மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 30 - ரேச்சல் கார்சன்: இயற்கையை மீட்க வந்த வசந்தம்!

ரேச்சல் கார்சன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேச்சல் கார்சன்

ரேச்சல் கார்சன் அமெரிக்க மீன்வளத்துறையில் பணிபுரிந்துவந்தார். அவர் மீன்களின் இனப்பெருக்கம் சார்ந்த தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

மனிதன் வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கியது முதலே, அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பார்த்தபடிதான் இருந்தான். அப்படிச் செய்துபார்த்த பல பரீட்சார்த்த முயற்சிகளின் வழியேதான் மனிதகுலம் ஏராளமான பாடங்களைக் கற்றது. மெசபடோமியாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூச்சிகளை விரட்டியடிக்க கந்தகத்தூளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்படிப் பூச்சிகளை விரட்ட விஷச்செடிகளைப் பயன்படுத்துவது, வேம்புக் கரைசல்கள், புகையிலைச் சாறுகளைப் பயன்படுத்துவது என ஏராளமான நடைமுறைகள் நிலத்துக்கு நிலம் இருந்திருக்கின்றன. இதில் கடைசியாக வந்து சேர்ந்தது ரசாயனம்!

15-ம் நூற்றாண்டில் மனிதன் ரசாயனங்களைக் கையாளக் கற்றுக்கொண்டதும், புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினான். 1874-ல் DDT (டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்) கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, பொதுமக்கள் மற்றும் படைவீரர்களுக்கு ஏற்பட்ட மலேரியா காய்ச்சலைக் கட்டுப்படுத்த பெருமளவில் இது பயன்பட்டது. 1948-ல் பால் மில்லர்தான் அதன் பயன்பாட்டை இன்னும் துள்ளியமாக நிறுவினார். ராணுவ ஆராய்ச்சிகளின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட DDT, போர் முடிந்ததும் செயற்கைப் பூச்சிமருந்தாகச் சந்தையில் அறிமுகமானது. இந்தப் பூச்சிமருந்து பெரும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு, பசுமைப் புரட்சியின் முக்கிய இடுபொருளாக உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. அமெரிக்காவில் விவசாயப் பண்ணைகளின் கிட்டங்கிகளில் பெரும் பீப்பாய்களில் இந்தப் பூச்சிமருந்தை நிரந்தரமாக வைத்திருக்கும் அளவுக்கு அதன் பயன்பாடு சென்றது.

பொதுவாக அமெரிக்காவில் பனிக்காலத்தின் கடுங்குளிரைப் பறவைகளால் தாங்க முடியாது. இதனால் ராபின் பறவைகள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு வலசை சென்று, வசந்தம் பிறக்கும்போதுதான் மீண்டும் திரும்பும். ஆனால், அம்முறை வசந்தத்துக்குக் கட்டியம் கூறும் அந்த ராபின் பறவைகள் திரும்பவில்லை என்பதை ரேச்சல் கார்சன் என்பவர் கவனித்தார். வசந்தகாலத்தை அறிவிக்கும் இயற்கையின் ஒலி காணாமல்போனதும் இந்த மெளனமான வசந்தத்தை அவரால் ஏற்க முடியவில்லை.

போராட்டங்களின் கதை - 30 - ரேச்சல் கார்சன்: இயற்கையை மீட்க வந்த வசந்தம்!

அமெரிக்க நகரங்களின் சாலையோர மரங்களின் இலைகளை சிவப்பு எறும்புகள் தின்று அழித்துக்கொண்டிருந்தன. அந்த எறும்புகளை அழிக்க, பூச்சிக்கொல்லியை ஹெலிகாப்டர் மூலம் தெளித்தார்கள். எறும்புகள் செத்துப்போயின. இத்துடன் அது நிற்கவில்லை. நஞ்சு படிந்த இலைகள் உதிர்ந்தன, அதைத் தின்ற மண்புழுக்களும் இறந்துபோயின. மண்புழுவைத் தின்ற ராபின் பறவைகளும் இறந்துபோயின. ஹெலிகாப்டரிலிருந்து தெளித்த நஞ்சு, நீரில் கலந்து மீன்கள் செத்து நீரோடைகளில் மிதந்தன. அமெரிக்காவின் தேசியப் பறவையான வழுக்கைத்தலை கழுகு மறைந்து வருவதையும் ரேச்சல் அவதானித்தார். மறுபுறம் அமெரிக்காவின் பல பகுதிகளில் கொசுக்களை ஒழிக்கக்கூட DDT-ஐ ஹெலிகாப்டர்களிலிருந்து தெளிக்கத் தொடங்கினார்கள்.

ரேச்சல் கார்சன் அமெரிக்க மீன்வளத்துறையில் பணிபுரிந்துவந்தார். அவர் மீன்களின் இனப்பெருக்கம் சார்ந்த தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். இயற்கையின்மீது அளவற்ற பிரியம் கொண்டவர் என்பதால், இந்த ஆய்வுகள் அவர் மனதுக்கு நெருக்கமாக இருந்தன. ‘Under the Sea-Wind’ மற்றும் ‘The Sea Around Us’ ஆகிய அவரது நூல்கள் அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. மீன்களைக் கூர்ந்து கண்காணித்த ரேச்சலுக்குப் பறவைகள், மண்புழுக்கள் சூழலிலிருந்து காணாமல்போவதைச் சட்டென உணர முடிந்தது. உடனே களத்தில் இறங்கிய ரேச்சல், ஊராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை தொடங்கி விஞ்ஞானிகள் வரை தேடித் தேடிச் சந்தித்தார். அதிவிரைவில் பிரச்னையின் மையப்புள்ளிக்கு வந்து சேர்ந்தார். தான் கண்டறிந்தவற்றைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார்.

DDT ரசாயனத்தைத் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டன. அவர்கள், தங்களின் பிரசாரத்தைத் தொடங்கினார்கள். ரேச்சலுக்குத் தனிப்பட்ட முறையில் கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். அவரை மிரட்டினார்கள். எதிர்ப்பு வலுக்க, ரேச்சல் தான் ஒரு மகத்தான காரியத்தைச் செய்வதாக உணர்ந்து மேலும் தீவிரமாக எழுதினார். இந்த ரசாயனத்தின் விளைவுகளை அம்பலப்படுத்தினார். செடிகள், பயிர்கள், தாவரங்கள், பறவைகள், பூச்சிகள் தொடங்கி இவற்றைக் கையாளும் மனிதர்கள் வரை பாதிப்புகளின் முழுமையான சங்கிலித்தொடரைத் தன் ஆய்வின் மூலம் நிறுவினார். இந்த ரசாயனத்தால் விளைகிற தானியங்களை உண்ணும் மனிதர்களுக்கு ஏராளமான பாதிப்புகள் வந்துசேர்கின்றன என்பதும், சமூகத்தில் இத்தனை புற்றுநோய் பெருகியதற்குக் காரணமே இந்த நஞ்சுதான் என்பதும் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த ஆய்வுகளின்போது ரேச்சல் கார்சன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயுடன் போராடியபடியே ‘நியூ யார்க்கர்’ நாளிதழில் ‘மௌன வசந்தம்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதினார். அமெரிக்க வரலாற்றில் ஒரு தொடர் இத்தனை தீவிரமாக வாசிக்கப்பட்டதில்லை. பொறுப்பற்ற விஞ்ஞான ஆய்வுகளும், குறுக்குவழியிலான லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு இயங்கும் முதலாளித்துவமும் எப்படி பெரும் கேடுகளை இந்த பூமிக்கும் இயற்கைக்கும் விளைவிக்கின்றன என்பது மக்கள் மத்தியில் ஒரு விவாதமாக மாறியது. ரேச்சலின் தொடர் வெளிவந்தபோது, பெரும்பான்மையாகப் பெண்கள்தான் இந்தத் தொடரைத் தீவிரமாக வாசித்தார்கள். பெண்களின் கண்களுக்குத்தானே பறவைகளும் புழுக்களும் முதலில் தெரியும்..!

1962-ல் ‘மெளன வசந்தம்’ நூலாக வெளிவந்தவுடன் உடனடியாக விற்றுத் தீர்ந்தது. நூலைப் பெண்கள்தான் முதலில் முழுமையாக உள்வாங்கினார்கள். அதன் பிரதிகளைக் கைப்பற்றுவது வாசகர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது.

சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களில், உலகம் முழுவதும் பெண்கள் முன்னணியில் நிற்பதுபோலவே, அமெரிக்காவில் ரேச்சலின் வாசகர்கள் தன்னெழுச்சியாகத் தெருக்களில் சங்கமித்தார்கள். பெரும் போராட்டங்கள் வெடித்தன. ரேச்சல் கார்சன் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் தனது ஆய்வுகளின் முடிவுகளை ஜனாதிபதிக்கு விளக்கினார். அமெரிக்காவில் DDT பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடைவிதித்தது. இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவில் U.S Environmental Protection Agency என்கிற இயற்கையைப் பாதுகாக்கும் அரசு நிறுவனம் உருவாக வழிவகுத்தது.

நீண்டகாலம் நம் கிராமங்களில் பூச்சிமருந்து என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. ‘மருந்து’ என்கிற இந்தச் சொற் பிரயோகத்திலும் முதலாளிகளின் நுட்பமான வியாபார அரசியல் மறைந்திருக்கிறது. நம்மாழ்வார், பாமயன், கோமதிநாயகம் எனத் தமிழகத்தில் ஒரு பெரும் இயற்கை வேளாண்மை அலை வீசிய பிறகுதான் அது ‘பூச்சிமருந்து’ இல்லை ‘பூச்சிக்கொல்லி’ என்று புரிந்துகொள்ளப்பட்டது. அது ‘மருந்து’ இல்லை `நஞ்சு, விஷம்’ என்கிற முதலாளித்துவத்தின் வார்த்தை விளையாட்டு முடிவுக்கு வந்தது. இந்த நஞ்சு, பூச்சிகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கொல்லும். இந்த நஞ்சை அருந்தினால் மனிதனும் இறப்பான், ஆகையால் இது பூச்சிக்கொல்லி அல்ல உயிர்க்கொல்லி என்கிற தெளிவுகளைப் பெற்றோம். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண்மை பொய்த்துப்போனதால், கடன்காரர்களுக்கு பயந்து அவர்கள் வசம் மீதமிருந்த உயிர்க்கொல்லி நஞ்சை உட்கொண்டுதான் இந்த பூமியிலிருந்து விடைபெற்றார்கள்.

இன்றைக்கும் உலகம் முழுவதுமே இந்தப் பூச்சிகொல்லிகளின் நஞ்சு, ஒட்டுமொத்த இயற்கையின் சுழற்சியிலும் இருக்கத்தான் செய்கிறது. காய், கனி, பால், முட்டை, இறைச்சி, குடிநீர் என அனைத்திலும் அதன் மூலக்கூறுகள் உள்ளன. அவ்வளவு ஏன்... தாய்ப்பாலிலும்கூட உள்ளது என்று ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன.

மண்புழுக்களை உண்ட பறவைகளில் சில கூடு கட்டவில்லை. சில பறவைகள் கூடு கட்டின. ஆனால் முட்டை இட்டனவே தவிர குஞ்சு பொரிக்கவில்லை. முட்டையிலிருந்து 13 நாள்களில் வெளிவரவேண்டிய குஞ்சுகள் 21 நாளாகியும் வெளிவரவில்லை. இதைக் கண்டு தாய்ப்பறவைகள் ஏங்கிப்போய் இரவும் பகலும் கதறின, சிதைந்துபோயின. என்ன பாடுபட்டிருக்கும் அந்தப் பறவைகள். பூச்சிக்கொல்லிகள் உயிரணுக்களை அழித்து, உயிரினங்களை மலடாக்குகின்றன என்பதை ரேச்சல் கார்சன் துள்ளியமாகக் கண்டறிந்தார்.

கேரள மாநிலத்தின் முந்திரிக்காடுகளில் ஹெலிகாப்டர் மூலம் ‘எண்டோசல்பான்’ என்ற பூச்சிக்கொல்லியைத் தெளித்தார்கள். அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுப்புறத்து ஊர்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊனமாகப் பிறந்தன. இன்றைக்கும் நம் விவசாயிகள் ஏராளமான பூச்சிக்கொல்லிகளை விவசாயத்தில் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அவற்றை எவ்விதப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் கையாள்கிறார்கள். ஏக்கர் கணக்கில் இந்த மருந்தை, முகக்கவசம்கூட இல்லாமல் அவர்கள் தெளிப்பதை எந்த ஒரு கிராமத்துக்குச் சென்றாலும் நீங்கள் பார்க்கலாம். இவற்றைக் கையாள எந்தக் கடைக்காரரும் பயிற்சியளிக்கவில்லை, மருந்தை விற்கும் நிறுவனமும் சொல்லித் தரவில்லை. இவற்றைத் தயாரித்து விற்க அனுமதியளிக்கும் அரசும் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை.

எல்லாப் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி போட்டதுடன் தன் கடமை முடிந்துவிடுவதாக ஓர் அரசு நினைக்கலாமா?

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 30 - ரேச்சல் கார்சன்: இயற்கையை மீட்க வந்த வசந்தம்!

மெளன வசந்தம்!

1962-ல் வெளிவந்த ‘மெளன வசந்தம்’ நூல் இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 25 லட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. 1990-களிலேயே தமிழில் வெளிவந்த இந்த நூல், இன்றுவரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இயற்கை, சூழலியல் சார்ந்து இயங்குபவர்களுக்குப் பெரும் புரிதலை ஏற்படுத்தும் இந்த நூல், இயற்கை வேளாண்மையின் அரசியல் பேச மிக முக்கியத் தரவுகளை முன்வைக்கும் ஆதாரமாகத் திகழ்கிறது.