மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 28 - சட்ட எரிப்புப் போராட்டம்: சாதிக்கு எதிரான நெருப்பு!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட சாதி வெறியை, மதவெறியை அடக்குவதற்கு, நாங்கள் சட்டம் கொண்டுவந்திருக்கிறோம் என்று சொன்னால், நான் அதைப் பாராட்டுவேன்.

சாதி ஒழிப்பையும், மனித சமத்துவத் தையும் மையப்பொருளாகக்கொண்டு, 1926-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் தொடங்கப் பட்டது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் எனக் கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தபோதும், அமைப்பு அதன் சாதி ஒழிப்புக் கொள்கையில் விடாப்பிடியாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் சாதி, தீண்டாமை மற்றும் அதன் அடிப்படை யிலான பாகுபாடுகளைத் தன் வாழ்நாளெல்லாம் அம்பலப்படுத்தினார் பெரியார். சாதியற்றச் சமூகமே இயக்கத்தின் லட்சியம் என்பதில் அவர் கறாராக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் செயலாற்றியபோதும் பெரியார் அங்கு நிலவிய சாதியப் பாகுபாடுகளைக் கண்டித்தார், எதிர்த்தார், கலகம் செய்தார். நாடு சுதந்திரம் பெறும் தறுவாயில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த திட்டம் என்னவென்று கேள்வி எழுப்பினார். “போடு... திட்டம் போடு... பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று தீர்மானம் போடு. நாங்கள் ஓடி வருகிறோம். இனி உனக்குச் சமுதாயச் சீர்திருத்தம்தானே திட்டமாக இருக்க வேண்டும்... இந்த ஞானபூமியிலே, இந்தப் புண்ணிய பூமியிலே சூத்திரன் இருக்க மாட்டான்; பஞ்சமன் இருக்க மாட்டான்; பார்ப்பனன் இருக்க மாட்டான்; மனிதர்கள்தான் இருப்பார் கள் என்று போடு உத்தரவை. நான் அபராதம் கொடுத்துவிட்டு காங்கிரஸில் சேருகிறேன்” என்றார் பெரியார்.

இந்தியா ஒரு சுதந்திர நாடாக மலரும்போது, சமத்துவமான நாடாகவே மலர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். ‘`புதிய இந்தியாவில் சாதிகள் இருக்கக் கூடாது. சாதி ஒழிந்திட வேண்டும். அதை அரசே முன்வந்து செய்ய வேண்டும்’’ என்றார். பெரியார் பயந்ததுபோலவே நாடு சுதந்திரம் அடைந்து ஒரு மாதத்திலேயே பிரிட்டிஷ் ஆட்சியில், அரசு உத்தியோகங்களில் இருந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள் அனைத்தும் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் ரத்துசெய்யப்பட்டன. நீதிக்கட்சி போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் நொடிப்பொழுதில் தகர்ந்தன. `மதராஸ் மாகாணத்தில் அதுவரை நடைமுறையில் இருந்த சட்டங்கள் அனைத்தும் இந்திய அரசியல் அமைப்பின் கீழ் செல்லாது’ என்கிற அறிவிப்பும் அடுத்து வந்தது.

போராட்டங்களின் கதை - 28 - சட்ட எரிப்புப் போராட்டம்: சாதிக்கு எதிரான நெருப்பு!

இவற்றை எதிர்த்தும், அன்றே மத்திய அரசு தொடங்கிய இந்தித் திணிப்பை எதிர்த்தும் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை நீதிக்கட்சி தொடங்கி யது. போராட்டம் ஒருபுறமெனில், புதிய அரசியல் அமைப்புக்காகக் காத்திருந்த பெரியார் அது உருவாகும் காலத்திலேயே, “இது மனுதர்மத்தின் மறுபதிப்பாக இருப்பின், அதைக் கொளுத்த வேண்டும்” என்றார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நுணுக்கமாக ஆராய்ந்துவிட்டு அதில் அரசியல் சாசனத்தின் 13(2), 25(1), 29(1,2), 368 பிரிவுகள் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகள் என்பதைக் கண்டறிந்தார். ``இந்தச் சட்டப் பிரிவுகள் நீக்கப்பட வேண்டும்’’ என்கிற கோரிக்கையைப் பெரியார் முன்வைத்தார். ``சாதி ஒழிப்புக்குப் பரிகாரம் கிடைக்காவிட்டால், அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவுகளைக் கொளுத்துவோம்’’ என்று தஞ்சை மாநாட்டில் அறிவித்தார். `1957, நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாட்டின் ஒவ்வோர் ஊரிலும் திராவிடர் கழகத் தொண்டர்கள் இந்தச் சட்டங்களைத் தீயிட்டுக் கொளுத்துவார் கள்’ என்கிற செய்தி அன்றைக்குப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 1949, நவம்பர் 26-ம் தேதி, குடியரசுத் தலைவரால் கையெழுத் திடப்பட்டு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இறுதிசெய்யப்பட்ட அதே தேதியைப் போராட்ட நாளாக உறுதிசெய்தார்.

உலகத்தில் வேறு எங்குமே தங்கள் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அந்த மக்களே எரித்தது இல்லை என்பதால், இதை எப்படிக் கையாள்வது என்பதில் அன்றைய முதல்வர் காமராஜர் கடும் நெருக்கடி நிலையில் இருந்தார். அன்றைய தமிழ்நாடு உள்துறை அமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்தில் அவசர அவசர மாக ‘தேசிய கௌரவ அவமதிப்புத் தடைச் சட்ட முன்வடிவம் 1957’ என்ற சட்ட முன்வடிவை விவாதத்துக்கு உட்படுத்தினார். இதன்மீது பல நாள்கள் விவாதம் நிகழ்ந்தது.

“காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட சாதி வெறியை, மதவெறியை அடக்குவதற்கு, நாங்கள் சட்டம் கொண்டுவந்திருக்கிறோம் என்று சொன்னால், நான் அதைப் பாராட்டுவேன். உலகம் உங்களைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும். ஆனால் சாதியைப் பாதுகாக்கும் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டத்துக்கு எதிராக, தனிச்சட்டத்தை இந்த அரசு கொண்டு வருவது வருத்தத்துக்குரியது” என்று அண்ணா சட்டமன்ற விவாதத்தில் உரையாற்றினார். ‘அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொளுத்து பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை’ என்கிற முடிவுடன் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.

“நான்தான் உயிரைவிடவே தயாராக இருக் கிறேனே, கழகத் தொண்டர்களும் தயாராகத்தானே இருக்கிறார்கள்... பிறகு எப்படி உங்கள் சிறைத் தண்டனைக்கு நாங்கள் பயப்படுவோம்?” என்று கூறிவிட்டு, பெரியார் போராட்டத்துக்கான விரிவான வேலைகளைத் தொடங்கினார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும்போது, தொண்டர்கள் என்ன வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றும் நவம்பர் 20-ம் தேதி `விடுதலை’ இதழில் பதிப்பித்தார்.

நவம்பர் 24 அன்று, தமிழகத்தில் எங்கெல்லாம் போராட்டங்கள் நடைபெறும் என்கிற அறிவிப்பை வெளியிட்ட நிலையில், நவம்பர் 25-ம் தேதி மாலை, பெரியார் வேறு ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதாக வாய்ப்பிருப்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த பெரியார், ‘நான் இல்லாமலும் இந்தப் போராட்டம் முழுத் தீவிரத்துடன் நடைபெற வேண்டும்’ என்றார். ‘பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ, பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ துன்பம், வேதனை உண்டாக்கக்கூடிய ஒரு சிறு காரியம்கூட நடைபெறாமல் இருக்கும்படி ஒவ்வொருவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று வணக்கத்துடன் கேட்டுக்கொள்வதாக’வும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

பெரியார் கைதுசெய்யப்பட்ட செய்தி, தொண்டர்களை மேலும் கனலச் செய்தது. நூற்றுக்கணக்கான ஊர்களில் சட்ட எரிப்புப் போராட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது. 4,000-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கைக்குழந்தைகள் எனப் பெரும் திரளான மக்கள் தமிழகத்தின் சிறைச்சாலைகளை நிரப்பினார்கள்.

சட்ட எரிப்புக் குற்றத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை என்றபோதிலும், ஒவ்வோர் ஊரிலும் இருந்த நீதிபதிகள் விதவிதமான தண்டனைகளை அளித்தனர். மண்ணச்சநல்லூர், உய்யக்கொண்டான் திருமலை ஆகிய ஊர்களில் கைதானவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. வெவ்வேறு வழக்குகளில் பெரியாருக்கு 18 மாதங்கள் தண்டனை வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த பெரியார், மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றார். பெரியார் சிறையிலிருந்து வெளியே வந்தபோதும், சிறையில் 1,500 தொண்டர்கள் அடைபட்டுக் கிடந்தார்கள். ஒரு நாள்கூட ஓய்வில்லாமல் தனது பயணத்தை, போராட்டத்தைத் தொடங்கினார் பெரியார்.

பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி, காரைக்கோட்டை இராமையன், கோவில்தேவராயன்பேட்டை நடேசன், திருவையாறு மஜீத், இடையாற்றுமங்கலம் நாகமுத்து, பொறையாறு தங்கவேலன், இடையாற்றுமங்கலம் தெய்வானை அம்மையார், நன்னிமங்கலம் கணேசன், வரகனேரி சின்னச்சாமி, மாதிரிமங்கலம் இரத்தினம், வாளாடி பெரியசாமி, கண்டராதித்தம் சிங்காரவேலு, சென்னை புதுமனைக்குப்பம் கந்தசாமி, திருச்சி டி.ஆர்.எஸ்.மணி எனப் பலர் சட்ட எரிப்புத் தியாகிகளாக இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள்.

அதே சமகாலத்தில் பாபாசாகேப் அம்பேத்கர், “ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக் கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்?” என்று கேள்விகளை எழுப்பியபடியிருந்தார். வரலாற்று ஆவணங்களை முன்வைத்து, சாதியின் மூலத்தைக் கண்டறிந்து, அதைத் தகர்க்கும் வேலையை பாபாசாகேப் இடைவிடாமல் செய்தார்.

சாதி என்ற அமைப்பு, இந்துக்களிடையே பரஸ்பர நம்பிக்கை, உதவி, ஒருங்கிணைப்பை உண்டாக்குவதே இல்லை. ஒரு சாதி இன்னோர் சாதிக்கு எதிராகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 3,000 சாதிகள் மற்றும் அதன் 25,000 உட்பிரிவுகளில், எந்த இரண்டு சாதிகளும், உட்பிரிவுகளும் சமமானவை அல்ல என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். இனத் தூய்மையைப் பேசும் மதங்களும் சாதிகளும் ஒருபோதும் மக்களை ஒன்றிணைய விடாது. இந்துக்கள் ஒரு சமூகமாக அல்லது தேசியமாக பரிணமிக்க, சாதி என்பது வரலாறு நெடுகிலும் தடையாகவே இருந்துவந்திருக்கிறது.

கீழ்வெண்மணி, மேலவளவு, உத்தப்புரம், பரமக்குடி, தருமபுரி சம்பவங்கள்... தீண்டாமை, இரட்டைக்குவளை, மாட்டின் பெயரால் கொலைகள், ஆணவக்கொலைகள், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கத் தடை, பள்ளிக் கூடங்களில் நிகழும் பாகுபாடுகள், தனி நியாய விலைக் கடை, தனிப் பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்தும் எந்தக் கேடான விதை யிலிருந்து வளர்ந்தன என்பதை யோசிக்க வேண்டியது நம் முதற் கடமை. அதை அறியும் போதுதான் “சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்கிற பாபாசாகேப் அம்பேத்கரின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியும்!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 28 - சட்ட எரிப்புப் போராட்டம்: சாதிக்கு எதிரான நெருப்பு!

சிறையில் இறந்த வீரர்களின் உடல்களை, சிறைக்குள்ளேயே புதைத்தபோது அமைச்சரிடம் போராடி உடலைத் தோண்டி எடுத்து ஊர்வலமாக மரியாதை செய்த நிகழ்வுகள், மூன்று ஆண்டுகள் வரை தண்டனை பெற்று சிறையில் கொடுமைக் குள்ளான போராளிகளின் அனுபவங்கள், மன்னிப்புக் கேட்டு விடுதலையாக மறுத்த பெரியார் தொண்டர்களின் கொள்கை உறுதி, சிறையினுள் இருக்கும்போது தங்கள் தாய், தந்தை மற்றும் உறவுகள் இறந்தபோதும் கலங்காத நெஞ்சுறுதிகொண்ட தொண்டர்களின் கதைகள், நிறைமாத கர்ப்பிணியாகச் சிறைக்குச் சென்று அங்கு குழந்தையை ஈன்றெடுத்த வீரத்தாயின் அசைக்க முடியாத உறுதி, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகான வாழ்க்கை, மறைந்த மற்றும் உயிரோடு வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட இயக்கத்தாரின் சுயசரிதமாகவும் இந்த நூல் திகழ்கிறது. உலகில் மிகச் சிலப் போராட்டங்களுக்குத்தான் இத்தகைய துல்லியமான வரலாறுகள், ஆவணங்கள் கிடைக்கின்றன. அதில் 1957-ல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தின் இந்த ஆவணம் முக்கியமானது!