மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 33 - விவசாயிகள் போராட்டம்: உலகம் வியந்த ஒற்றுமை!

விவசாயிகள் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
விவசாயிகள் போராட்டம்

ஒன்றிய அரசுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதோடு அல்லாமல், போராட்டப் பிரதிநிதிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.

விவசாய விளைபொருள்களுக்கான விற்பனை, பதுக்கல், சந்தைப்படுத்துதல், ஒப்பந்த விவசாயச் சீர்திருத்தங்களைக் கையாளுதல் தொடர்பாக 2020-ம் ஆண்டில், மூன்று அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது ஒன்றிய அரசு. விவாதங்கள் இல்லாமல் நிறைவேற் றப்பட்ட இந்த அவசரச் சட்டங்களுக்கு, நாடு முழுவதும் விவசாயிகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். இந்தியா விலிருக்கும் 500-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களை ஒன்றிணைத்து ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்கிற பதாகையின் கீழ் விவசாயிகள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தார்கள்!

பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் வலுப்பெற்றன. பஞ்சாப் மாநிலத்துக்குள் ஒரு மாதத்துக்கு ரயில்கள் நுழைய முடியாதபடி தீவிரமான ரயில் மறியல்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ‘டெல்லி நோக்கி வாருங்கள்’ என்று விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அறைகூவலை ஒட்டி, இந்தியா முழுவதிலு மிருந்தும் விவசாயிகள் புது டெல்லி நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களைக் கடந்து, டெல்லிக்குச் செல்வது அத்தனை சுலபமான காரியமாக இருக்கவில்லை. பல இடங்களில் நெடுஞ்சாலைகள் தோண்டிக்கிடந்தன. கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு, பெரும் தடுப்பு அரண்கள், லத்தி அடிகள் என டெல்லிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.

96,000 டிராக்டர்கள், 22,000 லாரிகள் மற்றும் பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களுடன் ஒருவழியாகத் தலைநகர் புது டெல்லிக்கு ஒரு கோடியே 40 லட்சம் விவசாயிகள் வந்தடைந்தனர். சிங்கூ, திக்ரி, காசியாப்பூர் ஆகிய மூன்று இடங்களில் வேளாண் சட்டங் களுக்கு எதிரான போராட்டங்கள் மையம் கொண்டன. ‘உலக வரலாற்றில் எந்தப் போராட் டத்திலும் இத்தனை பெரிய கூட்டம் அணி திரண்டதில்லை’ எனச் சர்வதேச ஊடகம் விவரித்தன. லங்கர்கள் எனும் சமூகச் சமையற் கூடங்கள், சமூக மருத்துவமனைகள் என திசையெங்கும் தன்னிச்சையாக மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது இந்தப் போராட்டத்தின் இயல்பாக மாறியது.

ஒன்றிய அரசுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதோடு அல்லாமல், போராட்டப் பிரதிநிதிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு இந்தப் போராட்டத்தைக் கையாளும்விதம் குறித்துக் கடுமையான வார்த்தைகளில் சாடியது.

போராட்டங்களின் கதை - 33 - விவசாயிகள் போராட்டம்: உலகம் வியந்த ஒற்றுமை!

இந்தியாவின் தலைமை நீதிபதி, ‘அரசாங்கம் இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கட்டும் அல்லது நாங்கள் நிறுத்திவைக்க நேரிடும். இதில் உங்களுக்குள்ள கௌரவப் பிரச்னை என்ன... நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்னை யின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. ஏதாவது தவறு நடந்தால், நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்’ என்றார். நீதிமன்றத்தின் இந்த வார்த்தைகள், விவசாயிகளுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்தன. அதன் பிறகுதான் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்கும் முடிவை ஒன்றிய அரசு அறிவித்தது.

தனியார்துறையினரும் ஒப்பந்த அடிப்படை யில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வழிவகை செய்கின்றன. இந்தச் சட்டங்கள் தனியாருக்குப் பயன் தருவதாகத்தான் இருக்குமே தவிர, குறைந்தபட்ச ஆதார விலை என்கிற நடைமுறை கைவிடப்படுவதால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்பதை இந்தச் சட்ட நகலை வாசிக்கும் எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

தங்கள் விளைபொருளுக்கு ஒரு நிலையான விலையைத்தான் விவசாயிகள் கோருகிறார்கள். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச விலை நிர்ணயத்துக்கென ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தால், நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் அதை வரவேற்பார்கள். ஆனால், இந்த அபாயகரமான சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய விவசாயிகள் தங்கள் நிலத்தைப் பறிகொடுத்து கொத்தடிமைகளாக மாற்றப் படுவார்கள். ‘இந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதல்ல எங்கள் கோரிக்கை. மாறாக, இந்தச் சட்டம் முழுமையாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே எங்கள் ஒற்றைக் கோரிக்கை. தவிர, வேறு எதற்கும் நாங்கள் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை’ என்பதில் போராட்டக் குழு உறுதியாக இருந்தது.

மறுபுறம் டெல்லியில் போராடும் விவசாயி களை, பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தினசரி கேவலப்படுத்தினார்கள். காலிஸ்தானி, தேசவிரோதி, நக்சலைட்டுகள் எனப் புதிய பெயர்கள் வைத்தார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் டிகுனியா கிராமத்தில், போராடும் விவசாயிகள்மீது பா.ஜ.க அமைச்சரின் மகன் கார் ஏற்றியதாக வெளியான காணொளி ஒட்டுமொத்த இந்தியர்களையும் கொந்தளிக்கச் செய்தது.

பா.ஜ.க-வினரின் இவ்வாறான நடவடிக்கை களால், மக்கள் விவசாயிகளின் பக்கமே சென்றார்கள். விவசாயிகளின் போராட்டம், ஒரு பெரும் பண்பாட்டு நிகழ்வாக மாறியது. தசரா பண்டிகையின்போது வட இந்தியா முழுவதிலும் கிராம மக்கள் பா.ஜ.க தலைவர்களின் கொடும் பாவிகளை எரித்தார்கள். இதற்காகப் பலர்மீது வழக்குகள் போடப்பட்டன; பலரும் கைது செய்யப்பட்டார்கள். லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் சயீத் கலாஷ் யாத்திரை நடைபெற்றது.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோதுகூட இப்படியான அபாயகரமான சட்டங்களை அவர்கள் கொண்டுவரவில்லை. இந்திய விவசாயி களை இந்திய மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் பிரிட்டிஷாருக்கு இல்லை. ஆனால், இன்றைக்கு இந்தியாவின் விவசாயிகளுக்குத் தூக்குக்கயிறுகளை வழங்கி, அவர்களை அப்புறப் படுத்திவிட்டு பெருமுதலாளிகளின் கைகளில் விவசாயத்தைக் கொடுக்க ஒன்றிய அரசு முற்படுவதால்தான் தங்கள் இன்னுயிரையும் துச்சமாக மதித்து விவசாயிகள் தொடர்ந்து போராடினார்கள். போராட்டக்களத்தில் 720 விவசாயிகள் பலியானார்கள்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஓராண்டை நிறைவுசெய்யும் நிலையில், அவர்கள் மீண்டும் ‘டிராக்டர் பேரணியாக டெல்லிக்குள் நுழைவோம்’ என்று அறிவித்த நிலையில், மோடி அரசு ‘வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்படும்’ என்று அறிவித்திருக்கிறது. இந்தியாவிலிருக்கும் அரசியல் இயக்கங்கள், சமூக இயக்கங்கள் என அநீதிக்கு எதிராகப் போராடும் யாவருக்கும் இந்தச் செய்தி பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அரசு சொன்னதுபோலவே 2021 மழைக்காலக் கூட்டத்தொடரில், இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெற்றது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க படுதோல்வியடைந்தது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் களிலும், ஹிமாசல்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற-நாடாளுமன்ற இடைத்தேர்தல் களிலும் பா.ஜ.க-வுக்குத் தோல்வியே காத்திருந்தது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது என்கிற பயத்தில்தான், ஒன்றிய அரசு பின்வாங்கத் தீர்மானித்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கடுங்குளிர், மழை, பனிமூட்டம், கண்ணீர்ப் புகை, லத்தியடிகள், மரணங்கள், கோவிட் தொற்றின் இரண்டாம் அலை என அத்தனை இடர்களையும் தாண்டி, மக்கள் களத்தில் நின்றது போராட்ட வரலாற்றில் ஒரு மைல் கல். ஆனால், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களுடன் விருந்துகளில் பங்கேற்று அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பதில் பாரதப் பிரதமருக்கு இருந்த விருப்பம், இந்தப் போராடும் விவசாயிகளைச் சந்திப்பதில் அறவே இல்லை. தமிழக விவசாயிகள் டெல்லியில் மாதக் கணக்கில் போராடியபோதும் பிரதமர் மோடி அவர்களை இறுதிவரை சந்திக்கவில்லை.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான வெற்றியாக மட்டும் இதைச் சுருக்கிப் பார்க்க இயலாது. மாறாக, உலக நாடுகளை யெல்லாம் அடிமைப்படுத்தத் துடிக்கும் உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகிய ஏகாதிபத்திய அமைப்புகளுக்கு எதிரான வெற்றி என்பதுவே முழுமையான புரிதலாக இருக்கும். அதனால்தான் அந்தப் போராட்டம், அதன் வெற்றி, உலக மக்களால் உற்றுப்பார்க்கப்பட்டது, அதன் வெற்றி உலகெங்கும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என ஆண்களும் பெண்களுமாக வயதுகளைக் கடந்து மக்கள் ஒன்றிணைந்தார்கள். அது வன்முறையற்ற ஒரு சத்தியாகிரகப் போராட்டமாக இருந்த தால்தான், பா.ஜ.க-வின் வன்முறைப் படைகளால் இதில் ஊடுருவி முறியடிக்க முடியவில்லை. இரவும் பகலுமாக 383 நாள்களும் வரலாற்றில் இடம்பெறத்தக்க படிப்பினைகளை உலகுக்கு இந்தப் போராட்டம் வழங்கியுள்ளது. ‘சாதி, மதம், மொழிகளைக் கடந்து நாம் ஒன்றுபட்டால், ஒரு பொன்னுலகம் நமக்குக் காத்திருக்கிறது’ என்கிற பெரும் நம்பிக்கையை இந்தப் போராட்டம் மிக ஆழமாக ஒவ்வொருவருக்குள்ளும் விதைத்துச் சென்றிருக்கிறது!

(தொடரும்)

போராட்டங்களின் கதை - 33 - விவசாயிகள் போராட்டம்: உலகம் வியந்த ஒற்றுமை!

போராளி...

ராகேஷ் திகைத்!

உலகம் வியந்த டெல்லி விவசாயப் போராட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ராகேஷ் திகைத் (Rakesh Tikait). இந்தப் போராட்டத்தை அவர் மிகுந்த நிதானத்துடன் அணுகினார், வழிநடத்தினார். மேற்கு வங்கத்துக்குச் சென்று பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக அவர் துணிச்சலுடன் பிரசாரத்தை மேற்கொண்டார். ‘அடுத்து வரும் எல்லா மாநிலத் தேர்தல்களிலும் பிரசாரம் செய்வேன்’ என்றார். இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர், பல இடங்களில் பா.ஜ.க-வினரால் தாக்கப்பட்டார். பெங்களூரில் அவரது முகத்தில் கறுப்பு மை வீசினார்கள். இருப்பினும், எப்போதும்போல் அவர் சிரித்த முகத்துடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார். பேச்சுவார்த்தைகள், ஊடகச் சந்திப்புகள், நேரலை விவாதங்கள் என அனைத்திலும் மிகுந்த அரசியல் தெளிவுடனும், தேவைப்பட்டால் நையாண்டியுடனும் அவர் பதிலளிக்கும்விதம் அனைவரையும் ஈர்க்கக்கூடியது!