மற்ற எபிசோடுகள்
Published:Updated:

போராட்டங்களின் கதை - 37 - தியானென்மென் சதுக்கம்: சீன மாணவர்களின் எழுச்சி!

போராட்டங்களின் கதை
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டங்களின் கதை

பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கல்லூரிதோறும் விவாதக்குழுக்கள் உருவாகின.

சீனாவில் நெடுங்காலம் இருந்த அந்நியர்களின் ஆட்சிகளை அகற்றி, உள்நாட்டுப் போரிலும் வெற்றிபெற்று, பொதுவுடைமைக் கட்சியின் ஆட்சியை மாவோ நிறுவினார். மக்கள் சீனக் குடியரசை நிறுவிய மாவோ, செம்படைகள் தலைமையில் அங்கே ஒரு கலாசாரப் புரட்சிக்கு உத்தரவிட்டார். கம்யூனிசத்தைப் பாதுகாப்பது, பரவலாக்குவது, அதேவேளையில் முதலாளித்துவம் மற்றும் கலாசாரம் சார்ந்த மதிப்பீடுகளைச் சீனச் சமூகத்திலிருந்து அகற்றுவது செம்படைகளின் வேலை.

1966-ல் தொடங்கிய கலாசாரப் புரட்சி, 1969-ல் முடிவுக்கு வந்ததாக மாவோ அறிவித்தபோதும், அதிகாரம் பொருந்திய நால்வர் குழு அந்த நடவடிக்கைகளை அதன் பின்னரும் தொடர்ந்தது. கலாசாரப் புரட்சிக்காலத்தில் வசதி படைத்தவர் களிடமிருந்து லட்சக்கணக்கான ஏக்கர்கள் நிலம், நிலமற்ற விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் அந்தக் காலகட்டத்தில்தான் பெரும் பஞ்சங்கள், பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை, ஏழ்மை என சீன மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொண்டார்கள்.

சீனாவின் பெரும் பாய்ச்சல் மற்றும் கலாசாரப் புரட்சி குறித்து விரிவான விவாதம் அங்கே நடைபெற்றது. ‘சீனாவில் கம்யூனிசத்தை நடைமுறைப்படுத்த இத்தனை கடுமையான சர்வாதிகாரம் அவசியம்தானா?’ என்கிற கேள்விகள் கட்சிக்குள்ளும், மக்கள் மத்தியிலும் எழுந்தன. ‘இத்தனை லட்சம் உயிர்களைக் கொன்று ஒரு மாற்றம் வேண்டுமா?’ என்று விவாதிக்கப்பட்டது.

1976-ல் மாவோவின் இறப்புக்குப் பிறகு, டெங் சியா வோபிங் தலைமையிலான குழு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அவர்கள் சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தவறுகளைச் சீர்செய்வது, நாட்டைக் குழப்பத்திலிருந்து மீட்டெடுப்பது என்கிற இரு தளங்களில் இயங்கினார்கள். கலாசாரப் புரட்சியின் தவறுகளுக்கு மாவோ பொறுப்பல்ல... மாறாக, அந்தத் தவறுகளுக்கு நால்வர் குழுதான் பொறுப்பு என அவர்களைக் கைதுசெய்தார்கள்.

போராட்டங்களின் கதை - 37 - தியானென்மென் சதுக்கம்: சீன மாணவர்களின் எழுச்சி!

சீனா முழுவதும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. சீனர்கள் உலகம் முழுவதும் கல்வி கற்கவும், மேற்படிப்புக்கும் சென்றார்கள். பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. தொழில்துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தனியாருக்குத் தொழில் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது. வெளிநாட்டு மூலதனம் சீனாவில் குவிந்தது; சீனாவில் தொழில்கள் பெருகின. உலகம் முழுவதுமுள்ள சந்தைகளை சீனத் தயாரிப்புகள் கைப்பற்றின. சீனாவில் எண்ணிலடங்கா கோடீஸ்வரர்கள் உருவானார்கள். இருப்பினும் இந்தச் சீர்திருத்தக் காலங்களில் கட்சியின் ஒரு மேல்மட்டக்குழுவும், அவர்களைச் சார்ந்தவர் களும் தனிப்பட்ட முறையில் பெரும் லாபங்களை அடைந்தார்கள். தனியாரின் வருகைக்குப் பிறகு சீனச் சமூகத்தில் ஊழலும் லஞ்சமும் பெருகின.

பல்கலைக்கழகங்களில் படித்து முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கல்லூரிதோறும் விவாதக்குழுக்கள் உருவாகின. அரசியல், சமூகம் தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்தன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங் களுக்குச் சென்று வந்த மாணவர்கள், பேராசிரியர்கள் ஒரு சுதந்திரமான உலகத்தைப் பார்த்துவிட்டு தங்களின் அனுபவங்களை சீனாவில் வந்து பகிர்ந்தார்கள். 1986-ல் ஆங்காங்கே சிறிய அளவில் மாணவர் கிளர்ச்சிகள் தொடங்கின.

சீன அரசின் போக்குகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ‘சீர்திருத்தங்கள் அவசியம் வேண்டும், மக்களுக்குக் கூடுதல் சுதந்திரம் வேண்டும்’ என சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் ஹூ யாபாங் வெளிப்படையாகவே முன்வைத்தார். கலாசாரப் புரட்சியில் துன்புறுத்தப்பட்ட பல ஆயிரம் பேர்களுக்கு மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தார். சீனஅரசு வெளிப்படைத் தன்மையுடன் இருந்தால்தான் மக்களை வெல்ல முடியும் என்று அவர் நம்பினார். அவரது நிலைப்பாடுகள், பார்வைகள் கட்சிக்குள் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தின. கட்சியின் கடும்போக்காளர்களின் கை ஓங்கியது. ‘சுதந்திரம் அல்ல அதிகாரத்துவம், சர்வாதிகாரமே தீர்வு’ என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அந்தக் குழு 1987-ல் கட்சியைக் கைப்பற்றி ஹூ யாபாங்கை உடனடியாக ராஜினாமா செய்ய நிர்பந்தித்தது.

1989, ஏப்ரல் 15 அன்று ஹூ யாபாங் மாரடைப் பால் காலமானார். நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் சீனாவின் தலைநகரம் பீஜிங் நோக்கி வந்தார்கள். அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்த அவரது உடல் தியானென்மென் சதுக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

தியானென்மென் சதுக்கத்தில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடினார்கள். அவர்கள் “ஹூ யாபாங் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அரசு அவசர அவசரமாக அவரது அஞ்சலி நிகழ்ச்சியை முடிப்பது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது” என்று கூறினார்கள். ‘பேச்சு சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊழலற்ற அரசு நிர்வாகம், வேலைவாய்ப்பு, அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்’ என்கிற கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தார்கள்.

‘மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று ஒரு குழுவும், ‘இல்லை மாணவர்களின் இந்தப் போக்கை அனுமதிக்கவே கூடாது... இது சீனாவுக்கே ஆபத்து’ என்று மற்றொரு குழுவும் கருதின. மறுபுறம் நாளுக்கு நாள் தியானென்மென் சதுக்கத்தில் மாணவர்களும் பொதுமக்களும் சங்கமித்த வண்ணம் இருந்தனர்.

அதிரடியாக சீனாவில் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்தது. 1989, ஜூன் 2-ம் தேதி 2,50,000 ராணுவ வீரர்கள் சீனத் தலைநகரத்தின் மையத்துக்கு அணிவகுத்தார்கள். அடுத்த இரண்டு நாள்களும் அவர்கள் தியானென்மென் சதுக்கத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ந்தார்கள். பீஜிங் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் தங்களின் வீட்டைவிட்டு வெளியேவரக் கூடாது என்கிற கட்டளை வந்தது.

பீரங்கிகள், டேங்க்குகள், புல்டோசர்கள் எனப் பெரும் ராணுவ அணிவகுப்பு சாமானியர்களை பயங்காட்டியது. மாணவர்கள் சதுக்கத்தைவிட்டு வெளியேற ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இருப்பினும், அதிரடியாக சீன ராணுவம் மாணவர்கள்மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தது. மரணத்தின் ஓலம் பீஜிங் நகரமெங்கும் ஒலித்தது. பீரங்கிகள் தாங்கிய வண்டிகள் மாணவர்கள் மீது ஏறிச் சென்றன. திரும்பிய பக்கமெல்லாம் சடலங்கள். தியானென்மென் சதுக்கமெங்கும் ரத்த வெள்ளம்.

எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்றுவரை பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சீன அரசு வெறும் 200 பேர்தான் கொல்லப்பட்டனர் என்கிறது. சீனச் செஞ்சிலுவைச் சங்கம் 2,600 என்றது. ஆனால் அங்கே இருந்த பத்திரிகையாளர்கள், மாணவர்கள், சம்பவத்தைத் தங்களின் வீடுகளிலிருந்து வேடிக்கை பார்த்தவர்கள், காணொளியாகப் படம்பிடித்தவர்கள் எனப் பல்வேறு நபர்கள் சொல்லும் கணக்கு பத்தாயிரத்தைத் தாண்டும் என்கிறது. தியானென்மென் சதுக்கத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பான பதிவுகள், எல்லா வகைகளிலும் அழிக்கப்பட்டன. இந்தப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகளைச் சீனாவில் எங்குமே நீங்கள் காண இயலாது.

அடையாளம் தெரியாத மனிதர் ஒருவர், கையில் இரு பலசரக்குப் பைகளுடன் ஜூன் 5-ம் தேதி அந்தச் சதுக்கத்தைவிட்டு வெளியேறிய பீரங்கி டேங்க்குகளின் பாதையை வழிமறித்து நின்றார். நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த டேங்க்குகளின் இன்ஜின்கள் நிறுத்தப்பட்டன. அந்த மனிதர் அந்த டேங்க்கின் மீது ஏறி அதை இயக்கும் நபரிடம் விவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அந்த மனிதர் கைதுசெய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரைப் பற்றி அதன் பின்னர் எந்தத் தகவலும் இல்லை. இரும்புத்திரை அவரையும் விழுங்கி யிருக்கக்கூடும். தியானென்மென் சதுக்கத்தில் நடந்த போராட்டங்களின் இலச்சினைபோல் அந்தக் காட்சி இன்றைக்கும் நிலைத்து நிற்கிறது. டேங் மனிதர் (Tank Man) என்று அழைக்கப்பட்ட அவர், அதிகாரத்துக்கு எதிரான குரல்களின் சின்னமாக, காலத்தில் உறைந்து நிற்கிறார்.

இன்றைக்கும் சீனா ஒரு கண்காணிப்புச் சமூகமாகவே உள்ளது. அவர்களது தேசிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு அதிபர் ஜின் பிங்கை 2,970 வாக்குகளுடன் தேர்வுசெய்தது. அவருக்கு எதிராக ஒரு வாக்குக்கூட பதிவாகவில்லை. சீனாவின் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்பட்டு, ஒருவர் எத்தனை காலமும் ஜனாதிபதியாக இருக்கலாம் என்று மாற்றப்பட்டுவிட்டது.

இன்றைக்கும் ஒவ்வொரு வருடமும் தியானென்மென் சதுக்கம், ஜூன் மாதம் தொடங்கியதுமே ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் சென்றுவிடும். கடந்த ஆண்டு தியானென்மென் சதுக்கப் போராட்டத்தை நினைவுகூர்ந்து பகிரப்பட்ட ட்வீட்டுகளை ட்விட்டர் நிறுவனமே நீக்கிச் சுத்தப்படுத்தியபோது, சுதந்திரமான சமூக ஊடகங்களும் பலம் பொருந்தியவர்களிடம் மண்டியிடும் என்பதை உணர்த்தியது.

உலகம் முழுவதுமே பெரும் மூலதனங்கள் ‘நிலையான அரசு வேண்டும்’ என்கிற தொனியில் சர்வாதிகாரத்தையே ஆதரிக்கின்றன. உணவும் உடையும் ஒரு கூரையும் வேண்டும் என்பவர்கள், தங்களின் கோரிக்கை களை முன்வைக்க ஜனநாயகத்தின் பக்கமே எப்போதும் நிற்கிறார்கள்!

(தொடரும்)

***

போராட்டங்களின் கதை - 37 - தியானென்மென் சதுக்கம்: சீன மாணவர்களின் எழுச்சி!

Tiananmen Square: The Making of a Protest!

1989, ஜூன் 4-ம் தேதி, அதிகாலை 5 மணிக்கு ராணுவ டேங்க்குகள் அணிவகுப்பின் ஓசையைக் கேட்டுக் கண்விழித்த விஜய் கோகலே, தான் பார்த்த காட்சிகளை இந்த நூலில் விவரிக்கிறார். சீனா எவ்வாறு சந்தையை மையப்படுத்திய பொருளாதாரத்தில் கச்சிதமாக இயங்கியது, சீனாவில் எப்படி 2.7 ட்ரில்லியன் டாலர் அந்நிய முதலீடு வந்து குவிந்தது, சீனா எவ்வாறு உலகின் தொழிற்சாலையாக உருமாறியது என்பதை விவரித்துச் செல்கிறார். சீனாவில் தனிநபர் பொருளாதாரம் 70 மடங்கு உயர்ந்திருக்கிறது. அதற்குக் கைமாறாக சீனர்கள் தங்களின் உரிமைகளை அரசிடம் ஒப்புக்கொடுத்துவிட்டார்கள் என்கிறார். சீனாவின் கடந்த முப்பது ஆண்டுகள் குறித்தும், தியானென்மென் சதுக்கப் போராட்டம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் அறிய விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது. பதினைந்து ஆண்டுகள், சீனாவில் இந்திய அரசின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இந்நூலாசிரியர் விஜய் கோகலே, சீனாவுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.