இருக்கிறது. உண்ணாவிரதங்கள், முற்றுகைகள், மறியல்கள், தடியடிகள், கண்ணீர்ப் புகைகள், கைதுகள், சித்ரவதைகள், பாதயாத்திரைகள், நீரில் மூழ்கிப் போராடுதல் என இவர்கள் நடத்திய போராட்டங்களெல்லாம் ஒட்டுமொத்த உலகுக்கும் வரலாற்றுப் படிப்பினையாக மாறி நிற்கின்றன.
அணையின் நீர் மட்டம் அதிகரிக்க அதிகரிக்க, போராட்டங்கள் வலுப்பெற்றன. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், தலைநகரங்களுக்கும், இறுதியாக டெல்லி வரையிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு பக்கம் போராட்டம் நடந்தது. மறுபக்கம் தங்களின் உடைமைகள், வீடுகள், வயல்கள், சொத்துகள் என எல்லாவற்றையும் இந்த வளர்ச்சிக்குப் பறிகொடுத்தபடியே களத்தில் இறுமாப்புடன் நின்றார்கள் மக்கள். ஆயிரக்கணக்கானவர்கள் நீரில் மூழ்கியபடியே தங்களின் வசிப்பிடங்களிலிருந்து அகல மறுத்தார்கள். காக்கிகளின் அடக்குமுறைகளுடன் மக்கள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலகம் முழுவதிலுமிருந்தும் போராளிகள், ஊடகவியலாளர்கள், ஆவணப்பட இயக்குநர்கள் நர்மதா பள்ளத்தாக்கு நோக்கிப் பயணித்தார்கள். அருந்ததி ராய் இந்தப் போராட்டம் குறித்து `The Greater Common Good’ என்கிற மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதினார். ‘இந்தியாவில் இதுவரை கட்டப்பட்டுள்ள அணைகளால் ஐந்து கோடிப் பேர் உள்நாட்டு அகதிகளாக மாறியிருக்கிறார்கள். அவர்கள், நகரங்களின் சேரிகளில் வாழப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு பாலத்தின் கீழ் எலிகளைப்போல் வாழ்கிறார்கள்’ என்பதை உலகுக்கு எடுத்துரைத்தார்.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, உலக வங்கி இந்தத் திட்டத்துக்குக் கடன் கொடுப்பதை ரத்துசெய்தது. இருப்பினும், புதிய கடன்களைப் பெற்று அரசு தொடர்ந்து இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயலாற்றியது. அணை வளர்ந்துகொண்டேயிருந்தது. ஒரு கட்டத்தில் அணைக்கெதிரான போராட்டம், ‘மறுசீரமைப்பு மற்றும் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரங்களை உத்தரவாதப்படுத்தும்’ போராட்டமாக உருமாறியது. இன்றும் அந்த மக்களுக்கு அவர்களின் வாழிடங்கள் மற்றும் வயல்களுக்கு உரிய தொகையை குஜராத் அரசு வழங்கவில்லை. ஆனால், நர்மதா ஆற்றில் சர்தார் பட்டேலுக்கு 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை எழுப்பியிருக்கிறது.
இத்தனை அணைகள் கட்டிய பிறகும்கூட, ஏன் இந்தியாவில் மூன்றில் இருவருக்குத் தண்ணீர் இல்லா நிலை இருக்கிறது... ஏன் இன்னும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு மின்சாரம் இல்லா நிலை இருக்கிறது... ஐ.பி.எல் போட்டிகளின் வெளிச்சத்திலும், அவர்கள் போடும் கூச்சலிலும் இத்தகைய விஷயங்களை நுட்பமாகப் புரிந்துகொள்வது கடினம்தான். ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வுசெய்யப்படுவதற்குச் சற்று முன்னர்தான் அரசு அவரது கிராமத்துக்கு அவசர அவசரமாக மின்சாரம் கொடுத்தது என்பதை அறிந்திருப்பீர்கள் எனில், இதன் அரசியல் உங்களுக்குப் புரியும்!
பெரிய வெடிகுண்டுகள், பெரிய போர்கள், பெரிய நாடுகள், பெரிய பீரங்கிகள், பெரிய தத்துவங்கள், பெரிய மதங்கள் என்பவையெல்லாம் இந்த பூமியை அழிக்கும் ஆற்றல் படைத்தவை. சிறியவற்றையே வரலாறு கோருகிறது. எளிமையே இந்த உலகைக் காக்கும் வழிமுறையாக இருக்க முடியும். ‘சிறியதே அழகு’ என்பதை இயற்கை ஒருநாள் கற்றுத்தரும்!
(தொடரும்)
****

A Narmada Diary!
1990 முதல் 1993 வரை நர்மதா அணைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பள்ளத்தாக்கிலேயே இருந்து இந்த ஆவணப்படத்தை ஆனந்த் பட்வர்தனும், சிமாந்தினி துருவும் எடுத்தார்கள். `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ என்கிற இயக்கம் நிகழ்த்திய, வெவ்வேறு விதமான போராட்டங்கள், அவர்கள் சந்தித்த நெருக்கடிகள் என அனைத்தையும் இந்தப் படம் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது. 1995-ல் வெளியான இந்த ஆவணப்படத்தில், இந்த அணையால் அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களின் விரிவான பேட்டிகளையும் காணலாம். பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், இந்த 58 நிமிட ஆவணப்படத்தை யூடியூப்பில் காணலாம்!