மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 29 - நைஜீரியா: மௌனமும் ஒரு தேசத்துரோகமே!

நைஜீரியா
பிரீமியம் ஸ்டோரி
News
நைஜீரியா

கச்சா எண்ணெயைத் துரப்பணம் செய்து, அவற்றைச் சுத்திகரிப்பு நிலையங்கள் நோக்கிக் குழாய்களில் கொண்டுசெல்ல வேண்டும்.

நைஜீரியா... ஆப்பிரிக்கத் தொல் பழங்குடிகளின் வசிப்பிடமாகத் திகழும் நாடு. வரலாற்றுக் காலம் தொட்டு அங்கே பழங்குடிக் குழுக்களின் ராஜ்ஜியங்களே இருந்துவந்தன. 1861-ல் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நைஜீரியா, 1914-ல் அவர்களின் காலனி யாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்துதான் அங்கே ஒரு நவீன அரசுக்கான கட்டுமானங்கள் உருவாகின. 1960-ல் பிரிட்டிஷாரிடமிருந்து நைஜீரியா விடுதலை பெற்றது. விடுதலை பெற்ற சில காலத்திலேயே ஜனநாயகம், ராணுவ சர்வாதிகாரம் என இருந்த பழங்குடித் தலைமைகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் அங்கே நிலவியது.

நைஜீரியாவுக்கு விடுதலை கொடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 1958-ல், பிரிட்டிஷார் தங்களின் ‘ராயல் டச் ஷெல்’ நிறுவனத்துக்கு நைஜீரியாவின் ஒகோனி பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் உரிமத்தை வழங்கினார்கள். ராயல் டச் நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அமைக்கும் சமயத்தில், ஒகோனி மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியது. இந்த எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இவற்றைச் சார்ந்த பிற தொழிற்சாலைகளின் பயனாக இந்தப் பகுதியே ஆப்பிரிக்காவின் சொர்க்கமாக மாறும் என்றார்கள்.

ஷெல் நிறுவனத்தினர், ஒகோனி பகுதியில் நூறு எண்ணெய்க் கிணறுகளை அமைத்தார்கள். தங்களின் தொழில்களை விரிவுபடுத்தினார்கள். நைஜீரிய அரசின் மிக முக்கிய வருவாய் எண்ணெயிலிருந்து வருவதால், ஆட்சியாளர்கள் இந்த நிறுவனங்களுக்கு மிகவும் உறுதுணையாகவே இருந்தார்கள்.

உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள், 1990-ல் உலகமயத்துக்குப் பிறகு மூன்றாம் உலக நாடுகளை நோக்கி ஏன் படையெடுத்தனவோ, அதே காரணத்துக்காகத்தான் 1958-லேயே ராயல் டச் ஷெல் நிறுவனம் நைஜீரியாவுக்குப் படையெடுத் தது. சின்னஞ்சிறிய அல்லது வறுமையில் உழலும் நாடுகளில் தொழில் தொடங்கும்போது, எந்தவிதமான தொழில் விதிமுறையையும், சூழலியல் நடைமுறைகளையும், தொழிலாளர் சட்டங்களையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் உரிய வரிகூடக் கட்ட வேண்டியதில்லை. ஆட்சியாளர்களுக்கு மறைமுகமாகக் கப்பம் கட்டினால் போதுமானது. உலகின் பெரிய கார் தொழிற்சாலைகள் இந்தியா நோக்கி வந்ததற்கும், ஆடை நிறுவனங்கள் வங்கதேசம் நோக்கிச் சென்றதற்கும் உங்களுக்குக் காரணம் புரிந்திருக்கும்.

போராட்டங்களின் கதை - 29 - நைஜீரியா: மௌனமும் ஒரு தேசத்துரோகமே!

கச்சா எண்ணெயைத் துரப்பணம் செய்து, அவற்றைச் சுத்திகரிப்பு நிலையங்கள் நோக்கிக் குழாய்களில் கொண்டுசெல்ல வேண்டும். துரப்பணம் செய்யும் இடத்தில் வெளியேறும் வாயுக்களை அங்கேயே உயரமான போக்கிகளின் வழியே எரிப்பார்கள். இதில் அதிகபட்சமான வாயுக்களை எரித்தால், அந்த நிலப்பகுதியின் தட்பவெப்பம் அதிகரித்துவிடும். அதேபோல், இங்கிருந்து எண்ணெயை எடுத்துச்செல்லும் குழாய்களைக் கச்சிதமாகப் பராமரிக்க வேண்டும். ஆனால், ஷெல் நிறுவனம் தங்களின் எண்ணெய்க் கிணறுகள் தொடங்கி தொழிற்சாலைகள் வரை எவ்விதப் பாதுகாப்பு நடைமுறையையும் பின்பற் றாததால், எண்ணெய்க் கசிவு நாளுக்கு நாள் அதிகரித்து, ஒகோனி பகுதியின் ஒட்டுமொத்தச் சூழலையும் அது கடுமையாக மாசுபடுத்தியது. ஒகோனியின் பாசனப் பகுதி முழுவதும் அழியத் தொடங்கியது. ஆறுகள், வயல்கள், நிலம் என எங்கும் எண்ணெய்ப்படலம் மிதந்தது. நீங்கள் ஒரு கை மண்ணை அள்ளினீர்கள் என்றால், உங் கள் கைகளில் எண்ணெய் வழியும். குடிதண் ணீருக்கே மக்கள் மைல் கணக்கில் செல்லவேண் டிய நிலை ஏற்பட்டது. விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் சிதைந்தன.

இந்தப் பகுதியின் நிலையை அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், ‘The Drilling Fields’ என்கிற ஆவணப்படத்தை ஒருமுறை பாருங்கள். இந்த ஆவணப்படத்தில் கவிஞர் கென் சரோ விவா, ஒகோனி எப்படியெல்லாம் அழிவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது என்பதை விவரிக்கிறார். செடிகள், மரங்கள், வனவிலங்குகள் என எல்லாம் நிர்மூல மாகிவிட்டன. துரப்பணம் செய்யும் பெரும் சத்தத்தில் இந்தப் பகுதி மக்கள் கேட்கும் திறனை இழந்துவிட்டார்கள். சுவாசக் கோளாறு உள் ளிட்ட உடல் பிரச்னைகளால் குற்றுயிரும் குலை யுயிருமாக, நடைப்பிணமாக அலைகிறார்கள் மக்கள் என்பதைப் பதைபதைக்க அவர் விவரிக்கிறார். 1960-கள் முதலே இங்கே மழை பெய்தால் அது அமில மழைதான். மழை வந்தால் மக்களின் கைவசமிருக்கும் நீரும்கூட விஷமாக மாறும். ஷெல் நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் 1982 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் 27 வெவ்வேறு நிகழ்வுகளின் மூலம் 60 லட்சம் லிட்டர் எண்ணெய்க் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒப்புக்கொண்டது.

கவிஞர் கென் சரோ விவா தொடர்ந்து இயற்கை குறித்த நுட்பமான கவிதைகளை எழுதியபடியே போராட்டங்களை முன்னெடுத் தார். தனது அரசாங்கத்துக்கு எப்படியாவது எண் ணெய்க் கசிவின் ஆபத்துகளை உணர்த்திவிடக் கடுமையாக முயன்றார். அரசு நினைத்தால்தான் ஷெல் நிறுவனத்தை இந்தச் சூழலியல் சீர்கேடு களுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியும், மக்களுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத்தர இயலும் என்று நம்பினார். 1993-ல் அவர் நிறுவிய ‘Movement for the Survival of the Ogoni People (MOSOP)’ தனது முதல் ஒகோனி பேரணியைத் திட்டமிட்டது. மூன்று லட்சம் பேருடன் இந்தப் போராட்டம் வன்முறைகள் ஏதும் இல்லாமல் மிக அமைதியான முறையில் நடைபெற்றது. இந்தப் பேரணியால் ஒகோனி மக்களின் பிரச்னை முதன்முறையாக வெளி உலகை எட்டியது. இதையடுத்து, இரண் டாவதாகப் பத்தாயிரம் பேருடன் நடந்த போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் நான்கு பேர் இறந்தனர், பலர் படுகாயமடைந்தனர். அரசும், ராணுவமும், காவல்துறையும், ஷெல் நிறுவனம் வீசும் எலும்புத் துண்டுகளுக்காகவே இந்த அராஜகங்களை நிகழ்த்துகிறார்கள் என்பது வெட்டவெளிச்ச மானது.

1993-ல் கென் சரோ விவா நான்கு முறை கைது செய்யப்பட்டார், அவரது கடவுச்சீட்டு முடக் கப்பட்டது. தேசத்துரோகம், அரசுக்கு எதிராகக் கவிதைகள் பிரசுரித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர் 31 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறை யிலிருந்து வெளியே வந்ததும், மக்களை அணி திரட்டுவதில் மிகத் தீவிரமானார். ஷெல் நிறுவனம் தொடர்ந்து ஆயுதம் ஏந்திய குழுக்களை நியமித்து, எளிய மக்கள்மீது வன்முறையை ஏவியதில், ஒகோனி மக்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை, உடைமைகளை இழந்து நிர்க் கதியானார்கள். `Operation 4/94’ என்கிற நடவடிக்கையை அரசு தொடங்கியது. மக்களைப் பார்க்கும் இடமெல்லாம் ராணுவமும், அடியாட்களின் குழுக்களும் குறிவைத்துத் தாக்கினார்கள். ஒகோனி பகுதியை வெளி யுலகத்திலிருந்து முற்றிலும் துண்டித்தார்கள்.

1994-ல் கென் சரோ விவா மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்தபடியே ஒகோனி மக்களின் நிலை குறித்து எழுதிக் கொண்டேயிருந்தார். எட்டு மாதங்கள் கடுங் காவலில் அவரது உடல்நலம் நலிவுற்று இதயப் பிரச்னை ஏற்பட்டது. ஷெல் நிறுவனத்தின் அடியாள்போல் இயங்கிய நைஜீரிய அரசு, அவர்மீது விதவிதமான வழக்குகளைப் போட் டது. ஒரு போராட்டத்தில் நான்கு பேர் கொல் லப்பட்டார்கள். இந்த இறப்புக்கும் வன்முறை களுக்கும் ‘மொசப்’ அமைப்புதான் காரணம் என அவர்கள்மீது கொலை வழக்கு பதிவுசெய்யப் பட்டது. மிகவும் துரிதமாக நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கில், ஒன்பது பேருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அதிரடியாக ஏற்பாடு செய்தார்கள். கென் சரோ விவாதான் அன்று முதல் நபராகத் தூக்கிலிடப்பட்டார். “கடவுளே என் உயிரை எடுத்துக்கொள். ஆனால், இந்தப் போராட்டம் தொடரட்டும்...” என்று அவர் முழக்கம் எழுப்பியபடியே உயிரிழந்தார்.

‘ஒகோனி ஒன்பது’ (Ogoni Nine) என்று அழைக் கப்படும் இந்த அவசரகதியிலான தூக்குத் தண்டனை உலக அளவில் பெரும் கண்டனங் களுக்கு உள்ளானது. நைஜீரியாவைக் கண்டித்து ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காமன் வெல்த்திலிருந்து நைஜீரியா மூன்று ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டது. பல நாடுகள் தங்களின் தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டன. நைஜீரியா ராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயகம் நோக்கித் திரும்ப வேண்டும் எனச் சர்வதேச அழுத்தங்களும், உள்ளூர்ப் போராட் டங்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன.

ஷெல் நிறுவனத்துக்கு எதிராகப் பல நாடுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஷெல் நிறுவனத்தின் அலட்சியம் அம்பலமானது. ஷெல் நிறுவனத் துக்குப் பெரும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. இந்தத் தீர்ப்புகள் வெளிவருவதற்கு முன்னரே உலகின் பல நாடுகளில் கடுமையான சீர்கேடுகளை ஷெல் நிறுவனம் செய்து முடித்திருந்தது. வளர்ச்சி யும் சர்வாதிகாரமும் கைகோக்கும் இடங்களில் எல்லாம், மக்களின் குரல்வளைகள் நசுக்கப் படுவதும், சமூகத்தில் ஒரு சுடுகாட்டு அமைதியை ஆட்சியாளர்கள் கொண்டுவர முயல்வதும் ஒரு சூத்திரமாக மாறிவருகிறது. ஆனால், வரலாறு நெடுகிலும் எளிய மக்கள் எல்லா அடக்குமுறைச் சூத்திரங்களுக்கும் தங்கள் போராட்டங்களால் விடையை அடைந்திருக்கிறார்கள் என்பது காலம் நமக்குத் தரும் நம்பிக்கையான செய்தி!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 29 - நைஜீரியா: மௌனமும் ஒரு தேசத்துரோகமே!

கென் சரோ விவா

Songs in a Time of War, On a Darkling Plain: An Account of the Nigerian Civil War, The Transistor Radio, A Month and a Day: A Detention Diary ஆகியவை கென் சரோ விவாவின் முக்கிய நூல்கள். ‘மெளனமும் ஒரு தேசத்துரோகமே’ (Silence would be a Treason) என்பது அவர் மரணத்துக்குச் சற்று முன்னர் எழுதிய புத்தகம். சிறையில் இருந்த கென் சரோ விவாவுக்கு, நோபல் பரிசுக்கு இணையான ‘The Right Livelihood Award’ வழங்கப்பட்டது. கென் சரோ விவாவை விடுதலை செய்ய வலியுறுத்திப் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. 1995-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் ‘கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. ‘நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில், ஒன்று நாம் வென்றாக வேண்டும் அல்லது நாம் கொல்லப்படுவோம். ஏனென்றால், தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை’ என்கிற கென் சரோ விவாவின் வார்த்தைகள் உலகம் முழுவதும் சர்வாதிகாரிகளின் கீழ் மக்கள் படும் துயர்களின் சாட்சியமாக இருக்கின்றன!