
நாடாளுமன்றத்தில், இந்தப் பூச்சிக்கொல்லி சர்ச்சைக்கு ஓர் உப நாடாளுமன்றக்குழு அமைக் கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் அமெரிக்க நிறுவனங் களுக்காக வக்காலத்து வாங்கி மக்களவையில் பேசினார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1886-ல் தொடங்கப்பட்ட கோக் நிறுவனம், இன்று 200 நாடுகளில் தனது கரங்களை நீட்டி, வருடத்துக்குப் பல பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தைச் செய்துவருகிறது. சுமார் 400-க்கும் மேற்பட்ட குளிர்பான வகைகளைத் தயாரித்து விற்கும் கோக் நிறுவனம், இன்று உலகின் ஆகப்பெரிய குளிர்பான நிறுவனமாகத் திகழ்கிறது.
ப்ளாச்சிமடா வறண்ட கதை!
கேரளாவின் பாலக்காட்டிலிருந்து 34 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ப்ளாச்சிமடா கிராமத்தில், நன்றாக நெல் விளையும் 35 ஏக்கர் வயல்களை வாங்கியது கோக் நிறுவனம். வழக்கம்போல தொழில்துறை, வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்கிற வார்த்தை ஜாலங்களை நம்பி, கிராமம் தன் நிலத்தைக் கொடுத்தது. 30,000 ஜனத்தொகைகொண்ட பெருமாட்டி பஞ்சாயத்தின் ஒரு நபருக்குக்கூட அந்த நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்காத நிலையில், மார்ச் 2000-ம் ஆண்டில் தனது குளிர்பானத் தயாரிப்பைத் தொடங்கியது.
37,000 சதுர அடி கட்டடங்கள், இரு கிணறுகள், ஆறு ஆழ்துளைக் கிணறுகள் என தினமும் 5 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சும் நடவடிக்கையும் சேர்ந்து தொடங்கியது. நிமிடத்துக்கு 600 குப்பிகள் கோக், நிமிடத்துக்கு 60 பெட் குப்பிகள், நிமிடத்துக்கு 40 குப்பிகள் மாசா என்ற வேகத்தில் தயாரிக்கப்பட்ட பானங்கள், தென்னிந்தியா முழுவதும் சாலைகளின் வழியே லாரிகளில் விற்பனைக்குச் சென்றன.
நிலத்தடி நீரை உறிஞ்சி, கோக் ஆலை தனது தயாரிப்பைத் தொடங்கிய ஆறு மாதங்களில், கிராமம் முழுமைக்கும் நிலத்தடி நீரின் அளவு குறையத் தொடங்கியது. ஒரு வருட காலத்தில் அந்தப் பகுதியின் நீர் உப்பேறிய சவர் நீராக மாறியது. அது குடிப்பதற்கு, குளிப்பதற்கு, சமைப்பதற்கு என மனித ஜீவிதத்துக்கு ஏற்றதாக இல்லாமல் போனது.
மழை கொட்டும் நாட்டில், கடவுளின் சொந்த பூமியில், தண்ணீர் லாரிகள் நுழைந்தன. ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் குடங்கள் தார்ச்சாலையில் அணிவகுத்து நிற்கும் காட்சி சகஜமானது. அங்கு சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொண்ட ஒரு தனியார் நிறுவனம், ‘இது அதிகப்படியான நீர் சுரண்டப்பட்ட பகுதி’ என அறிவித்தது. அந்தக் கிராமம் ஒருவித கொந்தளிப்பான நிலைக்குச் செல்லத் தொடங்கியது. எதிர்ப்பின் வெப்பம் ப்ளாச்சிமடா முழுக்கப் பரவியது. அந்த கிராமத்தின் விவசாயிகள், இந்தப் பிரச்னைக்கு எதிரான போராட்டத்துக்கு அரசியல் தலைமை தேவை என உணர்ந்தனர். அந்தக் கிராமத்தின் பெரும் பகுதி இருளர் பழங்குடியினர், சொந்த பலத்தில் எதிர்ப்பைக் காட்டலாம் என சத்தியாகிரப் போராட்டத்தைத் தொடங்கினர்.

அடித்து நொறுக்கப்பட்ட கோக், பெப்சி!
போராட்டம் தொடங்கிய முதல் 50 நாள்கள் கேரளாவைச் சேர்ந்த எந்த நாளிதழ், பத்திரிகையும் ஒரு பத்திச் செய்தியைக்கூட வெளியிடவில்லை. மாறாக, அந்தப் பகுதியின் ஜனதா தள தலைவர்கள் வந்து போராடுபவர்களை மிரட்டிவிட்டுச் சென்றனர். அந்த ஆலையில் பணியாற்றிய 500 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக, அனைத்துத் தொழிற்சங்கங்களும் வந்து கிளைகளைத் தொடங்கின.
போராட்டம் ஒருபுறம் நடக்க... மற்றொரு புறம், இந்தச் சீர்கேட்டுக்கான காரணங்கள் அன்றாடம் விவாதிக்கப்பட்டுவந்தன. அப்போதுதான், கோக் நிறுவனம் அந்த ஆலையின் கழிவுகளை `உரம்’ என்கிற பெயரில் கிராமத்தினருக்கு விநியோகித்தது சர்ச்சையாக உருவெடுத்தது. அந்தத் திடக்கழிவுகள் மழைக்காலங்களில் மழைநீருடன் கலந்து, அந்தப் பகுதி கிணற்று நீருடன் கலந்ததுதான் பிரச்னையின் ஊற்றுக்கண். பிறகு, இந்தப் போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறத் தொடங்கியது.
ஜனவரி 15, 2003-ல் கேரள சட்டமன்றக்குழு வந்து பார்வையிட்டது. தேசிய அளவிலான அரசாங்க ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள், அதிகாரிகள் வந்து பல மணி நேரம் ஆலையில் இருந்துவிட்டுப் போகும்போது, அவர்களின் வாகனங்கள் போராட்டப் பந்தலின்மீது புழுதியை வாரி எறிந்துவிட்டு வேகமாகச் சென்றன.
`உலகமயத்திலிருந்து வகுப்புவாதம் வரை’ எனும் தேசியப் பயணம், ப்ளாச்சிமடாவில் கிளம்பி அயோத்திக்குச் சென்றது. 19, பிப்ரவரி 2003-ல் அமெரிக்க விமானங்கள் இராக் நிலப்பரப்புமீது குண்டுமழை பொழியத் தொடங்கியதும், அமெரிக்கப் பொருள்கள் பகிஷ்கரிப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கேரளம் முழுமையிலும் கோக், பெப்சி நிறுவனத்தின் விற்பனைப் பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கிட்டங்கிகள் சேதப்படுத்தப் பட்டன. கடைகளில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் குளிரூட்டிகளைக் கடலில் தூக்கி வீசினார்கள்.
ஏப்ரல் 7, 2003 அன்று, அந்த நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க மறுத்தது பெருமாட்டி கிராமப் பஞ்சாயத்து. கோக் நிறுவனம் கேரள உயர்நீதி மன்றத்துக்குச் சென்றது. ‘உரிமத்தை ஏன் புதுப்பிக்க வேண்டும்?’ என்ற பெருமாட்டி பஞ்சாயத்தின் கேள்வி உலக அரங்கில் ஒலித்தது. உயர் நீதிமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித்துறை என விவகாரம் எங்கும் பற்றி எரிந்தது. சரியாக அந்த நேரம், பிபிசி தனது ஆய்வறிக்கையை வெளியிட்டது. ‘ஜான் வைட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் வந்து சேமித்த மாதிரிகள், கடும் விஷத்தன்மை உடையவை’ என அறிக்கை தெளிவாகக் கூறியது. டெல்லியிலிருந்து சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சுனிதா நரேன், ‘இந்தக் குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் மிகுதியாகக் கலந்திருக்கின்றன’ என அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில், இந்தப் பூச்சிக்கொல்லி சர்ச்சைக்கு ஓர் உப நாடாளுமன்றக்குழு அமைக் கப்பட்டது. சுஷ்மா சுவராஜ் அமெரிக்க நிறுவனங் களுக்காக வக்காலத்து வாங்கி மக்களவையில் பேசினார். நாடு முழுவதிலும் விஸ்வரூபம் எடுத்த பிரச்னைக்குத் தீர்வாக, ‘வரலாற்றுபூர்வமான’ முடிவாக, ‘நாடாளுமன்ற வளாகத்துக்குள் இந்த அமெரிக்கக் குளிர் பானங்களுக்குத் தடை’ என்றது ஒன்றிய அரசு. ‘இனி இந்த பானங்களுக்கு அரசு விழாக்களில் இடமில்லை’ என்றது கேரள அரசு. ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை மக்களவையும், சட்டமன்றக் கட்டடமும்தான் அவர்களின் தேச எல்லைபோலும்.
அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் கோக் தடை செய்யப் பட்டது. கேரளாவில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள், ‘இளநீர் பருகுவோம்’ என உறுதிமொழி எடுத்தார்கள். கோக்குக்கு எதிராக ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. குடிமைச் சமூகம் விழிப்புகொண்டு எடுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் இவை. கிராமப்புறங்களில் கோக் விற்பனை சரிந்தது. இருப்பினும், மத்தியதர வர்க்கம் அமீர் கான், விஜய் என நட்சத்திரங்கள் பலர் நடித்து ஆதரித்த விளம்பரங்களைப் பார்த்து கோக்கை வாங்கி இன்றும் பெருமிதமாகவே குடிக்கிறது.
2004-ம் ஆண்டு வரை ப்ளாச்சிமடாவில் உள்ள நிலத்தடி நீரில் 28.3 பில்லியன் லிட்டர் நீரை கோக் ஆலை உறிஞ்சி எடுத்திருந்தது. இது இந்த பூமியில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் பத்து நாள்கள் உபயோகிக்கும் மொத்த நீரின் அளவு. 2004-ம் ஆண்டு கோடையில் பிளாச்சி மாடாவில் கிணறுகள் முற்றாக வறண்டுபோயின.
தொடங்கியதிலிருந்து ப்ளாச்சிமடா போராட்டம் எந்தக் கட்டுமானத்தையும் உருவாக்கிக்கொள்ளவில்லை. ஊர் கூடித்தான் எந்த முடிவும் பொதுவில் எடுக்கப்பட்டது. காட்டுச்செடியைப்போலத் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் அந்த மக்கள் தொடங்கிய அந்தப் போராட்டம், இன்று உலகம் முழுவதிலுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களுக்குப் பாலபாடமாக மாறியிருக்கிறது. 3,000 நாள்களைக் கடந்து சென்ற போராட்டத்தில், சுழற்சி முறை யில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனச் சகலரும் பங்குகொண்ட வகையில் ஒரு வழிகாட்டிப் போராட்டமாக அது திகழ்ந்தது.
ப்ளாச்சிமடா போராட்டம் வெற்றிபெற்றது. அரசாங்கம் கோக் ஆலையை மூடும்படி உத்தர விட்டது. 60 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ப்ளாச்சிமடாவுக்கு வந்து அந்த வெற்றியைக் கொண்டாடினார்கள். உலகத் தண்ணீர் மாநாடு அங்கு நடத்தப்பட்டது.
ப்ளாச்சிமடாவிலுள்ள கோக் ஆலையால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களைக் கணக்கிட, கேரள உள்துறைச் செயலரின் தலைமையில் ஒரு குழு 2009-ல் அமைக்கப்பட்டது. அந்தக் குழு கோக் ஆலையால் அங்கே 220 கோடி பெறுமான சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் கணக்கிட்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. 2011-ல் கேரள அரசு, இந்த மக்களுக்கு இழப்பீடுகள் வழங்க வழிவகை செய்யும் சிறப்புச் சட்டத்தை இயற்றியது. ஆனால், இன்றும் அவர்களுக்கு முறையான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் ப்ளாச்சிமடாவில் இந்த இழப்பீடு களைப் பெறுவதற்கான போராட்டம் தொடங்கி யிருக்கிறது. போராட்டம் என்பது ஒரு நெடிய நிகழ்வு. உரிய நியாயம் கிடைக்கும் வரை ஒரு போராட்டம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்டேயிருக்கும்!
(தொடரும்)

போராளி: மயிலம்மா
ப்ளாச்சிமடாவில், கோக் ஆலைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டப் பந்தலில், சிரித்த முகத்துடன் அமர்ந்திருப்பதுதான் மயிலம்மாவின் பிரதான அடையாளம். ப்ளாச்சிமடாவுக்குச் செல்லும் ஒவ்வொருவருக்கும் ஊர் முழுவதையும் சுற்றிக்காட்டி, கோக் ஆலையின் அவலங்களைக் காட்டாமல் விட மாட்டார். அங்கு செல்லும் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களை அவரது இல்லத்துக்கோ அருகிலுள்ள உணவு விடுதிக்கோ அழைத்துச் சென்று சாப்பிட வைக்காமல் விட மாட்டார். இயல்பாகவே மயிலம்மாவின் பெயர் உலக ஊடகத்தில் ஒலித்தது. அவரும் இந்தியா முழுவதிலும் நடந்த பல இயக்கங்களில், போராட்டங்களில் பங்குகொண்டார். அவுட்லுக் பத்திரிகை, மயிலம்மாவுக்கு ‘தேசத்தின் சிறந்த பெண்மணி’ விருதை அளித்தது.
தமிழில், ‘மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை’ என்கிற நூல் வெளியாகியிருக்கிறது. அது அவரது வாழ்வனுபவப் பதிவாகவும், போராட்டங்களுக்கான கையேடாகவும் திகழ்கிறது!