மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 35 - குடியுரிமை திருத்தச் சட்டம்... மக்கள் எழுச்சியின் சாட்சியம்!

குடியுரிமை திருத்தச் சட்டம்
News
குடியுரிமை திருத்தச் சட்டம்

காவல்துறையினர் இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியிருந்த சாலைகளில் பெரும் தடுப்பு அரண்களை அமைத்தது, போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தியது.

நான் - நீ, நாங்கள் - அவர்கள், இந்தியர்கள் - அந்நியர்கள், இந்துக்கள் - மதச் சிறுபான்மையினர் என்று அனைத்தையும் இரண்டு இரண்டாகப் பிரித்துத்தான் இந்து மதவாத அமைப்புகள் இந்தியாவில் பிரசாரம் செய்துவருகின்றன. மே, 2019-ல் அமித் ஷா, `முதலில் நாம் குடியுரிமைச் சட்ட மசோதாவை இயற்றுவோம். அதன் மூலம் நம் அண்டை நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவோம். பிறகு என்.ஆர்.சி-யை அமல்படுத்தி நம் தாய்நாட்டுக்குள் ஊடுருவியவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம்’ என்று தெளிவாகப் பதிவிட்டார். மேலும் ``2024 தேர்தல் தொடங்குவதற்குள் நாட்டுக்குள் ஊடுருவியிருக்கும் அனைவரையும் வெளியேற்றுவோம்” என்று இன்னும் தெளிவுபடக் கூறினார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க வெளியிட்ட தேர்தல் அறிக்கை இதை இன்னும் உரக்கப் பேசியது. குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), 2019-ம் ஆண்டு, டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறியது முதலே நாடெங்கிலும் பல குழப்பங்கள் தொடங்கின. `குடியுரிமை திருத்தச் சட்டம்’, `தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)’ என்கிற இரண்டும் நாட்டின் பெரும் விவாதப்பொருளாக மாறின.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து டிசம்பர் 31, 2014-க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவம், புத்தம், சமணம், சீக்கியம், பார்சி மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஐந்து வருடங்களுக்கு மேலாக இங்கு வசிப்பவர்கள், இந்திய குடியுரிமை யைப் பெறுவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இந்த மூன்று நாடுகளிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்கள் மற்றும் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள ரோஹிங்கியாக்கள் இதில் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளனர் என்பது சர்ச்சையின் தொடக்கப்புள்ளி. ‘இந்திய வரலாற்றில் முதன்முறையாகக் குடியுரிமை பெறுவதற்கு மதத்தை ஒரு தகுதியாக முன்வைத்ததன் மூலம், இந்தியா ஒரு மதச்சார்பற்ற தேசம் என்கிற பெருமிதத்தின் மீதும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று சட்ட வல்லுநர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

இது ஒருபுறமெனில், மறுபுறம் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது மக்கள்தொகைக் கணக்குடன் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் குடியுரிமையையும் சோதனைக்கு உள்ளாக்கும் ஒரு புதிய நடைமுறை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்த முனைந்த அஸ்ஸாமில், 20 லட்சம் பேரின் குடியுரிமை இன்றைக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது. அப்படி, தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களைத் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அஸ்ஸாமில் ஆறு பெரும் தடுப்புக் காவல் முகாம்களின் புகைப்படங்கள் வெளியாக, பிரச்னை மேலும் தீவிரமடைந்தது. இந்தக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தவேண்டியது அரசின் கடமை. ஆனால், பிரதமர் மோடியும் அவரின் அமைச்சர்களும் தங்கள் உரைகளின் வழியே குழப்பத்தை மேலும் தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில், “அஸ்ஸாமில் இப்படிக் குடியுரிமை அளித்தால், இந்த நிலத்தின் பூர்வகுடிகளான நாங்கள் சிறுபான்மையினராக மாறிவிடுவோம்” என்று மக்கள் போராட்டங்களைத் தொடங்கினார்கள். புது டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகங்கள் போராட்டத்தின் களமாக மாறின. சத்தியாக்கிரகப் போராட்டங்களை மாணவர்கள் முன்னெடுத்தார்கள். ஆனால், ஒன்றிய அரசும், டெல்லி காவல்துறையும் அவர்கள்மீது வன்முறையின் எல்லா வடிவங்களையும் ஏவியது. கண்ணீர்ப்புகை வீச்சு, லத்தியடிகள் எனப் பல்கலைக்கழக வளாகம் ரத்தக்களறியாக மாறியது. 200 மாணவர்கள் படுகாயமடைந்தார்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்தச் சூழலில் புது டெல்லியின் இஸ்லாமியப் பெண்கள், 2019 டிசம்பர் 14-ம் தேதி ஒன்றுகூடி, டெல்லியையும் நொய்டாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையான ஜி.டி பிர்லா மார்க்கின், ஷாகின் பாக்கில் அமர்ந்தார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தங்களின் போராட்டத்தை அறிவித்தார்கள்.

போராட்டங்களின் கதை - 35 - குடியுரிமை திருத்தச் சட்டம்... மக்கள் எழுச்சியின் சாட்சியம்!

காவல்துறையினர் இந்தப் போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியிருந்த சாலைகளில் பெரும் தடுப்பு அரண்களை அமைத்தது, போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தியது. முதல்நாள் வெறும் 15 பெண்கள் மட்டுமே அங்கு கூடினார்கள். ஆனால் மெல்ல மெல்ல அவர்கள் ஆயிரங்களாகவும் லட்சங்களாகவும் பல்கிப் பெருகினார்கள். அந்த நேரத்தில் புது டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை மிகவும் பணிவாக நடந்துகொண்டது. டெல்லி உயர் நீதிமன்றத்தில், ஷாகின் பாக் போராட்டத் துக்கு எதிராக தினசரி ஒரு புதிய வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அடுத்தகட்டமாக இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றன. உச்ச நீதிமன்றம், போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மூவர் குழுவை அமைத்தது.

இந்தியா முழுவதுமிருந்தும் இந்தச் சட்டங்களுக்கு எதிரான இயக்கங்கள், போராளிகள் ஷாகின் பாக் நோக்கிச் சென்று குவிந்தனர். குடும்பம் குடும்பமாக டெல்லி மக்கள் அங்கே குவிந்தார்கள். மேடைகள், ஒலிபெருக்கிகள், தண்ணீர், உணவு, மருந்துகள், கழிப்பறை வசதிகள் என எல்லாம் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டன. நிச்சயம் இத்தனை பெரிய போராட்டத்துக்குக் கலவரக்காரர்கள் அனுப்பப்படலாம் என்பதால், எச்சரிக்கையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஷாகின் பாக் மெல்ல மெல்ல நம் கற்பனைகளை விஞ்சிய போராட்டமாக உருவெடுத்தது.

பத்து நாள்களுக்குள், சாலையில் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்குப் பந்தல்கள் முளைத்தன. ஷாகின் பாக் பிரபலமடைந்தது. இந்தப் போராட்டத்தின் வழிகாட்டுதலில், இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலும் ‘ஷாகின் பாக்குகள்’ உருவாகின. கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் மைதானம், புனேயின் கோனார்க் மால், பாட்னாவின் சப்ஜிபாக், கான்பூரின் சமன் கஞ்ச், லக்னோவின் க்ளாக் டவர், பெங்களூரின் ஃபிரஸர் டவுன், மும்பையின் அக்ரிபாடா, சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை, மதுரையின் மகபூப்பாளையம் எனப் பார்க்கும் திசையெல்லாம் ஷாகின் பாக்குகள் மக்கள் கூட்டத்தால் நிறைந்தன; அதிர்ந்தன.

டிசம்பர் மாதத்தின் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், மக்கள் இரவும் பகலும் அங்கே போராடினார்கள். டிசம்பர் 31 அன்று நள்ளிரவில், லட்சக்கணக்கானவர்கள் இந்திய தேசியகீதத்தைப் பாடியது பெரும் சிலிர்ப்பான தருணமாக இருந்தது. அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாடகர்கள் எனப் பலர் தினசரி அங்கே சென்று உரையாற்றினார்கள். சுவர் ஓவியங்கள், விதவிதமான போஸ்டர்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்புகள் என ஷாகின் பாக் பெரும் கலாசார வெளியாகப் பரிணமித்தது. மறுபுறம் ஷாகின் பாக் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த பல போலிச் செய்திகளை, தவறான தகவல்களை ஊடகம் வழியே பரப்பினார்கள்.

பேச்சுவார்த்தைகளுக்கான குழுக்கள் அமைக்கப்பட்டன. கோவிட் தொற்றின் பரவல் இந்தியாவில் தொடங்கிய பிறகு, உலகில் உருவான அசாதாரணச் சூழலுக்கு மதிப்பளித்து போராட்டம் மார்ச் 24, 2020 அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. ஷாகின் பாக் போராட்டம் வெற்றியா தோல்வியா என்கிற சர்ச்சை எழுந்தது. இருப்பினும் இந்தப் போராட்டம் உலகச் சூழலையும், போராடுகிறவர்களின் உடல்நலத்தையும் கருத்தில்கொண்டு மட்டுமே விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசு, எப்போது மீண்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசுகிறதோ, அதை நடைமுறைப்படுத்த விரும்புகிறதோ, அன்று மீண்டும் ஷாகின் பாக் போராட்டங்கள் பீனிக்ஸ் பறவைபோல் நாடு முழுவதும் நிச்சயம் உயிர்த்தெழும்.

புது டெல்லி சட்டமன்றத் தேர்தல், மக்களின் மனநிலையை அறியும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஒட்டுமொத்த பலத்தையும் பிரயோகித்து, ஊடகத்தைத் தன் பக்கம் வைத்துக்கொண்டு பா.ஜ.க களத்தில் இறங்கியது. பா.ஜ.க தலைவர் ஒருவர் தேர்தல் பரப்புரையின்போது, `ஷாகின் பாக் போராட்டக்காரர்களைச் சுட்டுத்தள்ளுங்கள்’ என்று பேச, மக்கள் கொதித்தெழுந்தார்கள். விளைவு, ‘ஆம் ஆத்மி கட்சி’ தன்னை ஷாகின் பாக் போராட்டத்தில் அதிகாரபூர்வமாக இணைத்துக்கொள்ளாதபோதும், அந்தக் கட்சி புது டெல்லி சட்டமன்றத்தில் 70-ல் 62 இடங்களை வென்றது. இது, டெல்லி மக்கள் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக அளித்த வாக்குகள்தானே?!

தமிழ்நாட்டின் 24 மாவட்டங்களிலுள்ள 107 முகாம்களில், இலங்கையிலிருந்து வந்த அகதிகள் 59,716 பேர் வசிக்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடன் வசிக்கிறார்கள். இவர்களில் 99% பேர் இந்துக்கள். இவர்களுக்குக் குடியுரிமை இல்லையெனில், இந்தச் சட்டம் எவ்வளவு சூழ்ச்சியானது?

(தொடரும்)

போராளி!

பில்கிஸ் பாட்டி!

ஷாகின் பாக்கில் போராட்டம் தொடங்கியது முதல் முடிவடைந்தது வரை, 101 நாள்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள், 82 வயதுடைய பில்கிஸ் பாட்டியும் அவருடைய இரு தோழிகளும். அதிகாலை முதல் நள்ளிரவு வரை இவர்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டார்கள். தொலைக்காட்சி ஒன்றுக்கு பில்கிஸ் பாட்டி அளித்த பேட்டியில், “இந்தப் போராட்டம் எங்கள் உரிமைக்கானது. எங்கள் குழந்தைகளுக்கானது. சிஏஏ சட்டம் திரும்பப் பெறப்படும் வரை ஓய மாட்டோம்” என்றார். மூதாட்டி பில்கிஸின் இந்த வார்த்தைகள் உலகம் முழுவதும் ஊடகத்தால் ஒளிபரப்பப்பட்டன. பில்கிஸ் பாட்டி, இந்தப் போராட்டத்தின் முகமாக மாறினார். போராட்டக் களத்துக்குச் செல்லும் அனைவரும் பில்கிஸ் பாட்டியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ‘டைம்’ இதழின் 2020-ம் ஆண்டுக்கான தாக்கத்தை ஏற்படுத்திய 100 தலைவர்களின் பட்டியலில், பில்கிஸ் பாட்டி இடம்பெற்றார்!