மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 3

போராட்டங்களின் கதை
News
போராட்டங்களின் கதை

அபாரிஜின்கள்: கூடாரப் போராட்டமும் அரை நூற்றாண்டாக எரியும் நெருப்பும்!

1972 ஜனவரியில், நான்கு அபாரிஜின் இளைஞர்கள் சிட்னியிலிருந்து ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெர்ராவுக்குப் பயணமானார்கள்!

`அபாரிஜின்கள்’ என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்கள், தொடர்ந்து தங்களின் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள்; அந்நியப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் நில உரிமை மறுக்கப்பட்டது. மெல்ல அவர்களை அப்புறப்படுத்திவிட்டு, அவர்களின் நிலத்திலுள்ள கனிம வளங்களை வெட்டியெடுக்க, பெரும் நிறுவனங்களுக்கு அவை வழங்கப்பட்டன. பொருளாதார விடுதலைக்கு நிலம் முக்கியம் என்பதை உணர்ந்து, அம்மக்கள் தங்களின் நில உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் கண்டார்கள். அப்படி முறையிட்டபோது, அரசு “நீங்கள் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றது, “யார் நிலத்தை யாரிடம் குத்தகைக்கு எடுப்பது... இது எங்கள் நிலம்” என்கிற குரலோடு அந்த இளைஞர்கள் கான்பெர்ராவுக்கு வந்து சேர்ந்தார்கள். `சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே போராடுகிறோம். ஆனால், இந்த முறை நம் குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும்’ என்ற உறுதியுடன், தங்களின் போராட்டத்தைத் திட்டமிட்டார்கள்.

ஆஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்துக்கு வெளியிலுள்ள பூங்காவில் அவர்கள் நால்வரும் ஒரு கடற்கரைக் குடையை நட்டார்கள். அந்தக் குடையில் அபாரிஜின தூதரகம் ‘Aboriginal Embassy’ என்கிற வார்த்தைகளைப் பொறித்தார்கள். `எங்கள் சொந்த நிலத்தில் நாங்கள் அந்நியமாக உணர்கிறோம். வேற்றுக்கிரகவாசிகள்போல் உணர்கிறோம். நாங்கள் அந்நியர்கள் எனில், எங்களுக்கு இந்த நாட்டில் ஒரு தூதரகம் வேண்டும்தானே?’ என்கிற வலியை வாசகமாக்கியிருந்தார்கள். அத்துடன், தங்களின் கோரிக்கைகளைப் பதாகைகளாக எழுதிவைத்துப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

‘அபாரிஜின தூதரகம்’ என்ற சொல், ஆஸ்திரேலியாவில் அபாரிஜின்கள் எந்த அளவுக்கு அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஆஸ்திரேலிய மக்களுக்கும், உலகுக்கும் உணர்த்தியது. 1972, பிப்ரவரி 6-ம் தேதி, அபாரிஜின தூதரகம் தங்களின் கோரிக்கைகளை முழுமையாக வெளியிட்டது. ‘வடக்கு ஆஸ்திரேலியா முழுவதையும் அபாரிஜின்கள் ஆட்சிசெய்ய வேண்டும். அங்கே ஓர் அபாரிஜின நாடாளுமன்றம் கட்டப்பட வேண்டும். வடக்கு ஆஸ்திரேலியாவில் கனிம வளம் வெட்டியெடுக்கப்படும் பணி தங்கள் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும். அந்தக் கனிம வளங்களில் தங்களுக்கான ஈவுத்தொகையை (பங்கை) வழங்க வேண்டும். ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள அபாரிஜின்களின் புனிதத் தலங்கள் அனைத்தும் தங்களின் கட்டுப்பாட்டில் விடப்பட வேண்டும். தங்களிடமிருந்து அரசு அபகரித்த நிலங்களைத் திருப்பித் தர வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்!’

போராட்டங்களின் கதை - 3

ஆஸ்திரேலியாவின் எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். இது, அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. இந்தச் செய்தி ஆஸ்திரேலியா முழுவதும் பரவியது. அடுத்தடுத்து அபாரிஜின போராளிகள், நில உரிமைப் போராளிகள், வழக்கறிஞர்கள் எனப் பலர் கான்பெர்ரா நோக்கிப் படையெடுத்தனர்.

1972 பிப்ரவரியில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நேரம், நாடாளுமன்றத்தின் பூங்காவில் 11 டென்ட்டுகளை போராட்டக்குழுக்கள் அமைத்திருந்தார்கள். ‘இது ஒரு நாடாளுமன்றம். நாங்கள்தான் இந்த மண்ணின் மைந்தர்கள். நாங்கள்தான் ஆட்சி செய்வோம். இந்தக் கூடாரத்திலிருந்தபடி ஆஸ்திரேலியாவை ஆட்சி செய்வோம்’ என்று அறிவித்தார்கள். அபாரிஜினக் கொடி அங்கு ஏற்றப்பட்டது. அவர்களே தங்களுக்குள் அமைச்சகப் பொறுப்புகளைப் பிரித்துக்கொண்டதாக அறிவித்தார்கள். `இது அபாரிஜின்களின் நாடாளுமன்றம். இதன் அருகே வாகனங்களை நிறுத்தக் கூடாது’ என்று சுவரிலும் எழுதினார்கள்.

ஆஸ்திரேலிய தேசிய மாணவர் சங்கத்தின் ஆதரவை, அபாரிஜினத் தலைவர்கள் கோரியபோது மாணவர்கள் உடனடியாகக் கிளம்பிவந்து கூடாரங்களில் அமர்ந்துகொண்டார்கள். மெல்ல மெல்ல சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. சோவியத் தூதர்கள், அயர்லாந்து ராணுவ வீரர், கனடிய இந்தியர்கள் எனப் பலர் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், `போராட்டக்காரர்களை நாடாளுமன்ற வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும்’ என ஆஸ்திரேலிய அரசு நினைத்தது. ஜூலை 20-ம் தேதி, காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டது. கூடாரங்கள் அகற்றப்பட்டு, பலர் கைதுசெய்யப்பட்டார்கள். மூன்றே தினங்களில் 200 போராட்டக்காரர்கள் மீண்டும் அதே இடத்தில் கூடாரங்களை அமைத்தனர். மீண்டும் காவல்துறையினர் அவர்களை அகற்றினர். இம்முறை மேலும் அதிகமான அபாரிஜின்களைக் கைதுசெய்தனர்.

‘நாடாளுமன்ற வளாகம்’ தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், ‘இந்த இடம் காமன்வெல்த்துக்குச் சொந்தம் என்பதால் அபாரிஜின மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்த இயலாது’ எனத் தீர்ப்பு வழங்கியது. உடனே அரசு இதை மாற்றியமைக்கும்விதமாக, புதிய சட்டத்தை இயற்றி, கையுடன் கூடாரங்களையும் அகற்றி அனைவரையும் கைதுசெய்தது. ஆனால், அடுத்த வாரம் அதாவது 1972, ஜூலை 31-ம் தேதி, 2,000 பேர் நாடாளுமன்றத்தின் பூங்காவில் திரண்டனர். இம்முறை ஏராளமான கூடாரங்களை அமைத்தனர்.

இப்படியாக, 1972 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் ‘அபாரிஜினத் தூதரகங்கள்’ ஆஸ்திரேலியா முழுவதும் அமைக்கப்பட்டன. பிரிஸ்பேன், கெளரா, ஜேம்ஸ் பிரின்ஸ் பாயின்ட், மூர், பெர்த், போர்ட் அகஸ்டா, போர்ட்லாண்ட், ரெட்ஃபெர்ன், சாண்டன் பாயின்ட், ஸ்வான் வேலி, வூமேரா என ஆஸ்திரேலியாவெங்கும் அபாரிஜின நாடாளுமன்றக் கூடாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. அவர்கள் தொடர்ந்து தங்களின் நில உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம், சுயநிர்ணய உரிமை, இறையாண்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிவந்தனர். ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய உத்திகளில், புதிய போராட்ட முறைகள் முளைத்த வண்ணம் இருந்தன.

2003-ல் இந்தக் கூடாரங்களில் ஏற்பட்ட மர்மமான தீயில், அவர்களின் 31 ஆண்டுக்கால ஆவணங்கள் சாம்பலாகின. ஆனால், மீண்டும் சில தினங்களில் கூடாரங்கள் அங்கே முளைத்தன. போராட்டம் வலிமை பெற்றுக்கொண்டே வந்தது. 2012-ல், தங்களின் 40-வது போராட்ட ஆண்டைப் பெரிதாகக் கொண்டாடினார்கள். இரு தினங்கள் தொடர் சொற்பொழிவுகள், இசை, நாடகங்கள் என நிகழ்வுகள் நடைபெற்றன. ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்தும் அபாரிஜின மக்கள் வந்து, இந்தக் கூடாரத்தின் நிர்வாகத்தைத் தங்களுக்குள் மாற்றி மாற்றிச் சுற்றுகளில் நடத்தினர். 1972-ல் தொடங்கிய அவர்களது போராட்டமும் இந்தக் கூடாரமும், ஆஸ்திரேலிய அரசியலில் தனக்கான நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டது. 50 ஆண்டுகளாக அவர்களின் போராட்டம் இடைவிடாது இன்றும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்பது பெரும் வியப்பான செய்தி.

250 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள், அந்த நாட்டின் பூர்வகுடிகளை இரண்டாம் பிரஜைகளாகவே மாற்றிவிட்டார்கள். இருப்பினும், எல்லா துயரங்களையும் தாண்டி அங்கே ஒரு தலைமுறை, தங்களின் உரிமைகளுக்காகப் போராடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். அவர்களின் நிலத்தில் வெட்டியெடுக்கப்படும் கனிம வளங்களிலிருந்து ஒவ்வொருவருக்கும் பங்கு கொடுக்கப்படுகிறது. இந்த அபாரிஜினக் கூடாரங்கள் பலமுறை ஆஸ்திரேலிய பிரதமர்களை மன்னிப்புக் கோர வைத்துள்ளன.

உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர்களை இந்தக் கூடாரம் ஈர்க்கத் தொடங்கியது. இங்குள்ள கூடாரங்களின் மத்தியில் ஒரு நெருப்பு 50 ஆண்டுகளாக எரிந்த வண்ணம் உள்ளது. இங்கே வரும் அபாரிஜின்கள் அனைவரும், கையில் நிறைய பசை/எண்ணெய்ச் சத்துடன்கூடிய இலைகளைக் கொண்டு வருகிறார்கள். அந்த இலைகளை நெருப்பில் இடுவது, ஒரு புரட்சிகரமான சடங்குபோல் நடைபெறுகிறது. அங்கே வரும் பார்வையாளர்களுக்கு, போராட்டம் குறித்த முழு வரலாற்றையும் விளக்குகிறார்கள். இந்தக் கூடாரத்தில் நடைபெறும் உரைகள், இசை என அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் அவர்களின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

நான் அங்கு சென்றபோது, முதல் நாளே இந்த டென்ட் அசெம்பிளிக்குச் சென்று, அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டேன். உலக வரலாற்றில் நிகழும் ஒரு முக்கியப் போராட்டத்தின் நெருப்பில் நானும் சில இலைகளை இட்டேன். பெரிய எண்ணிக்கையில் அபாரிஜின்கள் அமர்ந்திருந்தார்கள். பொதுவாக அவர்கள் அந்நியர்களுடன் தனிப்பேச்சில் ஈடுபடுவதில்லை. அங்கே ஓர் அபாரிஜின் என்னைப் பார்த்து “நீ எங்கள் சகோதரன்” என்றார். தோற்றத்தில் நாம் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம். “மனதார நான் உங்கள் பக்கமே நிற்கிறேன்” என்று சொல்ல... என் கண்கள் பனித்தன.

அங்கிருந்து வெளியேறி, தொலைவில் நின்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தையும், அதன் பூங்காவில் நடக்கும் போராட்டத்தையும் ஒருசேரப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ‘இந்தியாவின் நாடாளுமன்ற வாயிலின் அருகில், யாரெனும் இப்படி போராட்டம் நடத்திவிட இயலுமா?’ என்கிற கேள்வி மனதில் எழுந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை!

(தொடரும்)

போராளி

போராட்டங்களின் கதை - 3

ஜியோஃப்ரே குர்ருமுல் யூனுபிங்கு (Geoffrey Gurrumul Yunupingu)

1971-ல் பிறந்த யூனுபிங்கு ஓர் அபாரிஜின். குழந்தைப் பருவம் முதலே தன் பாட்டியிடமிருந்து கதைகள், பாடல்கள் வழியாகத் தன் நிலத்தின் எல்லாப் பண்பாட்டுக் கூறுகளையும் கேட்டு வளர்ந்தார். அவர் பார்வைச் சவால்கொண்டவர் என்பதால், அவரால் இவை அனைத்தையும் கேட்க மட்டுமே முடியும். இசையைக் கேட்டுக் கேட்டு, அவர் பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். மெல்ல மெல்லப் பல இசைக்குழுக்களில் இணைந்து கோரஸ் பாடி, அதன் வழியே தனக்கான ஓரிடத்தைப் பெற்றார். ‘யோது யிண்டி’, ‘சால்ட்வாட்டர் பேண்ட்’ உள்ளிட்ட இசைக்குழுக்களில் பாடியவர், 2008-ல் தனது முதல் சொந்த ஆல்பத்தை வெளியிட்டார். உலகம் முழுவதுமிருந்து பாராட்டைப் பெற்றார். வாய்ப்புகளும் வருமானம் குவிந்தன. அனைத்தையும் அபாரிஜின முறைப்படி தன் குடும்பத்தார், சமூகத்தாருடன் பகிர்ந்துகொண்டார். அவரைப் பேட்டியெடுக்க பல ஊடகங்கள் துரத்தியபோதும், `என்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. எங்கள் பாடல்களைக் கேளுங்கள். அதில் எங்களின் ஒட்டுமொத்த வலியும் பொதிந்துள்ளது’ என்றார். அபாரிஜின மக்களின் வலிகளை இசையாக்கி நிரந்தரப்படுத்திவிட்டு, 2017, ஜூலை 17-ம் தேதி மறைந்தார். இணையத்தில் கிடைக்கும் அந்தப் பாடல்களை இன்றிரவு நீங்கள் கேட்கலாம்!