மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 32 - அவசர நிலை: இருளில் தத்தளித்த தேசம்!

 இந்திரா காந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திரா காந்தி

இந்தியாவின் பாதுகாப்புக்கு உள்நாட்டுக் குழப்பங்களால் ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது.

ரேபரேலி தொகுதியில், 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார். `இந்தத் தேர்தலில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன, இந்த வெற்றி செல்லாது’ எனக் கூறி அவரை எதிர்த்து போட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியின் ராஜ் நரேன் (Raj Narain) அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பற்றி நாடு முழுவதும் பெரும் விவாதம் நடைபெற்ற சூழலில் 1975, மார்ச் 19-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூண்டேறி சாட்சியம் அளித்தார். இந்த வழக்கில், `இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது’ என நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்தார். உடன் உச்ச நீதிமன்றத்தில் இந்திரா காந்தி மேல்முறையீடு செய்தார். `வழக்கு விசாரணை முடியும் வரை இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கலாம். ஆனால், அவர் எந்த தீர்மானத்தின் மீதும் வாக்களிக்க முடியாது’ என நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்தார். இந்திராவுக்கு எதிராக இந்தியாவில் பெரும் இயக்கத்தைக் கட்டி களத்தில் நின்ற ஜெயப்பிரகாஷ் நாராயண், “இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமராகப் பதவி வகிக்கும் தார்மிகத்தை இழந்துவிட்டார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” எனப் பேட்டியளித்தார்.

சூழல் தனக்குச் சாதகமாக இல்லை என்பதை அறிந்த இந்திரா காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் 352, 356 பிரிவுகளின்கீழ் அவசரநிலை வரைவைத் தயார்செய்து ஜனாதிபதி ஃபக்ருதீன் அலியிடம் கையொப்பம் பெற்றார். இந்திய வானொலியின் வாயிலாக அவசரநிலையை 1975, ஜூன் 26-ம் தேதி காலை 6 மணிக்குப் பிரகடனம் செய்தார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு உள்நாட்டுக் குழப்பங்களால் ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டது. பொதுவாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் எந்த நாட்டுக்கும் ஆபத்துகள் வராது. உலகம் முழுவதிலும் சர்வாதிகாரிகள் தங்களின் கையில் மொத்த அதிகாரத்தையும் குவிக்க முனைகையில், உள்நாட்டிலிருந்துதான் அந்தந்த தேசங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. இது அச்சுறுத்தலா, கதையா என்பதை அந்தந்த நாட்டுக் குடிமக்கள் நன்கு அறிவார்கள்.

போராட்டங்களின் கதை - 32 - அவசர நிலை: இருளில் தத்தளித்த தேசம்!

இந்திராவுக்கு அப்படி என்ன உள்நாட்டில் பாதுகாப்பு இல்லாமல்போனது... 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி மறைந்த பிறகு, மொரார்ஜி தேசாய்க்கும் இந்திரா காந்திக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. யார் பிரதமராவது என்பதில் குழப்பம் நீடித்தது. காங்கிரஸ் கட்சியில் இதில் தீர்க்கமான இரு கருத்துகள் நிலவின. 1969-ல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸாக உடைந்தது.

1970-கள் இந்திய வரலாற்றில் பரபரப்பான காலகட்டமாகவே இருந்தன. பங்களாதேஷ் பிரச்னை, சிம்லா ஒப்பந்தம், வங்கிகள் தேசியமயம், பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை, 10 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பங்குகொண்ட வேலை நிறுத்தம் என இந்தியாவெங்கும் ஒரே கொந்தளிப்பாக இருந்தது. இவையெல்லாம் அவரை பயங்கொள்ளச் செய்தன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுக்க முடியாது, நிச்சயம் பதவி விலக நேரிடும் என்பதை அவர் மனம் ஏற்க மறுத்தது. இவற்றையெல்லாம் தவிர்க்கவும், இந்த எல்லாப் போராட்டங்களையும் ஒட்டுமொத்தமாக ஒடுக்கவும், அதிகார மமதையில், `அவசரநிலை’ என்கிற பெரும் ஆயுதத்தைக் கையிலெடுத்தார்.

இந்தியாவிலிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 675 பேர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். மிசா (MISA - Maintenance of Internal Security Act - 1972) மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் (DISIR - Defence of India Act and Defence of India Rules, 1962) ஆகிய இரு சட்டங்கள் தீவிரமாகக் களத்தை ஒடுக்கப் பயன்பட்டன. மிசாவின் கீழ் 34,988 பேரும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 75,818 பேரும் கைதுசெய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ்., ஜமாத்-ஏ-இஸ்லாமி உள்ளிட்ட பல அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. இந்தியாவின் பெரு நகரங்களில் மின்சாரத்தைத் துண்டித்து இருளில் மூழ்கச் செய்தார்கள். நாளிதழ்களை ஆங்காங்கே மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். பத்திரிக்கை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். ‘பொதுக்கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என எந்த வடிவிலும் மக்கள் கூடுவதற்கு அனுமதியில்லை, பேச அனுமதியில்லை’ என்றார்கள்.

காங்கிரஸ் கட்சிக்குள் தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களையும் இந்திரா காந்தி கைதுசெய்ய உத்தரவிட்டார். ஜெயபிரகாஷ் நாராயணும், மொராஜி தேசாயும்தான் முதலில் கைதுசெய்யப்பட்டனர். மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் பலமாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள்மீது கொடூரமான அடக்குமுறைகள் ஏவப்பட்டன.

அவசரகாலத்துக்கு எதிராகத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி, போராட்டங்களில் தி.மு.க ஈடுபட்டது. தலைமறைவாக இருந்த பல அகில இந்திய தலைவர்களுக்கு தி.மு.க தமிழ்நாட்டில் அடைக்கலம் கொடுத்தது. 1975 டிசம்பரில் கோவையில் நடந்த தி.மு.க-வின் மாநில மாநாட்டில், அவசரகாலத்துக்கு எதிராகத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. உடன் தமிழ்நாட்டில் தி.மு.க-வின் ஆட்சி கலைக்கப்பட்டு, அதன் தலைவர்கள் வேட்டையாடப்பட்டார்கள். அரசியல் கட்சியின் தலைவர்கள் பலர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறான அனுபவங்கள், சித்ரவதைகள் அரங்கேறின. அவற்றைப் பற்றி ஏராளமான நூல்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும், ஏனைய இந்திய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

பத்திரிகைகள் மீது கடும் தணிக்கை அமலுக்கு வந்தது. தணிக்கைக்குப் பின்னர்தான் அச்சாகும் உத்தரவுகள் வந்தன. ஒவ்வோர் இரவும் பத்திரிகை அலுவலகங்கள் உத்தரவுகளுக்காக நள்ளிரவு வரை காத்திருந்தன. தமிழகத்தில் விடுதலை, முரசொலி, தீக்கதிர் நாளிதழ்கள் கடும் தணிக்கைக்கு ஆளாகின. இந்தப் பத்திரிகைகளில் பல நாள்கள் பக்கங்கள் அச்சிடப்படாமல் வெள்ளையாகவும் அல்லது கறுப்பாகவும் எதிர்ப்பைப் பதிவுசெய்யும்விதமாக வெளிவந்தன.

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், இந்த அவசரநிலை காலத்தில் இயங்குவதற்கான புதிய நடைமுறைகளைக் கண்டறிந்தன. இந்தக் காலகட்டத்தில்தான் திருமண நிகழ்வுகள், வீட்டு விசேஷங்களிலெல்லாம் அரசியல் பேசும் கலாசாரம் தொடங்கியது. குடும்பம் குடும்பமாக மக்கள், போராடும் மனநிலைக்கு வந்தனர். தமிழகத்தில் அரசியல் ஒரு குடும்பச் செயல்பாடாகவே பரிணமித்தது.

நெருக்கடிநிலை காலகட்டத்தில் கோழிக்கோட்டில், காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட ராஜன் வீடு திரும்பவில்லை. பொறியியல் படித்துவந்த ராஜனைத் தேடி அலைந்த பெற்றோர், இறுதியாக வழக்கு தொடர்ந்தனர். `என் மகன் உயிரோடு இருக்கிறானா, இல்லையா?’ என்கிற அந்தப் பெற்றோரின் கேள்வி இந்திய மனசாட்சியை உலுக்கியது. ராஜன் வழக்கு, நாவலாகவும் திரைப்படமாகவும் பின்னர் வெளிவந்தது.

அரசு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவருவது தொடர்பான வழக்கு ஒன்றில், ``குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் என்பது அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே இருந்துவருகிறது. அதைப் பறிப்பதற்கான அதிகாரம் அரசுக்கு என்றுமே கிடையாது” என அரசுக்கு எதிராக நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா (H.R.Khanna) தீர்ப்பளித்தார்.

இந்திரா காந்தி, தனது 20 அம்சத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், அவை மக்களைக் கவரவில்லை. நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட்டுகள் ஏ.கே.ஜி., சோம்நாத் சாட்டர்ஜி, தி.மு.க-வின் செழியன் போன்றோர் ஆற்றிய உரைகளைத் தேடி வாசித்தால், அன்றைய நிலையை முழுமையாக உணரும் வாய்ப்பு உங்களுக்குக் கிட்டும்.

`1977, ஜனவரி 18 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படும்’ என அறிவிப்பு வெளிவந்தபோதுதான், மக்களின் முகங்களில் புதிய நம்பிக்கையின் ஒளி தென்பட்டது. தேர்தல் பிரசாரத்தில் இந்திரா காந்தி ஊர் ஊராகச் சென்று மன்னிப்புக் கோரினார். தேர்தல் நடைபெற்றது. அதில் இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் தோல்வியடைந்தார்கள். ஜனதா கட்சி, ஒன்றிய அரசை அமைத்தது. புதிய அரசு, தனது முதல் உத்தரவாக அவசரகாலத்தை ரத்துசெய்தது. ஒருவழியாக 19 மாதங்கள் நீடித்த அவசரநிலை, 1977 மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

`அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி’ என்ற சாமுவேல் ஜான்சனின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சர்வாதிகாரிகள் உலகம் முழுவதும் பல்வேறு காலங்களில் நிரூபித்திருக்கிறார்கள். அப்படியான ஹிட்லர், முசோலினி தொடங்கி எந்தச் சர்வாதிகாரியுமே ஆட்சிக்கட்டிலில் வெகுநாள் நீடித்ததில்லை என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி. உலகம் முழுவதும், எப்போதெல்லாம் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் இயக்கங்கள், மக்கள் இயக்கங்கள் புது ரத்தம் பாய்ச்சிக்கொள்கின்றன. அவை சர்வாதிகாரத்துக்கு எதிராக வலிமையாகச் சவால்விடுகின்றன!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 32 - அவசர நிலை: இருளில் தத்தளித்த தேசம்!

‘Emergency Retold’ - Kuldip Nayar

இந்தியாவில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து என்னவெல்லாம் நடந்தது என்பதை, குல்தீப் நய்யார் தனது புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். கடும் நெருக்கடிகள், தணிக்கைகள், கட்டுப்பாடுகள் நிலவிய காலத்தில் இத்தனை விவரங்களை அவர் எப்படித் திரட்டினார் என்று இந்தியப் பத்திரிகையாளர்கள் பலர் வியக்கிறார்கள். இந்தப் புத்தகத்தை, அவுட்லுக் ஆசிரியராக இருந்த வினோத் மேத்தா அடிக்கடி தனது பேட்டிகளில் இளம் பத்திரிக்கையாளர்கள் வாசிக்கப் பரிந்துரைப்பார். 95 வயது வரை வாழ்ந்த குல்தீப் நய்யார், தனது வாழ்வில் 75 ஆண்டுகள் எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அவசரநிலை அறிவிக்கப்பட்டவுடன் கைதுசெய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் என்பது குறிப்பிடத்தக்கது!