
அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்படும் பட்சத்தில், சைரன் ஒலி எழுப்பப்படும். உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, அணு நீர்மூழ்கிப் கப்பல்களை வழங்க ரஷ்யா 1980-ல் முன்வந்தது. அதற்குக் கைமாறாக எட்டு அணு உலைகளை இந்தியா வாங்க வேண்டும் என்று நிர்பந்தித்தது. 1986-ல் செர்னோபில் அணு உலை விபத்து ரஷ்யாவில் நடந்தும், அதே ரக அணு உலைகளை வாங்குவதற்கு 1988-ல் இந்தியா ஒப்பந்தம் போட்டது. கேரளாவில் இந்த அணு உலைகளை நிறுவுவது என முடிவுசெய்த நிலையில், அங்கே மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த அணு உலைகளைக் கூடங்குளத்தில் நிறுவுவது என்று ஒன்றிய அரசு முடிவுசெய்தது!
1986 முதலே தமிழ் ஊடகத்தில் அணு உலைகளின் ஆபத்துகளைப் பற்றிய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. 1987-ல் மீனவ கிராமங்களின் தலைவர்கள் திருச்செந்தூரில் சந்தித்து விவாதித்தனர். 1988-ல் திருநெல்வேலியிலும், 1989-ல் தூத்துக்குடியிலும் அணு உலைக்கு எதிரான மிகப்பெரிய ஊர்வலங்கள் நடைபெற்றன. கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளாகத் துண்டுப்பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் வெளிவந்துகொண்டே இருந்தன. ஆனால், ஆங்காங்கே சிறு கூட்டங்கள், நிகழ்வுகள் எனச் சிறிய குழுக்களின் நடவடிக்கையாகவே இது இருந்துவந்தது.
கூடங்குளம் திட்டத்துடன் இங்கே நல்ல சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், துறைமுகம், காற்றாலைகள் கொண்டுவரப்படும். நல்ல குடிதண்ணீர் கிடைக்கும் என வாக்குறுதிகளை அணுசக்தித்துறை அள்ளிவீசியதில் இந்தப் பகுதி மக்கள் மயங்கிப்போனார்கள். 25 ஆண்டுக்காலம் அணு உலை எதிர்ப்பு பிரசாரம் செய்த செயற்பாட்டாளர்களால், மக்களைத் தங்களின்பால் வென்றடுக்க முடியவில்லை.
1989-ல் ரஷ்யா சிதறுண்டதுடன், இந்தத் திட்டம் சில காலம் கைவிடப்பட்டது. மீண்டும் 1997-ல் திட்டம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. 2002-ல் முதல் அணு உலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

2011-ல் புகுஷிமாவில், ஆழிப்பேரலையை ஒட்டி உலகின் பெரும் அணு உலை விபத்து நிகழ்ந்தது. ஒட்டுமொத்த உலகையும் அது அச்சம்கொள்ளச் செய்தது. அணு உலை விபத்து தொடர்பான செய்திகள் நம் நாளிதழ்களில் வரத் தொடங்கின. தொலைக்காட்சிகளில் உலகம் முழுவதும் நிகழ்ந்த அணு உலை விபத்துகள் தொடர்பான காணொளிகள், ஆவணப்படங்கள், செய்திகள் ஒளிபரப்பாகின.
இந்தச் சூழலில் ‘அணு உலையில் ஏதாவது விபத்து ஏற்படும் பட்சத்தில், சைரன் ஒலி எழுப்பப்படும். உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவு, ஜன்னல்களை மூடிக்கொள்ள வேண்டும். வாகன வசதி இருக்குமானால் குடும்பத்தினருடன் அந்த இடத்தைவிட்டு வேகமாக வெளியேறிவிட வேண்டும்’ எனக் கூடங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அணு உலை நிர்வாகம் தனது பிரசாரத்தைத் தொடங்கவும், மக்கள் பீதியடைந்தார்கள். இதிலிருந்து எப்படித் தங்களை மீட்பது என்று அவர்கள் யோசித்த நேரத்தில், தொடர்ந்து தங்களின் ஊர்களுக்கு வந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துப் பிரசாரம் செய்துவந்த ஒரு நாகர்கோவில்காரர்தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தார்.
ஊர்கூடி நாகர்கோவிலுக்குச் சென்று அந்த நபரைச் சந்தித்து, எங்கள் வாழ்வும் வாழ்வாதாரமும் பெரும் கேள்விக்குள்ளாகி யுள்ளன. நாங்கள் இனி என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் என்று அவரை அழைத்துவந்தனர். அவர்தான் சுப.உதயகுமார்!
இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றிய கிராமங்கள் திரண்டு நிற்க, அந்தப் போராட்டத்தைத் தன் தோள்களில் ஏந்தினார் உதயகுமார். உடன் ஒரு போராட்டக்குழுவை உருவாக்கினார். போராட்டத்தின் வியூகங்கள் வகுக்கப்பட்டன. இடிந்தகரையில் பெரும் பந்தல் அமைக்கப்பட்டு, அதில் மக்கள் கூடி போராடத் தொடங்கினார்கள். கடலுக்குச் சென்றுவரும் மீனவர்கள், தங்களின் ஒவ்வொரு கடல் பயணத்திலும் போராட்டக்குழுவுக்கு நிதியளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் என அந்த நிலப்பரப்பின் ஒட்டுமொத்த மக்களும் தினமும் போராட்டப் பந்தலில் சங்கமித்தனர்.
அரசாங்கம், அணுசக்தித்துறை, சில ஊடகம் என அணு உலை ஆதரவாளர்களின் கூட்டணி கடுமையாக இந்தப் போராட்டத்தையும், போராடும் மக்களையும் கொச்சைப்படுத்தின. தங்களின் பொய்ப் பிரசாரங்களுடன் களத்தில் இறங்கின. இது அமெரிக்காவின் உந்துதலில் நடக்கும் போராட்டம், அமெரிக்காவிலிருந்து வரும் பணத்தில் நடக்கும் போராட்டம் எனப் பல மாதங்கள் பஜனையாகவே பாடினார்கள். ஏவுகணை அப்துல் கலாம், அடையார் புற்றுநோய் மையத்தின் மருத்துவர் சாந்தா எனப் பலரையும் கூடங்குளத்துக்கு ஆதரவான பிரசாரத்தில் அரசு களமிறக்கியது.
அது ஒருபுறம் நடக்க, இடிந்தகரை மக்கள் தங்களின் போராட்டத்தில் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டார்கள். கடலில் இறங்கி சத்தியாக்கிரகம், செத்துவிழும் போராட்டம், வாக்காளர் அட்டையைத் திருப்பிக் கொடுத்தல், கல்லறைத் தோட்டத்தில் உயிரோடு புதைத்தல், போராட்டப் பந்தலில் தொட்டில் குழந்தைகள், உலக மக்களுக்குக் கடல்வழியாகக் கடிதம் அனுப்புதல், பிரதமருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்புதல், ரத்ததானம், பல நூறு பானைப் பொங்கல், தூத்துக்குடித் துறைமுகம் முற்றுகை, பால்குடம் எடுத்தல், கடல் மண்ணில் புதைத்தல், சாலையில் மொட்டை அடித்தல், சைக்கிள் பேரணி, கடல்வழி முற்றுகை என விதவிதமாகப் போராட்டங்களை அறவழியில் தொடர்ந்தனர்.
இந்தியா முழுவதிலுமிருந்தும் அணு உலைக்கு எதிரான விஞ்ஞானிகள், போராளிகள் கூடங்குளத்துக்கான தேசியப் பயணத்தை மேற்கொண்டது, போராட்டத்துக்கு ஒரு சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியது. தமிழகம், கேரளாவிலிருந்து எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் இடிந்தகரை நோக்கி வந்தவண்ணம் இருந்தார்கள். இடிந்தகரை இயற்கையை நேசிக்கும் மக்களின் பீடபூமியாக மாறியது. அரசாங்கம் மற்றும் சில ஊடகத்தின் அழுத்தமான பொய்ப் பிரசாரத்தில் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்கூட இடிந்தகரைக்குத் தாமதமாக வந்துசேர்ந்தார்கள்.
2012 மார்ச் மற்றும் செப்டம்பரில், உலையில் எரிபொருள் நிரப்பப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கடல்வழியாகக் கூடங்குளம் அணுவுலையை நோக்கிச் செல்ல முயன்றபோது, இடிந்தகரையில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடுவே பெரும் பதற்றம் நிலவியது. கண்ணீர்ப் புகைக்குண்டுகள், லத்தியடிகளுக்கு மத்தியிலும் ஓர் இரவு முழுவதும் கடற்கரையில் மக்கள் தங்கிப் போராடினார்கள். பெரும் பதற்றம் அந்தப் பகுதியைச் சூழ்ந்த நிலையில், “மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்துங்கள்... நான் கைதாகிறேன்” என்று உதயகுமார் கூறினார். பெண்கள் அவரைச் சூழந்துகொண்டு அங்கிருந்து அவரை நகரவிடாமல் தடுத்தார்கள். செப்டம்பர் 13 அன்று, கடலில் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடந்தபோது, விமானப்படையின் விமானம் ஒன்று தாழப் பறந்து சென்றதில் சகாயம் என்பவர் பலியானார்.
இடிந்தகரை போராட்டம் பெண்களின் தலைமையிலான போராட்டமாக உருமாறியது. சுந்தரி, செல்வி, செலின், மில்ரெட் எனப் பல பெண்கள் இந்தப் போராட்டத்தின் முகமாகத் திகழ்ந்தார்கள். பின்னாள்களில் இடிந்தகரை பெண் போராளிகள் பலர், இந்தியா முழுவதும் நடக்கும் அணு உலைப் போராட்டங்களுக்குச் சென்று தங்களின் அனுவங்களைப் பகிர்ந்தார்கள்.
2011 முதல் 2014 வரையிலான மூன்று ஆண்டுகள், இடிந்தகரையில் போராடிய மக்கள் அனைவரும் ஒருவித வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 2012 மார்ச் முதல் பல காலம் இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. அரசாங்கம் பேருந்துகளை நிறுத்தியது, பால் வண்டிகள் வரவில்லை, நியாயவிலைக் கடைகள் திறக்கப்படவில்லை... மொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. அரசாங்கம் மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க... மக்கள், சாதி, மதங்களைக் கடந்து ஒன்றிணைந்தார்கள்.
மக்கள் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, காவல்துறை அவர்கள்மீது வழக்குகளைப் பதிவுசெய்த வண்ணம் இருந்தது. 8,956 பேர்மீது 21 தேசத்துரோக வழக்குகள், 18,350 பேர்மீது அரசின்மீது போர் தொடுத்ததாக வழக்குகள், 18,143 பேர்மீது கொலை முயற்சி வழக்குகள் என... வழக்குகள் மழைபோல் மக்கள்மீது பொழிந்த வண்ணம் இருந்தன. சுப.உதயகுமார் மீது மட்டும் 400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்திய மகாசமுத்திரத்தைச் சாட்சியமாக வைத்து, மக்கள் தங்களின் போராட்டத்தை இடைவிடாமல் நடத்தினார்கள். கூடங்குளத்தில் அரசு வேக வேகமாக அடுத்தடுத்த அணு உலைகளை நிறுவினாலும், இடிந்தகரையில் மக்கள் நடத்திய இந்தப் போராட்டம், உலக அளவில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டங்களில் முன்னோடியாக வரலாற்றுச் சாதனை படைத்தது. அணு உலைகள் மின்சாரத்துக்காக அல்ல, அதன் கழிவுகளிலிருந்து அணுகுண்டுகளைத் தயாரிக்கவே பயன்படுகின்றன என்கிற உண்மையை உலகம் முழுவதுமுள்ள மக்களுக்குப் புரியவைத்தது.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பல லட்சம் கோடிகளை அரசு செலவிட்டும், இன்று வரை இந்தியாவின் அணு உலைகளிலிருந்து இந்தியாவின் மின்சாரத் தேவையில் 3 சதவிகிதத்தைக்கூட எட்ட முடியவில்லை என்கிற தகவல், இந்த உலகுக்குப் பல உண்மைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது!
(தொடரும்...)

போராளி
சுப.உதயகுமார் அமெரிக்காவின் மின்னியாபோலிஸிலுள்ள மினிசோட்டா பல்கலைக்கழகத்தில் ‘இனம் மற்றும் வறுமை’ பற்றிய ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். அவரின் தாத்தா, பாட்டி எனக் குடும்பத்தில் நான்கு பேர் தொடர்ந்து புற்றுநோய்க்கு பலியானார்கள். அவரை எழுதும்படி ஊக்குவித்த பேராசிரியரும் புற்றுநோயால் இறந்தார். தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் அடுத்தடுத்து புற்றுநோய்க்கு பலியாக, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாகர்கோவிலுக்குத் திரும்பிய உதயகுமார், தொடர்ச்சியாக அணு உலைகளுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தார். 2009-ல் அணுசக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பைத் தொடங்கி, அதை வழிநடத்திவருகிறார். 2011-ல் ஜூனியர் விகடனில் ‘அணு ஆட்டம்’ என்கிற ஒரு முக்கியத் தொடரை 40 வாரங்கள் எழுதினார். உலகின் மிகவும் கொடூரமான அணுகுண்டைத் தயாரித்த ஓப்பன் ஹெய்மர், உலகின் முதல் அணுசக்தி நிலையத்தை வடிவமைத்த என்ரிகோ ஃபெர்மி, அணுகுண்டின் மாறாத அடையாளமான ஹிரோஷிமா, நாகசாகி என... அணு ஆற்றலின் ஆணிவேர்களை அசைக்கும் மிக முக்கியத் தொடராக அது வெளிவந்தது. உலகம் முழுவதும் அணு உலைகளைப் பல நாடுகள் மூடிவரும் நேரத்தில், அணுவுலைகளின் ஆபத்துகள், கதிர்வீச்சுகளால் ஏற்படும் அழிவுகளை அறிய உதவும் முக்கிய நூலைத் தமிழக வாசகர்களுக்கு உதயகுமார் வழங்கினார்!